உத்தரகண்டில் கங்கை நதி தொடங்கி, ஒருகட்டத்தில் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி கொல்கத்தாவிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள கங்கா சாகரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மற்றொரு பகுதி வங்க தேசத்தில் 'பத்மா' என்ற பெயரில் ஓடி கடைசியில் வங்காள விரிகுடாவில் சேருகிறது. கங்கை நதி ஓடும் மொத்த நீளம் 2, 525 கி.மீ. ஆகும். இந்தத் தீரத்தில் என்றும் 'வாழும் நகரங்கள்' பல உள்ளன
அவை:
பல மலைகளின் தொடர்களில் ஓட ஆரம்பித்து வடக்கே திரும்பி கங்கோத்ரியை அடைகிறது கங்கை. கட்வால் பகுதியில் பகீரதன் தவம் செய்த இடம் உள்ளது. இங்கு கங்கைக்கு கோயில் உள்ளது. 'கங்கை சந்துனுவை மணந்து, புகழ் மிக்க பீஷ்மரை பெற்றாள்' என்கிறது புராணம். தேவ பிரயாகையில் அலக்நந்தாவுடன் இணைந்தவுடனே 'கங்கை' என அழைக்கப்படுகிறாள். ஹரித்வாரில் பிரவாகமாகி, பிரயாகையில்
யமுனையுடன் இனைந்து சரஸ்வதியுடன் 'திரிவேணி சங்கமம்' ஆகிறாள். பிறகு ஸரயூ சம்பல் சோனை கண்டகி நதிகள் இணைகின்றன. வாரணாசியில் தான் கங்கை முழுமை அடைந்து, புனிதம் பெறுகிறது. ஹிந்துக்கள் இங்கு வந்து புனித நீராடி ஜோதிர்லிங்கம், விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சியை தரிசிக்கின்றனர். இங்கு பஞ்சநதி சங்மமம் விசேஷம்.
வாரணாசி முதல் கொல்கத்தா வரையிலான கங்கை நதிக்கரையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நகரங்கள் அமைந்துள்ளன.
ஹரித்வார்
கேதாரம், பத்ரிநாத் போன்றவை செல்ல நுழைவுவாயில். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா இங்கு விசேஷம். பாற்கடலைக் கடைந்தபோது, கிடைத்த அமிர்தத்தை கருடன் தூக்கிச் சென்றபோது நான்கு இடங்களில் அமுதம் சிந்தியது. அதில் ஒன்று ஹரித்வார். 'இங்கு குளித்தால் இறப்பில்லா வாழ்வு கிட்டும்' என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் சிரவன் மாதத்தில் நடைபெறும் கன்வார் யாத்திரை மிக பிரபலம். கங்கை நீரை எடுத்துச் சென்று வாராணசி சிவனுக்கு அர்ப்பணிப்பர்.
இங்குள்ள விஷ்ணு குளியல் கட்டடத்தில் குளிப்பது விசேஷம். ஐந்து வெவ்வேறு கட்டடங்கள் விசேஷமானவை. அவற்றை தேடிச் சென்று குளித்தால் மோட்சம் நிச்சயம் என்கின்றனர். இதனை 'மாயாபுரி' எனவும் அழைப்பர். ஆயுர்வேத, மூலிகை மருந்துகளுக்கு பிரபலம்.
ரிஷிகேஷ்
ஹரித்வாரிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரை 'யோகா நகரம்' என அழைப்பர். கங்கை ஆற்றின் வலது கரையில் உள்ளது. சார்தாம் யாத்திரையின் நுழைவுவாயில். ஒருகாலத்தில் முனிவர்கள், துறவிகள் ஞானம் தேடி தியானம் செய்த இடம். கோயில்கள் ஆஸ்ரமங்கள் நிறைந்த இடம். திரிவேணி சீகாட்டில் காலை, மாலை ஆரத்தி உண்டு.
சுவாமி சித்பவானந்தர் ஆஸ்ரமம், திரியம்பகேஸ்வரர், ராம்ஜூலா லட்சுமண் ஜூலா, நீலகண்ட மகாதேவ் கோயில் (இந்த இடத்தில்தான் சிவன் விஷத்தை சாப்பிட்டார் என்கிறார்கள்) , பீட்டில்ஸ் ஆஸ்ரமம் உள்ளிட்டவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். 'ப்ளையிங் பாக்ஸ்' என பதற்றமான ஜீப் பாத பயணம் உள்ளது. கங்கை, இமயமலை அடிவாரத்தில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் அது அழைத்துச் செல்லும் சாகச பயணம். ஆன்மிக விழிப்புணர்வு, யோகா, தியானத்துக்காக மக்கள் அடிக்கடி வருகை தருகின்றனர்.
பிரயாக்ராஜ் (முன்பு அலகாபாத்)
கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் இடமான இந்த நகரை 'திரிவேணி சங்கமம்' என அழைப்பர். புனிதக் குளியலுக்கு ஏற்ற இடம். ஆண்டு முழுவதும் மக்கள் வருகின்றனர்.உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று. 12ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு கும்பமேளா நடைபெறுகிறது. யமுனா நதிக்கரையில் உள்ள சரஸ்வதி படித்துறை மிக பிரபலம். நீதித் துறையின் தலைநகரம் என்பர்.
கான்பூர்
கங்கையின் வலது கரையில் நகரம் உள்ளது. 'கன்ஹாபூர்' என்று கூறப்பட்ட ஊர் தற்போது 'கான்பூர்'. காலனித்துவக் கட்டடங்கள் ,அழகான தோட்டங்கள், இனிப்புகள், உயர்தரத் தோல், பிளாஸ்டிக், ஜவுளி உள்ளிட்டவற்றுக்கு பிரபலம். பல தலங்கள் உள்ளன. கங்கை நகருக்குள்ளேயே ஓடுகிறது. நாட்டின் முதல் கம்பளி ஆலை இங்கு தான் வந்தது. 'உலகின் தோல் நகரம்' என்றும் அழைப்பர். விறுவிறுப்பான வியாபார நகரம் என்பதால், ஏற்றுமதி அதிகமாகிறது.
பாட்னா
கங்கை நதியின் தென் கரையில் இருந்தது முதலில் நகரையொட்டி கங்கை ஓடியது. தற்போது 6 கி.மீ. தள்ளிப் போய் விட்டது. உலகில் மிக பழமையான அதே சமயம் தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதி.கி.மு. 490-இல் அஜாதசத்ரு தன் வெற்றியைக் கொண்டாட இந்த நகரத்தை அமைத்ததாக வரலாறு. பழைய பெயர் பாடலிபுத்ரா. முக்கிய வர்த்தக, வணிக மையம். பட்டு,காலிகோ, தாவர எண்ணெய், ஜவுளி உள்ளிட்டவற்றுக்கு பிரபலம்.
கொல்கத்தா
ஹுக்ளி நதியின் கிழக்கு கரையில் உள்ளது. தாமோதர் நதியும், பாகீரதி நதியும் இணையும்போது 'ஹூக்ளி' எனப் பெயர் பெற்று இந்த நகரம் வழியாக ஓடுகிறது. கிழக்கு, வட கிழக்கு இந்தியாவின் முதன்மை வணிக மையம். வங்காளத்தின் வரலாறு, கலாசார பன்முகத் தன்மை கொண்ட பிரம்மாண்ட நகரம். 1773 முதல் 1911வரை ஆங்கிலேய அரசின் தலைநகரம். மேற்கு வங்கத்தின் தலைநகரம் என்பதோடு, இந்திய கலாசார கலைநகரமும்கூட!
முர்சிதாபாத், மேற்கு வங்கம்
பாகீரதி நதியின் கிழக்குக் கரையில் உள்ள மேற்கு வங்க நகரம். ஒருகாலத்தில் ஏராளமான ஐரோப்பிய நகரங்கள் இங்கு வியாபார மையங்களைத் தொடங்கின. அதற்காக தொழிலகங்களும் அமைக்கப்பட்டன. தற்போது விவசாயம், கைவினைப் பொருள்கள், பட்டுப் புழு வளர்ப்பு மையங்கள் பிரபலம். முர்ஷிதா பட்டு பிரசித்தி பெற்றதாகும். குளிர்காலத்தில் இங்கு நடக்கும் பாரம்பரிய விழா மிகவும் சிறப்பு. இங்கு ஏராளமான டெர்ரகாயில்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.