தினமணி கதிர்

பழைய பொருள்

அரவிந்தின் குடும்பத்தில் முதியோர் இல்லத்திற்கு செல்லும் அவசரம்

சாயம் வெ. ராஜாராமன்

படுக்கையில் அரவிந்த் படுத்தபோது, இரவு பத்தரை. இப்பொழுது நள்ளிரவு ஒன்றரை மணி. புரண்டு படுத்தானே தவிர தூக்கம் வந்தபாடில்லை. குளிர்சாதன அறையில் கண் சொக்க ஆரம்பித்த பின்புதான் விளக்கை அணைத்து விட்டு படுத்தான். இந்த நேரம் அவன் குறட்டை சத்தம் அறையை நிறைத்திருக்க வேண்டும்.

அடுத்த தெரு, மூன்றாவது தெரு நாய்கள் குரைக்கும் சத்தம் அவன் காதுகளில் இரவின் அமைதியில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. எந்தத் தாளத்துக்கும் கட்டுப்படாத குரைச்சல்கள். சில சமயம் தூக்கம் வரவில்லை என்றால் தொலைக்காட்சியை முடுக்கிவிட்டு சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவான். செய்தி, திரைப்படங்கள், நகைச்சுவை, விளையாட்டு சேனல்கள்..

சில நிமிடங்கள் பார்த்தால் அரை மணி நேரம் ஆகும்போது, இழந்த தூக்கத்தை மீண்டும் அவன் கண்கள் பிடித்திருக்கும். பிறகு கும்பகர்ணாகத் தூங்கி இருக்கின்றான். ஆனால் இன்று அவனுக்கு அந்த மாதிரி செய்ய மனது வரவில்லை. அவன் காதில் சந்தோஷ்குமார் சொன்ன வார்த்தைகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அன்று மாலை வீட்டுக்கு வந்த சந்தோஷ் குமார் சொன்ன வார்த்தைகள் அவை.

சந்தோஷ்குமார் பக்கத்து தெருவில் பழைய பொருள்கள் வாங்கும் கடை வைத்திருப்பவன். அவனிடம்தான் வீட்டில் இருக்கும் பழைய செய்தித்தாள்கள், பழைய பாட்டில்கள், பாத்திரங்கள், ப்ளாஸ்டிக் டப்பாக்களையும் போடுகின்றார்கள்.

அவன் இவர்கள் வீட்டுக்கு மாதத்தில் ஒருமுறையாவது வர வேண்டி இருக்கும். அப்படி அவன் வரும்போதெல்லாம் அரவிந்த் சகஜமாகப் பேசுவான். சுதாவும் பேசுவாள். அரவிந்தின் அப்பாவோ அவனிடம் ஒட்டிக் கொண்டார். நாற்பது வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டிலேயே இருக்கும் காரணத்தால் பேசுவதற்கு ஆள் கிடைத்தால் பிடித்துகொள்வது சகஜம்தானே!

அரவிந்தும், சுதாவும் அலுவலக வேலையே உலகமாக இருக்க, பேரன் அஸ்வினோ படிப்பு, மீதி நேரங்களில் இன்டர்நெட், வாட்ஸ் ஆஃப்.. ..என்று பிஸியாக இருக்கின்றான். கணவன், மனைவி இருவரும் மட்டுமே எவ்வளவு நேரம்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது ஆள் கிடைத்தால் பேச விருப்பப்படுவது இயற்கைதானே.சந்தோஷ்

குமார் அவர்கள் வீட்டுக்கு வர வேண்டிய தருணம் வரும்போதெல்லாம் சுந்தரம் அவனிடம் மிகவும் சகஜமாக பேசுவார். அரசியல்தான் பிரதானமாக இருக்கும். மீதி அந்தக்கால, இந்தக் கால மாற்றங்கள் போன்ற விஷயங்கள் இருக்கும். விட்டால் சுந்தரம் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால் அவனுக்கு தொழில் பாதிக்குமே என்று காலில் சக்கரத்தை மாட்டிக் கொள்வான். 'சார், கடையில ஆள் இல்லை. நான்தானே போய் கவனிக்கணும்' என்று சொல்லியபடி ஓட்டமாய் ஓடுவான்.

