கோயில் சிற்பங்கள் 
தினமணி கதிர்

கலைப் புதையல்..!

புதுக்கோட்டை என்றாலே சித்தன்னவாசல் ஓவியங்கள்தான் நினைவுக்கு வரும். அவை மறைந்துவரும் நிலையில் அதிசயச் சிற்பங்கள் நிறைந்த'குடுமியான்மலை', அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுதந்திரன்

புதுக்கோட்டை என்றாலே சித்தன்னவாசல் ஓவியங்கள்தான் நினைவுக்கு வரும். அவை மறைந்துவரும் நிலையில் அதிசயச் சிற்பங்கள் நிறைந்த'குடுமியான்மலை', அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விராலிமலைக்குப் போகும் வழியில் அமைந்துள்ள இந்தக் குடுமியான்மலைக்கு ஆய்வுக்காக, பல நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கிருக்கும் இசைக் கல்வெட்டுகள்தான் தமிழ்நாட்டிலேயே இசைக்குறியீடுகள் அடங்கிய முதல் கல்வெட்டு வரிசையாகும்.

குடுமியான்மலை கோயிலில் 500 தூண்களைக் கொண்ட இரண்டு மண்டபங்கள் பிரமிப்பைத் தருகின்றன. சிற்பங்களோ வெகு பிரமாதம். கல்லில் கலைவண்ணம் கண்ட தமிழ்க் கலைஞர்களின் தனித்த திறமையை தம்பட்டம் அடிக்கின்றன.

சிற்பங்களில் தசாவதாரங்கள் வடிக்கப்பட்டிருப்பதுடன் அனுமர், விபீஷணன், வாலி, சுக்ரீவன், ராவணன், ரதி, மன்மதன், மோகினி சிலைகளும் , கலைநுணுக்கத்தில் அசத்துகின்றன. ரதியை அழகின் அரசியாக, நெற்றிசுட்டு, காதணி, கழுத்து, மார்பு, இடை நகைகள், உடலை மறைத்தும் மறைக்காமலும் இருக்கும் துகில் ஆடை என்று ரசித்து உளியை நகர்த்திய கலைப் பக்குவம் தெரிகிறது.

சங்கரநாராயணர் சிலை வித்தியாசமான அர்த்தநாரீஸ்வர சிலை. ஒரு பாதியில் சிவனையும் மறுபாதியில் நாராயணனையும் அவரவர்களுக்கான அடையாளங்களுடன் சிற்பி வடித்திருப்பது கற்பனைத் திறமைக்கும் கலைஞானத்துக்கும் சாட்சி சொல்கிறது.

வல்லப கணபதி, ஆறுமுகர், ராவணன், நரசிம்மர், கண்ணப்பர், துர்க்கை, கோதண்ட ராமர், சங்கர நாராயணர், அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, இந்திரஜித், லட்சுமணன், மகாவிஷ்ணு, லட்சுமி, கருடாழ்வார் சிற்பங்கள்... என்று பட்டியல் நீளுகிறது.

கலை சிற்பங்கள்

தல வரலாறு: சிவனுக்கு அர்ச்சகர் நேரம் தவறாமல் பூஜைகளைச் செய்து வருபவர். அரசன் தினமும் அர்த்த ஜாம பூஜைக்கு ஆஜராகிவிடுவார். பூஜை முடிந்ததும் பிரசாதத்தை மன்னன் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள, பிரசாதம் பெண் பணியாளருக்கு கொடுக்கப்படும்.

ஒருநாள் அரசன் இரவுப் பூஜையில் கலந்துகொள்ள தாமதமாக வந்திருக்கிறார். பூஜை நேரத்துக்கு அரசன் வர தவறியதால், அர்ச்சகர் பூஜையை முடித்துவிட்டு வழக்கம்போல் பிரசாதத்தை பெண் பணியாளருக்கு வழங்கினார்.

அரசன் திடீர் என்று வர, அர்ச்சகர் நிலைமையைச் சமாளிக்க பிரசாதத்தைத் பணியாளரிடமிருந்து பெற்று 'பூஜை இன்னமும் முடியவில்லை' என்று சொல்லி பூஜையை வேகமாக நிறைவு செய்து பிரசாதத்தை மன்னன் முன்பு பூசாரி நீட்டினார்.

பிரசாதத்தில் நீண்ட தலைமுடி ஒன்று கிடந்ததை கண்ட அரசன், 'அர்ச்சகரே.. என்ன பிரசாதத்தில் பெண்ணின் தலைமுடி எப்படி வந்தது' என்று கோபப்பட்டார்.

'சிவனின் தலைமுடி பிரசாதத்தில் விழுந்திருக்கும்'' என்று அர்ச்சகர் சமாளிக்க, 'லிங்கத்தின் உச்சியில் தலை முடியா? நாளை காலை வந்து பார்ப்பேன். லிங்கத்தின் உச்சியில் தலை முடி இல்லை என்றால் உங்களைத் தண்டிப்பேன்'' என்று சொல்லி அரசன் புறப்பட்டான்.

அர்ச்சகரோ, 'சிவனே என்னைக் காப்பாற்று'' என்று கருவறையிலேயே தவம் கிடந்தார்.

மறுநாள் அரசன் கருவறைக்குள் நுழைந்து சிவன் சிலையின் கலையைப் பார்க்க தலையில் குடுமியுடன் சிலை இருக்க அரசன் வியந்தார். அதனால் சிவனுக்கு 'குடுமியான்' என்ற பெயர் வந்துள்ளது. கோயில் இருக்கும் மலை'குடுமியான் மலை' என்றானது. கர்ப்பக்கிரகத்தில் லிங்க வடிவ சிலையிலும் 'குடுமியான்' பெயருக்குப் பொருத்தமாக லிங்கத்தின் உச்சியிலும் முடி இருப்பது போன்ற அமைப்பு காணப்படுகிறது.

மலையின் வயிற்றுப் பகுதியில் அமைந்திருக்கும் குடைவரை கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் புடை சூழ, சிவன், பார்வதி, காளை மீது

அமர்ந்திருக்கும் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான உருவகம் தமிழகத்தின் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. பொதுவாக, சிவன் கோயில்

களில் துவார பாலகர்கள் கிழக்கு நோக்கி நின்று காப்பார்கள். ஆனால், குடுமுடியான் கோயிலில் தெற்கும், வடக்குமாக நின்ற நிலையில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர்.

கோயிலுக்குப் பின்பக்கமுள்ள மலையில் நூற்றி இருபதுக்கும் மேலான கர்நாடக இசை கல்வெட்டுகளானது'பாலி' மொழி எழுத்துகளில் செதுக்கப்பட்டுள்ளது. இசை மேதைகள், இசைப் பிரியர்களின் இசை ஞானத்துக்குத் தீனிபோடும் கல்வெட்டுகளாக மாறியுள்ளன.

ருத்ராச்சாரியாரின் சீடரான பரமமகேஸ்வரன் என்ற மன்னன் இந்த ராகங்களை பாடியதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலின் பராமரிப்பில் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், தொண்டைமான்களின் பங்களிப்பும் இருக்கிறது.

இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் இருப்பது சிற்பங்களின் பழமையையும் முக்கியத்துவத்தையும் அழுத்தமாகச் சொல்கிறது.

புதுக்கோட்டையிலிருந்து கொடும்பாளூர் வழியாக மணப்பாறை செல்லும் வழியில் 22 கி.மீ. தூரத்தில் குடுமியான்மலை உள்ளது. காலை 6 மணி முதல் 11 வரையும், மாலை 4 முதல் 8 மணி வரை தரிசிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT