- எஸ்.ராமன்
""பேச்சுலர் வாழ்க்கையிலிருந்து இல்லற வாழ்க்கைக்கு மாறிட்டீங்க. வாழ்த்துகள் மாப்பிள்ளை'' என்று மணமேடையில், முதல் வாழ்த்து சொன்ன மாமனாரிடம், ""மாற்றம் ஒன்றே மாறாதது மாமா. வாழ்த்துக்கு நன்றி'' என்று பதில் சொன்னேன்.
""அப்படி போடு. கல்யாணத்துக்கு அப்புறம் ஒவ்வொருத்தருக்கும் மாற்றம் வரும். அதைப் பற்றிதான் நானும் சொல்லணும்னு நினைச்சேன். நீங்க முந்துக்கிட்டீங்க மாப்பிள்ளை.''
""அப்ப நீங்க சொல்ல வந்ததை இப்பவே சொல்லிடுங்க? இல்லைன்னா, என் தலை வெடிச்சுடும்'' என்று நாவலின் கடைசி அத்தியாயத்தை முதலில் படிக்கும் பழக்கமுடைய எனக்கு, சஸ்பென்ஸ் என்றாலே பிடிக்காது.''
""உங்க அப்பாவுடைய சொந்த ஊர் சிவகாசின்னு தெரியும். அதற்காக, தலைக்கு உள்ளே, வெடி மருந்தை பேக் செய்து வச்சுருக்கிறா மாதிரியே பேசறீங்களே மாப்பிள்ளை. நான் வேணும்னா, சொல்ல வந்ததை அப்புறமா சொல்றேன்.''
""திரியை பத்தவச்சுட்டு, பட்டாசை அப்புறம் வெடிக்க சொல்றேன்னு சொல்றது போல இருக்கு. முதல்லே, நீங்க சொல்ல வந்ததை சொல்லிடுங்க மாமா.''
""முதல்லேன்னு சொன்னீங்களே. அங்கேதான் திரியே இருக்கு. என் பொண்ணுக்கு, எல்லாத்திலேயும் முதலாவதா இருக்கணுங்கற வெறி ஜாஸ்தி. முடிஞ்சா அதை மாற்றப் பாருங்க மாப்பிள்ளை''என்றவர், எனக்கு ஏதோ பெரிய அறிவுரை வழங்கியதுபோல், வில்ல சிரிப்பை உதிர்த்து நின்றார். அத்துடன், அந்தச் சம்பாஷணைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தேன்.
""பொண்ணை கூப்பிடுங்கோ? சடங்குகள் பாக்கி இருக்கு'' என்று புரோகிதரின் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலித்துகொண்டிருந்தது. திரும்பி பார்த்தேன். என் பக்கத்தில், புது மனைவி இல்லை. சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு, வந்து சேர்ந்தாள்.
""பந்தியில் கொஞ்சம் லேட்டாயிடுச்சு'' என்றவள், கைக்குட்டையால் வாயைத் துடைத்துக் கொண்டாள்.
விருந்தினர்களை நேரடியாக உபசரிக்க, டைனிங் ஹாலுக்கு போயிருப்பாள் என்ற எண்ணத்தில், "நல்ல பண்பாடு' என்று பெருமையில் மிதந்தேன். அந்தச் சமயத்தில், அதற்குமேல் எனக்கு யோசிக்கத் தோன்றவில்லை.
""பொண்ணும், மாப்பிள்ளையும், சிரிச்ச போஸில் ஒரு செல்பி எடுத்துக்கோங்க'' என்று சடங்குகளின் இறுதிப் பகுதியாக, புரோகிதரின் அறிவிப்பு வெளியாகியது.
இது "காலத்துக்கு ஏற்றபடி, புதிதாக முளைத்த சடங்கு' என்று தோன்றினாலும், எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவே அதை பார்த்தேன்.
"செல்பி' என்ற அந்த வார்த்தையைக் கேட்டதும், என் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறியது. "செல்பி கருணா' என்ற பட்டப் பெயரை, காலப்போக்கில், கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்திருக்கிறேன். தன்னைத் தானே படமெடுத்துகொள்ளும் கலையான செல்பி என்றால், அல்வா சாப்பிட்டது போல. நம்மை நாமே போட்டோ ஷுட் செய்து கொள்ளும்போது ஏற்படும் முக மொழி மாற்றங்களைத் தவிர்த்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று அடித்து சொல்வேன்.
