திரைக் கதிர்
விஜய் சேதுபதி-ராம் கோபால் வர்மா கூட்டணி: புதிய படத்திற்கான பேச்சுவார்த்தையா?
தினமணி கதிர்திரைக் கதிர்
விஜய் சேதுபதி-ராம் கோபால் வர்மா கூட்டணி: புதிய படத்திற்கான பேச்சுவார்த்தையா?
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை' யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 'காதலிக்க நேரமில்லை' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------
கதாநாயகனாக, வில்லனாக பல்வேறு பரிமாணங்களில் நடித்து கோலிவுட்டில் வலம் வந்த விஜய் சேதுபதி தெலுங்கு, ஹிந்தியிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்த்து தொடர்ச்சியாகப் பல படங்களில் பிஸியாகியிருக்கிறார். குறிப்பாக, சமீபத்தில் பாலிவுட்டில் அவர் நடித்த 'ஃபார்ஸி', 'மேரி கிறிஸ்துமஸ்', படங்கள் விஜய்சேதுபதிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.
தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, திடீரென நடிகர் விஜய் சேதுபதியை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார். இருவரின் இந்தச் சந்திப்பு அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையா? ராம் கோபால் வர்மா, விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணப் போகிறாரா என்ற கேள்விகள் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகிறது.
-------------------------------------------------------------------------------------------
சிவகார்த்திகேயன் ஒருவழியாக 'அமரன்' படத்தை முடித்துக்கொடுத்துவிட்டார். ஒப்பந்தத்தில் 80 நாள்கள் தேதி வாங்கப்பட்ட நிலையில், 150 நாள்களைத் தாண்டி ஷூட் போய்க்கொண்டேயிருக்க, ரொம்பவே நொந்து போனார் எஸ்.கே. ஒருகட்டத்தில், ராஜ் கமல் நிறுவனம் பஞ்சாயத்து செய்கிற அளவுக்குப் பிரச்னை முற்றியது. ஒருவழியாக, கடந்த வாரத்தில் எஸ்.கே. போர்ஷனை முடித்துக் கொடுத்து விட்டாராம் இயக்குநர். அதனால், ஏ.ஆர்.முருகதாஸ் ஷூட்டிங்குக்கு முழுமையாக ஒரு மாதத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் எஸ்.கே.
-------------------------------------------------------------------------------------------
ரீ-ரிலீஸ் படங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ரீ-ரிலீஸ் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர். இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் மாபெரும் வசூலைக் குவித்த 'படையப்பா' படத்தை ரீ-ரிலீஸ் செய்வது குறித்து நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார், அப்படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன். 'படையப்பா' ரீ-ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் சவுண்ட், பிக்சர்ன்னு இப்போ இருக்கிற டெக்னாலஜிக்கு ஏற்றமாதிரி டிஜிட்டலைஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் திரைக்கு வருகிறது 'படையப்பா'.