முகப்பு
தினமணி கதிர்

புள்ளிகள்

காமராஜர் முதல்வர் பதவியைத் துறந்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தில்லிக்குச் சென்றதை குறிப்பிட்டு ஒருவர், 'நீங்கள் பெரிய தியாகம் செய்துள்ளீர்கள்?'' என்று பாராட்டினார்.

Updated On : 22 செப்டம்பர், 2024 at 9:41 AM
காஞ்சி பெரியவரு - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
பகிர்:

காமராஜர் முதல்வர் பதவியைத் துறந்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தில்லிக்குச் சென்றதை குறிப்பிட்டு ஒருவர், 'நீங்கள் பெரிய தியாகம் செய்துள்ளீர்கள்?'' என்று பாராட்டினார்.

இதற்கு காமராஜர், 'என்னைப் புகழ்கிறீர்களே! தியாகம் என்றால் என்னவென்று தெரியுமா? அது புரியணும்னா காஞ்சிபுரத்துக்குப் போங்க? காஞ்சி பெரியவரு மடாதிபதி பதவியைத் துறந்துட்டு தனியாகப் போறேன்னு ஒருநாள் மடத்தைவிட்டு நடந்து போனாரே! அதற்குப் பெயர்தான் தியாகம். சின்னப் பதவியைவிட்டு பெரிய பதவிக்குப் போறது தியாகம் இல்லை. ராமர் கூட சின்னம்மா சொல்லிதான் ராஜ்ஜியத்தைவிட்டு போனார். பெரியவா யார் சொல்லியும் போகலை. அவராகவே எல்லாத்தையும் விட்டுவிட்டு போனார்'' என்றார்.

'தமிழிசையை வளர்க்க வேண்டும். தமிழிசை சங்கத்தால் நடத்தப்படும் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். நாங்கள் தமிழிசையை வளர்ப்பதற்காக முயற்சிகள் எடுக்கிறோம். அதற்காக ஏனைய மொழிப் பாடல்களைத் தூசிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்'' என்றார் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

1941-இல் தமிழிசைச் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் இருந்து...

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

ஒரு பள்ளியில் மாணவ, மாணவியர்களிடையே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவின் நடுவே வரதட்சிணை வாங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி கூறிவிட்டு, மாணவர்களை நோக்கி, 'நீங்கள் பெரியவர்கள் ஆனதும், திருமணத்தின்பொழுது வரதட்சிணை வாங்க மாட்டேன் என்று நினைப்பவர்கள் கைகளைத் தூக்குங்கள்'' என்றார். சில மாணவர்கள் தங்கள் கைகளைத் தூக்கினார்கள். கைதட்டல் சப்தம் கேட்டது.

உடனே வாரியார் சுவாமிகள், 'கைகளை கீழே இறக்குங்கள். உங்களது பெற்றோர்கள் பார்த்து விடப் போகிறார்கள்'' என்றார். கைதட்டல்கள் இன்னும் பலமாகக் கேட்டது.

-மஞ்சுதேவன் பெங்களூரு.

திரைக்கலைஞர்கள் அறம் பாடுவதைத் தவிர்ப்பார்கள். எம்.எஸ்.வி., இளையராஜா போன்ற இசைஜாம்பவான்கள் அமங்கலமான பாடல்களைப் பாடவைத்து, பின் சோக நிலைக்குத் தள்ளப்பட்ட கதையை பல பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

"கவலையில்லாத மனிதன்' என்றபடத்தை எடுத்தவுடன்தான் எனக்கு கவலையே சூறாவளியாக வந்தது என்று கவிஞர் கண்ணதாசன் கூறுவார். "தெருப் பாடகன்' என்ற படம் தயாரித்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், கடன்தொல்லைக்கு ஆளாகினார். "இனிப் பாட மாட்டேன்' என்று நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி ஒரு படத்தில் பாடினார். அதற்குப் பின்னர் அவர் பாடுவதற்கு வாய்ப்பே அமையவில்லை.

"நான் ஒரு ராசியில்ô ராஜா' என்று "ஒருதலைராகம்' படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடியவுடன் அவருக்கு திரைத்துறையில் பாடும் வாய்ப்பு அருகிவிட்டது.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

பூதான இயக்க முன்னோடி விநோபா பாவே, சிறுவனாக இருந்தபோது அவரது வீட்டுத் தோட்டத்தில் பப்பாளி மரம் இருந்தது. அதில், காய் காய்த்தது. அவர் காய் எப்போது பழுக்கும் என்று மரத்தை அவ்வப்போது பார்ப்பார். பழுக்கும் நிலைக்கு வந்தவுடன் தனது தாயின் சம்மதத்துடன் அதை பறித்து, உண்ண அனுமதி கேட்டார்.

அதற்கு தாய், 'நமது கிராமத்தில் நமது வீட்டில் மட்டும்தான் பப்பாளி இருக்கிறது. நீ மட்டும் சாப்பிடுவது தவறு. நமது வீட்டில் மரம் இருந்தாலும், அதில் காய்ப்பது ஊரில் உள்ள எல்லோருக்கும்தானே சொந்தம். அதனால் இந்தப் பழத்தைத் துண்டுகளாக்கி,

உன் நண்பர்களும் பகிர்ந்து உண்ண வேண்டும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார்.

இந்த அறிவுரையே விநோபா பாவேயின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது, பிற்காலத்தில் பொதுச்சேவையில் ஈடுபட வைத்தது.

ரஷிய நாட்டின் ஆதிக்கத்தில் போலந்து இருந்த நேரம். போலந்தில் தாய்மொழியான போலிஷில் மாணவர்களுக்கு பாடம் பயிற்றுவிக்கப்பட்டது. அப்போது, போலந்து நாட்டின் அறிஞர்கள் ஒன்றுசேர்ந்து பள்ளிகளில் போலிஷில் பாடம் நடத்துவது என்றும் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் மின்சார மணியில் ஓசையை எழுப்பி எச்சரிக்கை எழுப்பினால் ரஷ்ய மொழியில் பாடம் நடத்துவது என்றும் முடிவு செய்தனர்.

ஒரு பள்ளியில் திடீரென அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது, தலைமை ஆசிரியர் மின்சார மணியை அழுத்தினார். கோளாறு காரணமாக, மணி ஒலிக்கவில்லை. ஆசிரியர்கள் வழக்கம்போல் பாடம் நடத்தினர். அதிகாரி ஒரு வகுப்பில் நுழைந்தபோது, திடுக்கிட்ட வகுப்பு ஆசிரியை உடனே பாடத்தை நிறுத்தினார்.

சந்தேகப்பட்ட அதிகாரி, 'என்ன பாடம் நடத்தினீர்கள்'' என்று கேட்டார்.

இதற்கு ஆசிரியையோ, 'தையல் வகுப்பு நடத்தினேன்'' என்றார். உடனே அதிகாரி ஒரு மாணவியை எழுப்பி, ரஷ்ய மொழியில் கேள்வி எழுப்ப மாணவியோ பதிலை சிறப்பாக அளித்துவிட்டார். அதிகாரியும் அங்கிருந்து அகன்றார். உடனே ஆசிரியை அந்த மாணவியை அணைத்துகொண்டு, 'தாய் மொழியில் கல்வி கற்கக் கூட உரிமை இல்லையே?'' என்று கண் கலங்கினார்.

அந்த மாணவி பிற்காலத்தில் தனிமம் ஒன்றைக் கண்டறிந்து, போலந்து நாட்டின் நினைவாக "போலோனியம்' என்று பெயரிட்டு, இயற்பியல், வேதியியல் துறைகளில் நோபல் பரிசுகளையும் பெற்ற அறிவியல் மேதை மேரி கியூரி.

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.