சுதாவுக்கு இரவு நேரங்களில் உறக்கம் என்பதைத் தவிர, மற்ற நேரங்களில் அலுவலக வேலைதான். சமையல் எல்லாம் ஏதோ அடுப்படியில் நின்றுகொண்டு பத்து பதினைந்து நிமிடங்கள் என்ன முடிகின்றதோ அவ்வளவுதான்.நூடுல்ஸ், ப்ரட். ..ஜாம்.. ..திடீர் சாம்பார், திடீர் ரசம், ரவா இட்லி மிக்ஸ்... ரெடிமேட் சப்பாத்தி ரெடிமேட் பரோட்டா இருக்கின்றனதானே. என்ன கவலை.. அப்படி பத்து நிமிடங்கள் சமையற்கட்டில் நிற்கும் போது கூட அலுவலக விஷயமாக கைப்பேசி அழைப்புகள். .. ..லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினால்.. .?

அரவிந்த் ஒரு மல்டி நேஷனல் கம்பனியில் சீஃப் மார்கெட்டிங் ஹெட். அவன் விடும் மூச்சில் கூட அலுவலக வாடை இருக்கும். ஏடிஎம், க்ரெடிட் டெபிட் கார்டு,.. என சகலமும்.. நிறைய சம்பளம் வருகின்றதென்றால் சும்மாவா?

அரவிந்தனின் அம்மா வசந்தாவுக்கு பயங்கர மூட்டு வலி தொல்லை. இனிமையாக மட்டுமே பேசுவதாலோ என்னவோ? உடம்பில் சுகர். மாத்திரைகளை உடலில் செலுத்தி சர்க்கரையின் அளவை அமுக்கி வைத்துகொண்டிருக்கின்றார். சுந்தரம் விஷயத்துக்கு வந்தால் அவருக்கு சுகரோடு சேர்த்து பீ.பி.யும் உடம்பில் வாசம் செய்துகொண்டிருக்கின்றது. ஆனால் இருவரில் கொஞ்சம் ஆக்டிவ்வாக இருப்பது சுந்தரம்தான். அலுவலகத்தின் கால்பந்து அணியில் விளையாடி இருந்தவர் என்பதால் உடம்பை ஃபிட்டாக வைத்துகொண்டிருந்தார் என்றாலும் வயது ஏற, ஏற உடம்பு தள்ளாட ஆரம்பித்திருந்தது.வசந்தாவுக்கு நடமாட்டமே நின்று விட்டிருந்தது.

'என்ன பண்ணலாம் இப்ப?' ‘ என்று ஒருநாள் சுதா அரவிந்திடம் கேட்டாள்.

'எதைப் பற்றி சொல்றே சுதா?' என்றான் அரவிந்த், 'என்னால உங்க அப்பா, அம்மாவை சுத்தமா கவனிக்கமுடியலை. அஸ்வினையே என்னால கவனிக்க முடியலை.ஏதாவது பண்ணணும்' என்று சொன்னாள்.

'புரியறது சுதா. ரெண்டு பேரும் ஆபீஸ் வேலையைத்தான் சுவாசிக்கவே செய்யறோம். அஸ்வின் கூடவே எவ்வளவு நேரம் பேசறோமுன்னு பார்த்தா ரொம்பவே குறைவு. ஒர்க் ப்ரஷர். இதுல அப்பா, அம்மாவை கவனிக்க நேரமே இல்லைதான். என்ன பண்ணலாம். வீட்டுலயே வேலைக்கு ஆள். சமையல்லேயிருந்து எல்லா வேலையையும் பார்த்துக்கறா மாதிரி.. ..'

'என் கலீக் வீட்டுல அப்படி வைச்ச ஆளே பணம் நகைன்னு திருடிண்டு போயிட்டான். ஸம் டைம்ஸ் பேரண்ட்ஸூக்கே ப்ராப்ளம் வரலாம். அடிச்சுப் போட்டுட்டு பொருளை எடுத்துண்டு போயிட்டாங்கன்னா..அது கூடாது.' என்று சொன்னாள்.

'நீ சொல்றது சரிதான்.அம்மாவால நடக்கவே முடியலை. அப்பாவுக்கும் வயசாறது. என்னதான் பண்ணலாம்?'

'வேற என்ன வழி. ஓல்ட் ஏஜ் ஹோம்தான் ஒரே வழி. நல்ல முதியோர் இல்லம் பார்த்து அவங்களைத் தங்க வைச்சுட வேண்டியதுதான். வீ வில் பே.. .பேமண்ட் நோ ப்ராப்ளம்.. ..' என்று சொன்னாள் சுதா.

'அம்மா, அப்பா ஒத்துப்பாளா.வேற வழியே இல்லையா? வேலையை விட்டுடுன்னு உன்னை என்னால சொல்ல முடியாது.வீட்டுல வேலைக்காரன், சமையற்காரன் வேலைக்கு வைச்சா ஆபத்துங்கறே?'

'வேளா வேளைக்கு உங்க அப்பா, அம்மாவுக்கு சமைச்சு தர என்னால முடியலை. எனக்கு கொஞ்சம் கூட டயமே இல்லை.அஸ்வின் விஷயம் வேற, நூடுல்ஸ், பிசா, பர்கர்னு எதை வேணும்னா வரவழைச்சு சாப்பிட்டுப்பான்.ஃபுட் ஆப்ஸ் இருக்கு.உங்க அம்மா அப்பா விஷயம் வேற? அதோடு இல்லாம உங்க அம்மாவாலே இப்ப நடக்கவே முடியலை. அவங்களை பாத்ரூமுக்கு அழைச்சுட்டு போறத்துக்கு கூட ஹெல்ப் தேவைப்படறது. உங்க அப்பா கொஞ்சம் பெட்டரா இருக்கார்தான். ஆனா அவரால உங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணணும்னா அது கஷ்டம்... úஸா ஒரு பெய்ட் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிடறதுதான் ஒரே வழி. ரெண்டு பேரும் அங்கே இருக்கட்டும். நல்லா கவனிச்சுக்கறத்துக்கு எவ்வளவு பணம் தேவையோ செலவு பண்ணுவோம். சரிதானே..' ‘ என்று தெளிவாக தன்னுடைய திட்டத்தை எடுத்துரைத்தாள் சுதா.

அரவிந்தனுக்கும் வேறு வழி தெரியவில்லை. சில நாள்களாக அவன்கூட இந்த விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

அம்மாவே அவனிடம் சொல்லி இருக்கின்றாள். 'என்னடா அரவிந்த்,... சுதாவுக்கு சமைக்கவே டயம் இல்லை. என்னால இப்ப நிற்கவே முடியலை. சமையல் எல்லாம் பண்ண முடியாது.அப்பாவுக்கு சமைக்கத் தெரியாது. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏதாவது பண்ணுடா? அப்பா நல்லா சாப்பிடறவர். ட்ரடிஷனல் அயிட்டங்களை எல்லாம் பண்ணி சாப்பிட்டு நாள் கணக்குல ஆச்சுடா? பாவம் அட்ஜஸ்ட் பண்ணிண்டு இருக்கார்' என்று இரண்டு, மூன்று முறை சொல்லி இருக்கின்றாள்.

இப்பொழுது சுதா அந்த ஆங்கிலப் பழமொழியை தமிழில் சொல்வதென்றால் ஆணியைச் சரியாக அதன் தலையில் அடித்து விட்டிருந்தாள். யோசித்தவனுக்கு வேறு வழி இல்லை என்று மனதுக்குப் பட ஆரம்பிக்க.. .?

