திரைக்கதிர்
வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாகத் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல் "என்ஜாயி எஞ்சாமி'.
வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாகத் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல் "என்ஜாயி எஞ்சாமி'. சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு, தீ இருவரது உருவாக்கத்தில் உருவான இப்பாடல் உலகமெங்கும் ட்ரெண்டாகி பிரபலமானது. இதையடுத்து ஆங்கில இதழ் ஒன்றில் இப்பாடல் பற்றிய கட்டுரையில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ-யின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டு, அறிவின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பாடலாசிரியர் அறிவு வருத்தப்பட, பலரும் அறிவுக்கு உரிய "கிரெடிட்ஸ்' கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். அப்போது இயக்குநர் பா.ரஞ்சித் அறிவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துப் பேசியிருந்தார். இந்நிலையில் அறிவின் "வள்ளியம்மா பேராண்டி' எனும் சுயாதீன ஆல்பம் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் "விடாமுயற்சி'. ஆக்ஷனும் எமோஷனும் மின்னும் இந்தக் கதையின் பெரும்பகுதி வெளிநாட்டில் நடக்கிறது. இதற்காகத்தான் மொத்த படக்குழுவும் அஜர்பைஜான் பறந்தது. சுப்ரீம் சுந்தரின் ஸ்டன்ட்டில் ஆக்ஷன் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் எடுத்துள்ளனர். சேஸிங்கின் போது அஜித்தின் கார் விபத்திற்குள்ளானது கூட விடியோவாக வெளியானது நினைவிருக்கலாம். அஜர்பைஜானில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பாகக் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த ஷூட்டிங் இப்போது நிறைவடைந்திருக்கிறது. அஜர்பைஜான் படப்பிடிப்போடு, பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து புனேயில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்த மாதம் மொத்த டீமும் இதற்காக புனே செல்கிறது. அந்தப் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைகிறது.
மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் இரண்டு மகள்களுக்கும் இந்த வருடத்திற்கான கல்விக் கட்டணம் சுமார் 1 லட்சம் ரூபாயைச் செலுத்தி உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இது குறித்து ராசு மதுரவனின் மனைவி பவானி உதவி கேட்ட நிலையில் இந்த உதவிக்கரம் நீண்டுள்ளது. "இத்தனை நாள்கள் நாங்க எங்க இருந்தோம், என்ன பண்ணினோம்னு யாருமே கண்டுக்கல. என் கணவர் படத்துல அத்தனை நடிகர்கள், அத்தனை இயக்குநர்கள் நடிச்சிருக்காங்க. இதுவரைக்கும் எங்கக்கிட்ட யாரும் பேசினது கிடையாது. எங்களோட நிலமையைக் கேட்டு உதவிய சிவா தம்பிக்கு பெரிய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.'' என்றார் பவானி.
Advertisement
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் "ரகு தாத்தா'. "தி ஃபேமிலி மேன்', " ஃபார்ஸி' ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.