தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 200

காங்கிரஸ்-தமாகா இணைப்பு: குமரி அனந்தன் எதிர்பார்ப்பு

கி. வைத்தியநாதன்

சென்னை மயிலாப்பூர் லஸ்ஸில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு நான் சென்றபோது, மேலிடப் பொறுப்பாளர் ரஜினி ரஞ்சன் சாஹூ இன்னும் வந்திருக்கவில்லை. தலைவர் குமரி அனந்தன், ஏனைய தலைவர்களையும், ரஜினி ரஞ்சன் சாஹூவையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். நான் அவரது அறைக்குள் நுழைந்து பேச்சுக் கொடுத்தேன்.

பள்ளி மாணவனாக நான் மதுரையில் படித்துகொண்டிருந்தபோது "இலக்கியச் செல்வர்' குமரி அனந்தன் தனிப் பயிற்சிக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்றத்துக்கு அவர் வந்து பேசியது முதல் அவரது பேச்சில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. பள்ளி மாணவனாகச் சந்தித்திருந்தக் காரணத்தால் அவர் என்னிடம் மனம்விட்டு பேசுவார்.

நான் அவரது அறையில் நுழைந்து அமர்ந்தபோது, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரின் நிருபர் கூட்டம் நடைபெற இருப்பதால், தான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று முதலிலேயே கூறிவிட்டார். முக்கியமான தலைவர்கள் வரத் தொடங்கிவிட்டதால் நான் அவரது அறையில் இருந்து வெளியேறிவிட்டேன்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் கே.வீ.தங்கபாலு, ஆர்.பிரபு, மூத்த தலைவர்கள் எம். கிருஷ்ணசாமி, திண்டிவனம் கே. ராமமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் எர்னஸ்ட் பால், குறளரசு, ஜெய

பாரதி, தாமோதரன் என்று ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கினர். கடைசியாக வந்தார் ரஜினி ரஞ்சன் சாஹூ. அவர் வந்தவுடன் நிருபர் கூட்டம் தொடங்கியது.

நான் கூட்டத்தில் இருக்கிறேனா என்பதை அவர் நோட்டமிட்டார். என்னைப் பார்த்தபோது புன்முறுவல் எழுந்தது. நான் அவரிடம் தொலைபேசியில் எழுப்பிய கேள்வியை நிருபர்கள் சார்பில் எழுப்ப வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார் என்று நினைக்கிறேன்.

தேர்ந்த அனுபவசாலி அரசியல்வாதிகள் இப்படித்தான் தங்களது நிருபர்கள் கூட்டத்தை அமைத்துக்கொள்வார்கள். சில நிருபர்களிடம் முன்கூட்டியே பேசிவைத்து, "நீ இன்னின்ன கேள்விகளை எழுப்ப வேண்டும்' என்று தீர்மானிப்பவர்களும் உண்டு.

தர்ம சங்கடமான கேள்விகள் எழும்போது, தங்களுக்கு நெருக்கமான நிருபர்களின் துணையுடன் நிருபர் கூட்டத்தின் போக்கையே மாற்ற முற்படுபவர்களும் இருக்கிறார்கள். நேர்முகப் பேட்டிகளைப் போல அல்லாமல், நிருபர் கூட்டங்களில் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்வதற்குத்தான் முன்னுரிமை தரப்படும்.

ரஜினி ரஞ்சன் சாஹூவுக்கும் எனக்கும் நெருக்கமான நட்போ, தொடர்போ இருக்கவில்லை என்றாலும் நான் தொலைபேசியில் எழுப்பிய கேள்விகளின் தொடர்ச்சியாக நிருபர்கள் கூட்டம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியது நிகழவில்லை. அவர் எதிர்பார்த்ததுபோல, தேசிய அரசியல் குறித்த கேள்வியை நான் எழுப்பவில்லை. ஆனாலும், மிகவும் சாதுர்யமாக சுதாரித்துக்கொண்டு, பதிலளிக்கத் தயாரானார் அவர்.

'புதுக்கோட்டை இடைத்தேர்தலில், பொதுவேட்பாளராகத் தங்களது வேட்பாளரைக் கருதி ஆதரவு அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோள் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன முடிவை எடுக்கப் போகிறது?'' என்கிற முதல் கேள்விக் கணை என்னிடமிருந்து எழுந்தது.

'அதிமுகவுடனான எங்களது உறவு முடிந்துவிட்டது. இனிமேல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துத்தான் போட்டியிடும். நாங்கள் யாருடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை'' என்று உறுதியாகக் கூறினார் ரஜினி ரஞ்சன் சாஹூ. அதை ஆமோதிப்பதுபோல தலையாட்டினார்கள், பத்திரிகையாளர் சந்திப்பில் அவருடன் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள்.

