கண்டது
(வேதாரண்யம் அருகேயுள்ள சில ஊர்களின் பெயர்கள்)
'நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம், புஷ்பவனம், கோயில் குளம்.'
-வசந்தா சித்திரவேலு, கருப்பம்புலம்.
(தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'பொன் மான் மேய்ந்த நல்லூர்'
-வீர.செல்வம், பந்தநல்லூர்.
(சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள உணவகத்தின் பெயர்)
'மெட்ராஸ் மச்சான்ஸ்'
-கே.அரவிந்தலட்சுமி, காட்டாங்கொளத்தூர்.
கேட்டது
(கோவையில் மால் ஒன்றில் இரு பெண்கள்)
'கட்டின புடவையோட வான்னு சொல்லிட்டு உன் காதலர் ஏமாத்திட்டாரா?'
'ஆமாம்.. போன பின்னர்தான் தெரிஞ்சது அவர் மனைவியோட புடவைகளை எடுத்து கொடுக்கிறாரு...'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
(விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இரு முதியோர் பேசியது)
'விவசாயப் படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்ட உங்க பையனை ஏன் என்ஜினீயரிங் படிக்க வைக்கறீங்க?'
'அவன் விவசாயப் படிப்பு படிச்சிட்டு நிலம் கேட்பான். நான் எங்கே போவேன். அதான் ஏற்கெனவே பிளாட் போட்டு வித்தாச்சே...'
-இந்து குமரப்பன், விழுப்புரம்.
(சென்னையில் பைக்கில் வந்தவரை வழிமறித்த காவலரும்...)
'என்ன சார் வேணும்.. ஏற்கெனவே மொக்கை டயரில் பிராண்டி வெச்சிருக்கிற ரோடில் கஷ்டப்பட்டு சமார்த்தியமா வண்டி ஓட்டிட்டு வர்றேன்.. நிப்பாட்ட வைக்கறீங்களே..'
'ஓ.. அப்படீங்களா... குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வர்றீங்களோன்னு நினைச்சேன்....'
-பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.
யோசிக்கிறாங்கப்பா!
வாழ்க்கையைப் பற்றி யோசிப்பதற்காகவே
கண்டுபிடிக்கப்பட்டவைதான் ஜன்னல் ஓர சீட்டுகள்.
-பத்மா சாரதி, தஞ்சாவூர்.
மைக்ரோ கதை
ஏழுமலை எண்பத்தேழு வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். அவரின் ஒரே மகன் முதியோர் இல்லத்தில் சேர்த்த கையோடு, மனதளவில் தலைமுழுகிவிட்டு வெளிநாட்டில் தனது மனைவி, பிள்ளைகளோடு தங்கிவிட்டான்.
ஏழுமலையும் தபால்காரர் மாணிக்கத்தைப் பார்க்கும்போது, 'என் மகனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா?' என்று பரிதாபமாகக் கேட்பார்.
இப்போதெல்லாம் ஏழுமலைக்கு மாதம் இரு கடிதங்களும் வர ஆரம்பித்துவிட்டது. ஏழுமலையும் மகிழ்ச்சியில் திளைக்க மாணிக்கத்தின் மனதில் சந்தோஷம்தான்.
'இதுபோன்று வாழ்க்கையின் இறுதி நாள்களை எட்டியிருப்போரின் மனத் திருப்திக்காக, தானே கடிதம் எழுதிப் போடுவது தவறில்லை' என்று அன்றாடப் பணிகளோடு மாணிக்கம் மேற்கொள்வது யாருக்குமே தெரியாதே?
-இரா.சாந்தகுமார், ஆதனூர்.
எஸ்.எம்.எஸ்.
வெற்றியைத் தேட வேண்டாம்.
உன் உழைப்பில் அதுவே எதிரில் வரும்.
-ராஜி ராதா, பெங்களூரு.
அப்படீங்களா!
விடியோக்களுக்கு புகழ்பெற்ற யூடியூப், தற்போது கேம்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. 'பிளேயபல்ஸ்' என்ற கேமிங் திட்டத்தை யூடியூப் செயலியில் இலவசமாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு இது கட்டணச் சேவையாக இருந்தது.
யூடியூப் செயலியைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இனி இந்த பிளேயபல்ஸைப் இலவசமாக பயன்படுத்தலாம்.
கைப்பேசி, கணினி என இரண்டிலும் இதைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிரி பேர்ட்ஸ், கேரம் க்ளாஸ், செஸ் கிளாசிக், கலர் மேட்ச், கட் த ரோப், வேர்ட்ஸ் ஆப் ஒன்டர்ஸ் உள்ளிட்ட 75 கேம்களுக்கு மேல் இலவசமாக விளையாடலாம்.
இந்தச் சேவையைப் பெற யூடியூபிற்குள் சென்று எக்ஸ்பிளோரரைத் தேர்வு செய்து பிளேயபல்ஸ் - கேம்ஸ்களை தேர்வு செய்து விளையாடலாம்.
வாடிக்கையாளர்களை அதிகரிக்க இதுபோன்ற இலவச கேம்களை நிறுவனங்கள் அளிப்பதுண்டு. லிங்கிடன், நெட்பிளிக்ஸ் ஆகியவை இந்த இலவச கேம்ஸ் சேவையை அண்மையில் வழங்கின. தற்போது யூடியூப் அளித்துள்ள இந்த இலவச சேவை வாடிக்கையாளர்களை வசப்படுத்துமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.