பிரணாப் முகர்ஜி - கோப்புப் படம் 
தினமணி கதிர்

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 221

விமானத்தின் முன்பகுதியில் அமைந்த முதல் வகுப்புப் பகுதி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அத்தனை இருக்கையிலும் இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்கள் வீற்றிருந்தனர்.

கி. வைத்தியநாதன்

விமானத்தின் முன்பகுதியில் அமைந்த முதல் வகுப்புப் பகுதி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அத்தனை இருக்கையிலும் இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்கள் வீற்றிருந்தனர்.

முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய், பாஜக தேசியத் தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் கல்யாண் சிங், உ.பி. மாநில பாஜக தலைவர்கள் லால்ஜி தாண்டன், கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மட்டுமல்ல, அடுத்த வரிசையில் இருந்தவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனத் தலைவர் கான்ஷிராமும், மாயாவதியும்!

அடுத்தடுத்து அதி விரைவாக அரசியல் நிகழ்வுகள் 'ஜெட்' வேகத்தில் நகர்ந்தன. அடுத்த நாள் அதிகாலையில், சொல்லிவைத்திருந்ததுபோல பாஜக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் ஆளுநர் ரமேஷ் பண்டாரியை சந்தித்தனர். 425 பேர் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவையில் தங்களது கூட்டணிக்கு 243 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், ஆட்சி அமைக்க வாய்ப்புத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஆளுநர் பண்டாரி ஏற்றுக் கொண்டது; குடியரசுத் தலைவர் ஆட்சியை அகற்றப் பரிந்துரைத்தது; அதைத் தொடர்ந்து மாயாவதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது எல்லாமே புயல் வேகத்தில் நடந்தன. லக்னெளவில் நடந்த அந்தப் பரபரப்பான அரசியல் நகர்வுகளின்போது அங்கே இருக்கும் அபூர்வ வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு அஜீத் சிங்குக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

பிற்காலத்தில் உருவான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பிள்ளையார் சுழி போட்டது உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பாஜக ஆதரவுடன் அமைந்த கூட்டணி அரசு. பாஜக - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அரசின் முதல்வராக மாயாவதி முதல் ஆறு மாதங்களும், அடுத்த ஆறு மாதங்கள் பாஜகவின் சார்பில் கல்யாண் சிங் முதல்வராகவும் பதவி வகிப்பார்கள் என்கிற விசித்திரமான உடன்படிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்டிருந்தது அந்தப் பேரம்.

'கூட்டணி அமைச்சரவையில் இரு கட்சிகளுக்கும் சம அளவில் அமைச்சர்கள் இருப்பார்கள். புதிய அரசின் சட்டப்பேரவைத் தலைவர் பதவி பாஜகவுக்குத் தரப்படும். ஓராண்டு முடியும்போது, இந்த ஏற்பாடு மறு ஆய்வு செய்யப்படும்' என்று அந்த ஒப்பந்தம் குறித்து, நான் சந்தித்தபோது, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்ஷிராம் என்னிடம் தெரிவித்தார்.

தீண்டத் தகாத கட்சியாகக் கருதப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை மாற்றி அமைத்தது உத்தர பிரதேசத்தில் அமைந்த பாஜக - பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டணி. மாயாவதி முதல்வராவதற்கு வழிகோலியதன் மூலம், பாஜக பட்டியல் இனத்தவர்கள் மத்தியில் ஆதரவை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

ஐக்கிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தும்கூட, லக்னெளவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தது என்பதுதான் மிகப் பெரிய வேடிக்கை. பாஜக - பகுஜன் சமாஜ் தலைவர்கள் லக்னெளவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, 'உத்தர பிரதேச ஆளுநர் ரமேஷ் பண்டாரியை நீக்கக் கோரும் பாஜக தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று

தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் கொறடா சந்தோஷ் மோகன் தேவ் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

'பாஜகவின் தீர்மானத்தைத் தோற்கடிக்க நாங்கள் உதவுகிறோம். அதற்குப் பிறகு நீங்கள் பண்டாரியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என்கிற காங்கிரஸின் கோரிக்கையைப் பிரதமர் தேவே கெளடா ஏற்றுக்கொண்டார்.

லக்னெளவில் மாயாவதி தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக - பகுஜன் சமாஜ் கட்சி ஆளுநரை சந்திக்கும்போது, தில்லியில், 'ஆளுநரைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும்' என்கிற தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்யப் போவதில்லை என்று பாஜக அறிவித்தது. ஆளும் கூட்டணியும் சரி, ஆதரிக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளும் சரி அந்த எதிர்பாராத திருப்பத்தால் நிலைகுலைந்தன.

'உத்தர பிரதேச நிலைப்பாடு தொடர்பாக அமைச்சரவைக்குள்ளும், ஐக்கிய முன்னணிக் கட்சிகளுக்கு இடையிலும், ஆதரிக்கும் கட்சிகள் மத்தியிலும் நிலவும் கருத்து வேறுபாடுகளை அம்பலப்படுத்த நினைத்தோம். அதில் வெற்றி பெற்றுவிட்டோம். அனைத்துக் கட்சிகளும் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க செயல்பட்டன. அதனை மீறி, பாஜக இப்போது ஆட்சி அமைக்கவுள்ளது. இதுவே குறிப்பிடத்தக்க சாதனைதான். அதனால் இந்தத் தீர்மானத்தை நான் தாக்கல் செய்யவில்லை' என்று பாஜக எம்.பி. ஜஸ்வந்த் சிங் அறிவித்தபோது, மக்களவையில் ஒரு விநாடி அமைதி நிலவியது.

யாரும் இப்படியொரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்பதைக்கூட அரசுக்குத் தெரிவிக்க முடியாத நிலையில் உளவுத் துறை இருந்தது என்பதில் இருந்து ஐக்கிய முன்னணி அரசு எந்த அளவுக்கு பலவீனமாக இருந்தது என்பது தெரிகிறது.

காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டணியை ஆட்சி அமைக்க அனுமதிக்காத ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகள் மீது காங்கிரஸ் தலைமைக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அதுதான் தேவே கெளடா ஆட்சியின் முடிவுக்குத் தொடக்கமாக அமைந்தது எனலாம்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவதை ஆதரிக்காதது மட்டுமல்ல, தொடர்ந்து ஐக்கிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் காங்கிரஸூக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பதும், சீதாராம் கேசரி உள்ளிட்ட முக்கியமான தலைவர்களுக்கு எதிராக சிபிஐ மூலம் விசாரணை நடத்துவதும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. நான் தில்லி திரும்பிய அடுத்த நாளே, ஸ்ரீகாந்த் ஜிச்கரை சந்திக்கச் சென்றிருந்தேன்.

மோதிலால் நேரு மார்கில் இருந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் வீட்டிற்கு என்னையும் அழைத்துச் சென்றார் ஸ்ரீகாந்த் ஜிச்கர். அங்கே சுரேஷ் கல்மாதி, விஜயபாஸ்கர ரெட்டி உள்ளிட்ட சில தலைவர்கள் ஏற்கெனவே இருந்தனர். நாங்கள் அமர்ந்திருந்த வரவேற்பறைக்கே வந்துவிட்டார் நரசிம்ம ராவ். எல்லோரும் எழுந்து நின்றோம்.

அனைவரையும் அமரச் சொல்லி அவரும் சோபாவில் அமர்ந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியுடனோ, அரசியலுடனோ எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒரே நபர் அங்கே நான் மட்டும்தான். நரசிம்ம ராவின் பார்வை என்னை நோக்கித் திரும்பியது. அவர் பார்க்கிறார் என்றதும் நான் எழுந்தேன். ஸ்ரீகாந்த் ஜிச்கர் என்னை அறிமுகப்படுத்த முனைந்தார்.

தனக்குத் தெரியும் என்பதுபோல அவரையும், உட்காரும்படி என்னையும் சைகை காட்டிய நரசிம்ம ராவ், 'என்ன நடந்து கொண்டிருக்கிறது?' என்று கேட்டதுடன் நிறுத்திக் கொண்டார்.

'விரைவில் ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்று சிலரும், 'சீதாராம் கேசரி அப்படியொரு முடிவெடுத்தால், காங்கிரஸில் பிளவு ஏற்படும்' என்று சிலரும், 'இப்படியே முடிவெடுக்காமல் தொடரும்' என்று ஒருவரும் சொன்னார்கள். அமைதியாகக் கேட்டார் பி.வி.

எழுந்து நின்று எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு, மெதுவாக வீட்டுக்குள் செல்ல முற்பட்டார் அவர். கதவுவரை போனவர், திரும்பிப் பார்த்து சிரித்தபடியே சொன்னார் - பிரணாப் முகர்ஜி, சரத் பவார், கருணாகரன் மூவரும் சீதாராம் கேசரியுடன் இணைந்து முடிவெடுக்கும் போதுதான் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கும்!'

தேவே கெளடா அரசின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்பது தெளிவாகவே தெரிந்தது. ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றிருந்தது.

ஆனால், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதற்கிடையில் ஆட்சிக் கவிழ்ப்பு என்றால், பட்ஜெட் என்னவாகும்? பட்ஜெட் நிறைவேற்றப்படாவிட்டால் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்துவிடும். இவையெல்லாம் விவாதப் பொருளாகியிருந்தன.

சரத் பவார், சீதாராம் கேசரியை மட்டுமல்லாமல் பிரதமர் தேவே கெளடா, பாதுகாப்பு அமைச்சர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். இன்னொருபுறம், கே.கருணாகரன், விஜயபாஸ்கர ரெட்டி உள்ளிட்டவர்கள் சீதாராம் கேசரியை இரண்டு, மூன்று தடவைகள் சந்தித்தனர். ஸ்ரீகாந்த் ஜிச்கரும் நானும் ராஜேஷ் பைலட்டை சந்திக்க அவரது 10, அக்பர் ரோடு இல்லத்துக்குப் போயிருந்தோம்.

'காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்த இதுதான் சரியான தருணம். அதை விட்டுவிட்டு, ஆட்சியைக் கவிழ்த்தால் காங்கிரஸ் கெட்ட பெயரைத்தான் சம்பாதிக்கும். அது மட்டுமல்ல, கட்சியில் பிளவு ஏற்பட்டாலும் நான் வியப்படைய மாட்டேன். அது ஐக்கிய முன்னணியை பலப்படுத்துவதுடன், காங்கிரஸை நிரந்தரமாக பலவீனமாக்கிவிடும்' என்பது ராஜேஷ் பைலட்டின் கருத்தாக இருந்தது.

'பிரணாப் முகர்ஜி ஏன் பேசாமல் இருக்கிறார்? அவர்தான் இப்போது சீதாராம் கேசரியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் என்று சொல்கிறார்களே, அது எந்த அளவுக்கு உண்மை?' என்று என்னை பார்த்துக் கேட்டார் ராஜேஷ் பைலட்.

நான் புன்னகைத்தேன். பிரணாப்தா மிகப் பெரிய தலைவர். ராஜேஷ் பைலட், ஸ்ரீகாந்த் ஜிச்கர், அஜீத் சிங் போல அவருடன் நட்புறவுடன் பேசவா முடியும்? கருணாகரனிடம்கூட என்னால் தைரியமாக அவரது அரசியல் நகர்வுகள் குறித்துக் கேட்டுவிட முடியும். ஆனால், பிரணாப்தாவிடம் அப்படியெல்லாம் பேச முடியாது என்பதை அவருக்கு நான் எப்படி எடுத்துரைப்பது என்று புரியவில்லை.

அவர்களிடம் விடைபெற்றுப் பிரிந்தபோது, அடுத்த நாள் வீட்டிலோ, கட்சி அலுவலகத்திலோ எங்கேயாவது பிரணாப் முகர்ஜியைப் பார்த்தாக வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

நாள் முழுவதும், புரானா கிலா சாலையில் இருந்த சீதாராம் கேசரியின் வீட்டில்தான் இருந்தார் பிரணாப் முகர்ஜி. ஜிதேந்திர பிரசாதா, அர்ஜுன் சிங், தாரிக் அன்வர், வி.என்.காட்கில் ஆகியோரும் சீதாராம் கேசரியுடன் ஆலோசனையில் இருந்தனர். வீட்டுக்கு வெளியே ஏறத்தாழ நூறு பத்திரிகையாளர்கள் குழுமி இருந்தனர்.

மதிய உணவுக்குக்கூட அந்தத் தலைவர்கள் செல்லவில்லை என்பதில் இருந்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. மூத்த தலைவர்களான சரத் பவார், கருணாகரன் உள்ளிட்டவர்கள் ஏன் அந்தக் கலந்தாலோசனைக்கு அழைக்கப்படவில்லை என்கிற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் எழுப்பினர். யாருக்கும் விடை தெரியவில்லை.

சரத் பவாரின் வீட்டில் கருணாகரன், ராஜேஷ் பைலட், ஆர்.கே.தவான் உள்ளிட்ட தலைவர்களும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடமான கோல் மார்க்கெட் ஏ.கே.ஜி.பவனில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான இந்திரஜித் குப்தாவும், பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தனும் மட்டுமல்லாமல் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான முலாயம் சிங் யாதவும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததாக, கேசரியின் வீட்டில் குழுமியிருந்த எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

ஏதோ நடக்க இருக்கிறது என்பது மட்டும் உறுதி. அது ஐக்கிய முன்னணி ஆட்சிக் கவிழ்ப்பா, காங்கிரஸ் பிளவா, இல்லை ஆட்சி மாற்றமா என்பதுதான் கேள்வி. அன்று மாலைவரை அதற்கு விடை கிடைக்கவில்லை.

நான் அங்கிருந்து கிளம்பி, கிரேட்டர் கைலாஷில் இருந்த பிரணாப் முகர்ஜியின் வீட்டில் அவர் வருவதற்காகக் காத்திருந்தேன். இரவு சுமார் ஒன்பது மணிக்குத்தான் அவர் வந்தார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT