ஆண்டுதோறும் அப்துல் கலாமின் பிறந்த தினம்,நினைவு தினம், சுதந்திரத் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாள்களில் நினைவிடம் முழுவதையுமே அதிக நறுமணமும், அதிக அழகும் உடைய இடமாக மெருகூட்டி மேலும் அழகுபடுத்தி வருகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூ வியாபாரி க.முருகன்.
அவரிடம் பேசியபோது:
'உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளும் அரைக்கம்பத்தில் கவலையோடு பறந்த நாள் 2015 ஜூலை 25. ராமேசுவரம் தீவில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாமின் மறைந்த நாள்தான் அது.
மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த அந்த மனிதப் புனிதரின் உடல் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இரண்டே ஆண்டுகளில் ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் சார்பில் நினைவு மண்டபம் எழுப்பி 2017 ஜூலை 22-இல் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 2.11 ஏக்கரில் வடிவமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். கலாம் ராணுவத்துக்குச் செய்த சேவைகள்,அவர் தயாரித்த பொருள்கள், பெற்ற விருதுகள், உலகத் தலைவர்களுடன் அவருக்கு இருந்த தொடர்புகள், குடியரசுத் தலைவராக இருந்த முக்கியத் தருணங்கள் உள்ளிட்ட அத்தனையும் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நினைவிடத்தை 2017-இல் பிரதமர் திறந்து வைக்க வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு ராணுவ அதிகாரிகள் சிலர் நினைவிடத்தை மலர்களால் அலங்கரிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இளைஞர்களின் கனவு நாயகன் கலாமின் நினைவிடத்தை அலங்கரிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்களும் வித்தியாசமாக அலங்கரித்து தருகிறோம் என்று உறுதியளித்தோம். நாங்கள் திருமண மண்டபங்களைத் தான் திருமண நாள்களில் அலங்கரித்திருக்கிறோம்.நினைவிடத்தை அலங்கரிக்கப் போவது புதிய வாய்ப்பு.
'முருகன் டெக்கரேட்டர்ஸ்' என்ற எங்கள் வடிவமைப்புக் குழுவினரிடம் ஆலோசனை நடத்தினோம். அதில் ஒருவர், 'வெளிமாநிலங்களில் உள்ள கண்களைக்கவரும் அதிக நறுமணம் உடைய வண்ண மலர்களைத் தேடி வரவழைத்து அலங்கரிப்போம்' என்றார்.
செலவைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெளிமாநில நறுமண மலர்களை வரவழைத்தோம். முக்கியமாக வடிவமைப்புக் குழுவினர் அனைவருமே விரதமாக இருந்து அந்த தியாகச் சீலரின் நினைவிடத்தை அலங்கரிப்பதே நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன் என்றும் முடிவெடுத்து அதன்படியே செயல்பட்டோம்.
பார்த்தவுடன் புத்துணர்வும், உள்ளங்களை கொள்ளையடிக்கும் வகையிலும் நறுமணம் குறையாத அலங்காரப் பூக்களை வரவழைத்து அலங்கரித்தோம்.அது எங்களுக்கு மிகப்பெரிய நற்பெயரை பெற்றுத் தந்தது.பலரும் பாராட்டினார்கள்,தொடர்ந்து நீங்களே ஆண்டுதோறும் நினைவிடத்தை அலங்கரிக்க வேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டார்கள்.
இறைவனின் அற்புத படைப்புகளில் ஒன்றான கொள்ளை அழகுப் பூ ஜெரி புரா, நறுமணம் அதிகம் தரும் காரனேசன், வெவ்வேறு இரு நிறங்களில் ஒரே பூவாக இருக்கும் பல்வேறு வகைகளை உடைய கிளாடியஸ்,
சிரிப்பின் இளவரசி எனப்படும் பேபி பட்ஜ், பால்சம், சாலவியா, கோலண்டுல்லா உள்ளிட்ட வெளிமாநிலப் பூக்கள், ஊட்டி ரோஜாக்கள்,நறுமணத்துக்காகவே வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் மண்டபம் மல்லிகைப்பூ ஆகியனவற்றால் அலங்கரிக்கிறோம்.
பூக்களின் நறுமணங்களும்,அழகுமே உங்களை வரவேற்று நினைவிடத்துக்குள் அழைத்து சென்று விடும்.குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு நறுமணம் குறையாத மலர்கள்.
முக்கியப் பிரமுகர்கள் சிறிது நேரம் நின்று மலர் வளையம் வைத்து மெளன அஞ்சலி செலுத்தும் இடம் என்பதால் சமாதியை மட்டும் பொக்கே மாடலிலும்,நினைவிடம் முழுவதையும் வண்ண மலர் தோரணங்களாலும் அலங்கரிக்கிறோம்.
மலர்களின் நறுமணமும்,அழகும் பலரையும் அங்கு கூடுதலான நேரங்கள் நிற்க வைத்து விடும். சமாதியை அலங்கரிக்கப் பயன்படுத்தும் அத்தனை மலர்களும் விலை உயர்ந்தவை.புத்துணர்வு தரக்கூடியவை. பிறந்த தினமும்,நினைவு தினமும் அரசு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.
எந்த அரசியல் கட்சிக்கும் தலைவராக இல்லாமல்,எந்த இயக்கத்துக்கும் தலைவராக இல்லாமல், கட்சிப் பெயரோ, கொடியோ,சின்னமோ இப்படி எதுவுமே இல்லாமல் உயர்ந்த மனிதர் அப்துல் கலாம்.பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு வானத்தில் வேலி கட்டிய விஞ்ஞானி.அவரது நினைவிடத்தை கடந்த 9 ஆண்டுகளாக அலங்கரித்து வருகிறோம்.இதை விட எங்களுக்கு வேறு எந்தப் பெருமையும் தேவையில்லை'' என்கிறார் முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.