என்னதான் முயன்றாலும், அல்வாக்குள் வாய் மாட்டிக் கொண்டது போலவோ அல்லது, போண்டாவை வாய்க்குள் திணித்தது போலவோ தோன்றும் அசட்டு பிசட்டான முக பாவங்கள், செல்பி ஷுட்டிங்கின்போது, யாராலும் தவிர்க்க முடியாதவைகளாகும். ஆதார் போட்டோக்களைபோல், சில செல்பிக்கள், ஆளையே அடையாளம் காண முடியாதபடி உருக்குலைந்துபோய், அதன் உரிமையாளர்களை மனம் கலங்க வைக்கும். வாய், முகம் ஆகிய அவயங்கள் கோணாமல், செல்பி எடுப்பது எப்படி என்பதில் நான் டாக்டர் பட்டம் வாங்காததுதான் குறை. அந்தக் கலையை, இதுவரை நான் ஆயிரத்து ஏழு பேருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய மொபைல் கேலரியை திறந்தால், பூனை முதல் யானை வரையிலான அனைத்து ஜீவராசிகளுடனுமான செல்பி போட்டோக்கள், ஆயிரக்கணக்கில் நிறைந்திருக்கும்.
ஒருமுறை ஒரு ரூபாய் நாணயத்தை தேடி கண்டு பிடித்து எடுத்து, அதில் பெயரையும், விலாசத்தையும் சிறிய எழுத்துகளில் எழுதி, தர்மம் செய்வதை, செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போடுவதற்காக கிளம்பினேன். சாதனை முடிந்து, வீடு திரும்பியபோது, அங்கு ஒரு சிறிய கூட்டம், அம்மாவிடம், "செல்பி' என்ற வார்த்தையை குறிப்பிட்டு, விவாதித்ததை எட்டி நின்று கேட்டேன். "ஏதோ விவகாரம் புகைந்து கொண்டிருக்கிறது' என்பது மட்டும் ஓரளவு புரிந்தது. பின் பக்கச் சுவர் வழியாக எகிறி குதித்து வீட்டுக்குள் புகுந்து, ஜன்னலில் காதை வைத்தேன்.
""நாங்க பிச்சைக்காரர் சங்கத்திலிருந்து வர்றோம். இன்னைக்கு எங்க சங்கத் தலைவருக்கு பொறந்த நாள். கருணான்னு பெயரோடு, சின்ன எழுத்துகளில் விலாசமும் எழுதப்பட்ட ஒத்த ரூபா காசு, கோயில் வாசல்ல உட்கார்ந்திருந்த எங்க தலைவர் தட்டில்தான் விழுந்துச்சு. நிபந்தனைகளைத் தெரிஞ்சுக்காமலேயே, தலைவருடன் செல்பி வேற எடுத்துக்கிட்ட அந்த கருணாவைத் தேடி வந்திருக்கோம். பொறந்த நாளன்னைக்கு, தர்மம் பண்ணி, செல்பி எடுக்கற முதல் தர்ம பிரபு, தலைவர் கணக்கில், உடனே ஒரு லட்சம் ரூபாய் போட்டாகணுங்கறது, சங்கத்து ரூல். இல்லைன்னா, தலைவரை அவமானப்படுத்தியதற்காக, சங்கத்து மூலமாக மான நஷ்ட வழக்கு போடுவோம்.''
""ஒத்தை ரூபா ஸ்டேட்டஸிற்கு எவ்வளவு செலவு பார்த்தியா? அவ்வளவு பணத்துக்கு இப்ப எங்கே போறதாம்?'' என்று பீரோவுக்கு பின்னால் பதுங்கியிருந்த என்னை வெளியே இழுத்து, காதை பிடித்து அம்மா திருகியதில், இன்னும் காது வலி போகவில்லை.
""இந்தத் தடவை எப்படியாவது சமாளி. இனிமேல் நான் செல்பியே எடுக்க மாட்டேன்'' என்று அச்சத்தில், அம்மாவிடம் தஞ்சம் புகுந்தேன். ஆனால், செல்பி துறப்பு என்பது, பிரசவ வைராக்கியம் போல், சில நாள்கள்தான் நீடித்தது.
எந்தச் சந்தர்ப்பத்திலும், செல்பி எடுக்கும் வாய்ப்பை நான் நழுவ விட்டதில்லை. இந்த சுபயோக சுபதினத்தில், மனைவிக்கு அந்த கலையைக் கற்பிக்கும், ஆயிரத்து எட்டாவது வாய்ப்பு, அருகில் வரும்போது விடுவேனா? எனவே, புரோகிதரின் அறிவிப்பைக் கேட்டவுடன், அந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல், செல்பி எடுக்க, மொபைலை திறந்தேன்.
அப்பொழுது, "நிறுத்துங்கள்' என்ற கட்டளை குரல், எந்தத் திசையிலிருந்து வருகிறது என்று தெரியாமல், திருதிரு என்று விழித்தேன்.
