'எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழ் நாவல்களைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் பயணத்தைத் தொடங்கினேன். அதனால் நேரடியாக என்னால் அதிகமாக எழுத இயலவில்லை. 'அவர் மொழி
பெயர்ப்பாளர்தானே' என்று என்னைச் சொல்வது வருத்தமாக இருக்கிறது. அதற்காக நான் மொழிபெயர்ப்பை நிறுத்தவில்லை. ஆசிரியர் பணியிலிருந்து, ஓய்வு பெற்றாலும், எழுத்துக்கு ஓய்வு இல்லை. நான் அமைத்த தமிழ்-தெலுங்கு பாலத்தில் தொடர்ந்து இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பயணிக்கிறேன். நான் எழுதிய 'ஜீவிதமோக பயணம்' எனும் தெலுங்கு நாவலை ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ளேன்' என்கிறார் ஜில்லேள்ள பாலாஜி.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' எனும் நாவலை 'கல்யாணி' என்ற பெயரில் தெலுங்கில் மொழிபெயர்த்ததற்காக இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை சாகித்திய அகாதெமி 2011-இல் வழங்கியது.
தெலுங்கு எழுத்தாளர் ஜில்லேள்ள பாலாஜியிடம் பேசியபோது:
'எனக்கு அறுபத்து மூன்று வயதாகிறது. திருத்தணியில் பிறந்து, தொடக்கப் பள்ளிக் கல்வியை தெலுங்கு பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளியில் படித்தேன்.
தமிழ் மீது விருப்பம் இருந்ததால், தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களை வாசிப்பேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தும் பேச்சுத் தமிழையும் கற்றேன். தந்தையின் வேலை காரணமாக, ஆந்திரத்தின் சித்தூருக்கு இடம்பெயர்ந்தோம். பி.காம் பட்டப் படிப்பும் முடித்தேன். திருமணம் முடிந்ததும், திருப்பதியில் குடியேறினோம்.
தனியார் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டும், அது முற்றுப்பெறவில்லை. தெலுங்கில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதினேன்.
திருத்தணியில் வசிக்கும் எனது சகோதரி, 'நீ தெலுங்கில் எழுதுகிறாய். ஏன் தமிழ் நாவல்களை தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்யக் கூடாது?' என்று கேட்டார். முதலில் ராஜேஷ்குமார் எழுதிய துப்பறியும் நாவல்களை அடுத்தடுத்து தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்தேன். தமிழுக்கும் தெலுங்குக்கும் எழுத்துப் பாலம் அமைத்தேன்.
திருப்பதியில் தெலுங்கு இலக்கிய வட்டத்தில் பேராசிரியர் மதுராந்தகம் நரேந்திராவின் அறிமுகம் கிடைத்தது. அவரது அறிவுறுத்தலின்படி, ஜெயகாந்தனின் படைப்புகளை தெலுங்கில் எழுத அவரிடம் அனுமதியையும் , நாவல்களையும் பெற்றுத் தந்தார்.
முதலில் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்..' என்ற நாவலை 'கல்யாணி' என்ற பெயரில் மொழிபெயர்க்க, 'ஆந்திர ஜோதி' நாளிதழில் தொடராக வெளியானது. தொடர் முடியும் தருணத்தில், 'ஜெயகாந்தனின் பேட்டி வெளியாகும்' என்று அறிவிப்பு வெளியானது. துரதிர்ஷ்டமாக நிருபர் தாமதமாகச் சென்றதால் ஜெயகாந்தன் பேட்டியைப் பெறமுடியவில்லை. விஷயம் தெரிந்ததும் ஆசிரியர் என்னைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினார். ஜெயகாந்தனிடம் நான் பேச, பேட்டி அளிக்க ஒப்புக் கொண்டார்.
பேராசிரியர் மதுராந்தகம் நரேந்திரா, நிருபர், நான் ஆகிய மூவரும் திருப்பதியிலிருந்து சென்னைக்குச் சென்று, ஜெயகாந்தன் கூறிய நேரத்துக்கு முன்பே அவரது இல்லத்துக்குச் சென்று பேட்டி எடுத்தோம். பேட்டியும் வெளியாகியது. தொடரும் நூலாக வெளியானது. 'கல்யாணி' நாவல் சாகித்திய அகாதெமி விருதும் பெற்றது.
தொடர்ந்து ஜெயகாந்தனின் 'கங்கை எங்கே போகிறாள்', 'பாரீசுக்குப் போ...', 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', மேலும் இரண்டு குறுநாவல்களை தெலுங்கு மொழிக்குக் கொண்டு வந்தேன்.
'நான் தமிழில் அதிகம் எழுதியிருக்கிறேன். என்னைத் தெலுங்கில் கொண்டு சென்றது நீங்கள்தான்' என்று எனக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தபோது, என்னை ஜெயகாந்தன் பாராட்டினார்.
உடல்நலக் குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயகாந்தன் சேர்க்கப்பட்டிருந்தார். திடீரென்று ஜெயகாந்தன் தொலைபேசியில் அழைத்து, 'நான் ஒரு எழுத்தாளன் என்று இப்போதுதான் அப்பல்லோ பிரதாப் ரெட்டிக்குத் தெரிய வந்திருக்கிறது. எனது நாவலை வாசிக்க வேண்டும் என்கிறார். அவருக்கோ தமிழ் தெரியாது. அதனால், 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலின் தெலுங்கு மொழிபெயர்ப்பான 'கல்யாணி' நாவலின் ஒரு பிரதியை அனுப்புங்கள்' என்றார். நான் அனுப்பிவைத்தேன்.
'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' தெலுங்கு மொழிபெயர்ப்பையும் சாகித்திய அகாதெமியே வெளியிட்டது. ஜெயகாந்தனின் நாவல்களின் தெலுங்கு மொழிபெயர்ப்புகள் அனைத்துமே தினசரி அல்லது வார இதழ்களில் தொடராக வந்து, நூல்கள் ஆனவை.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'யாமம்' நூலுக்கு தாகூர் விருதாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைத்திருந்தது. 'ஒரு லட்சம் பரிசு கொடுக்க அந்த நாவலில் என்ன இருக்கிறது என்று நான் தெரிந்து கொண்டால் போதாது; தெலுங்கு வாசகர்களும் அறிந்து கொள்ள வேண்டும்' என்பதற்காக எஸ்.ரா. விடம் பேசி, மொழிபெயர்த்தேன். தொடர்ந்து சாகித்திய அகாதெமி விருது பெற்ற அவரது 'சஞ்சாரம்' நூலும் எனது மூலமாக தெலுங்கு வாசகர்களைச் சென்றடைந்தது. இரண்டு நூல்களையும் எஸ். ரா.வே வெளியிட்டார்.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இமயம் எழுதிய 'செல்லாத பணம்' நாவலையும் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளேன். கல்கியின் 'அலையோசை', வ.வே.சு. அய்யர், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், வண்ண நிலவன், பவா செல்லதுரை, இமயம், பா.ரஞ்சித், சாரோன் போன்றவர்களின் சிறுகதைகளைத் தொகுப்பாக தெலுங்கில் கொண்டுவந்துள்ளேன்.
தமிழிலிருந்து தெலுங்கு மொழியில் மொழிபெயர்ப்பு பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 2010-இல் 'திசை எட்டும்' விருதை நல்லி குப்புசாமி செட்டியார் வழங்கினார்.
கே. சுப்ரமணியம் மொழிபெயர்ப்பு விருதை 2023-இல் கோவை விஜயா பதிப்பகமும் வழங்கியது.
பவா செல்லதுரையின் படைப்புகள் பலவற்றை தெலுங்கில் கொண்டு சேர்த்தேன். இயக்குநர் சீனு இராமசாமியின் 'புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை' என்ற கவிதைத் தொகுப்பையும், நல்லி குப்புசாமி செட்டியாரின் 'வால்மீகி அறம்' என்ற நூலை 'வால்மீகி தர்மம்' என்ற தலைப்பிலும் தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்.
இதுவரை 130 சிறுகதைகள், 22 நாவல்கள், 120 கவிதைகளை தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழிமாற்றம் செய்துள்ளேன். தெலுங்கு புதின உலகில் பிரபல தெலுங்கு வார இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இதுவரை 19 பரிசுகள் பெற்றுள்ளேன். தமிழில் பல எழுத்தாளர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் குறிஞ்சிவேலன்' என்கிறார் ஜில்லேள்ள பாலாஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.