பெ.பெரியார்மன்னன்
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தேசியத் தரச் சான்றிதழ், காயகல்ப விருதுகள் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் தமிழ்நாடு அரசின் 'நல்மருத்துவர்' விருது பெற்ற சி.பொன்னம்பலம்.
அவரிடம் பேசியபோது:
'ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே, கிராம மக்களுக்கு தரமான மருத்துவச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
வாழப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராகப் பணியேற்று, மக்களின் ஆதரவோடு மிகச் சிறந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றினேன். ஐ.எஸ்.ஓ. உலகத் தரச் சான்றிதழையும் பெற வைத்தேன். சிகிச்சை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், 2016-இல் அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்ந்தது.
இதனால் பணியிட மாறுதலில் தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராகப் பொறுப்பேற்றேன். அங்கு முப்பது படுக்கை வசதிகள், அறுவைச் சிகிச்சை அரங்க வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாறுவதற்கு சக மருத்துவர்கள், பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றினேன்.
கடந்த எட்டு ஆண்டுக்கு முன் பதவி உயர்வு கிடைத்ததால், பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான வட்டார மருத்துவ அலுவலராகப் பொறுப்பேற்றேன். அரசுத் திட்டங்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்களின் வாயிலாக பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் பேவர் பிளாக் தரைத்தளம் அமைத்துள்ளோம்.
பயனாளிகள் காத்திருப்பு அறை, சித்த மருத்துவ மூலிகைத் தோட்டம், உடல் நலன் காக்கும் எட்டு வடிவ நடைப்பயிற்சித் தளம் உள்ளிட்டவற்றை அமைத்தோம். தனியார் மருத்துவமனைகளை விஞ்சும் வகையில் தாமரைக்குளம், புல்வெளித் தரைகள் அமைத்துள்ளோம்.
புன்னை, மகிழம், நுணா, வேம்பு, புங்கன், விளான் உள்ளிட்ட பாரம்பரிய மரங்களை நட்டு வளர்த்து வருகிறோம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சங்க இலக்கியக் குறிப்புகளோடு, தாவரவியல் பெயர், தீர்க்கும் நோய்கள் ஆகியவற்றையும் சேர்த்து குறிப்பிட்டு மரங்களுக்கு, புதுமையான முறையில் பெயர்ப் பலகை வைத்துள்ளோம்.
வாழப்பாடி அரிமா சங்கத்தின் உதவியால், சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்காகவும் வரும் கர்ப்பிணிகளுக்கு, வாரத்தில் இரு நாள்களுக்கு ஊட்டச்சத்து மதிய உணவு வழங்குகிறோம். சமுதாய வளைகாப்பை நடத்துகிறோம். இந்தச் சேவைகளைப் பாராட்டி காயகல்ப விருதை மத்திய அரசும், நல்மருத்துவர் விருதை தமிழ்நாடு அரசும் வழங்கியுள்ளது.
வரலாற்று ஆய்வுகள், கருத்தரங்கங்கள், மரபு நடைகள் நிகழ்வுகளுக்கு உதவிபுரிந்துவருகிறேன். விடுமுறை தினங்களில் புராதன கோயில்களுக்கு சென்று, எழில் கொஞ்சும் சிற்பங்களைப் படம் பிடித்து வருகிறேன். எனது புகைப்படங்கள் உலகத் தமிழ் மாநாட்டு மலரில் இடம்பெற்றன.
அரிய கலை, இலக்கிய வரலாற்று நுôல்கள், அறிஞர்களின் படைப்புகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுôல்களைக் கொண்ட அபாரமான நுôலகத்தை எனது வீட்டில் அமைத்துள்ளேன்' என்கிறார் பொன்னம்பலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.