ஒருநாள் நேரம் ஒதுக்கிக் கொண்டு அப்பா, அம்மாவின் அருகில் உட்கார்ந்தான். மெதுமெதுவாக அவர்கள் படும்கஷ்டத்தைப் பற்றி கேட்க, அம்மா தான் ஏற்கெனவே சொன்ன விஷயத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல, அப்பாவும் அதற்கு வழிமொழிந்தார். அப்பா, கடைசியாக, 'நாக்கு செத்துப் போச்சுடா? நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு. அம்மா பண்ணுவா பாரு நம்ம ட்ரடிஷனல் அயிட்டங்கள் எல்லாம், என் பாட்டி பண்ணி இருக்கா. என் அம்மா சமைச்சிருக்கா, உன் அம்மா செஞ்சிருக்கா? உன் ஒஃய்ப்புக்கு நேரமே இல்லையே. அப்படியே இருந்தாலும் அவளுக்கு இதெல்லாம் தெரியாதே.. கஷ்டம்டா. அந்தக் காலம் அந்தக் காலம்தான்!' என்று அப்பாவின் வாயிலிருந்து உலர்ந்த வார்த்தைகள் வெளி வந்தன.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்தவன், 'அதுக்குத்தாம்பா நல்ல முடிவா எடுத்திருக்கோம் நானும் சுதாவும்'' என்று ஆரம்பித்தவன் முதியோர் இல்ல விஷயத்தைச் சொல்லி முடித்தான். 'பெய்ட் ஹை க்ளாஸ் முதியோர் இல்லம்' என்ற வார்த்தைகளை சற்றே அழுத்தம் கொடுத்து சொன்னான்.

வேறு ஒரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொல்லி முடித்துவிட்டு ஒரு நிமிடம் காத்திருந்து பார்த்தான். அப்பா, அம்மா ஏதாவது சொல்கின்றார்களா என்று. ' ம்ம்' என்ற சத்தமே வரவில்லை என்று தலையைத் திருப்பி அப்பா, அம்மாவைப் பார்க்க, அவர்கள் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர அவர்கள் வாயில் இருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை. இருவர் முகங்களும் பிரகாசமாக இல்லை என்பது தெரிந்தது. அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்தார்களோ அல்லது அரவிந்த் சொன்னது இப்பொழுது இருப்பதை விட கொஞ்சம் சிறந்த வழி என்று நினைத்தார்களோ தெரியாது..ஒரு வார்த்தை பேசவில்லை இருவரும்.

அவர்கள் இவனுடைய பேச்சைக் கேட்டு இவனைத் திட்டியிருந்தால் கூட, அரவிந்த் ஏதாவது பேசி இருப்பான்.ஆனால் அவர்கள் முழுவதுமாக மெளனமாக இருந்தது இவனை வாயையே திறக்க விடாமல் செய்து விட்டது.

மனதில் இருந்ததைப் போட்டு உடைத்து விட்டான்.வந்த வேலை முடிந்து விட்டது என்று நினைத்தவன் அந்த அறையை விட்டு மெதுவாக எழுந்து அவன் அறைக்குச் சென்றான்.பெரிய பாரத்தை தலையை விட்டு இறக்கி வைத்திருந்தான்.

விஷயத்தைச் சொன்னவன், அதைச் செயல்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட ஆரம்பித்து விடுவான் என அம்மாவும் அப்பாவும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று அவனுக்குத் தெரிந்து விட.. ..பெரு மூச்சு விட்டான்.

