போஃபர்ஸ் நிறுவனத்தின் பீரங்கிகளை வாங்குவது என்று மத்திய அமைச்சரவை முடிவெடுத்ததற்கு யார் காரணம் என்கிற கேள்விக்கு இன்றுவரை சரியான, நேர்மையான பதில் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அந்த முடிவை எடுக்கும்போது நிதியமைச்சராக இருந்தவர் வி.பி.சிங். அவர் காங்கிரஸில் இருந்து விலகியபோதும், தேர்தல் பிரசாரத்திலும், பிரதமரான பிறகும்கூட, மத்திய அமைச்சரவை முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் கே.சுப்பிரமணியத்தைச் சந்தித்தபோது, அவரிடம் நான் அந்தக் கேள்வியை எழுப்பினேன். அவரும் சிரித்தபடி "தனக்குத் தெரியாது' என்பதுபோலத் தோளை உயர்த்தினாரே தவிர, எனக்குப் பதிலளிக்கவில்லை. ஆனால் அவர் தெரிவித்த ஒரு கருத்தையும் நான் பதிவு செய்தாக வேண்டும். இந்திய ராணுவத்தின் தேவைக்கு மிகவும் உகந்ததான பீரங்கிதான் போஃபர்ஸ் நிறுவனத்தின் ஹோவிட்சர் என்பதை அவர் மறுக்கவில்லை.
'ஹோவிட்சர் பீரங்கியைத் தேர்ந்தெடுத்ததிலும், அதை வாங்குவதற்குப் பேரம் நடத்தியதிலும் வேண்டுமானால் முறைகேடுகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் இருக்கலாம். ஏனைய பீரங்கிகளைப் போலவே, போஃபர்ஸ் நிறுவனத்தின் ஹோவிட்சர் பீரங்கி தரத்திலும், செயல்பாட்டிலும் உயர்வானது என்பதில் சந்தேகமே இல்லை'' என்று அவர் தெரிவித்தார்.
போஃபர்ஸ் நிறுவனத்தின் பீரங்கிப் பேரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் என்று சில பெயர்களை மத்திய புலனாய்வுத் துறை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கருத்து என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் எண்ணத்துடன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.என்.காட்கிலைத் தொடர்பு கொண்டேன். அவரைச் சந்திக்க நேரம் கேட்டுத் தொலைபேசியில் அழைத்தபோது, மாலையில் இதுகுறித்து தெரிவிக்க அக்பர் ரோடு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாகவும், அங்கே வரும்படியும் சொல்லிவிட்டார்.
வழக்கத்தைவிட அதிகமாக வி.என்.காட்கிலின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு நிருபர்கள் வந்திருந்தனர். வெளிநாட்டு ஊடகங்களின் நிருபர்கள் பலர் ஒருபுறம் குழுமி இருந்தனர். செய்தியாளர் சந்திப்பு அறை நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழையக்கூட முடியாமல் கதவுக்கு வெளியே இருந்துதான் அன்றைய காட்கிலின் நிருபர் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
'போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கோ அவரது குடும்பத்தினருக்கோ எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்பதைப் பலமுறை தெளிவுபடுத்திவிட்டோம். இப்போது மீண்டும் அதை உறுதிப்படுத்துகிறோம்'' என்று தனது பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்கினார் வி.என்.காட்கில்.
'இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியா குவாத்ரோச்சி, ராஜீவ் காந்தி குடும்ப உறவினர்தானே?'' - கேள்வி எழுப்பியது பி.பி.சி. நிருபர்.
'போஃபர்ஸ் பேரத்தில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குவாத்ரோச்சியை, ராஜீவ் குடும்பத்துடன் இணைக்க அரசியல் சதி நடந்து வருகிறது. அவருக்கும் காங்கிரசுக்கும் தொடர்பு கிடையாது. பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் செயல்பாடுகளில் அவர் தலையிட்டது கிடையாது. இது வேண்டுமென்றே செய்யப்படும் சதி.''
'அவர் லஞ்சம் பெற்றிருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''
'மத்திய புலனாய்வுத் துறை பட்டியல் வெளியிட்டிருப்பதாலேயே, லஞ்சம் பெற்றது உறுதியாகி விடாது. அது நிரூபிக்கப்பட வேண்டும். அதைப்பற்றி அவர்தான் விளக்கம் தர முடியும்.''
'காங்கிரஸின் ஆதரவுடன்தான் தேவே கௌடா ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். ஐக்கிய முன்னணி அரசு பதவியில் தொடர்கிறது. அப்படி இருந்தும்கூட, சிபிஐ போஃபர்ஸ் வழக்கை விசாரிப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''
'நினைப்பதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் எல்லோரும் நினைப்பதுபோல அல்லாமல், காங்கிரஸ் கட்சி அவர்களது ஆட்சி நிர்வாகத்திலோ, முடிவுகளிலோ தலையிடுவதில்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது. இதுபோன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட செய்கைகள் மூலம், தங்களது குறைபாடுகளில் இருந்து மக்களை திசை திருப்ப முடியாது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.''
அதற்குமேல், நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெளியேறிவிட்டார் வி.என்.காட்கில். விரிவாக அரசியல் சூழல் குறித்துக் கேட்க வேண்டும் என்று நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காங்கிரஸ் தலைமையகத்தின் பின்னால் இருக்கும் அறைகளில் ஒன்று பிரணாப் முகர்ஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் இருக்கிறாரா என்று பார்ப்பதற்கு அங்கே சென்றபோது, அறை பூட்டியிருந்தது. பிரணாப்தா கொல்கத்தாவில் இருப்பதாகவும், எப்போது வருவார் என்று தெரியாது என்றும் அடுத்த அறையில் இருந்த உதவியாளர் தெரிவித்தார்.
அடுத்தாற்போல என்ன செய்வது என்று நான் யோசித்தபடி "சாகர் ரத்னா' கேன்டீனை நோக்கி நகர்ந்தேன்.
"சாகர் ரத்னா' உணவகத்தில் காபி குடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த அஸ்ஸாமிய பத்திரிகை நிருபர் ஒருவர், சுப்பிரணியன் சுவாமி பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார். தன்னுடன் அழைத்துச் செல்வதாக அவர் கூறியபோது, அவருடன் இணைந்து கொண்டேன்.
சுவாமியின் நிருபர் கூட்டம் என்று சொன்னால் நிரம்பி வழியும். கடந்த அரை நூற்றாண்டு காலமாக பத்திரிகையாளர்கள் மத்தியில் சற்றும் தொய்வே விழாத செல்வாக்குடன் வலம்வரும் ஒரே அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமியாகத்தான் இருக்கும். அவர் நிருபர்களைச் சந்திக்கிறார் என்றால் ஏதோ பூகம்பம் வெடிக்க இருக்கிறது அல்லது வெளியில் தெரியாத தகவல் ஏதாவது இருக்கிறது என்று அர்த்தம்.
எடுத்த எடுப்பிலேயே அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
'இந்த போஃபர்ஸ் விசாரணையில் எதுவும் நடக்கப் போவதில்லை. இவர்கள் கண்துடைப்புக்கு விசாரணை நடத்துகிறார்கள். வி.பி.சிங்கையும், சோனியா காந்தியையும் முதலில் விசாரித்த பிறகு மற்ற விசாரணைகள் தொடரட்டும்...'' என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தபோது, நிருபர்கள் மத்தியில் பேச்சு மூச்சில்லை.
சோனியா காந்தியை விசாரிக்க வேண்டும் என்று அதற்கு முன்னர் யாரும் சொன்னதில்லை. அதேபோல, போஃபர்ஸ் பீரங்கிப் பேர ஊழலை அம்பலப்படுத்தியவரே வி.பி.சிங்தான் என்பதால் அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று யாரும் இதற்கு முன்னர் கோரிக்கை எழுப்பவில்லை.
'நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள். அவரை விசாரிக்கிறோம், இவரை விசாரிக்கிறோம் என்று சொல்வார்கள். புதிய தகவல்கள் கிடைத்தன. ஆதாரம் கொண்டு வந்திருக்கிறோம் என்று தெரிவிப்பார்கள். எத்தனை ஆண்டுகளானாலும் போஃபர்ஸ் வழக்கு முடிவுக்கு வராது. கடைசியில் முறைகேடு ஒன்றுமில்லை, ஆதாரமில்லை என்று முடித்து வைக்கப்படும்'' - சுப்பிரமணியன் சுவாமி (1997 பிப்ரவரி) 'அப்படியானால் போஃபர்ஸ் பிரச்னையில் உண்மை வெளிவர வேண்டுமானால் வேறு என்னதான் வழி?''
'என்னிடம் அதிகாரம் தரச் சொல்லுங்கள். தனிப்பட்ட ஆதாயம் தேடாமல் குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துகிறேன். அதனால்தான் என்னிடம் அதிகாரம் தருவதில்லை...''
சுவாமியும் சிரித்தார்; நாங்களும் சிரித்தோம். கூட்டம் கலைந்தது. (அவர் சொன்னதுதான் நடந்தது!)
மத்திய புலனாய்வுத் துறையால் இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்கள் என்று வின் சட்டா, குவாத்ரோச்சி ஆகிய இருவரும் அடையாளம் காட்டப்பட்டதைத் தொடர்ந்து, போஃபர்ஸ் நிறுவனம் சில தன்னிலை விளக்கங்களை அளிக்க முன்வந்தது. வின் சட்டா, குவாத்ரோச்சி ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பணம் லஞ்சப் பணமல்ல என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. அதுகுறித்த விசித்திரமான விளக்கம், ஏ.பி. போஃபர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
போஃபர்ஸ் நிறுவனத்துடன் இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தில், பீரங்கி விற்பனையில் இடைத்தரகர் யாரும் கூடாது என்றும், அவர்களுக்குத் தரப்படும் கமிஷன் தொகை பீரங்கியின் விலையில் இருந்து குறைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில்தான், "இந்தப் பேரத்தில் யாருக்கும் லஞ்சம் தரப்படவில்லை' என்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்
தில் உறுதி அளித்தார்.
'இடைத்தரகர் என்று யாரும் கூடாது என்று போஃபர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது, இப்படியொரு குற்றச்
சாட்டு எழ வேண்டிய அவசியமே இல்லை. இது வேண்டுமென்றே எழுப்பப்படும் அவதூறு'' என்பதுதான் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி முன்வைத்த வாதம்.
ஏ.பி. போஃபர்ஸ் நிறுவனம் அதற்கு ஒரு விளக்கம் சொல்லியிருக்கிறது. அந்த விளக்கத்தின்படி, யாருக்கும் "கமிஷன்' தரப்படவில்லை. ஆனால் எங்களது இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் கணக்கை முடித்துக் கொடுத்தோம் என்று தெரிவித்தது.
போஃபர்ஸ் நிறுவனத்தின் இந்திய ஏஜெண்டாக இருந்தவர் வின் சட்டா. "ஏஜெண்ட்' என்றால் முகவர் என்று அர்த்தமல்ல. போஃபர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவர்களது ராணுவ தளவாடங்களை இந்திய ராணுவத்துக்கு விற்பதற்கு உதவும் இடைத்தரகர் என்றுதான் பொருள். அதற்காக, போஃபர்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் தளவாடங்களின் மதிப்பில் குறிப்பிட்ட விழுக்காடு அவருக்குத் தரப்படுகிறது.
வின் சட்டாவைப் போலவே, போஃபர்ஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பில், இந்திய அரசின் ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவதற்கு உதவி வந்த நிறுவனம் "சாம் பிரோகெட்டி'. இந்த நிறுவனத்தின் தலைவர்தான் ஒட்டாவியா குவாத்ரோச்சி.
சஞ்சய் காந்தியின் விமான விபத்து மரணத்தைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசியலில் பிரவேசித்தது முதல், சோனியா காந்தியின் நெருங்கிய உறவினரான ஒட்டோவியா குவாத்ரோச்சி, இந்தியாவில் செயல்படத் தொடங்கினார்.
வின் சட்டா, குவாத்ரோச்சி இருவருமே தங்களை இடைத்தரகர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. தொடர்பாளர்கள் (லையசன்) என்று அழைத்துக் கொள்வார்கள்.
'இடைத்தரகர்கள் கூடாது என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால் வின் சட்டா, குவாத்ரோச்சி இருவரையும் எங்கள் நிறுவனத்துக்கு சேவை செய்யும் பொறுப்பில் இருந்து அகற்றினோம். அப்படி அகற்றுவதற்காக நாங்கள் வழங்கிய இழப்பீடுதான் அந்தத் தொகையே தவிர, அது "கமிஷன்' அல்ல'' என்பதுதான் போஃபர்ஸ் நிறுவனத்தின் வாதம்.
போஃபர்ஸ் நிறுவனத்தின் இந்த விளக்கம், பீரங்கி பேர ஊழலை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. கமிஷன் அடிப்படையில் பணியாற்றுபவர்கள்தான் வின் சட்டாவும், குவாத்ரோச்சியும். அவர்களது முந்தைய செயல்பாடுகளுக்கு, அதன் மதிப்புக்குத் தகுந்தபடி "கமிஷன்' வழங்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்போது, இப்போது அவர்களுக்கு இழப்பீடு தர வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்வி எழுந்தது.
போஃபர்ஸ் பீரங்கி விற்பனையை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை இழப்பீடு என்று எப்படி எடுத்துக் கொள்வது என ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
'என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் லஞ்சம் பெற்றதில்லை'' என்றும், 'இறந்துபோன எனது மனைவியின் பெயரைத் தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் இழுப்பது நியாயமல்ல'' என்றும் வின் சட்டாவின் அறிக்கை வெளிவந்தது.
அதுட்டுமல்ல, என்னை எப்போதும் வேண்டுமானாலும் சிபிஐ அதிகாரிகள் துபாயில் வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
போஃபர்ஸ் பிரச்னை எழுந்தவுடன், இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் குடியேறி இருந்தார் குவாத்ரோச்சி. கோலாலம்பூரில் அவரைத் தொடர்பு கொண்டபோது, 'இவையெல்லாம் கட்டுக்கதை. அதற்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை'' என்று தவிர்த்துவிட்டார்.
துபாய், மலேசியாவுக்கு சென்று அவர்கள் இருவரையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்யும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இருவரையும் இந்தியாவுக்கு கொண்டுவர நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் தெரிவித்தது மத்திய புலனாய்வுத் துறை.
அப்போது யாருமே எதிர்பார்க்காத விதத்தில், சிபிஐ ஓர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதற்கு பிரதமர் தேவே கௌடாவின் அனுமதி இருந்ததா என்று தெரியவில்லை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.