'கனவுகள் வயது வித்தியாசமின்றி, அனைவருக்கும் வரும். ஆழ்மனதில் படிந்துள்ள எண்ணங்கள்தான் கனவுகளாக வெளிப்படுகின்றன.
கனவுகள் பலித்து விடுமோ, நடக்கப் போகின்ற செயல்களைக் கனவுகள் உணர்த்துகின்றனவோ என்றெல்லாம் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். கனவுகள் குறித்தும் அதற்கான பலன்கள் குறித்தும் தொடர்ந்து அலசி ஆராய்ந்து வந்தால் கனவு குறித்த மாயை விலகி நம் வாழ்வில் தெளிவு பிறக்கும்' என்கிறார் விவசாயி பி. டேவி.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட களியக்காவிளை அருகேயுள்ள மேலே களியக்கல் பகுதியைச் சேர்ந்த இவருக்கு ஐம்பத்தி எட்டு வயதாகிறது. மெலிந்த தேகம், குள்ள உருவம், நீண்ட தாடியுடன் காணப்படும் இவரிடம் பேசியபோது:
'நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயம் செய்துவருகிறேன். வாழை மரங்கள் குலை தள்ளும் பருவத்தில் அல்லது குலை தள்ளி காய்கள் பருவமடையாத நிலையில் இருக்கும்போது, இயற்கைச் சீற்றத்தால் வாழைகள் முறிந்து விழும். காய்கனிகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைவது என பெரும்பாலான காலங்கள் எனக்கு சோதனையாகவே அமைகிறது. இது 'இறைசித்தம்' என எண்ணி கடந்துவிடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
சோதனைகளுக்கு மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளவில்லை. குடும்பச் சுமையின்றி தனியொருவனாக வாழ்வதால் எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ள பழகிவிட்டேன். இளமைக் காலத்தில் கையில் கிடைத்த புராண, இதிகாச, ஆன்மிகப் புத்தகங்களைத் தேடி படிக்க தொடங்கினேன்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கனவுகள் குறித்த சிந்தனை என் மனதில் விரியத் தொடங்கியது.
நான் காணும் கனவுகளை மறக்காமல் நினைவில் வைத்திருந்து, நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளுடன் அவற்றை ஒப்பிட்டு பார்ப்பேன். அப்போது எந்தக் கனவுக்கு என்ன பலன் என்பது தெளிவாகிவிடும். நான் காணும் கனவுகள் உத்தேசமாக, ஒன்றிரண்டு நாள்கள் முதல் ஆறு மாதங்களுக்குள் நடந்தேறுவதை அனுபவப்பூர்வமாகக் கண்டுள்ளேன்.
'கனவுகள் வராத தூக்கம் சாத்தியமா?' , 'கனவுகள் உணர்த்துவது என்ன?' என்றெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால், கனவுகள் என்பன இயற்கையின் விளையாட்டு என்பது உணர்த்தும். இவை எல்லாம் ஒரு மாயை என்பதும் புலப்படும். கனவுகள் நமக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு விதத்தில் நம்மை எச்சரிக்கை செய்கிறது என்பதே உண்மை.
வானில் பறப்பது போன்று கனவு கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றி என அர்த்தம். குறிப்பாக, திருமண வரன் பார்த்துகொண்டிக்கும்போது வானில் பறப்பது போன்று கண்டால் திருமணம் கை கூடும். வழக்கு நடக்கும்போது, பறப்பதாகக் கண்டால் வழக்கில் வெற்றி கிட்டும். வேலை தேடிக் கொண்டிருக்கும் போது பறப்பது போல் கண்டால் வேலை கிடைக்கும்.
மாணவர்கள் தேர்வெழுதிய தாள் கசங்காமல் அல்லது எழுத்துகள் தெளிவாக இருப்பது போன்று கண்டால் வெற்றி நிச்சயம். தேர்வுத்தாள் மழையில் நனைவது போன்று அல்லது தாளில் மை படிந்திருப்பதாக கண்டால் தோல்வி என்பதை உணர்த்தும்.
நீர்நிலைகளில் குளிக்கச் சென்று தண்ணீரில் இறங்கும்போது திடீரென தண்ணீர் வற்றுவது போல் காணும் கனவு வாழ்க்கையில் உடனடியாக பண கஷ்டம் வரும் என்பதற்கான அறிகுறி.
குளிக்கச் செல்லும்போது துணிகளை வெள்ளம் இழுத்துச் செல்வதும், ஒட்டுத் துணியுடன் திரும்பி வருவதும் போன்றும் கண்டால் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடைசியில் ஒட்டுத்துணிதான் மிஞ்சும்.
தொழில் செய்பவர்கள் அவர்களின் தொழில் உபகரணங்கள் தலைகீழாக இருப்பது போன்று அல்லது தொழில் சார்ந்த பொருள்கள் மழையில் நனைவது போன்றும், தண்ணீரில் கிடப்பது போன்றும் கண்டால் தொழிலில் இழப்பு ஏற்படும்.
கல்லை உண்பது போன்று கண்டால் உணவுக்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட உள்ளதாக அர்த்தம். கோயிலில் குறிசொல்பவர் கூறுவது புரியவில்லை என்பது போன்றும் அல்லது வானில் ஏதோ எழுதியிருப்பது போன்றும் அதை படிக்க முடியவில்லை என்பது போன்றும் கனவு கண்டால் சம்பந்தப்பட்டவரின் நேரம் சரியில்லை என கருத வேண்டும்.
திருமணம் ஏற்பாடுகள் நடைபெறும் வீட்டைச் சேர்ந்தவர் எந்தத் திசையை நோக்கி அமர்ந்து உணவு அருந்துவதாக கனவு காண்கிறாரோ அந்த திசையிலிருந்து வரன் அமையும். கிணற்றிலிருந்து வாளியில் தண்ணீர் இறைப்பதாக கனவு கண்டால் திருமணம் கை கூடும்.
தண்ணீர் இறைக்கும்போது வாளி கிணற்றினுள் பாதியில் நிற்பது போன்றும், கயிற்றிலிருந்து வாளி அறுந்து விழுவது போன்றும், கிணற்றில் தண்ணீர் இல்லாமல் இருப்பது போன்றும் வரும் கனவுகள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபடும் என்பதற்கான அறிகுறிகள்.
பிள்ளைகளுக்கு திருமண வரன் பார்க்கும் வேளையில், பணம் தரையில் சிதறி கிடப்பதாக காண்பது, பணக் கஷ்டம் காரணமாக திருமண தடை ஏற்படும் என்பதை உணர்த்துவதாகும்.
கட்டிலில் படுத்திருப்பவர் கீழே விழுவதாக கண்டால் மரணம். மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் தலைகீழாகக் கிடப்பது போல் கண்டால் சிகிச்சையில் இருப்பவர் மரணம். மரங்கள் வேரோடு சாய்வது, யானை, காளை மாடு போன்றவை முட்டுவது, நாய் உடம்பில் நக்குவது போன்று காண்பதும் மரணத்தின் அறிகுறிகள்.
மரம் முறிந்து விழுவதாகவும், தீப்பிடித்து எரிவது போன்றும் கண்டால் மாரடைப்பு. பச்சை தென்னை ஓலை விழுந்து கிடப்பது போல் கண்டால் இளம் வயதும், முதிர்ந்த ஓலை என்றால் வயதானவர்களும் இறக்க நேரிடலாம். இவை அனைத்தும் எனது வாழ்வில் அனுபவபூர்வமாக கண்டறிந்த உண்மைகள்.
கனவுகளில் நமக்கு சில அடையாளங்கள் காட்டும். குறிப்பாக, தெருக்கள், வீடுகள் போன்ற பல அடையாளங்கள் காட்டுவதுண்டு. கனவுகளில் நேர்மறை எண்ணங்களைக் கண்டால் வெற்றியாகவும், எதிர்மறை எண்ணங்கள் கண்டால் எதிராகவும் அமைந்துவிடும் என்பதே உண்மை.
கனவுகள் பலித்து விடுமோ, நடக்கப் போகின்ற செயல்களை கனவுகள் உணர்த்துகின்றனவோ என்றெல்லாம் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். கனவுகள் குறித்தும் அதற்கான பலன்கள் குறித்தும் தொடர்ந்து அலசி ஆராய்ந்து வந்தால் கனவு குறித்த மாயை விலகி நம் வாழ்வில் தெளிவு பிறக்கும்' என்கிறார் டேவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.