சமூக ஊடகங்கள்தான் வாசிப்புக்குப் பலம்!
'சமூக ஊடகங்கள் பெருகிய இக்காலத்திலும் வாசிப்புப் பழக்கம் மிக நன்றாக இருக்கிறது.
அருள்செல்வன்
'சமூக ஊடகங்கள் பெருகிய இக்காலத்திலும் வாசிப்புப் பழக்கம் மிக நன்றாக இருக்கிறது. வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியும், செயற்கை நுண்ணறிவும் இதைச் சாத்தியமாக்கி இருக்கின்றன. எத்தனை அறிவியல் மாற்றங்கள் வந்தாலும், எது வந்தாலும் நூல் வாசிப்பு தொடரும். சமூக ஊடகங்கள் பெருகினால் வாசிப்புக்குப் பலம்தான் கூடும். சமூக ஊடகங்களின் வாயிலாகப் படிப்பதற்கும், நேரடியான நூல் வாசிப்புக்கும் வேறுபாடுகள் உண்டு என்பதை தேர்ந்த வாசகர்கள் நன்றாக உணர்ந்து வைத்திருக்கின்றனர்' என்கிறார் கோவை 'விஜயா பதிப்பகம்' நிறுவனர் விஜயா வேலாயுதம்.
பதிப்பக உலகில் நட்சத்திரப் புகழ்பெற்றதோடு, தமது வெளியீடுகளுக்குத் தனி மதிப்புடைய இந்நிறுவனத்தின் பெயரையே அடைமொழியாகக் கொண்டே அழைக்கப்படும் வேலாயுதம், தமிழின் முக்கிய நூல்களை வெளியிட்டதோடு, ஏராளமான படைப்பாளிகளுடன் நட்புறவாடிவருபவர்.
Advertisement
மதுரையை அடுத்த மேலூர் அருகேயுள்ள ஆட்டுக்குளத்தில் பிறந்த இவர், கோவையின் நிரந்தவாசியாகிவிட்டார். அவருடன் ஒரு சந்திப்பு:
உங்கள் இளமைப் பருவம் எப்படி?
என் இளமைக்காலத்தில் வறுமையிலும் செம்மையாய் வளர்ந்தேன். ஆர்வத்தோடு பள்ளிக்குச் சென்றேன். சிறுவர் நூல்களைப் படித்துக் கொண்டே சென்றதால் பண்பு, ஒழுக்கம், நல்லறிவு உள்ளிட்டவை கிடைக்கப் பெற்ற மாணவனானேன். தந்தை பர்மாவில் இருந்தார். தாய் என்னை மிகச் சிறப்பாக வளர்த்தார். எட்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்தேன். 'மேற்கொண்டு படிக்க வையுங்கள்' என்று தலைமை ஆசிரியர் வீட்டுக்கே வந்து கட்டாயப்படுத்தியும், பணம் கட்டிப் படிக்க வைக்க எனது தாயாரால் முடியவில்லை. அழுதார். நிலைமையைப் புரிந்துகொண்டு, 'நான் வேலைக்குப் போகிறேன்' என்று உறுதியோடு கூறினேன்.
பிழைப்புத் தேடி மணப்பாறை வந்தபோது எனக்கு வயது பதினான்கு. ஜவுளிக்கடையில் தினசரி 1 அணா 'பேட்டா' என்ற பெயரில் தருவார்கள். அப்போது லிப்கோ சேல்ஸ் வேன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மணப்பாறைக்கு வரும். நூல்களை வாங்க முதல் ஆளாக நான் நிற்பேன். அப்போதுதான் ஊர் ஊராகச் சென்று நூல்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் அடிமனதில் தோன்றியது. 1957-இல் கோவைக்கு வந்தேன். முதலில் ஜவுளிக்கடையில், பின்னர் மளிகைக்கடையில் என 15 ஆண்டுகள் அக்கறையோடும், பொறுப்போடும் பணியாற்றினேன். கோவையில் நீண்ட காலம் இருந்ததால் கோவைவாசியாகிவிட்டேன். கொங்கு மண்டலம் என்னைச் சுவீகார புத்திரனாகத் தத்தெடுத்துக் கொண்டு விட்டது.
தொழிலில் பரபரப்பாக இருந்து கொண்டு, நூல் வாசிப்பில் ஆர்வம் வந்தது எப்படி?