அதைத் தொடர்ந்து அங்கே குழுமியிருந்த நிருபர்கள் கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கினார்கள்.

'தனித்துப் போட்டியென்றால், காங்கிரஸ் யாருடைய துணையும் இல்லாமல் தேர்தல் களத்தில் இறங்க முடியும் என்று நினைக்கிறீர்களா?''

'புதுக்கோட்டை தொகுதி எப்போதுமே காங்கிரஸின் தொகுதியாகத்தான் இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அந்தத் தொகுதியை நாங்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.''

'எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுபடும்போது, அது ஆளும்கட்சிக்கு சாதகமாகும் என்பதுதானே அரசியல் யதார்த்தம். தனித்தனியாக நின்றால் ஆளும்கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக ஆகாதா?

'அப்படிச் சொல்லிவிட முடியாது. அப்படியே எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்றால், அது காங்கிரஸ் வேட்பாளராகத்தான் இருக்க முடியும்.''

'அப்படியானால் உங்கள் வேட்பாளரை அதிமுக ஆதரித்தால் ஏற்றுக்கொள்வீர்களா?''

'அவர்களாகவே வலிய வந்து எங்களது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம். அதற்காக நாங்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை.''

'நீங்கள் வேண்டுகோள் விடுப்பது இருக்கட்டும், அதிமுக வேண்டுகோள் விடுத்திருக்கிறதே...''

'அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்களது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று எங்களை அணுகவில்லை. பொதுவான அறிக்கை அளித்திருக்கிறார். தேசிய கட்சியான காங்கிரஸ் பொதுவான அறிவிப்புகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.''

'அதிமுகவின் ஆதரவு தேவையில்லை என்கிறீர்கள். திமுகவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துகிறீர்கள். யாருடைய ஆதரவைத்தான் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்.''

'திராவிடக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் எங்கள் வேட்பாளரை

நிறுத்தியிருப்பது, நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி. தமிழ் மாநில காங்கிரûஸ பொருத்தவரை தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. அவர்களும் காங்கிரஸ்காரர்கள்தான். தேசிய சக்திகள் ஒன்றுபட வேண்டும், காங்கிரஸ் இயக்கம் வலுப்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் அவர்கள் எங்களை ஆதரிக்க முற்பட்டால், நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். தமாகாவிடம் பகிரங்கமாக

ஆதரவு கேட்பதில் எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது.''

'நீங்கள் வேண்டுகோள் விடுக்கிறீர்கள். ஆனால், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமாகா உங்களை எப்படி ஆதரிக்க முடியும்? அவர்கள் மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறார்களே.''

'மத்திய கூட்டணி அரசில் இடம்பெறுவதால், மாநில அளவில் எங்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்வதில் பிரச்னை இருக்காது. அவர்களது மத்திய கூட்டணி ஆட்சியே, காங்கிரஸின் தயவில்தான் பதவியில் இருக்கிறது. தமாகா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.''

'திமுக அதை அனுமதிக்குமா?''

'தமாகாவுக்கு திமுகவைவிட, திமுகவுக்குத்தான் தமாகாவின் தேவை அதிகம். கடந்த 1996 தேர்தலுக்கு முன்னால் திமுகவின் நிலை என்ன என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். அப்போது திமுக மூழ்கிக் கொண்டிருந்தது. காங்கிரஸில் ஏற்பட்ட பிளவால், தமாகா தோன்றியது. அந்தப் படகில் ஏறிக்கொண்டதால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. திமுகவை ஆட்சியில் அமர்த்தியதில் தமாகாவுக்குக் கிடைத்த லாபம்தான் என்ன?''

'இனிமேல் காங்கிரஸ் - தமாகா இணைப்பு என்பது சாத்தியம் ஆகுமா?''

'தமாகாவும் காங்கிரஸூம் மீண்டும் இணைய வேண்டும் என்கிற உணர்வு இரு கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் என்பதும், தமிழ் மாநில காங்கிரஸ் என்பதும் பிரதேச காங்கிரஸ் என்ற பொருளைத்தான் குறிக்கின்றன. இரு கட்சிகளின் கொடிகளும் ஒன்றுதான். காம

ராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை தலைவர்களாக ஏற்றுக்

கொண்டவைதான் இரு கட்சிகளும். போஸ்டர்களிலும், பேனர்களிலும் இந்தப் படங்களைத்தான் இரு கட்சிகளும் பயன்படுத்துகின்றன.''

