பேல் பூரி
இயற்கைக்கு மனிதர்கள் தேவையில்லை, மனிதனுக்கு இயற்கை தேவை
கண்டது
(நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கொமரபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிச் சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகம்)
'இயற்கைக்கு மனிதர்கள் தேவையில்லை. ஆனால், மனிதனுக்கு இயற்கை தேவை. வெற்றி வந்தால் பணிவு தேவை. தோல்வி வந்தால் பொறுமை தேவை. எதிர்ப்பு வந்தால் துணிவு தேவை. எது வந்தாலும் நம்பிக்கை தேவை.'
-க.வை.ராமகிருஷ்ணன், மல்லூர்.
(காங்கேயத்தில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
'அதிசயம்'
-எம்.சுப்பையா, கோவை.
(தேனியில் உள்ள ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
'பார்த்து வா பங்காளி. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.'
-ச.அரசமதி, தேனி.
கேட்டது
(கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்...)
'டாக்டர்.. வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிற மாதிரியே எப்பவும் ஓர் உணர்வு இருந்துகிட்டே இருக்கு..'
'கணவன்- மனைவி பிரச்னை எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்குதான் போகணும்...'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
(மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்)
'உங்க கணவருக்கு உப்புச் சத்து அதிகமுன்னு எப்படி சொல்றீங்க?'
'உப்பே இல்லாத உணவை கூட உப்பு கரிக்குதுன்னு சொல்லறாரு?'
-நா.குழந்தைவேலு, மதுரை.
(காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயில் முன் இருவர் பேசியது)
'ஏன்டா.. பிச்சைக்காரனையே சுத்தி, சுத்தி வர்றே..?'
'அவசரமா பணம் வேணும்டா.. அதான் கடன் வாங்கலாமுன்னுடா?'
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
யோசிக்கிறாங்கப்பா!
'தெரிந்தால் பேசு. ஆனால் தெரிந்த மாதிரி பேசாதே!
அவமானப்படுவாய்!'
-பத்மா சாரதி, தஞ்சாவூர்.
மைக்ரோ கதை
விழுப்புரம் அருகே குக்கிராமத்தில் வசிக்கும் ஏழுபது வயதான தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆவல் குமாரின் மனதில் எழுந்தது.
பார்த்து ஆறு மாதங்கள் ஆயிற்று என்பதால், கூலி தொழிலாளியான குமாரிடம் இருந்ததே சில நூறு ரூபாய்கள்தான். 170 கி.மீ. தொலைவை நடந்தே சென்றுவிட்டு, கையில் இருக்கும் காசை கொடுத்துவிடலாம் என நடக்க ஆரம்பித்தான்.
இருபது கி.மீ.தான் நடக்கவே ஒரு நாளாயிற்று. கால் வலிக்க, இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் நடக்க வேண்டுமா? என்ற வேதனையில் திரும்பவும் சென்னைக்கே திரும்பினான்.
வீடு வந்து சேரும்போது, இரவு மணி பதினொன்று. வீட்டு வாசலில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது தெரிந்தது. அருகே போய் பார்த்தபோது, அவனது தாய்.
'உன்னைப் பார்க்கணும் போல இருந்தது. தனியே கஷ்டப்படுவேன்னு நடந்தே வந்துட்டேன். வயசாயிடுச்சா. ஒரு வாரம் ஆயிடுச்சிப்பா' என்று கண்ணீரோடு சொன்ன தாயின் கால்களைப் பிடித்து அழுதான் குமார்.
-சௌமியா சுப்பிரமணியன், பல்லாவரம்.
எஸ்எம்எஸ்
உடன் இருப்போருக்கு ஓடமாக இரு.
உதறிப் போனவர்களுக்குப் பாடமாக இரு.
-தி.பிரவீன்குமார், கே.ஜி.எஃப்.
அப்படீங்களா!
உலகின் முதல் ஓட்டுநர் இல்லா ட்ரோன் டாக்ஸிகளை சவூதி அரேபியா அறிமுகம் செய்துள்ளது.
'ஆளில்லா விமானம்' என்று அழைக்கப்படும் ட்ரோன்கள் பாதுகாப்புத் துறைக்கு முதன்மையாகப் பயன்படுகின்றன. அவசரச் சேவைக்கு மருந்துகளைக் கொண்டு செல்வது முதல் வீடு தேடி பொருள்களை விநியோகம் செய்வது வரையில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவை சிறிய ட்ரோன்கள் என்பதால், இதை ரிமோட் மூலம் பயன்படுத்துவது எளிதாக இருந்தது. தற்போது மனிதர்களின் பயணச் சேவைக்கும் பயன்படும் அளவுக்கு ட்ரோன்களின் தொழில்நுட்பம் வளர்த்துள்ளது.
இதில் ஓட்டுநர் இல்லாத ட்ரோன் டாக்ஸிகளை சவூதி அரேபியா அறிமுகம் செய்துள்ளது. அந்நாட்டு அரசு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுடன் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள உலகின் முதல் ஓட்டுர் இல்லாத ட்ரோன் டாக்ஸி இதுதான்.
ஈஹா என்ற சீன நிறுவனம் இந்தச் சேவையை வழங்குகிறது. சவூதி அரேபியாவுக்கு கோடிக்கணக்கில் புனித யாத்திரை மேற்கும் ஹஜ் பயணிகளுக்கு இந்தச் சேவையை வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.
அராபத், மினா, முஸ்தலிபா ஆகிய இடங்களுக்கு இந்த ஓட்டுநர் இல்லா ட்ரோன் டாக்ஸி சேவை சோதனை முறையில் அறிமுகமாகி உள்ளது. இது ட்ரோன் உலகில் பெரும் மைல்கல்லாக கருதப்படுகிறது. இரண்டு பயணிகளுடன் செங்குத்தாக எழுந்து பறக்கும் திறன் இந்த ட்ரோனுக்கு உள்ளது.
ஈவிடால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டுநர் இல்லா ட்ரோன் 220 கிலோ வரை கொண்டு செல்லும். மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் 35 கி.மீ தூரம் வரையில் நிற்காமல் தொடர்ந்து செல்லக் கூடியதாகும். இதன் அளவு சிறியது என்பதால் நிற்க வைப்பதற்கும், பறப்பதற்கும் பெரிய அளவிலான இடம் தேவையில்லை.
-அ.சர்ப்ராஸ்