படிப்பதற்கு அரசு நூலகங்கள் உதவியாக இருந்தன. 1966-இல் இருந்து நிறைய இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றேன். அக்னிபுத்திரன், சுப்ரபாலன், சிற்பி, புவியரசு, மு. மேத்தா, சி.ஆர். ரவீந்திரன் உள்ளிட்டோர் நண்பர்களாக, வாசிப்பின் பொலிவு பெருகி வளர்ந்தது. சுக்கிரவார்பேட்டை நூலகம் என்னை வளர்த்தெடுத்தது. அதன் நூலகர் சரசுவதி நான் கேட்கும் நூல்களை அளித்து, என் வாசிப்பு இன்பத்தை வளரச் செய்தார். தொடக்கத்தில் மு.வ., நா.பா., கு. அழகிரிசாமி, கு.ப.ரா., தி.ஜா. ஆகியோர் என்னைப் பெரிதும் ஈர்த்த எழுத்தாளர்கள். இன்றும் நான் நல்ல வாசகனாக இருப்பதால் புத்தகங்களைத் தேடல் கொண்ட வாசகர்களுக்குப் பரிந்துரைக்க முடிகிறது.
புத்தக விற்பனை எண்ணம் எப்படி வந்தது?
முதலில் நா.பா.வின் 'தீபம்', 'கணையாழி' இதழ்களின் முகவரானேன். மளிகைக் கடையில் வேலை பார்த்தபோது அடிக்கடி வெளியூர் செல்ல நேர்ந்தது. போகும் ஊர்களிலெல்லாம் நூல்கள் தேடல்தான். அப்போது நிறைய வாசகர்களும் நூல்களைத் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். 1976 -இல் 'சிதம்பரம் அன்ட் கோ' பல்பொருள் கடையைத் திறந்தபோது, அதில் பொது நூல்களுக்காக ஓர் அலமாரியை வைத்தேன்.
எப்போது பதிப்பாளரானீர்கள்?
நான் அடைந்த வாசிப்பு இன்பத்தை தமிழ் மக்கள் எல்லோரும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தாலும், புதுமையாக, வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியாலும் உருவானதே 'விஜயா பதிப்பகம்'. ஆர்வமும் தொழிலும் ஒன்றாக இணையப் பெற்றது நான் பெற்ற பேறு. எதிர்பார்த்ததைக் காட்டிலும் வெற்றியும் ஊக்கமும் கிடைத்தது. சாதாரண மனிதனாகிய நான் அறிவுலகத்தோடு இணையும் சூழல் உழைப்புக்குக் கிடைத்த பரிசு. மளிகைக்கடையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே மு. மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' பதிப்பித்தேன். 'தீபம்' இதழ் நடுப்பக்கத்தில் மு. மேத்தாவின் 'தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி'யை வெளியிட்டு, அதைப் பற்றி கருத்துரைகளும் எழுதிக் கொண்டாடியது, வாசகர்களை வியக்க வைத்தது. புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி எல்லோரும் இணைந்துதான் தேர்வு செய்தோம். அவ்வகையில் முதலில் பதிப்பித்த மு.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்' நூல் பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து மேத்தாவின் நூல்களை வெளியிட்டோம்.
நா.பா.வின் 'மணிவண்ணன் கதைகள்', 'புதிய பார்வை', 'தேவதைகளும் சில சொற்களும்' எனத் தொடர்ந்தது. நா.பா.வுக்கு என்றே ரசிகர் கூட்டம் இருந்தது. மணிவண்ணன் கதைகளை மனப்பாடம் செய்து சொல்பவர்கள் இருந்தனர். 'தேவதைகளும் சில சொற்களும்' எனும் நூல் மாணவிகளிடம் வெகு பிரபலமாகத் திகழ்ந்தது. நா.பா. கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்ட நட்சத்திர எழுத்தாளராய் பிரகாசித்தார். எங்கள் பதிப்பகத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன.
காலையில் விற்பனை நிலையம் தொடங்கும் முன்பே வாசகர்கள் காத்திருப்பது இங்கு மட்டும்தான். இங்கே வருபவர்கள் நூல்களை வாங்காமல் திரும்பிச் செல்வதில்லை. பணம் போதவில்லை என்றாலும், அவர்களை நாங்கள் திருப்பி அனுப்புவதில்லை. நூல்களை வாங்கிக் கொண்டு சென்று சரியாக பணம் அனுப்பிவிடுவார்கள்.