நான் விழித்த நிலையிலேயே, ஒரு செல்பி க்ளிக் ஆகியதை உணர முடிந்தது. திருதிரு விழியுடன் கூடிய என் உருவத்துடன், தன் மொபைலில் பதிவாகி இருந்த செல்பியை, கேலி புன்னகையுடன், புரோகிதரிடம் மனைவி காண்பித்தாள்.
""சாஸ்திரப்படி(?), ஒரு செல்பிக்குதான் அனுமதி. இப்ப மொபைலை மூடிவச்சுட்டு, பொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட போகலாம்'' என்ற அறிவிப்பு வந்தவுடன், எனக்கு பின்னால் அவள் வருவாள் என்ற நினைப்புடன் டைனிங் ஹால் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
டைனிங் ஹாலில், "பொண்ணு, முதல் பந்தியிலேயே சாப்பிட்டு போயிட்டாள்' என்ற பேச்சு அடிபட்டது. "பாவம். பசி போல இருக்கு' என்ற எண்ணத்தில், நான் மட்டும் சாப்பிட்டு முடித்தேன். பசி வேளையில், வேறொன்றும் நினைக்கத் தோன்றவில்லை.
இனிதே துவங்கிய இல்லற வாழ்க்கையில், சாதாரண விஷயங்களில் சில அசாதாரண நிகழ்வுகளை ஒன்றன் பின்னர் ஒன்றாகச் சந்திக்க நேர்ந்தது. தூங்கி எழுந்தவுடன், முதல் வேலையாக, செய்தித்தாளைப் படிக்கும் பழக்கம் உண்டு. படிக்கும்போது, கடைசி பக்கத்திலிருந்துதான் முதல் பக்கத்துக்கு வருவேன். அன்று அப்படித்தான், வெளியே நின்றிருந்த சைக்கிளிலிருந்து பேப்பர் பையன் வீசிய தினசரி, சர்ரென்று பறந்து, ஹாலுக்குள் வந்து விழுவதற்கு முன், முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஸ்லோ மோஷனில் நகர்ந்து, கேட்ச் பிடித்து, மடிப்புக் கலையாத புத்தம் புதிய பேப்பரின் வாசனையை நுகர்ந்து ரசித்தேன். அயர்ன் செய்த சட்டையை ஜாக்கிரதையாக பிரிப்பதுபோல், பேப்பரை பிரிக்க முயற்சித்தபோது, "நிறுத்துங்க' என்ற அந்த குரல் ஓங்கி ஒலித்ததும், நிமிர்ந்து பார்த்தேன்..
தூக்கத்திலிருந்து எழுந்து ஓடி வந்த மனைவி, பரீட்சை ஹாலில் சூப்பர்வைஸர், கேள்வித்தாளை, ஸ்டார்ட் பெல் ஓசை கேட்கும்வரை, யாரும் பார்க்காதவாறு, மறைத்து வைத்துகொள்வதுபோல், தினசரியை பாய்ந்து எடுத்து பீரோவில் பூட்டி சாவியை தன்னிடம் வைத்துக் கொண்டாள். என்ன நடக்கிறது என்பது புரியாமல் விழிப்பதை தவிர, எனக்கு வேறு ஒன்றும் சாய்úஸ இல்லை.
முதலில் தான் காபி குடித்துவிட்டு, எனக்கு காபி கொண்டு வந்தவள், பீரோவிலிருந்த பேப்பரை பிரித்து, ஒவ்வொரு பக்கமாகப் படித்துவிட்டு, என்னிடம் கொடுத்தாள். அவள் செய்கையை தற்காலிக ஆர்வக் கோளாறு என்றுதான் நினைத்தேன்.
அடுத்தடுத்த நாள்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தன. அதற்கான காரணத்தை என்னால் ஊகிக்க முடியவில்லை.
"ஆன்லைனில் புக் செய்துவிட்டு சினிமாவுக்கு போகலாம்' என்றாள். தியேட்டரில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், மொபைல் டார்ச் அடித்து, பதிவு செய்யப்பட்ட இருக்கையை கண்டுபிடித்து உட்கார்ந்து, பின்னால் பார்த்ததும், "நாங்கள் உட்கார்ந்திருப்பது, முதல் வரிசை' என்ற உண்மை புரிந்தது. அந்த முதல் வரிசையில், மனைவி, ஒண்ணாம் நம்பர் சீட்டில் உட்கார்ந்திருந்தாள். ஆனால், வகுப்பறை முதல், சினிமா தியேட்டர்வரை, எப்பொழுதும் கடைசி வரிசைதான் என் சாய்ஸ். நிலைமை, இப்பொழுது தலைகீழாக மாறி இருந்தது.
அடுத்து வந்த நாள்களில், அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழாததால், கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆனால், அந்த பெருமூச்சு நிலைக்கவில்லை. திடீரென்று வீட்டில் விளக்குகள் எரியவில்லை. இ.பி.க்கு போன் செய்து காரணம் கேட்டேன். "பில் தொகை கட்டவில்லை' என்று பதில் வந்தது.
பில் தொகை கட்டாமல் கரண்ட் கட் ஆனது, எனக்கு அவமானமாக இருந்தது. அவமானத்தை மனைவியிடம் வெளிக்காட்டாமல், தொகை வசூலிக்கும் இடத்துக்குப் போனேன். எனக்கு பழக்கப்பட்டவரிடம், கார்டை கொடுத்து விசாரித்தேன்.
ஜோசியர் ஜாதகக் கட்டத்தை ஆராய்வது போல் கார்டை பல திசைகளிலும் திருப்பி பார்த்து ஆராய்ந்தவர், நீண்ட யோசனைக்குள் புகுந்து வெளியே வந்தார். அதற்குள், அங்கு நின்றிருந்த க்யூவின் பின்னணியில், நான் ஒரு செல்பி எடுத்துகொள்ள தவறவில்லை.
"இப்ப ஞாபகம் வந்துடுச்சு. பில் கட்ட வேண்டிய கடைசி நாளன்று, இங்கே பெரிய க்யூ நின்றிருந்தது. முகத்தில் போடவேண்டிய கூலிங் கிளாûஸ கையில் மாட்டிக் கொண்டு, கடைசியாக நின்றிருந்த பெண்மணி, வரிசையை முறித்து, முதலில் நிற்க வேண்டும்' என்று பிடிவாதம் பிடித்தார் நீண்ட நேரமாக காத்திருந்த மற்றவர்கள் யாரும் அதை ஏற்கவில்லை. அதனால், ஏதோ சாமி வந்ததுபோல் கோபம் அடைந்தவர், "இனி இந்த இ.பி.ஆபீஸ் பக்கமே வரமாட்டேன்' என்று கவுன்ட்டடரில் சபதம் அடித்து வெளியேறினார். ""கவுன்ட்டரில் விழுந்த கிராக்கை ரிப்பேர் செய்ய ஹெட் ஆபீஸýக்கு எழுதி இருக்கோம். அந்த ஷாக்கிலிருந்து இன்னும் நாங்க மீளவில்லை. ஆமா. அந்த கிராக்கு பொம்பளை யாரு சார்?'' என்ற கேள்வியோடு, பில் தொகையை வாங்கி, ரசீது கொடுத்தார்.
அது யார் என்பது எனக்கு புரிந்துவிட்டது. முகத்தில் மாட்ட வேண்டிய கூலிங் கிளாûஸ கையில் மாட்டிக் கொள்ளும் மேனரிசம் என் மனைவியை சார்ந்தது என்பதை குறுகிய காலத்தில் புரிந்து கொண்டதால், எனக்கு இந்த விஷயத்தில், எந்தவிதமான சஸ்பென்ஸூம் இல்லை.
பில் தொகையை செலுத்தியதும் வீட்டில் லைட் எரிய ஆரம்பித்தது. அத்துடன், என் மூளையிலும் ஏதோ பல்ப் சுடர் விட்டு எரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால், என்னால், எதையும் உறுதி செய்ய முடியவில்லை. மனைவியிடம் காரணம் கேட்டு, அவள் சொல்லும் பதிலில், என்னை நானே குழப்பிக் கொள்ள விரும்பவில்லை.
அன்று விடுமுறை நாள். மனைவி தினசரியை படித்து முடித்த பிறகு, கடைசி பக்கத்தை திருப்பி படிக்க ஆரம்பித்தேன். அதில், "ரேஷன் கடையில் கலாட்டா. சம்பந்தப்பட்டவரை போலீஸ் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கிறது' என்ற பெட்டி செய்தி கண்ணில் பட்டது. "செய்திக்கும் எனக்கும் தொடர்பு ஏதும் இல்லை' என்ற எண்ணத்தில் பக்கத்தைப் புரட்டியபோது, வீட்டு காலிங் பெல் ஒலித்தது. கதவை திறந்ததும், ஓர் அதிர்ச்சி, போலீஸ் வடிவில் காத்திருந்தது. போலீûஸ பார்த்ததும், "என் செல்பி மகாத்மியத்தில் விளைந்த ஏதாவதொரு அசம்பாவிதம் சம்பந்தமாக இருக்கும்' என்றுதான் நினைத்தேன்.
அதற்கு மாறாக, ""இந்த விலாசத்தில் வசிக்கும் பெண்மணி, நேற்று ரேஷன் கடையில் தகராறு செய்ததாகப் புகார் பதிவாயிருக்கு. அவங்களை விசாரிக்கணும். கூப்பிடுங்க'' என்றார்.
""சார்.. இன்னொரு முறை செக் பண்ணுங்க. அதுமாதிரி தகராறு பண்றவங்க இங்கே யாரும் இல்லை'' என்றேன். அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு, மனைவி அங்கு வந்து, ""என்ன விஷயம்?'' என்றாள்.
""நேற்று நீ ரேஷன் கடைப் பக்கம் போகலை இல்லை'' என்று நம்பிக்கையுடன் அவளிடம் கேட்டேன். அவள் பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே போனாள்.
""நான் சொல்றேன்'' என்ற போலீஸ்காரர், ""நேற்று ரேஷன் கடையில் பெரிய க்யூ. கடைசியா வந்த இவங்க, முதல்ல நிக்கணும்னு அடம் பிடிச்சுருக்காங்க. இவங்களுக்கு ஆதரவா பேசிய சில பேருக்கும், எதிராகப் பேசிய பல பேருக்கும் ஏற்பட்ட வார்த்தை வீச்சுகளில், ரேஷன் கடையை மூட வேண்டியதா போச்சுன்னு புகார். உங்க பக்க விளக்கத்தை கேட்ட பிறகு, எஃப்.ஐ.ஆர். போடலாம்னு இருக்கோம்'' என்று குண்டை தூக்கிப் போட்ட போலீஸ்காரருடன், ஒரு செல்பி எடுத்துகொள்ள முயன்றபோது, தன் முறைப்பு பார்வையினால், தடுத்தார்.
வாசலில் நின்றிருந்த போலீஸ்காரர் பேசுவதை கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைவது யார் என்று பார்த்தேன். பையிலிருந்து வெளியே தெரிந்த, மந்தாரை இலை கட்டுடன், கிராமத்திலிருந்து, அம்மா வந்திருந்தாள். அப்பா காலத்துக்குப் பிறகு, தட்டுக்குப் பதிலாக, அம்மா அந்த இலையில்தான் சாப்பாடு சாப்பிடுவாள். திருவாச்சி மரத்தின் அகலமான இலைகளை, சிறு தென்னங்குச்சிகள் மூலம் இணைத்து, பின்னப்படும் இந்த இலைகள் மருத்துவக் குணம் நிறைந்தவை. அந்த இலையில் சாப்பிட்டால், மன, உடல் நோய்கள் குணமாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இக்கட்டான சூழ்நிலைகளில், எதையாவது பேசி, நிலைமையை சமாளிக்கும் புத்தி சாதுர்யம், அந்த இலையில் சாப்பிடுவதால்தான், அம்மாவுக்கு வளர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
""என்னம்மா சொல்லாமல் கொள்ளாமல், வந்து நிக்கறே. சரியான டயத்துக்குத்தான் வந்திருக்கே. நிலைமையை சமாளிக்க உனக்குத்தான் தெரியும். ஓவர் டு யூ அம்மா'' என்று அவளிடம் காதோடு விஷயத்தைச் சொல்லி, நான் நகர்ந்தேன்.
""நீங்களெல்லாம் உள்ளே போங்கோ. நான் பேசிக்கிறேன்'' என்றவள், வெற்றிப் புன்னகையுடன், சிறிது நேரத்தில் உள்ளே வந்தாள்.
""என்னம்மா சொல்லி சமாளிச்சே'' என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
""கிட்ட வா.. காதோடு சொல்றேன். அது உன் பொண்டாட்டி காதில் விழுந்துடப்படாது'' என்று, சற்று உறக்க கிசுகிசுத்தாள். அவளுக்கு ரகசியமாகப் பேசத் தெரியாது என்பது நான் அறிந்த உண்மை. சிறுவயதில், அளவுக்கு அதிகமாக கோரோஜனை புகட்டப்பட்டதால், தன் குரல் உச்ச ஸ்தாயியில் நிலை கொண்டுவிட்டதாக, அவளே என்னிடம் சொல்லியிருக்கிறாள்.
செல்பி எடுத்து, ஒரு லட்சம் ரூபாய் டிமாண்டில் நான் மாட்டிக் கொண்ட போது என்னை விடுவிக்க பயன்படுத்திய அதே வார்த்தைகளைத்தான், போலீஸிடம், இப்பொழுதும் பயன்படுத்தி இருக்கிறாள். அந்த வார்த்தைகளைக் கேட்டதும், "அவள் நெருப்போடு விளையாடுகிறாள்' என்று எனக்கு தோன்றியது.
"மருமகளுக்கு மனநல கோளாறு' என்பதுதான் அந்த வார்த்தைகள். ஆனால், அந்த வார்த்தைகளை தன் கூர்மையான காதுகளால் கேட்ட மனைவியின் கண்களிலிருந்து, மாமியாரை நோக்கி, வெறுப்பு பொறி பறந்தது போல எனக்கு தோன்றியது.
சற்று யோசித்ததில், இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான் என்று என் மண்டையில் பல்ப் எரிந்தது. "அந்தப் பொறியை வளர்த்து, அதை அணையா தீப்பந்தமாக மாற்றினால்தான், எனக்கு பாதுகாப்பு' என்று என் உள் மனது கூக்குரலிட்டது. இந்தக் கொடூர எண்ணத்துக்கான காரணத்தைத் தேட, என் வாழ்க்கை சரித்திரத்தில் சற்று பின்னோக்கி பயணம் செய்ய வேண்டும்.
அட்வைஸ் என்றாலே எனக்கு துளிக்கூட பிடிக்காது. சிறுவயதில், அம்மாவும், அப்பாவும் அட்வைஸ் என்று என்னை இம்சை செய்ததுதான் அதற்கான மூல காரணம்.. அதற்கு பிறகு, முன்னுக்கு வா, அதை செய், இதை செய்யாதே என்று தொடர்ந்து முழங்கிய அத்தை, மாமா, சித்தப்பா போன்ற அட்வைஸர்களின் குரல்கள், என்னை விடாமல் துரத்தியது. இதில் கொடுமை என்னவென்றால், எனக்கு அட்வைஸ் வழங்குபவர்களோடு, அம்மா கூட்டணி பந்தம் பிடித்து, அதில் குளிர் காய்வாள். கருணாகரன் என்கிற எனக்கு அட்வைஸ் செய்து, யாரும் வென்றதாக சரித்திரம் கிடையாது.
"ஆசையே துன்பத்துக்கு காரணம். ஆகவே அதிகம் ஆசைப்படாதே' என்ற கொள்கையை பின்பற்றுபவன் நான். "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற என் சீரிய கொள்கை பிடிப்பால், பரீட்சையில் பாஸ் மார்க் வாங்கும் அளவுக்கே படித்தேன். அப்பாவின் திடீர் மரணத்தாôல், அவர் பணிபுரிந்த அலுவலகத்திலேயே, கருணை அடிப்படையில் வேலை கிடைத்ததும், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டதாக நினைத்து, திருமணமும் செய்து கொண்டேன். திருமணத்துக்குப் பிறகு, மருமகளோடு, மாமியார் கூட்டணி வகுத்து, அட்வைஸ் புராணத்தை, என்னை நோக்கி, புரட்டாமல் இருக்கவேண்டும் என்ற நியாயமான தொலை நோக்கு பயம், எனக்குள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது.
எனவே, மாமியார் மீது, மருமகளுக்கு வெறுப்பு சுடர் தோன்ற ஆரம்பித்த அறிகுறி தெரிந்ததும், எனக்கு நிம்மதி பிறந்ததில் ஆச்சரியமில்லை. அந்த மனப் பிரிவினை தொடர வேண்டும் என்று நான் மனதளவில் நினைத்தபோதுதான், சமையலறையிலிருந்து அந்தச் சம்பாஷணை கேட்டது.
""நைட் என்ன டிஃபன் பண்றதா உத்தேசம்? அவனுக்கு புடிச்சதா பண்றயா.. இல்லை உனக்கு மட்டும் புடிச்சதா பண்ணிக்கிறியா?''
""ஒரு நாளைக்கு ரவா உப்புமா. மறுநாளைக்கு சேமியா உப்புமா. அடுத்த நாளைக்கு கோதுமை உப்புமா. அப்புறம் ராகி உப்புமா, ஜவ்வரசி உப்புமா, ஓட்ஸ் உப்புமான்னு, விதவிதமா செய்து கொடுக்கிறேன்'' என்று தினமும் எனக்கு உப்புமா செய்து கொடுப்பதை, உலக மகா சாதனையாக மனைவி பரப்புரை செய்து கொண்டிருந்தாள்.
""அடிப்பாவி. கருணா மீது, உனக்கு துளிக் கூட கருணையே இல்லையா? அதான் அவன் இப்படி இளச்சு போய் கிடக்கிறான். அவனுக்கு வேறென்ன பிடிக்கும்னு வாய் திறந்து எப்பவாவது கேட்டிருக்கியா?'' என அடுப்பங்கரையில், விவாதம் சூடேறிக் கொண்டிருந்தது.
""காஞ்சிபுரம் இட்லி வேணும்னு, அடிக்கடி, கனவில், வாய் திறந்து உளறுகிறாரே.''
காஞ்சிபுரம் இட்லி என்ற வார்த்தையைக் கேட்டு, அம்மா மெüனமானது போல் தோன்றியது.
காஞ்சிபுரம் இட்லிதான், அம்மாவின் சிக்னேச்சர் டிஷ். கூம்பு வடிவமாக்கப்பட்ட மந்தாரை இலையில், மாவை ஊற்றி பேக் செய்து, இட்லி சட்டியின் நாலாபுறமும், அவற்றை குத்திட்டு நிற்க வைத்து, தட்டுப் போட்டு மூடி, விறகு அடுப்பில் வேகவைத்து, அதை சிறுதுண்டுகளாக நறுக்கி, அதன் மீது நெய்}மிளகாய் பொடி தடவி, சிறுவயதில், எனக்கு கொடுத்தது நினைவுக்கு வந்ததும், வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது. திடீரென்று, வீட்டில் காஞ்சிபுரம் இட்லி செய்வது நிறுத்தப்பட்டாலும், அதன் நினைவுகள் என் மனதை அவ்வப்போது, அழுத்திக் கொண்டிருக்கும், நிறுத்தத்துக்கான காரணத்தை கேட்டபோதெல்லாம், "அதெல்லாம் உனக்கு புரியாது' என்று என்னை அடக்கிவிடுவாள்.
""அது மட்டும் முடியாது'' என்று மெüனத்துக்குப் பிறகு, அம்மாவின் குரல் தெளிவாக கேட்டது.
""ஏன்..ரெஸிப்பு மறந்துடுச்சா?'' என்று குத்தலாக கேட்ட மனைவி, வம்பை வளர்த்துக் கொண்டிருந்தாள்.
இந்தக் கேள்வி, அம்மாவை வெகுவாகப் பாதித்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன். அதனால்தான், ரெஸிப்பியை மனப்பாடமாகச் சொல்ல ஆரம்பித்தாள்.
சம அளவில் பச்சரிசி, புழுங்கலரிசி, கொஞ்சம் வெந்தயம், முழு உளுந்து ஆகியவைகளை ஐந்து மணி நேரம், தண்ணீரில் ஊற வச்சு, அரிசியை ரவை பதத்துக்கும்,, உளுந்தை வடை பதத்துக்கும் அரைச்சு, உப்பையும் தயிரையும் சேர்த்து ஒண்ணா கலந்து, ஆறு மணி நேரத்துக்குப் புளிக்க விடணும். கடுகு, கடலைபருப்பு, கருவேப்பிலை, மிளகு, சீரகம், பெருங்காயம், இஞ்சி, முந்திரியை நல்லெண்ணையில் தாளிச்சு கொட்டணும். அதோடு, கொஞ்சம் நெய், சுக்குப்பொடி கலந்து, சுற்றிலும் எண்ணெய் தடவிய வாழை அல்லது மந்தாரை இலைக்குள் அந்த மாவை பேக் செய்து, இட்லி பானையில் வேக வச்சு எடுத்து, அதை சிறு துண்டுகளாக வெட்டி, அதில் நெய்}மிளகாய்பொடி கலந்து சாப்பிட்டால், நாள் முழுவதும் பசிக்காது. வயிற்றுக்கும் ரொம்ப நல்லது..''
""ரெஸிப்பி தெரிஞ்ச நீங்க அதை செய்ய வேண்டியதுதானே?'' என்று அம்மாவை, மனைவி வெறுப்பேற்றி கொண்டிருந்தது போல் எனக்கு தோன்றியது.
""அது, எங்க குடும்பப் பரம்பரை பலகாரம். ஆனால்,இப்ப அதை செய்ய முடியாதுன்னா முடியாது.''
""அதான் ஏன்னு கேட்கிறேன்?'' என்று மனம் தளராமல், மனைவி, வெறுப்புக்கு முறுக்கேற்றிக் கொண்டிருந்தாள்.
வெளியிலிருந்து சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, சஸ்பென்ஸ் தாளாமல், மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது. "நான் ஒரு சாப்பாட்டு பிரியன்' என்பதால், எப்படியாவது இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து, நெய் மிளகாய் பொடி தடவிய காஞ்சிபுரம் இட்லியை சுவைத்துவிட நாக்கு துடித்தது. அதற்காக, எந்தத் தியாகமும் செய்ய தயாரானேன்.
""கருணாவைப் பற்றி, குல தெய்வக் கோயிலில் குறி கேட்டபோது வந்த உத்தரவைப் பற்றி உனக்கு எங்கே தெரிஞ்சிருக்கப் போவுது?''
""நீங்க சொன்னால்தானே எனக்கு தெரியும்?'' என்று சம்பாஷணையில் மேலும் சூடு பிடித்தது.
""குல வாரிசுக்கு, முன்னுக்கு வரங்கற ஆசை பிறக்கும்வரை, உங்க பரம்பரை பலகாரத்தை ஒதுக்கி வைக்கணும். இல்லைன்னா, குடும்பத்துக்கே, வயிற்றில் பெரிய பிரச்னை வந்துவிடும் என்கிற உத்தரவுதான் அது'' என்று அம்மாவின் குரலில், சோகம் கலந்திருந்ததை என்னால் உணர முடிந்தது.
""நடக்கிற காரியமாகப் பேசுங்க. எங்கும், எதிலும், எனக்குதான் முதலிடம். உங்க பிள்ளை, என்னை எதிலும் முந்தக் கூடாதுங்கற கொள்கையை விட்டுக் கொடுக்க நான் தயாரில்லை'' என்றுமனைவி கொக்கரித்தாள்.
""விட்டுக் கொடுத்து போவதுதான் வாழ்க்கைன்னு உனக்கு தெரியுமா, தெரியாதா?'' என்று அம்மா பதிலுக்கு கொக்கரித்தாள்.
அதற்கு மேலும், என்னால் சும்மா இருக்க முடியாததால், சமைலறைக்குள் என் தலையை நீட்டினேன்.
""என் பக்கமா.. அம்மா பக்கமா? பதில் சொல்லுங்க?'' என்று என் தலையை எதிர்பார்த்து காத்திருந்தது போல், மனைவி சீறினாள்.
""அம்மா பக்கம்தான்'' என்று இட்லியின் மீது படிந்த தீராத காதலால், என்னையும் அறியாமல், தைரியத்தை வரவழைத்து, பதில் சொன்னேன்.
""இப்பத்தான் நீ என் பிள்ளை. குலதெய்வ உத்தரவுப்படி, நான் சொல்றதை செய்யறேன்னு ஒத்துக்கிட்டால், இன்னைக்கே, உனக்கு நம்ம பரம்பரை பலகாரம் செய்து கொடுப்பேன்.''
""ஒத்துக்கணும்னா?''
""உன் மனைவியைவிட, நீ அதிக சம்பளம் வாங்கணும்.''
""அதுக்கு நான் என்ன செய்யணும்?''
""வாழ்க்கை முழுக்க கிளார்க் வேலைதான் பார்ப்பேன்னு அடம் பிடிக்காம, டிபார்ட்மெண்ட் பரீட்சை எழுதி, பாஸ் செய்து, கூடிய சீக்கிரம் பிரமோஷன் வாங்குவேன்னு, நம்ம குலதெய்வத்தின் பேரில் சத்தியம் செய்து கொடுக்கணும். செல்பி மோகத்தை துறந்தாலே, அதற்கான டயம் கிடைக்கும்.''
""செல்பி மோகத்தைத் துறந்து, பிரமோஷன் பரீட்சைக்கான வகுப்பில் சேர்ந்து, கூடிய விரைவில் பிரமோஷன் வாங்குவேன்னு நம்ம குல தெய்வத்தின் மீது
சத்தியம்.''
அன்று மாலையே, நெய் மிளகாய் பொடியோடு கூடிய காஞ்சிபுரம் இட்லியை, பல வருடங்களுக்குப் பிறகு சுவைத்தபோது, எனக்கிருந்த வயிற்றுக் கோளாறு முற்றிலும் குணமானது போல் தோன்றியது. நாக்கில் அந்த சுவை கறையுடன், தூக்கம் என்னை தழுவியது.
""அட்வைஸ் பிடிக்காதவங்களுக்கு, நேரடியா அட்வைஸ் செய்யாமல், அவங்க அதிகம் விரும்புகிற, பயப்படுகிற விஷயத்தை வச்சு, வழிக்கு கொண்டு வரலாம்ங்கறதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்னு நினைக்கிறேன். அவனுக்கு பிடிச்ச இட்லி, பயப்படுகிற குல தெய்வம் ஆகியவைகளை வச்சு, கற்பனை சம்பவங்கள் மூலம், அவனுக்குள் ஒரு மன மாற்றத்தை கொண்டு வந்துட்டோம். அவர் இறந்தபிறகு, அவருக்கு ரொம்ப பிடிச்ச காஞ்சிபுரம் இட்லி செய்வதைத் தவிர்த்துவிட்டேன். உன்னைவிட அதிக சம்பளம் வாங்கணும்னு சொன்னவுடன், அவன் சிலிர்த்து எழுந்துட்டான். வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் போட்டி எண்ணம் நல்லதுதான்னு நான் நினைக்கிறேன். நீ என்னம்மா நினைக்கிறாய்?''
""அவருடைய வீக்னஸை விவரிச்சு, கல்யாண தினத்திலிருந்து, நீங்க சொல்லிக் கொடுத்தது போல் நடித்து, அவரை நம்ம வழிக்கு கொண்டு வந்ததில் சந்தோஷம்தான். உங்க சாதுர்யமான அணுகுமுறைக்கு தாராளமாக, "ஓ' போடலாம் அத்தை..'' என்று மாமியார் மருமகளுக்கு இடையேயான இந்த சம்பாஷணை, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.