கண்டது
(அரியலூரில் உள்ள ஓர் அச்சகத்தின் பெயர்)
'ஜனோபகார (ஜனஉபகாரம்)'
-நம்திரு, அரியலூர்.
(தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'ஆளடிக்கும் முளை'
-நாகஜோதி, நாகப்பட்டினம்.
(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'கல்படி'
-அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.
கேட்டது
(திண்டுக்கல் பள்ளியொன்றில் மாலை நேர வகுப்பில்...)
'டியர் ஸ்டூடன்ட்ஸ்... கிரிக்கெட் பற்றி அனை
வரும் ஒரு கட்டுரை எழுதுங்கள். முதலில் எழுதுபவருக்குப் பரிசு...'
'சார் நான் எழுதிட்டேன்...'
'வெரிகுட்... வாசி பார்க்கலாம்...'
'மழையின் காரணமாக, ஆட்டம் ரத்து செய்யப்படுகிறது.'
-எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
(செங்கல்பட்டு அண்ணா நகரில் தம்பதி பேசியது)
'நான் ஊருக்குப் போயிட்டா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?'
'சாப்பாடு கிடக்குது... மனுஷனுக்கு நிம்மதிதான் முக்கியம்.'
-க.அருச்சுனன், செங்கல்பட்டு.
(சென்னை கிழக்கு தாம்பரத்தில் சாலையில் பேசியபடி சென்ற இரு பணிபுரியும்பெண்கள்...)
'வேகமாகப் போய் அட்டென்டன்ஸ் மெஷினில் பஞ்ச் வைக்கணும்?'
'ஆமாம்பா... லேட்டா போனா செக்யூரிடி நம்ம மூஞ்சிலே பஞ்ச் வெச்சிடுவான். '
-கே.ஜி.எஃப். விசாகன், கிழக்கு தாம்பரம்.
யோசிக்கிறாங்கப்பா!
வந்து விழுந்த சுடுசொற்களைப் பிரித்து எழுத்துகள் ஆக்கி விடுங்கள்.
-பி.கோபி, கிருஷ்ணகிரி.
மைக்ரோ கதை
பத்தாம் வகுப்புப் படிக்கும் பானுவுக்கும், எட்டாம் வகுப்புப் படிக்கும் தம்பிக்கும் சண்டை. இருவரும் மாறி, மாறி திட்டி, அடித்தும் கொண்டனர்.
எட்டு மணிக்கு அம்மா தனது மகள் பானுவை சாப்பிட அழைத்தார். பானு வராததால், அம்மா கோபமுற்றார்.
'போடி நீ அடிச்சதுக்காக அவனும் அடிச்சான். அதுக்கு ஏன் இப்பவும் அழுறே?' என்று அம்மா சொன்னார். அதற்கு பானு, 'இல்லம்மா... அவன் அடிச்சா கூட பரவாயில்லை. நான் தம்பியை அடிச்சது தப்பு இல்லையா? என் தம்பியை நான் எப்படி அடிக்கலாம். மனசு கேக்கலைம்மா?' என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
-ஈக்காடு சந்தானம்
எஸ்.எம்.எஸ்.
விலை மதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல; நம்மோடு இருப்பவர்கள்.
-சாத்தை மயில், திருநெல்வேலி.
அப்படீங்களா!
மைக்ரோசாப்ட் லென்ஸ் ஆப்
நிகழாண்டு இறுதிக்குள் சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கும், எழுத்து, கையால் எழுதப்பட்ட பிரதிகளை எண்ம வடிவத்தில் மாற்றவும் 2015-இல் மைக்ரோசாப்ட் இதை அறிமுகம் செய்தது.
10 ஆண்டு சேவையில் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கப் பெரும் உதவியாக இருந்த லென்ஸ் செயலி ஐ.ஓ.எஸ், ஆன்ட்ராய்டு தளத்திலிருந்து செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் சேவையிலிருந்து விடுவிக்கப்படுகிறது. பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மட்டும் அதன் பின்னர் பயன்பாட்டில் இருக்கும்.
டிசம்பர் 2025-க்கு பிறகு அதுவும் பயன்படுத்த இயலாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஸ்கேன் செய்யப்பட்ட பதிவுகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு பதிலாக கோபைலட் செயலியைப் பயன்படுத்தி கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோபைலட்டில் பல மேம்படுத்தப்பட்ட சேவைகள் உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.