அருள்செல்வன்
'எங்கள் களஞ்சியத்தில் மதிப்பீடு இருக்கும்'
கலைக்களஞ்சியங்கள் பொதுவாக வாசிப்பு ஈர்ப்புடன் இருப்பதில்லை. அவை உலர்ந்த நடையுடன் இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது 'தமிழ்விக்கி'. நேர்த்தியான வடிவமைப்புடன் நம்பகமான தரவுகளுடன் உள்ளிழுத்துக் கொள்ளும் சுவாரசிய நடையுடன் தமிழில் தவிர்க்க முடியாத கலைக்களஞ்சியமாக விளங்கி வருகிறது. வாசிக்கும்போது தகவல்களைத் தரும் கலைக்களஞ்சிய அனுபவம் தராமல் இலக்கிய அனுபவத்தை அளிக்கிறது. 'தமிழ்விக்கி' சார்ந்து அதை முன்னெடுத்து செயலூக்கம் கொடுத்து வருகிற எழுத்தாளர் ஜெயமோகனிடம் ஒரு சந்திப்பு.
'தமிழ்விக்கி' தொடங்கத் தூண்டுதலாக ஏதேனும் காரணம் உள்ளதா?
கலைக்களஞ்சியம் என்பது எந்த ஒரு மொழிக்கும் அடித்தளம் போன்றது. ஒரு பண்பாடு கலைக்களஞ்சியத்தால்தான் வரையறை செய்யப்படுகிறது. அடைந்தவற்றை வரையறைசெய்து தொகுத்துகொண்டுதான் மேற்கொண்டு அடைய இருப்பதைப் பற்றி யோசிக்க முடியும். ஒன்றைப் புதிதாக யோசிக்கத் தொடங்கும்போது முன்பு எதுவரை யோசிக்கப்பட்டது என்று அறிந்தால்தான் அந்த யோசனைகளுக்கு ஏதேனும் பொருளிருக்க முடியும்.
அதற்காகவே கலைக்களஞ்சியங்கள் தேவையாகின்றன. உலகின் எல்லா படைப்பூக்கம் கொண்ட மொழிகளிலும் மகத்தான கலைக்களஞ்சியங்கள் உண்டு. எந்த ஆய்வேட்டிலும், எந்த ஒரு கட்டுரையிலும் கலைக்களஞ்சியத்தைப் பார்த்து தேவையான குறிப்புகளை அளித்தல் மரபு.
தமிழில் நிகண்டுகள் போன்ற தொன்மையான கலைக்களஞ்சியங்கள் இருந்தன. நவீனக் கல்வியும் அச்சும் வந்தவுடன் உருவான இடைப்பட்ட கலைக்களஞ்சியம் என்றால் ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியைச் சொல்லலாம். தமிழில் முதல் நவீனக்கலைக்களஞ்சியம் பெரியசாமித் தூரன் தொகுத்ததுதான். இன்னமும்கூட அக்கலைக்களஞ்சியத்துக்குப் பின்னர் முழுமையான அடுத்த பதிப்பு வரவில்லை.
இந்த இணையச்சூழலில் இணையக் கலைக்களஞ்சியங்கள் தேவையாகின்றன. தேடும் தலைப்பில் உடனடியாகச் செய்திகளைப் பார்க்க அவையே உதவியானவை. அப்படி இணையத்தில் உருவான கலைக்களஞ்சியம்
விக்கிப்பீடியா. அதன் தமிழ் வடிவமும் உள்ளது. ஆனால் அதிலுள்ள பிரச்னையே எவர் வேண்டுமென்றாலும் செய்திகளை அளிக்கலாம், எவர் வேண்டுமென்றாலும் செய்திகளை மாற்றலாம், விருப்பப்படிச் சுருக்கலாம் என்பதுதான். ஆகவே செய்திகளில் நம்பகத்தன்மை இல்லை. அத்துடன் எந்தத் தகுதியுமில்லாதவர்ளே அறிஞர்கள் உருவாக்கும் பதிவுகளை தங்கள் அரசியல் நோக்கங்கள் மற்றும் காழ்ப்புகளுக்கு ஏற்ப திருத்தவும் அழிக்கவும் செய்தனர்.
ஒரு குழுவாகச் சிலர் செயல்பட்டால் விக்கிப்பீடியா போன்ற இணையப் பொதுக்கலைக்களைஞ்சியத்தைக் கைப்பற்றிவிடமுடியும். இன்றைய காலகட்டத்தில் செல்லுபடியாகாத அசட்டு மொழிப்பழமைவாதத்தை நம்பும் சிலர் விக்கிப்பீடியாவின் பதிவுகளை விருப்பப்படி திருத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பெயர்களைக்கூட மாற்றுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தனித்தமிழிலும் எந்தப் பயிற்சியும் இல்லை. ஆகவே சமகால மொழியும் இல்லாமல், பிழையான ஒரு செயற்கைமொழியில் விக்கிப்பீடியா அமைந்துள்ளது.
அந்தச் சிறு குழுவுடன் போராடினோம். முடியவில்லை. உருவாக்குவது கடினம், அழிப்பது மிக எளிது. ஆகவே நாங்களே தமிழ்விக்கியைத் தொடங்கினோம்.
தமிழ்விக்கி அறிஞர்களால் வழிநடத்தப்படுவது. தகுதியானவர்களால் மட்டுமே பதிவுகள் போடப்படுகின்றன. அவை தொடர்ச்சியாகச் சரிபார்க்கப்படுகின்றன. இப்படி அறிஞர்களின் முயற்சியால் நிகழும் இணையக்கலைக்களஞ்சியம் இந்தியாவில் வேறில்லை.
மாபெரும் முயற்சியில் எத்தனை பேர் பங்காற்றுகிறார்கள்?
ஏறத்தாழ நூறு பேர் பங்களிப்பாற்றுகின்றனர். பத்து பேர் ஒவ்வொரு நாளும் பங்களிப்பாற்றுகின்றனர்.
உண்மைத் தன்மையை மதிப்பிட அளவுகோல் என்ன?
இலக்கியம், பண்பாடு சார்ந்த தளங்களையே மையப்படுத்துகிறோம். இந்தத் தளத்திலுள்ள முதன்மை அறிஞர்களின் ஒரு குழு ஆசிரியர் பொறுப்பில் உள்ளது. அத்துடன் பங்கேற்பாளர்கள் அனைவருமே சரிபார்ப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். தரவுகளை எவர் திருத்தி அனுப்பினாலும் அவற்றைச் சரிபார்த்து பதிவுகளைச் சரிசெய்துகொள்கிறோம். இணையக் கலைக்களஞ்சியம் என்பதன் நல்லபக்கம் என்னவென்றால் அது முடிவடைவதே இல்லை, திருத்திக்கொண்டே இருக்கலாம் என்பதுதான்.
வரையறுக்கப்பட்ட முக்கியமான கொள்கை என்ன?
கலை, இலக்கியம், பண்பாடு தளங்களில் முழுமையான செய்திகளை அளிப்பது முதல் நோக்கம். அத்துடன் மிகத் திட்டமிட்டு ஒரு பதிவுடன் அதற்குத் தொடர்புள்ள பிற பதிவுகளை இணைக்கிறோம். நீங்கள் ஒரு பதிவை வாசித்தால் தொடர்புக் கண்ணிகள் வழியாக பல பதிவுகளை வாசிக்கலாம். அது அறிஞர்கள் உருவாக்கிய ஒரு நூல் போன்றது. 'வட்டுக்கோட்டை குருமடம்' என்றும் பதிவில், தொடச்சியாக ஐநூறு பக்க அளவுக்கு வாசிக்க முடியும் .
'விக்கிப்பீடியா' போன்ற ஆசிரியர்கள் என எவரும் இல்லாத கலைக்களஞ்சியங்களில் அளவீடுகள், மதிப்பீடுகள் இருக்காது. யாரென்றே தெரியாத ஒருவர் பற்றி ஆகா- ஓகோ என ஒரு பதிவு இருக்கும். பலசமயம் அவரே போட்டுக் கொண்டதாகவும் இருக்கும்.
அதேசமயம் மிக முக்கியமானவர்கள் பற்றி சாதாரணமான ஒரு பதிவு இருக்கும். இருவரையுமே தெரியாத புதியதலைமுறை வாசகர்களுக்கு பிழையான வரலாறு சென்று சேரும். இது வரும் தலைமுறைக்கு நாம் இழைக்கும் மிகப் பெரிய பிழையாக அமைந்துவிடும்.
எங்கள் கலைக்களஞ்சியத்தில் மதிப்பீடு இருக்கும். பதிவின் தரவுகளின் அடிப்படையிலேயே அதை உணர முடியும். சுருக்கமான மதிப்பீடும் அளிக்கப்பட்டிருக்கும். அது எங்கள் ஆசிரியர் குழுவின் மதிப்பீடு. அது இங்கே பொதுவாக ஏற்கெனவே அறிவுச்சூழலில் ஏற்கப்பட்டுள்ள மதிப்பீடாகவே இருக்கும்.
அறிவுச்சூழலில் உண்மையில் ஈடுபட்டிருக்கும் அறிஞர்களாலேயே அதை உருவாக்க முடியும். அதுவே எங்களுடைய தனிப்பங்களிப்பு. ஆசிரியர் குழு உள்ள கலைக்களஞ்சியமே அதைச் செய்ய முடியும். எங்கள் கலைக்களஞ்சியத்தில் எல்லா பதிவுகளுக்கும் பொதுவான ஒரு கொள்கையும் அளவுகோலும் இருக்கும்.
நாங்கள் செய்வது எவ்வளவு முக்கியமான பணி என இன்று செயற்கை நுண்ணறிவு வந்தவுடன் மேலும் தெரிய ஆரம்பித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரத்தனமானது. இணையத்தில் ஓர் அறிஞரை விரிவாகப் பதிவு செய்து, அவருடைய இடத்தையும் வரையறை செய்யாவிட்டால் அவர் மறைந்துபோய்விடுவார். தகுதியே அற்ற ஒருவர் அவராலோ பிறராலோ நிறைய புகழப்பட்டிருந்தால் செயற்கை நுண்ணறிவு அவரை கொண்டுவந்து அடுத்த தலைமுறைக்கு முன் நிறுத்திவிடும்.
தொடங்கும் முன் சந்தித்த தடைகள்,தொடங்கியவுடன் கிடைத்த பெருமைகள்...?
எந்தப் பெருஞ்செயலுக்கும் தொடக்கத்தில் எதிர்ப்பும் வசைகளும் அவதூறுகளும்தான் இருக்கும். 'அபிதான சிந்தாமணி'யை சிங்காரவேலு முதலியார் உருவாக்கும்போதும் சரி, பெரியசாமித்தூரன் கலைக்களஞ்சியம் உருவாக்கும்போதும் சரி, இதைவிட பல மடங்கு எதிர்ப்பையும் காழ்ப்பையுமே சந்தித்தனர். சொல்லப்போனால் அவர்கள் வாழ்நாளில் எந்த அங்கீகாரத்தையும் பெறவுமில்லை, வசைகளையே பெற்றனர். அவர்கள் மறைந்த பின்னர்தான் அந்த முன்னோடிப்பணி அடையாளம் காணப்பட்டது.
ஏன் எதிர்ப்பு? ஒன்று ஒரு பெரிய பணி சாமானியர்களை மேலும் சாமானியர்களாக காட்டுகிறது. ஆகவே அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. இரண்டு, இங்கே ஒவ்வொருவரும் சாதாரண ஆளுமைக்கும் பிடிக்காத ஒன்று என்பது மதிப்பீடுதான். புகழ்மாலைகள் மட்டும்தான் சாமானியமானவர்களுக்கு வேண்டும். பொய்யாக புகழ்ந்துகொண்டே இருப்பது நம் மரபும்கூட. இங்கே ஓர் அறிஞர்குழு பிறரை மதிப்பிட்டுச் சொல்ல ஆரம்பித்தாலே பீதியாகிறார்கள்.
தமிழ்விக்கியை முடக்க பலர் முயன்றனர். நாங்கள் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் தமிழ்விக்கியை 2022-இல் தொடங்கியபோது அந்த நிகழ்ச்சியை திட்டமிட்டு நிறுத்தினார்கள். எங்கள் மேல் அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் நாங்கள் செயலில் உறுதியாக இருந்தோம். அதுவே வென்றது.
இன்று தமிழ்விக்கியின் இடம் ஐயத்துக்கு இடமில்லாமல் நிறுவப்பட்டுவிட்டது. ஆய்வேடுகளும், செய்திகளுமெல்லாம் எங்கள் கலைக்களஞ்சியத்தைச் சார்ந்தே உருவாக்கப்படுகின்றன. மிக, மிக விரிவான பதிவுகளை அறிஞர்களும் வாசகர்களும் போற்றுகின்றனர். இளையதலைமுறைப் படைப்பாளிகள் பற்றி இருக்கும் ஒரே பதிவு அனேகமாக தமிழ்விக்கியாகவே இருக்கும்.
இதுவரை பதிவான பதிவுகளிந் எண்ணிக்கை என்ன?
வெளிவந்த பதிவுகள் அளவுக்கே , சரிபார்ப்பிலும் பக்கங்கள் உள்ளன. பத்தாயிரம் பதிவைக் கடந்துள்ளோம்.
இது ஒரு அதிகார முயற்சியா ?
சரி, அதிகாரநோக்கம் இல்லாத செயல்பாடு எது? அதிகார நோக்கமே இல்லாதவர் என்றால் கோயில் திண்ணைகளில் படுத்திருக்கும் ஆண்டிகள் மட்டுமே. எந்த அறிவுச்செயல்பாடும் அறிவதிகாரத்தையே உருவாக்குகிறது. நாங்கள் தமிழ்ச்சூழலில் ஒரு நேர்நிலையான, ஆக்கபூர்வமான செல்வாக்கை உருவாக்க நினைக்கிறோம்.
இப்படிப் பாருங்கள். பொருள்படுத்தும்படி ஒரு நூல்கூட எழுதாமல், உயர்பதவிகளில் இருந்த ஒருவர் அனைவருக்கும் தெரிந்தவராக இருக்கிறார். நாங்கள் இந்தப் பக்கம் மாபெரும் ஆய்வாளர்களான குடவாயில் பாலசுப்ரமணியத்தை, அ.கா.பெருமாளை முன்வைக்கிறோம். இது அறிவதிகாரம்தானே?
தமிழ்ப் பண்பாட்டில் நிகழ்ந்த ஒரு சாதனை எவருக்கும் தெரியாமலேயே உள்ளது, அதை தெரிய வைக்கிறோம். எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பேரகராதியைப் பற்றிய பதிவு ஓர் உதாரணம். தமிழ் வரலாற்றில் அறியப்படாத ஒன்றை விரிவாகப் பதிவுசெய்கிறோம். சயாம் மரணரயில் பற்றிய தொடர்பதிவுகள் உதாரணம். இதன்வழியாக நாங்கள் அறிவுசார்ந்த ஒன்றை நிறுவத்தானே முயல்கிறோம்.
அப்படிப் பார்த்தால் உ.வே.சாமிநாதையர் செய்ததும் பெரியசாமித் தூரன் செய்ததும் அறிவதிகார முயற்சியே. நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரும் கரந்தை தமிழ்ச்சங்கம் நிறுவிய உமாமகேஸ்வரனாரும் அறிவதிகாரத்தை உருவாக்கியவர்கள்தான். எங்கள் நோக்கம் அதேபோன்ற உண்மையான அறிவியக்கத்தை உருவாக்குவதுதான். விளைவுகள் காலத்தின் கையில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.