அதற்கப்புறம் அப்பாவும் அம்மாவும் அவன் கூட சரியாக பேசுவதே இல்லை என்பதை அவன் உணராமலில்லை. சிறிது தைரியத்தை வரவழைத்துகொண்டு கிடைக்கும் சில தருணங்களில் அவனும் சுதாவும் இந்த முடிவு எடுத்திருப்பது அவர்களில் நலத்துக்காகத்தான் என்று அவன் சொல்லத் தவறவில்லை.ஆனால் அப்பா, அம்மா இருவரிடமும் இருந்து எந்த பதிலும்தான் வருவது போல் தெரியவில்லை.வரவும் இல்லை. இப்பொழுது வருமானம் என்ற ஒன்று இல்லவே இல்லாத சுந்தரம் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்தாரோ

தீர விசாரித்து ஒரு முதியோர் இல்லத்தைத் தெரிவு செய்து விட்டார்கள் அரவிந்தனும் சுதாவும். முதலில் டெபாசிட் கட்ட வேண்டும்.பிறகு மாதா மாதம் பணமும் கொடுக்க வேண்டும். சுந்தரத்துக்கும் வசந்தாவுக்கும் என்றே தனி ஏ.சி. தங்கும் அறை, அட்டாச்ட் பாத்ரூம். கேட்கும் வசதிகள் எல்லாம் கிடைக்கும். கவனிக்க வேலை ஆள்கள். வேளைக்கு உணவு.விருந்தினர்கள் வந்து பார்க்கலாம்.மருத்துவ வசதி உண்டு.நல்ல இயற்கைச் சூழ்நிலை இருந்த முதியோர் இல்லம்... 'ப்ரக்ருதி'.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில்தான் ஒரு மாத பழைய செய்தித்தாள்கள், பழைய பொருள்கள் மீண்டும் சேர்ந்து விட, சந்தோஷ் குமாருக்கு போன் செய்து அழைத்தாள் சுதா. ஞாயிற்றுக்கிழமை, அன்று விட்டால் பிறகு நேரம் கிடைக்காது இந்த வேலைகளை எல்லாம் செய்வதற்கு. வீட்டை படுசுத்தமாக வைத்துக் கொள்வதென்றால் அப்படி ஒரு பிரியம்.

வந்தவன் வழக்கம் போல் பொருள்களை எல்லாம் அவனே எடுத்துகொண்டான். அவன் கொண்டு வந்திருந்த கோணிப்பைகளில் அடுக்கியவாறு, 'சார் போன தடவை எடுத்துட்டுப் போனதையே இன்னும் எடை போடலை.தனியா வைச்சிருக்கேன். இதையும் சேர்த்து கணக்குப் பண்ணி பணம் கொடுத்துடறேன்' என்று சொன்னான்.

'ஏன் சந்தோஷ் நாங்க எப்பவாவது உன் கிட்ட பைசா என்ன ஆச்சு அது இதுன்னு கேட்டிருக்கோமா?' என்று கேட்டான் அரவிந்த்.

'சொல்றது என்னோட கடமை ஆச்சே சார்' சொன்னான்.

'அப்ப இப்பவே எங்க கண் முன்னாலே எடை போட்டு எடுத்துண்டு போ' என்று பொய் சீரியஸாக சொன்னான் அரவிந்த்.

'இது என் வீடு மாதிரி சார், அப்ப நான் வரேன்' என்று சொல்லி சிரித்தான் சந்தோஷ் குமார்.

கதவைச் சார்த்தச் சென்றான் அரவிந்த். மாடியில் இருந்து இறங்க முதல் படியில் காலை வைத்த நின்ற சந்தோஷ்குமார் திரும்பி அரவிந்தனைப் பார்த்தான். சந்தோஷ் குமாரின் குரலைக் கேட்டால் உள்ளே இருந்து சுந்தரம் குரல் கொடுப்பார்.அப்படி இல்லையென்றாலும் சந்தோஷ்குமாரே, 'அப்பா எங்கே இருக்கின்றார்' என்று அரவிந்தனைக் கேட்டுவிட்டு அவனே போய் பார்த்து விட்டு வருவான். இன்று அந்த மாதிரி இல்லை.

