நூற்றாண்டு கண்ட வீடு 
தினமணி கதிர்

உள்ளது உள்ளபடியே!

வீட்டின் முன், பின் கதவுகளுக்குத் தாழ்ப்பாள் வைக்கப்படாமல் இரண்டு நூற்றாண்டு கண்ட வீடு இன்றைக்கும் விரிசல் எதுவும் விழாமல் காலத்தை வென்று நிற்கிறது.

பிஸ்மி பரிணாமன்

வீட்டின் முன், பின் கதவுகளுக்குத் தாழ்ப்பாள் வைக்கப்படாமல் இரண்டு நூற்றாண்டு கண்ட வீடு இன்றைக்கும் விரிசல் எதுவும் விழாமல் காலத்தை வென்று நிற்கிறது. அந்தப் புராதன வீடு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவையாறு அருகேயுள்ள கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் நடுக்காவேரி கிராமத்தில் அமைந்துள்ளது.

இந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுமே சுண்ணாம்பு, செங்கல்களைக் கொண்டு கட்டப்பட்டவை. பழைய வீடுகள் பல சேதமடைந்த நிலையில் இன்றைய பாணியில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனாலும், சேதமடையாத சில வீடுகளில் பிரபலமானது 'யோகபுலி நாட்டார் பரம்பரை' வீடு.

இந்த வீட்டை 1898-இல் புண்ணாக்கு என்ற பெண்மணி கட்டியுள்ளார். அவர் சுட்ட கற்களால் சுண்ணாம்புக் காரையைப் பயன்படுத்தி, கட்டப்பட்ட வீட்டின் சுவரின் அகலம் இரண்டு அடி. வீட்டின் கட்டுமானத்தின் உறுதிக்கு இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வீடு கட்டப்பட்டு 126 ஆண்டுகள் ஆகின்றன. பல தலைமுறைகளாக இந்த வீட்டில் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். காலம் மாறுவதற்கு ஏற்றபடி மாற்றங்கள் எதுவும் செய்யப்படாமல், வீடு கட்டப்பட்டபோது, எப்படி இருந்ததோ அப்படியே இன்றைக்கும் இருக்கிறது.

குடும்ப ஒற்றுமைக்காக , ஒரு குடும்பத்தின் கை வசம் வராமல் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று முன்னோர் சொன்னதை இன்றும் பின்பற்றுகின்றனர்.

காவிரியின் கிளை ஆறு ஆன குடமுருட்டி ஆற்றின் கரையில் வீடு அமைந்துள்ளதால், அப்போதே தரை மட்டத்திலிருந்து எட்டு அடி உயரத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. அதனால், வெள்ளம் இதுவரை வீட்டின் படியைக் கூடத் தொடவில்லை.

வீட்டின் நுழைவு வாசல் கதவில் உள்ளும் புறமும் தாழ்ப்பாள் வைக்கப்படவில்லை. அதனால் வாசல் கதவை உள்ளாகவும் வெளியாகவும் பூட்டு போட்டு மூட முடியாது. புறக்கடையில் உள்ள பின் கதவிலும் தாழ்ப்பாள் எதுவும் வைக்கப்படவில்லை. அதனால் அந்தக் கதவையும் பூட்டு போட்டு பூட்டமுடியாது. ஆக , தலைக் கதவையும், பின் கதவையும் வெறுமனே சாத்தி மட்டுமே வைக்க முடியும்.

'வீட்டில் வசிக்கும் அனைவரும் ஒரே சமயத்தில் வீட்டைவிட்டு போய்விடக் கூடாது. யாராவது ஒருவராவது வீட்டில் வசிக்க வேண்டும். இரவு நேரத்தில் வீட்டில் விளக்கு எரிய வேண்டும். வாரிசுகளில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம். கதவைத் தட்டித் திறக்கச் சொல்ல வேண்டாம். சாத்தியிருக்கும் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே வரலாம்' என்பதற்காகவும் முன் பின் கதவுகளுக்கு தாழ்ப்பாள் வைக்கப்படவில்லை. மூன்று தலைமுறையாகியும் இந்த மரபு அப்படியே பின்பற்றப்படுகிறது.

வீட்டில் வசிப்போர் வேலை காரணமாக, சென்னை, பெங்களூரு என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்ந்துவிட்டாலும், வீட்டு வாரிசுகளில் யாரேனும் ஒருவர் வீட்டில் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புராதன இல்லத்தில் நெல் சேமித்து வைக்கும் குதிர், உரல் உலக்கை, கருங்கல்லாலான மிகப் பெரிய ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்ற பழமையான பொருள்கள் இன்றும் அந்தந்த இடங்களில் இருக்கின்றன. பழைய புகைப்படங்கள் ஆங்காங்கே தொங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

அசத்தல்...

SCROLL FOR NEXT