ஆப்பிரிக்காவில் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாழும் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை கிர்ஸ்ட்டி கோவென்ட்ரி, சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் முதல் பெண் தலைவராக அண்மையில் தேர்வாகியுள்ளார்.
6 ஜாம்பவான்கள் போட்டியிட, பெண் வேட்பாளராக கிர்ஸ்ட்டி போட்டியிட்டு பதிவான 97 வாக்குகளில் 49 வாக்குகள் பெற்று, வென்றார். எட்டு ஆண்டுகள் பணியாற்றப் போகும் இவர், விளையாட்டு நிர்வாகத்தில் மிகவும் சக்தி மிகுந்த பதவியை வகிக்கும் குறைந்த வயதானவரும்கூட!
கமிட்டி தொடங்கிய 131 ஆண்டுகளில் இதுவரை தலைவர்களாக இருந்த 9 பேர் ஆண்கள் என்பதோடு, ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களைச் சேர்ந்தவர்கள். கருப்பினத்தவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஜிம்பாப்வேயில் வெள்ளையருக்கும் பிரச்னைகள் இருந்தாலும், வெள்ளையரான கிர்ஸ்ட்டி எந்தப் பாகுபாட்டுக்கும் ஆளாகவில்லை. அதற்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிர்ஸ்ட்டி பெற்ற 7 பதக்கங்கள்தான்!
அவர் கூறியது:
'1992இல் நான் ஒன்பது வயது சிறுமியாக இருந்தபோது, பார்சிலோனா ஒலிம்பிக்ஸ் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைப் பார்த்து பிரமித்தேன்.
எப்படியும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கு பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. பெற்றோரிடம், 'ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு ஜிம்பாப்வேக்கு தங்கப் பதக்கம் வெல்ல விரும்புகிறேன்' என்று சொன்னேன்.
அவர்களும் சிரித்தவாறே, 'அதற்கு கடின உழைப்பும் தியாகமும் தேவைப்படும்' என்றனர். அதன்படியே சமர்ப்பணத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டு சாதித்து காட்டினேன். அதுபோலவே சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் தலைவராக வேண்டும் என்று நீச்சலிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தீர்மானித்தேன். அதுவும் நிறைவேறியுள்ளது' என்கிறார் கிர்ஸ்ட்டி கோவென்ட்ரி.
சவால்கள்: லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 2028ஆம் ஆண்டிலும், ப்ரிஸ்பென்னில் 2032 ஆம் ஆண்டிலும் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கிர்ஸ்ட்டியின் தலைமையில் நடைபெறும்.
2036 ஒலிம்பிக்ஸ்ûஸ எந்த நாடு நடத்தும் என்பதையும் கிர்ஸ்ட்டி முடிவு செய்வார். இந்தியா 2036 ஒலிம்பிக்ûஸ நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் பாலின வீரர்கள், வீராங்கனைகளை ஒலிம்பிக்ஸ்ஸில் பங்கெடுக்க அனுமதிக்க வேண்டுமா? வேண்டாமா என்பதும் கிர்ஸ்ட்டி முன் வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள்.
கடந்து வந்த பாதை: இவர் 1983 செப்டம்பர் 16-இல் ஜிம்பாப்வேயின் ஹராரேவில் பிறந்தார். இரண்டாம் வயதிலேயே கிர்ஸ்ட்டி கோவென்ட்ரிக்கு அவரது தாத்தாவும், தாயும் நீச்சல் கற்பித்தனர். ஆறு வயதில் நீச்சல் பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற '2000 ஒலிம்பிக்ஸ்' போட்டிகளில் ஜிம்பாப்வே சார்பாக அவர் தனது பதினாறாம் வயதில் முதல்முதலாகப் பங்கேற்றார். ஆனால் பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை. மேல்படிப்புக்காக, அமெரிக்காவில் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் படித்தபோது சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு கிர்ஸ்ட்டி திறமையைப் பட்டை தீட்டிக் கொண்டார்.
2002 காமன்வெல்த் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதே உற்சாகத்தில், கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற '2004 ஒலிம்பிக்ஸ்' போட்டிகளில் அவர் பங்கேற்று, 200 மீ, தூர 'பேக் ஸ்ட்ரோக்' நீச்சல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார்.
அதே ஒலிம்பிக்சில் வேறு நீச்சல் பிரிவுகளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றார். ஒரே ஒலிம்பிக்ஸ்ஸில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களைப் பெற்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
கிர்ஸ்ட்டியை 'நாட்டின் தங்க மகள்' என அறிவித்து, பரிசுத் தொகையையும் ஜிம்பாப்வே அரசு அளித்து கெளரவித்தது. தொடர்ந்து கிர்ஸ்ட்டி நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு தனிநபர் ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தனிநபர் பெண்கள் நீச்சல் பதக்கங்கள் பெற்ற வீராங்கனை என்றும் சாதனை படைத்தார்.
2016 ரியோ விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதும் கிர்ஸ்ட்டி நீச்சல் கற்றுத் தரும் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். 41 வயதான அவருக்கு இரண்டு மகள்கள். ஜிம்பாப்வே நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராவும் கிர்ஸ்ட்டி இருந்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.