அப்படி அரவிந்தைப் பார்த்தவன் ஏதொ சொல்ல வருவது போல் தோன்றியது அரவிந்துக்கு.

'என்ன சந்தோஷ் என்ன விஷயம் சொல்லு.'

'சார் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.உங்க வீட்டு விஷயத்துல தலையிடுற மாதிரி நினைச்சுக்காதீங்க? நினைச்சுக்க மாட்டீங்கதானே?'

'ஏன் சந்தோஷ்.. இப்பத்தானே இது உன் வீடு மாதிரின்னு சொன்னே.அப்புறம் என்ன தயக்கம். சொல்லு.'

'சார் நாலு நாள் முன்னாடி பக்கத்து அபார்ட்மெண்டுல பொருள்கள் எடுக்க வந்திருந்தேன். அப்படியே உங்க வீட்டுல ஏதாவது இருக்கான்னு கேட்கலாம்னு வந்தேன். நீங்க ரெண்டு பேரும் ஆபீஸ் போயிருந்தீங்க? அப்பாதான் கதவைத் திறந்தார்.'அவங்க ரெண்டு பேரும் இல்லையேப்பா.ஞாயிற்றுக்கிழமை வா சந்தோஷ்... சுதாவுக்குத்தான் தெரியும்'னு அப்பா சொன்னார்.சரி சார் கிளம்பறேன்னு சொன்னவன் அவர் முகத்தைப் பார்க்க ஏதோ ரொம்ப கவலையா இருக்கற மாதிரி தெரிஞ்சது.என்ன சார்னு கேட்டேன். திடீர்னு அவர் கண்ணுல தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு சார். நான் பயந்துட்டேன்.'என்ன ஆச்சு சார்.ஏதாவது ப்ராப்ளம்னா சொல்லுங்க. நான் ஹெல்ப் பண்ணறேன்னு சொன்னேன். உடனே உங்க அப்பா என்னை உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். பேச ஆரம்பிச்சவர் எல்லா விஷயத்தையும் சொன்னார்' என்று சொல்லிவிட்டு சந்தோஷ் குமார் சில நொடிகள் அமைதியானான், 'எல்லா விஷயமும்னா?' என்று கேட்டான்

அரவிந்த்.

'அதுதான் சார் நீங்க அவங்களுக்காக ஒரு முதியோர் இல்லம் பார்த்திருக்கறதை! என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. அக்கறையில..'

' 'சே சே.. ..தப்பா எல்லாம் எடுத்துக்கலை சந்தோஷ். ஆனா அவங்களைக் கவனிக்க ரெண்டு பேருக்குமே நேரம் இல்லைப்பா? அவங்க நல்லதுக்குத்தான் செய்யறோம். அவங்களைப் பிடிக்கலைன்னு எல்லாம் இல்லை.'

'சார் ஒரு விஷயம் சொல்றேன், என்னோட தொழிலே பழைய பொருள் வாங்கறதுதான். உங்க வீட்டுல எந்தப் பொருளை நான் எடுத்துட்டுப் போனாலும் நான் என்ன கொடுத்தாலும் வாங்கிக்கறீங்க? ஒரு தடவை கூட என்ன எடை, என்ன ரேட்டுன்னு எதுவுமே கேட்டதில்லை. ஆனா சில வீட்டுல பழசுன்னா பழைய பொருள் போட்டுட்டு அவங்க கேட்கற ரேட்.