'அப்படியானால், விரைவிலேயே காங்கிரஸ் - தமாகா இணைப்பை எதிர்பார்க்கலாமா?''

'புதுக்கோட்டை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளித்தால், தொண்டர்கள் இணைந்து பணியாற்றி வெற்றியை உறுதிப்படுத்துவார்கள். அந்த வெற்றி இணைப்புக்கு அச்சாரமாக இருக்கும்.''

'இரு கட்சிகளின் இணைப்பு எந்த நிலையில் இருக்கிறது?''

'காங்கிரஸில் தமாகாவினர் எப்போது இணைவார்கள் என்றெல்லாம் தற்போது நான் கூற இயலாது. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.''

தேசிய அரசியல் குறித்து நான் கேள்வி எழுப்ப முற்பட்டேன். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு ரஜினி ரஞ்சன் சாஹூ ஏனைய தலைவர்கள் புடைசூழ கிளம்பிவிட்டார்.

எல்லோரும் போன பிறகு, நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரி அனந்தனை அவரது அறையில் சந்தித்தேன். காங்கிரஸ் - தமாகா இணைப்புக் குறித்த கேள்விகளின்போது, அவரது முகத்தில் அதிருப்தி நிலவியதை என்னால் உணர முடிந்தது. அதை நேரிடையாக அவரிடம் கேட்க நான் தயங்கினேன்.

மத்திய ஐக்கிய முன்னணி ஆட்சியில், மத்திய புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பேற்று இருந்தவர் தமாகாவின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம். அவர் ஓர் உத்தரவு பிறப்பித்திருந்ததார். முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை விசாராணையை மேற் கொள்ளவோ, நடவடிக்கை எடுக்கவோ பிரதமரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்தியன் வங்கி முறைகேடு தொடர்பாக சில முக்கியமான தமாகா அமைச்சர்களும், பிரமுகர்களும் விசாரிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு அப்போது நிலவியது. அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் உத்தரவு குறித்துக் கேட்டபோது, தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்று பிரதமர் தேவே கெளடா தெரிவித்திருந்தார்.

அதைப் பற்றி நான் குமரியாரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் வெகுண்டெழுந்துவிட்டார். 'பிரதமருக்குத் தெரியாது என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது? எந்தவொரு முடிவும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு.

பிரதமரின் முடிவு தொடர்பான ஒரு திட்டம் அல்லது அறிவிப்பை பிரதமருக்குத் தெரியாமல் ஓர் அமைச்சர் எப்படி வெளியிட முடியும்? அதற்கு பிரதமர் பொறுப்பேற்காத நிலையில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மத்திய அமைச்சரவையில் தொடர்வது சரியல்ல'' என்று குமரி அனந்தனிடமிருந்து பதில் வந்தது.

எனக்கு பதிலளித்ததுடன் அவர் நிற்கவில்லை. தனது உதவியாளரை அழைத்து, இதுகுறித்து ஓர் அறிக்கையைக் வெளியிட உத்தரவிட்டார். தமாகா, காங்கிரஸில் இணைவதை அவர் விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடாகத்தான் அதை நான் பார்த்தேன். அடுத்த நாளே பிரச்னை பெரிதாகிவிட்டது.

அலுவலகத்துக்கு வந்து நான் செய்திக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது எதிர்முனையில் வாழப்பாடி கூ.ராமமூர்த்தி.

'நாளைக்கு நான் தில்லி கிளம்புகிறேன். நீங்களும் என்னுடன் வருகிறீர்கள். ஜெயின் கமிஷன் விசாரணையில் முதல்வர் கருணாநிதி சாட்சி சொல்ல இருக்கிறார். நான் அவரை குறுக்கு விசாரணை செய்யப் போகிறேன்.''

அழைத்தார் என்பதைவிட நான் அவருடன் வரவேண்டும் என்று வாழப்பாடி கூ.ராமமூர்த்தி விரும்பினார் என்பதுதான் உண்மை. முதல்வரும் தில்லி சென்றிருக்கும் நிலையில் தேசிய அரசியல் சூடுபிடித்திருந்தது. அவருடன் தில்லி செல்ல நான் தயாரானேன்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் வாழப்பாடியார் என்னிடம் தெரிவித்த செய்தியைக் கேட்டதும் அதிர்ந்தேன் நான். ஜெயின் கமிஷன் விசாரணை அதை உறுதிப்படுத்தியது...

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 31.10.25

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

என் கனவு... அனன்யா பாண்டே!

பிளாக் தி பெஸ்ட்... லாஸ்லியா!

SCROLL FOR NEXT