48-ஆம் ஆண்டு விழாவுக்கு வருகை தந்த ஒரு வாசகி இரண்டு கிலோ மைசூர் பாகு வாங்கிக் கொண்டு வந்து, வந்திருந்த வாசகர்களுக்கு அளித்ததுடன், அவர்கள் அனைவருக்கும் ஒரு நூலை வாங்கி அன்பளிப்பாக வழங்கினார். இப்படி என்றும் வாசகர்களுடன் நெருக்கமான பிணைப்புடன் விளங்கி வருகிறது எங்கள் பதிப்பகம்.
விஜயா வாசகர் வட்டம், வாசகர் திருவிழா, விருது வழங்கும் விழாக்கள் குறித்து...?
படைப்பாளிகள் தங்களுடைய கருத்துகளைக் கூர்மைப்படுத்துகிறார்கள். அந்தக் கூர்மைக்கு வாசகர்கள் சிறப்புச் சேர்க்கின்றனர். படைப்பின் அர்த்தத்தை வாழ்க்கை அனுபவத்தில் பார்ப்பதற்கான பாய்ச்சல் வாசகர்களால்தான் உருவாகிறது. 1979- இல் அவர்களுக்காக அவர்களே உருவாக்கிக் கொண்ட அமைப்புதான் ' விஜயா வாசகர் வட்டம்'. அறிவுக் கோயிலுக்கும் திருவிழா வேண்டாமா? படைப்பாளிகளைப் போலவே வாசகர்களையும் கொண்டாட ஏப்ரல் 26-இல் வாசகர் திருவிழாவை நடத்தி, சிறந்த வாசகர்கள் மூன்று பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், அன்பின் பெருமழை அப்பச்சி பழனியப்பர் விருதும் அளிக்கிறோம்.
'வாழும் காலத்திலேயே படைப்பாளி கொண்டாடப்பட வேண்டும். முதலில் அவனைக் குடும்பம் கொண்டாட வேண்டுமானால், அவனுக்குச் சமூகத்தில் மதிப்பை உண்டாக்க வேண்டும். அதிகாரத்தில் அடையும் பொருளுக்கு ஆயுள் குறைவு. அறிவாளர்கள் கொடுக்கும் விருதுக்கு அழிவே இல்லை' என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் விருதுகளை அளிக்க முடிவு செய்தோம். கி.ராஜநாராயணன், கே. எஸ். சுப்பிரமணியன், அ. முத்துலிங்கம் பெயர்களுக்குப் பிறகும் மேலும் மேலும் விருதுகள் சேரும். இலக்கியத்தின் எல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப எங்கள் விருதுகளின் வகைமைகளும் வளரும்.
பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு ஒரு படைப்பு மொழியாக்கம் செய்யப்படுகிறபோது அதைப் படிக்கும் வாசகர்கள் மூல மொழியின் பண்பாட்டுச் செழுமையை, மானுடப் பண்புகளை, வாழ்க்கை முறைகளை அறியலாம். வாழ்க்கை மனித குலத்தின் விரிந்த தளத்துக்குக் கொண்டு செல்வது படைப்பின் உச்சபட்ச நோக்கம். இது மொழிபெயர்ப்பை ஊக்கப்படுத்துவதால் சாத்தியமாகிறது. மொழி வளர மொழி பெயர்ப்புகள் அவசியம் என்பதைக் கருதி, மொழியாக்கத்துக்கு இரண்டு விருதுகளை அளித்து ஊக்கப்படுத்துகிறோம்.
சிற்றிதழ்கள் அறிமுகம் எப்படிக் கிடைத்தது?
கலை இலக்கிய வளர்ச்சிக்குச் சிறு பத்திரிகைகளின் பங்களிப்பு முக்கியமானது, தீவிரமானதும்கூட! நான் முகவராகச் செயல்பட்டபோது, 'தீபம் எப்போது வரும்?', 'கணையாழி எப்போது வரும்?' என்று காத்திருந்த வாசகர்களை நான் அறிவேன். இப்போதும் கலை, இலக்கிய சிற்றிதழ்களையும் வாசிக்கிறேன்.
பாரதி மீதான ஆர்வம் வந்தது எப்படி?
பாரதியார் மீது சிறுவயதில் இருந்தே எனக்கு பேரார்வம் இருந்தது. பாரதியினுடைய சொற்கள் எல்லாம் தனித்துவமானவை. ஒளிநிறைந்த சொற்கள். பலம் தருபவை. ஒன்றுகூட பலவீனமானதில்லை. சோர்வே இல்லாமல் ஒரு மனிதன் வாழ வேண்டுமானால் பாரதியினுடைய வரிகள் மனதில் பதிந்து இருந்தாலே போதும்.
சிறார் இதழ்கள் இப்போது வருவதில்லையே... ஏன் ?
'அம்புலி மாமா', 'மத்தாப்பு', 'மிட்டாய்', 'கண்ணன்', 'ஜில் ஜில்', 'டிங்டாங்' போன்ற சிறார் இதழ்கள் முன்பு வெளிவந்தன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளால் சிறார் இதழ்களாக வெளிவந்தவை நூல்களாக சிறப்பாக வண்ணங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நன்கு விற்பனையாகிறது. அதற்கென்று தனிப்பிரிவே செயல்படுகிறது. இன்னும் வளர்ந்து பொலிவு பெறும். நகரக் குழந்தைகள் படிப்பதற்கு வாய்ப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறது. அரசே அக்கறை எடுத்து கிராமத்துக் குழந்தைகள் படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
உங்களைப் பாதித்த நூல்கள்..?
ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பதைப் போல் வெற்றி பெற்ற ஒருவருக்குப் பின்னால் ஒரு நூல் இருக்கிறது. இதை மலை உச்சி மீது ஏறி டமாரம் அடித்து உரக்கச் சொல்வேன். எம்.எஸ். உதயமூர்த்தியின் 'எண்ணங்கள்' புத்தெழுச்சியைக் கொண்டுவந்தது. 'என்னைப் பாதித்த புத்தகங்கள்' குறித்து நூலை விரைவில் கொண்டுவர ஆசைப்படுகிறேன். அது இளம் தலைமுறை வாசகர்களுக்குப் பயன்தரும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
'இதயம் தொட்ட இலக்கியவாதிகள்' எனும் நூல் அனுபவம் ?
பதிமூன்று இலக்கியவாதிகளை எழுதியது ஓர் இதயம் தொட்ட அனுபவம்தான். இன்னும் நிறைய இலக்கியவாதிகளைப் பற்றி வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. வானம்பாடி காலகட்ட கவிஞர்கள் அறிமுகங்கள், அனுபவங்களை நூலாகவே விரைவில் எழுதுவேன்.
படைப்பாளிகள் சந்திப்பு அனுபவம் பற்றி?
படைப்பாளிகள் சந்திப்பு என்பது பல்பொருள் கடையில் அலமாரி வைத்திருந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது. அங்கேயே கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், தீபம் நா.பா., ஜெயகாந்தன், கண்ணதாசன், சுஜாதா உள்ளிட்டோர் வருகை தந்திருக்கிறார்கள். ராஜவீதியில் 'விஜயா பதிப்பகம்' தொடங்கியவுடன் தமிழ் இலக்கியவாதிகள் எல்லோருமே வருகை தந்திருக்கின்றனர்.
வராதவர்களே இல்லை' என்று சொல்லலாம். எழுத்தாளர்கள் நம் மனநிலையில் மாற்றத்தை உருவாக்குகின்றனர். அறிவுநிலையில் உயர்வைத் தருகின்றனர். திறனில் மேம்பாட்டை வளர்க்கின்றனர். எழுத்து என்பது உயிரின் முழுமைக்கான சாதனம். எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற சமூகமும், வாசகர்களைக் கொண்டாடுகிற பதிப்பாளர்களுமே எனது இலக்கு. அது நிகழ்ந்தால் என்னைப் போல் மகிழ்ச்சி கொள்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது.
பதிப்பக உலகம் இப்போது எப்படி உள்ளது?
பதிப்பாளர்கள்தான் சோர்வுற்றுள்ளனர். வாசகர்கள் உற்சாகத்தோடும், எழுச்சியோடும்தான் இருக்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியானது புதிய எழுத்
துலகத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறது. ஓர் உலகுக்குள் நுழைந்தால் இன்னொரு உலகம். ஒரு மனிதன் வாழும்வரை புத்தகம் படித்தல் தொடரும். நூல் உலகின் எல்லையை நாம் தொடவே முடியாது.