உருவத்தில் நான் கருப்பாக, ஒல்லியாக, உயரமாக இருக்கிறேன். நல்ல நிறமாகவும், குண்டாக, பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிறது. இது எதனால்? எப்படி சரிசெய்து கொள்வது?
-கல்யாணி, திருப்பூர்.
இப்படி இருப்பதற்குக் காரணம் நீங்கள் அல்ல. அம்மாவின் சினை முட்டையிலும், அப்பாவின் விந்தணுக்களிலும் பொதிந்துள்ள வாத தோஷத்தின் ஆதிக்கத்தால் பித்த, கப தோஷங்களின் குணம், தரம், செயல் ஆகியவை பலம் இழந்து போனதால் ஏற்பட்ட விளைவு இது.
வாத தோஷத்தின் சீற்றத்தை ஏற்படுத்தக் கூடிய உணவு, செயல்களாலும், அதைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையை மதியாமல் விட்டதாலும், முன்னோர்களின் வாழையடி வாழையாக மிக நுண்ணிய அணுக்களின் வழியாகப் பெறப்பட்ட தோஷங்களின் குண செயல்களின் மூலமாக உங்களுடைய உருவமானது தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்.
வரட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு, நுண்ணியது, நகரும் தன்மை கொண்ட உணவு வகைகள், செயல்கள் ஆகியவற்றால் உடலில் வாத தோஷமானது கூடிவிடுகிறது. இந்தக் குணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த உபாயமான எண்ணெய் தேய்த்துக் குளித்தல், உணவில் நிறைய உருக்கிய பசு நெய்யை சேர்த்துகொள்ளுதல், வஸ்தி எனும் எனிமா சிகிச்சையை எடுத்துகொள்ளுதல் போன்றவற்றை நம் முன்னோர் சிறப்பாகச் செய்துகொண்டனர். இவற்றைத் தவறவிட்டவர்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் எண்ணற்ற வாயு உபாதைகளால் துன்புறுவதைக் காண முடிகிறது.
வரட்சிக்கு எதிரான நெய்ப்பு, லேசான தன்மைக்கு எதிரான கனம், குளிர்ச்சிக்கு எதிரான சூடு, சொரசொரப்புக்கு எதிரான வழவழப்பு, நுண்ணிய தன்மைக்கு எதிரான ஸ்தூலம், நகரும் தன்மைக்கு எதிரான அசையா நிலை போன்ற குணங்களின் வாயிலாக உங்களுக்குத் தேவையான நிறம், வனப்பு, அழகு ஆகியவற்றைப் பெறலாம். இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், இந்தக் குணங்களின் வரவை உணவு, செயல்வடிவமாக நாம் வழங்கினாலும், இயற்கையாகவே உடலில் இவற்றுக்கு எதிரான குணங்கள்
உள்ளபடியால் அவை இவற்றை தன்பக்கம் இழுத்துகொண்டு ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் அவதியுறும் நிலை ஏற்படலாம். அதனால் உங்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் மட்டுமே பலன்களை நிறைவாக அடைய முடியும்.
ஏலாதி கேர தைலத்தை இளஞ்சூடாக தலை முதல் பாதம் வரை தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், உடல்நிறம் மேம்படுதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். உள் மருந்துகளாக இந்து காந்தம், விதாயர்யாதி, கல்யாணகம் போன்ற நெய் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடலாம்.
ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் எனிமா எனும் ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் கஷாயம் மற்றும் தைலமுறைகளைத் தொடர்ந்து செய்துகொள்வதும் நன்மையைத் தரும். உணவில் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை தவிர்த்து அதிக இனிப்பு,
மிதமான புளிப்பு, சிறிய அளவு உப்பு எனச் சேர்த்துச் சாப்பிடுவதையும் நீங்கள் பழக்கமாக்கிக் கொள்வது நலம்.
செயல்களில் அதிக ஓய்வு, குறைவான அளவில் உறவு, நடைபயிற்சி, படிப்பு போன்றவை கடைபிடிக்கப்பட வேண்டியவைகளாகும். இவற்றின் மூலமாக நீங்கள் அடையும் வனப்பு மற்றும் அழகானது நிலைத்திருக்க, விடாமுயற்சியாக முன்குறிப்பிட்ட மருந்து, உணவு மற்றும் செயல்முறைகளில் ஈடுபாட்டுடன் இருந்தே ஆக வேண்டிய அவசியமும் இருக்கிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.