ராக்கெட்
வெடிமருந்துகளைக் கொண்டுதான் ராக்கெட்டை ஏவ முடியும். அதுவும் சிறிய அளவில்தான் ஏவ முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தபோது, உலகில் முதன்முறையாக, திரவ எரிபொருள் ராக்கெட்டை உருவாக்கி பிரமாண்ட விண்வெளி முயற்சிகளுக்கு வழிவகுத்தவர் ராபர்ட் கோடார்டு.
இவர் அமெரிக்காவின் வார்டெஸ்டர் நகரில் 1882 அக்டோபர் 5-இல் பிறந்தார். சிறு வயதில் எச்.ஜி.வெல்ஸ் எழுதிய "உலகங்களின் போர்' என்ற அறிவியல் கற்பனைக் கதையைப் படித்ததிலிருந்து, விண்வெளிக்குச் செல்லும் வாகனம் உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார்.
1911-இல் அவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பயிற்சியாளரானார். விண்வெளி போன்ற காற்றில்லாத வெற்றிடத்திலும் விண்கலம் செல்வது எளிது என்பதை கணித அடிப்படையில் நிரூபித்தவர் கோடார்டு, ராக்கெட் மோட்டார்களை வடிவமைக்கத் தொடங்கினார். ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் இரண்டையும் எரிதிரவங்களாக உபயோகித்து, நவீன ராக்கெட் துறைக்கு கோடார்டு அடித்தளம் அமைத்தார்.
1919-இல் "நிலவுக்கு பயணம் செய்யலாம்' என்றும் எழுதினார். திரவ எரிபொருள் பயன்படுத்தப்பட்ட உலகின் முதல் ராக்கெட்டை 1926-இல் விண்ணில் செலுத்தினார் ராபர்ட். 2.5 விநாடிகள் மட்டுமே இந்த ராக்கெட் விண்ணில் பறந்தது. ஆனால், ராக்கெட் தொழில்நுட்பத்தில் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி இது.
இவரது முயற்சியை அன்றைய மக்கள் சாதனையாக நினைக்கவில்லை. அவரை அமெரிக்க அரசு கூட புறக்கணிக்கவே செய்தது. ஆயினும், அவரது வெற்றிக்கான திரவ எரிபொருள் ராக்கெட்டுகள், ராணுவ ஏவுகணைகள் செய்யவும், வெளிப்பயண முயற்சிகளுக்கும் அடிகோலின.
1937-இல் 22 அடி நீளமுள்ள ராக்கெட்டை தயாரித்து, மணிக்கு 700 மைல் வேகத்தில் ஏவி 9 ஆயிரம் அடி உயரத்தில் அதை பறக்க வைத்தார். இதன்மூலம் அவரது ராக்கெட் தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்பட்டது. தன் காலத்திலேயே மிகப் பெரிய ராக்கெட் உற்பத்திக் கூடத்தையும் ராபர்ட் தொடங்கிவைத்தார். 1945-இல் அவர் இறந்தார்.
தொடக்கத்தில் ராபர்ட்டை புறக்கணித்த அமெரிக்க அரசு , 1969-இல் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பியபோது அவரது தொழில்நுட்பத்தையே பயன்படுத்தியது.
ஜெராக்ஸ்
ஜெராக்ஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் செஸ்டர் கார்ல்ஸன். இவர் 1905 பிப்ரவரி 8-இல் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளியில் படித்துகொண்டே பகுதிநேர வேலை செய்து சிறு வருமானத்தை வீட்டுக்கு அளித்தார். கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார்.
1936-இல் நியூயார்க் சட்டக் கல்லூரியில் இரவுநேர மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்ட நூல்களை வாங்க அவரிடம் பணம் இல்லை. நூலகத்தில் கடன் வாங்கி, கை வலிக்க எழுதினார். இதற்கு மாற்று முறையைக் கண்டுபிடிக்க அவர் நினைத்தபோது, உருவானதுதான் ஜெராக்ஸ் இயந்திரம்.
தனது வீட்டு சமையல் அறையை ஆய்வகமாக்கிய அவர், பல முயற்சிகளை முன்னெடுத்தார். 1938 அக்டோபர் 22-இல் செஸ்டர் கார்ல்ஸனுக்குத் திருப்புமுனை தினமாக அமைந்தது. அன்றுதான் ஜெராக்ஸ் இயந்திரத்தின் அடிப்படையை உணர்ந்தார். இருட்டான அறையில் இந்தியன் மை, கந்தகம், லைகோபோடியம், மெழுகு போன்றவற்றை கொண்டு ஆராய்ந்து, நிறைய மாதிரிகளைச் சேகரித்தார்.
உதாரணத்துக்கு, மெழுகு தடவிய ஒரு காகிதத்தை கந்தகம் பூசிய இடத்தின் மீது வைத்து, லைகோபோடியம் தூள் பதிந்திருந்த இடத்தில் காணப்பட்ட எழுத்துகளையும், எண்களையும் பதித்து எடுத்தார். பின்னர், லேசாக அந்தத் தாளை சூடாக்கினார்.
லேகோபோடியம் தூள் பதிந்திருந்த இடத்தைத் தவிர, மற்ற இடங்களில் மெழுகு உருகி அந்தத் தாளில் எழுத்துகளும் எண்களும் காணப்பட்டன. இதை அவர் இயந்திரமாகத் தயாரித்து விற்க 21 ஆண்டுகள் பிடித்தன.
1944-இல் பாட்டில்லி நினைவு நிறுவனமானது செஸ்டரின் கண்டுபிடிப்பின் சிறப்பை உணர்ந்து, ராயல்டி முறையில் அதைத் தயாரிக்க உதவியது.
1947-இல் பாட்டில்லி நிறுவனம் பிற்காலத்தில் ஜெராக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஹாலந்து நிறுவனத்திடம் இதற்கான உரிமையை வழங்கியது. 1959-ஆம் ஆண்டில்தான் முதல் ஜெராக்ஸ் இயந்திரம் விற்பனைக்கு வந்தது. இதன் மூலம் மிகப் பெரிய செல்வந்தரான அவர், 1969 செப்டம்பர் 19-இல் தனது 62-ஆம் வயதில் மறைவுற்றார்.
பவளப் பாறைகள்...
கடல் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகள் பல்வேறு வண்ணங்களில் கண்களைக் கவரும் வகையில் அழகாகக் காட்சியளிக்கின்றன. கடல் அரிப்பு, சுனாமியைத் தடுப்பதுடன் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கு புகலிடமாகவும் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆஸ்துமா, புற்றுநோய், இதய நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுவதால், உலக அளவில் 6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்தை பவளப்பாறைகள் ஈட்டித் தருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளன.
பவளப் பாறைகள் என்பது கடலில் காணப்படும் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் உருவாகிறது. இந்தப் பவள உயிரினங்கள் மென்மையான ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாகும். பல ஆயிரக்கணக்கான பவள உயிரினங்களை எடுத்துகொள்ளும் "கால்சியம் கார்பனேட்' என்ற சுண்ணாம்புத் தன்மையுடைய பொருளாக மாறி அவை கற்பாறைகள் மீது ஒட்டிக் கொள்ளும்போது பவளப் பாறைகளாக உருமாறுகின்றன.
பவளப் பாறைகள் இந்தியாவில் அந்தமான் தீவுகளிலும், லட்சத்தீவுகளையொட்டிய கடல் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா பகுதிகளிலும் இருக்கின்றன. பவளப் பாறைகள் பல ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவை அளிக்கின்றன. குறிப்பாக, மீன்களின் இனப் பெருக்கக் காலத்துக்கு இருப்பிடமாகவும் உள்ளன.
கடல்நீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் பவளப் பாறைகள் 20 % அழிந்துவிட்டதாகவும், 24 % அழிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. கடல்நீரின் அமிலத் தன்மை கூடுவதால், அடுத்த நூற்றாண்டில் பவளப்பாறைகள் உருவாவது 50% அளவுக்கு குறையும் என்று ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.