பழைய பொருள்னா அதுக்கு என்ன விலை இல்லையான்னு கேட்பாங்க,.சண்டை போட்டு கூட பணம் வாங்கிப்பாங்க? பழைய பொருளுக்கெல்லாம் ரேட் இருக்கு, மதிப்பு இருக்குன்னு ஒத்துக்கறோம்.ஆனா பழைய மனுஷங்களுக்கு விலையே இல்லாமதானே சார் நிறைய முதியோர் இல்லம் வந்திருக்கு. தெருவுக்குத் தெரு ஒரு முதியோர் இல்லம் வந்தாலும் கூட ஆச்சரியப்படறத்துக்கில்லை. நீங்க அவங்க மேல உள்ள அக்கறையில அவங்களுக்கு நல்லது பண்ணறதா நினைச்சு பண்ணலாம்.ஆனா அவங்க மனசார ஏத்துக்கலையே.வேற வழியே இல்லாம அவங்க முதியோர் இல்லத்துல போய் இருக்கலாம். ஆனா வீடு மாதிரி வருமா சார்.. ..யோசிச்சுப் பாருங்க' என்று நிறுத்தினான்.

கனத்த குரலில் தொடர்ந்தான், 'சின்ன வயசிலேயே அப்பா, அம்மா ரெண்டு பேரையும் இழந்தவன் சார் நான். என்னை மாதிரி ஆளைக் கேட்டால்தான் அப்பா , அம்மாவோட அருமை தெரியும். அவங்களோட அன்புக்காக ஏங்கினவன் நான். என்ன செய்ய முடியும். போனவங்க திரும்பி வருவாங்களா? அவங்க அனுபவம் நமக்கு வராது சார். நாம நல்லா இருக்கணும்னு அவங்களை விட யாராலயும் நினைக்க முடியாதே.நாம அவங்களுக்கு என்ன கெடுதல் பண்ணினாலும் நமக்கு நல்லது நினைக்கறவங்க அவங்கதானே. அவங்க மனம் கொஞ்சம் வேதனைப் பட்டாலும் அது நமக்குக் கெடுதல் சார்.. ..பாவம். எனக்குத் தெரிஞ்சு பெஸ்ட் பழைய பொருள்னா அது வயசான அப்பா அம்மாதான் சார். .கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. ..' என்று சொல்லி விட்டு மெதுவாக படி இறங்கி கிளம்பிச் சென்றான் சந்தோஷ்குமார்.

அரவிந்தின் பின்னால் நின்றுகொண்டு சுதாவும் அவன் சொன்ன எல்லா வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருந்தாள். அடுத்த நொடி இருவருக்கும் அலுவலக மீதி வேலை நினைவுக்கு வர, லேப் டாப் முன்னால் உட்கார்ந்தனர். இரவு தலைவலி என்று தலைவலி மாத்திரை போட்டுக் கொண்டு சுதா சீக்கிரம் உறங்கி விட்டிருக்க, அரவிந்த் நடு இரவிலும் உறக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலை சுதா கொடுத்த காபி கோப்பையை கையில் வாங்கியவன் நேரே அப்பா, அம்மாவிடம் சென்றான். உட்கார்ந்தான்.

'அப்பா ரொம்ப சாரிப்பா.. உங்க மனசை நோகடிச்சத்துக்கு. உங்களை முதியோர் இல்லத்துக்கு நாங்க அனுப்பலை. உங்களை நல்லவிதமா கவனிக்கறத்துக்கு நம்பகமான வேலையாளுக்கு ஏற்பாடுபண்ணறேன். முக்கியமா நல்ல சமைக்கறவனா? கொஞ்சம் காலம் ஆனாலும் நல்ல ஆளா வேலைக்கு வைக்கறேன்பா? உங்க மனசை நோகடிச்சத்துக்கு என்னை மன்னிச்சுடுங்கப்பா.. நீயும் என்னை மன்னிச்சுடும்மா' என்று கண்கள் கலங்கியபடியே அரவிந்த் சொல்ல, அவனை அணைத்துக் கொண்ட சுந்தரம் வசந்தாவின் கண்களும் கலங்கி இருந்தன.

சில நிமிடங்கள் கழித்து எழுந்த அரவிந்த், சுதாவிடம் தன் முடிவை எப்படி தெரிவிக்கலாம் என்று யோசித்தவாரே அவளை நோக்கிச் சென்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT