பட்டயக்கணக்காளர் தினத்தில் கோகுல கிருஷ்ணனுக்கு சாதனையாளர் விருது வழங்கியபோது... பேசுவது கோகுல் அருகில் மனைவி. 
தினமணி கதிர்

உலகையே வெல்வோம்..!

வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்தபோதும், மன உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் மாற்றுத் திறனாளி கோகுலகிருஷ்ணன்.

எஸ். சந்திரமெளலி

வாழ்க்கையில் பல சவால்களைச் சந்தித்தபோதும், மன உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் மாற்றுத் திறனாளி கோகுலகிருஷ்ணன். இசை ஆர்வமும், திறமையும் மிகுந்த அவர் ஒரு பட்டயக் கணக்காளரும் கூட! ஊக்கம் அளிக்கும் குடும்பத்தினர் உதவியுடன், 'உலகையே வெல்வோம்' என்கிறார்.

சென்னையைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:

'என் பெயர் எஸ்.கோகுலகிருஷ்ணன். 1994-ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதியில் சுமார் ஆறரை மாதங்களே என்னைச் சுமந்து என் தாய் என்னைப் பிரசவித்தார்.

'குறைப் பிரசவத்தால் உடல் நலக் குறைபாடுகள் வரலாம்' என பெற்றோரை மருத்துவர்கள் எச்சரித்தனர். எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோது, என்னுடைய விழித்திரையில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வழி இல்லை என்று பல மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும், அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது.

சென்னையில் சிறப்புப் பள்ளியான லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் மூன்றாம் வகுப்பு வரை நான் படித்தேன். அதன் பின்னர், வேறு எந்தப் பள்ளியும் என்னைச் சேர்த்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை. ஆர்ஷ வித்யா மந்திரில் படிக்க, அங்கு முதல்வராக இருந்த பத்மினி வாய்ப்பு அளித்தார். அதுவே என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.

புதிய பள்ளியில் வழக்கமான மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து நான் படிக்கப் போகிறேன் என்று நானும் எனது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனாலும், எனக்கு மிகவும் கடினமாகத்தான் இருந்தது.

சக மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசினர். நான் பேசும் ஆங்கிலத்தை மற்ற மாணவர்கள் கிண்டல் செய்வார்கள். அவர்களும் என்னை தனித்தே விட்டனர். அதன் காரணமாக நான் வேதனைப்பட்டதுண்டு.

மனச்சோர்வு அடையும்போதெல்லாம், நான் எனக்கு நானே ஊக்கமளிக்கும் வகையில் பேசிக் கொள்வேன். நண்பனாக ஏற்காமல் தவிர்க்கும் மாணவர்கள் முன்னால் எனது திறமையை வெளிப்படுத்தி, அவர்களை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது.

எனக்கு நன்றாகப் பாட்டுப் பாடும் திறமை இருந்தது. ஓய்வு நேரங்களில் பல பாடல்களையும் பாடினேன். இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் ஊக்கம் அளித்தனர். மற்ற பள்ளிகளில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்றேன்.

ஓரளவுக்கு நன்றாகப் படித்தேன் என்றாலும், ஜியோமெட்ரி படங்களைப் புரிந்துகொள்வது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. கணிதத்தில் நல்ல மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்ற தீவிரத்தில் வெங்கடேஸ்வரன் என்ற கணித ஆசிரியரிடம் டியூஷனுக்குச் சேர்ந்தேன். அவர் என் கைகளைப் பிடித்து, வரைபடங்களின் உருவங்கள் குறித்து நன்றாகப் புரியும்படி விளக்கிச் சொல்லி, என் மனதில் பதிய வைத்தார். தன்னம்பிக்கையை எனக்குள்ளே அவர்தான் ஏற்படுத்தினார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுவதற்கு நான் 'ஸ்கிரைப்' வசதியைப் பயன்படுத்தினேன். பரீட்சையின்போது, ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதில்களை நான் சொல்ல, வேறு ஒருவர் விடைத்தாளில் எழுதுவார்.

பிளஸ் 1 வகுப்பில் நான் சேர்ந்தபோது, புதிதாக கிடைத்த அற்புதமான நண்பர்களின் நட்பும், உதவிகளும் எனக்கு புதுத் தெம்பை ஊட்டின.

அக்கவுன்டன்சி பாடத்தில் தேர்வின்போது எப்படி பதில்கள் எழுத வேண்டும் என்பதை ஆசிரியை பார்வதி புரிய வைத்தோடு, 'ஸ்கிரைப்' பதிலை சரியான முறையில் எழுதுவதையும், விளக்கிச் சொல்லும் முறையையும் சொல்லிக் கொடுத்தார். அதன்படி, தினமும், என் அம்மாவுடன் உட்கார்ந்து பயிற்சி செய்தேன்.

என் மீதான ஆசிரியர்களின் அக்கறை, எனது விடாமுயற்சியும் கடின உழைப்பும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல பலன் கிடைத்தது. வணிகவியல் பிரிவில் முதலிடமும், பள்ளியில் இரண்டாவது இடமும் பெற்றேன்.

லயோலா கல்லூரியில் சேர்ந்து பி.காம் படித்தேன். சி.ஏ. படிப்பில், பிரத்யேகப் பயிற்சி இல்லாமலேயே ஃபவுண்டேஷன் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். அடுத்த கட்டத் தேர்வுகளுக்காகத் தயார் செய்துகொள்ள நான் விரும்பியபோது, என்னை சேர்த்துகொள்ள பயிற்சி நிறுவனங்கள் தயங்கின. இருந்தாலும் எனது தளராத முயற்சிக்குப் பலனாக, 'குருகிருபா இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனத்தில் அனுமதி கிடைத்தது.

இன்டர்மீடியட் நிலைத் தேர்வில், முதல் முயற்சியிலேயே நான்கு பாடங்களில் தேர்ச்சி பெற்றேன். 'ஆர்டிகிள்ஷிப்' முறையில் ஏதாவது ஒரு பட்டயக் கணக்கு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

பலரும் என்னை நிராகரித்தனர். மனம் தளராமல் ஆறு மாதங்கள் போராடியவுடன் 'கருப்பையா & கோ' என்ற நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது.

ஆரம்பத்தில் நான் வேலையில் மெதுவாகவே பணியாற்றினேன். நாள்கள் செல்ல, செல்ல வேகமாக என்னாலும் வேலை செய்ய முடிந்தது. கணினியில் வேலை செய்யும்போது, வரிவடிவத்தை ஒலிவடிவமாக மாற்றும் 'ஸ்கிரீன் ரீடர்' என்ற மென்பொருள் எனக்குக் கை கொடுத்தது.

இன்டர்மீடியட் நிலைக்கான மீதமுள்ள மூன்று பாடங்களில் வெற்றி பெற பலமுறை முயற்சித்தும், வெற்றி பெற முடியவில்லை. என்அம்மாவின் ஆலோசனையை ஏற்று, 2016-இல் முழு முயற்சியுடன் தேர்வுக்குத் தயாரானேன். அவருடைய வாக்கும் பலித்தது. நான் மீதி பாடங்களிலும் வெற்றி பெற்றேன். கூடவே, எனது மூன்று ஆண்டு பயிற்சியும் நல்லபடியாக முடிந்தது.

சி.ஏ. இறுதிக் கட்டத் தேர்வுக்கான தயாரிப்பில் இறங்கியபோது, மிகவும் கடினமாக இருந்தது. தோல்வியைக் கண்டு துவண்டு போகவில்லை. தீவிரமாகச் சிந்தித்தேன். குருகிருபா பயிற்சி மைய ஆசிரியர் சரவண பிரசாந்த், தேர்வு எழுதும் உதவியாளராக எனது தாயார் விஜயலட்சுமியையே வைத்துகொள்ளக் கூறினார். அவரது அறிவுரையின்படி, என் தாயையே 'ஸ்கிரைப்' ஆக வைத்துக் கொண்டு மாதிரித் தேர்வுகள் நிறைய எழுதி பயிற்சி செய்தேன்.

இதற்கிடையில், 'இந்தியா ஃபைலிங்ஸ்' என்ற நிறுவனத்தில் வணிக ஆலோசகராக எனது பணியைத் தொடங்கினேன். 2021-இல் நான் இறுதிக் கட்டத் தேர்விலும் தேர்ச்சி பெற்று பட்டயக் கணக்காளராக ஆனேன்.

எனது இசைத்திறமை ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னைத் தூண்டியது. சி.ஏ. படிக்கும்போதே பல சபாக்களில் கர்நாடக இசைக் கச்சேரிகளை நிகழ்த்தினேன்.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, அவருக்கு முன்பாகப் பாடியதும், பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி முன்பாகப் பாடி ஆசி பெற்றதும் எனது வாழ்க்கையின் இனிய தருணங்களாகும்.

ஏ.ஆர். ரஹ்மான் நடத்தும் இசைப் பள்ளியில் பியானோவும் கற்றேன். அவருக்காகவும் நான் வாசித்திருக்கிறேன். யூ டியூப்பில் பதிவேற்றப்பட்ட எனது காணொலி வைரலானதால், 'என்டர்டெயின்மென்ட் கே லியே குச் பி கரேகா' என்ற ஹிந்தி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

கனவுகளை நனவாக்க என் தாயார் விஜயலட்சுமி தொடர்ந்து ஊக்கமளித்து வந்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் எனது அத்தை மாலதியும், மாமா சரவணனனும் தொடர்ந்து உற்சாகமூட்டியதையும் என்னால் மறக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களது குடும்ப நண்பர் நல்லி குப்புசாமி செட்டியார் பலவகையிலும் ஊக்கம் அளித்தார். தந்தைவழி தாத்தா சென்னைத் தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன், பாட்டி ரமேலா, அம்மா வழி தாத்தா நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அரவணைப்பும் அவர்களது ஆதரவும் எனக்குக் கிடைத்தது.

அலுவலகப் பணி தொடர்பாகவும் ரோட்டரி சங்க நிகழ்வுக்காகவும் பெங்களூரு சென்றிருந்தேன். அங்கே என்னைப் போன்றே பார்வைக் குறைபாடுள்ள சந்தனாவைச் சந்தித்தேன். இருவரது எண்ணங்களும் ஒரேரீதியில் இருக்கவே, எங்களது திருமணம் அண்மையில் நடைபெற்றது. இப்போது எனக்கு ஊக்கம் அளிக்க மனைவி சந்தனாவும் கிடைத்திருக்கிறார். உலகையே வெல்வோம் நாங்கள்' என்கிறார் கோகுலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT