முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்

Updated On : 8 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

ஒருமுறை தன் கப்பலில் சார்லி சாப்ளின் பயணம் செய்துகொண்டிருப்பதை ஹோசிமின் அறிந்தார். சாப்ளினின் சில படங்களை ஹோசிமின் பார்த்து, ரசிகராகவே மாறிவிட்டார். இதனால், சாப்ளினுடன் நிழற்படம் எடுத்துகொள்ள விரும்புவதாகக் குறிப்பு ஒன்றை ஹோசிமின், சாப்ளினுக்கு அனுப்பி இருந்தார். இதனை சாப்ளிளின் மகள் ஜெரால்டின் சாப்ளின் நினைவு கூர்ந்தார். உடனே சாப்ளினும் ஹோசிமின் இருந்த சமையல் அறைக்கே தேடி சென்று, பேசினார். இருவரும் ஒன்றாக உணவு அருந்தி, நிழற்படமும் எடுத்துகொண்டனர். உலகறிந்த தலைவராக ஹோசிமின் ஆனதுக்குப் பின்னர் இருவரும் பலமுறை சந்தித்துப் பேசும்போது, மேற்கண்ட நிகழ்வை நினைவுகூர்ந்து மகிழ்வர்.

புதுச்சேரி தொழிலாளர்கள் தங்களது தினக் கூலியில் 'அரையணா' உயர்த்த வேண்டும் என்று 1908-இல் குரல் எழுப்பினர். மே மாதத்தில் ரோடியர் மில்லின் ஒரு பிரிவினர் இதற்காக, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பத்து நாள்கள் போராட்டம் நீடிக்க, தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றி பெற்றது. சங்கமோ, தலைவர்களின் வழிகாட்டுதலோ இல்லாமல் இயல்பாக நடைபெற்ற ஒரு போராட்டம் வெற்றியை பெற்றது ஆச்சரியம்தான்.

'இலக்கியத் தரமும் பத்திரிகை தரமும் ஒன்றாக இணைய முடியாது என்பது அல்ல; கூடாது. பத்திரிகை என்பது இலக்கியத் தரத்துக்காக மட்டும் நடத்தப்படுவது அல்ல. இலக்கியப் பத்திரிகைகள் மட்டுமே இலக்கியத் தரமாக அமையலாம். மேலைநாடுகளில் விஞ்ஞானம், மருத்துவம், செய்திகள், பொழுதுபோக்கு.. என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பத்திரிகைகள் உண்டு. எப்போதாவது பல்சுவை கருதி இலக்கியத் தரமும் தலைகாட்டினால் இலக்கிய அபிமானிகள் மகிழலாமே தவிர, அந்தந்தப் பத்திரிகைகளின் தனித்துவம் கெடும் அளவுக்கு இலக்கியத் தரம் வர வேண்டும் என்று இலக்கியவாதிகளே வற்புறுத்தலாகாது. இலக்கியவாதிகள் சில 'இஸ'வாதிகள் மாதிரி எல்லாவற்றுக்கும் தங்களது முகத்தையே தரிசிக்க ஆசைப்படும் வெறியர்கள் ஆகிவிடலாகாது. பத்திரிகைகள் பத்திரிகைக்கென்று தாங்கள் வகுத்துகொண்ட நிலையில்தான் நிற்க வேண்டும். ஆனால், இந்தக் கேள்விகள் ஏன் வருகிறது? இங்கே பத்திரிகை ஆரம்பிக்கிறவர்கள் எல்லாருமே இலக்கியத்தை உய்விக்க என்று கட்டியம் கூறிக் கொள்வதனால் வருகிறது. வேறு நோக்கங்களை வைத்துகொண்டு இலக்கியப் போர்வை இட்டுக் கொள்வதினால் வருகிறது' என்றார் ஒரு நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

1955-ஆம் ஆண்டு நவ. 5-ஆம் தேதி மதுரை மேல மாசி வீதியில் இருந்த பழ.நெடுமாறனின் வீட்டுக்கு எதிரேயுள்ள நண்பர் ஒருவர், 'தென்றல்' ஏட்டில் பழ.

நெடுமாறனின் பெயர் இருப்பதாகச் சொன்னார். உடனே பழ.நெடுமாறன் 'தென்றல்' பத்திரிகையை வாங்கிப் பார்த்தபோது, அவரின் நெடுங்கதையான 'தென்பாண்டி வீரன்' முதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இவரை எழுத்தாளராக அங்கீகரித்தவர்

கவிஞர் கண்ணதாசன். இது நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து மதுரைக்கு வந்த கண்ணதாசனை நெடுமாறன் சந்தித்துப் பேசினார். பிற்காலத்தில் 'தென்பாண்டிவீரன்' நெடுங்கதையை புத்தக வடிவில் வெளியிட்டபோது, அதற்கு கண்ணதாசன் எழுதிய முன்னுரையில், 'நீங்கள் நெடுமாறனைப் புகழ்ந்தால், பாராட்டினால், ஊக்குவித்தால் தென்றலின் சார்பில் நான் பூரிப்படைவேன்' என்று கூறியிருந்தார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தமிழ், ஹிந்தி படங்களில் நடித்த தபுவுக்கு, 'டியூன்' (தீர்க்கத் தரிசனம்) எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. இதில், சிஸ்டர் பிரான்சிஸ்கா என்ற பாத்திரத்தில் தபு நடிக்க உள்ளார். 'சிஸ்டர் பிரான்சிஸ்கா வலுவானவர், புத்திசாலித்தனம் மிக்கவர், கவர்ந்திருக்கும் திறன் படைத்தவர் என்பதால் தபுவால் நன்றாகத் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்துவார்' என்கின்றனர் அந்தப் படத் தயாரிப்பாளர்.

-ராஜி ராதா, பெங்களூரு.

வயிற்றுவலியால் ராஜாஜி துன்பப்பட்டபோது, குளியல் அறைக்குச் சென்றவர் அங்கேயே படுத்துவிட்டார். அப்போது அங்கு வந்த டாக்டர் சந்தோஷத்திடம் நகைச்சுவையாகப் பேசி ராஜாஜி சிரித்தார். 'இந்த நிலையிலும் எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது' என்று கேட்டார் சந்தோஷம். 'காலனே வந்தாலும் அவனைப் பார்த்துச் சிரிப்பேன்' என்றார் ராஜாஜி. அப்போது அவருடைய உதவியாளர் வந்து, 'ஐயா நான்கு பேராக உங்களைத் தூக்கிக் கொண்டு உங்களது அறையில் விட்டு விடுகிறோமே' என்றார். 'என்னை நான்கு பேர் தூக்க இன்னும் காலமிருக்கு. இப்போது அவசரம் வேண்டாம்' என்று ராஜாஜி கூற, அங்கிருந்தோர் சிரித்துவிட்டனர்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

'என் இசை வாழ்வில் கவிஞர் கண்ணதாசனைப் போல் அரிய கவிஞரைப் பார்த்ததில்லை என்றே சொல்லலாம். அவருடைய பாடல்களினால் எனது இசையும் பிரபலமானது. என் உயிரில் பாதியாக இருந்தவர் கவிஞர்' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கூறுவார். இசையமைப்பாளர்கள் ஏதேனும் ஒரு ராகத்தில் இசையை அமைத்து அந்த இசைக்கு ஏற்ப பாட்டு எழுதும்படி கூறிவார்கள். அதற்கேற்ப வார்த்தைகளை அமைத்துகொடுக்க வேண்டும். மெட்டுக்குப் பாட்டு எழுதுவதைப் பற்றி கண்ணதாசன், 'மெட்டுக்குப் பாட்டு எழுதுவது கிடுக்கிக்குள் சிக்கிக் கொண்ட எலி போன்றது. முதலில் நான் சொல்ல வரும் விஷயத்தைச் சொல்லவும் முடியாத பாடலாகவும், இலக்கணம் இல்லாததாகவும், படித்துப் பார்த்தால் வசனம் மாதிரியும் இருக்கும். ஒரு அநாவசியமான நீட்டலும் இருக்கும். அப்படிப்பட்ட எலியாக நான்இருக்க விரும்பவில்லை' என்றார்.

மும்பையில் ஓவியர் ரவிவர்மா வசித்துவந்தபோது, அவருக்கு ஆளுநர் பங்கேற்கும் விழாவுக்கு வருமாறு அழைப்பு வந்தது. விழாவுக்குச் செல்லும் நேரத்தில் குதிரைவண்டிக்காரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை ரவிவர்மாவே குதிரை வண்டியில் ஏற்றிச் சென்று, மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெறவைத்தார். இதனால், விழாவுக்கும் செல்ல முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது குற்றமாகக் கருதப்பட்டது. இதற்காக, விழாவுக்கு வராததது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆளுநரின் செயலாளர் விளக்கம் கேட்டார். ரவிவர்மாவும் நடைபெற்ற சம்பவத்தை விளக்கினார். சில நாள்களுக்குப் பின்னர், ரவிவர்மாவுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த கடிதத்தில், 'உங்களுக்கு ஆளுநர் விழாவைவிட வண்டிக்காரரின் நோய்தான் முக்கியத்துவமாகப் பட்டதா?' என்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு ரவிவர்மாவும், 'ஆமாம்' என்று பதில் கடிதம் எழுதினார்.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் டூமாஸிடம் ஒருமுறை பத்திரிகை நிருபர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, டூமாஸின் குலத்தை அறிய விரும்பி நிருபர் கேள்வியைக் கேட்டார். 'தாங்கள் குவாட்ரூன் (நீக்ரோ பிரிவைச் சார்ந்தது) குலம் என்கிறார்களே' என்றார் நிருபர். 'ஆம். உண்மைதான்' என்றார் டூமாஸ். 'அப்படியானால் தங்களின் தந்தை' என்று கேட்டார் நிருபர். 'ஒரு முலாட்டோ (ஐரோப்பியருக்கும் நீக்ரோவுக்கும் பிறந்தவர்)' என்றார் டூமாஸ். 'உங்களுடைய தாத்தா' என்றார் நிருபர். 'அவர் நீக்ரோ' என்றார் டூமாஸ். இருந்தும் விடாமல் தாத்தா குறித்தும் நிருபர் கேள்வி எழுப்ப டூமாஸ், 'அவர் ஒரு குரங்கு. ஆம் ஒரு குரங்குதான். உம்முடைய குலம் எங்கு முடிவுற்றதோ, அங்கேயே எனது குலம் தொடங்கிவிட்டது' என்றார்.

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.