இந்தியத் திரையுலகில் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் சத்யஜித் ரே. 1949-இல் வெளியான 'பை சைக்கிள் தீவ்ஸ்' என்ற படம் இவரைப் பாதித்ததால், 'பதேர் பாஞ்சாலி' என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டார். இவர் தனது மனைவியின் வளையல்களை வாங்கி, வளைகாப்புக்குள் திருப்பித் தந்து விடுவதாகச் சொல்லி, அவர் விரும்பிய படத்தை எடுத்தார். வளைகாப்பு நடைபெற்றது. ஆனால் வளையல்கள் வரவில்லை.
இந்தப் படம் 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றது. இதைத் தொடர்ந்து காலத்தால் அழியாத 'ஜல்சாகர்', 'தேவி', 'தீன்கன்யா', 'அபிஜென்', 'கஞ்சன் ஜங்கா', 'சாருலதா', முதல் வண்ணப் படமான 'மஹாநகர்' போன்றவை திரையுலகின் நூலகங்கள்.
1978-இல் பெர்லின் திரைப்பட விழாவில், 'எக்காலத்துக்கும் சிறந்த 3 இயக்குநர்களில் ஒருவர் ரே' என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தயாரித்த 'அகன்துக்' வாஷிங்டன் நகரில் வாரிக் குவித்த வசூலில் 10 படங்களில் ஒன்றானது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த நிமாய் கோஷ், ரேயின் ஆரம்பகாலப் படங்களில் பல படங்களின் ஒளிப்பதிவாளர். இன்னும் சொல்லப் போனால் ரேக்கு முன்னால் 'சின்ன முல்' என்ற படத்தை இயக்கினார்.
இவர் 1914-இல் கல்கத்தாவில் பிறந்தார். சென்னைக்கு வந்து 1960-இல் 'பாதை தெரியுது பார்' என்ற படத்தை ஒளிப்பதிவு செய்து, இயக்கினார். இவருடன் இணைந்தவர்கள் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளான இசையமைப்பாளர் எம்.பி. சீனுவாசன், ஜெயகாந்தன்.
பின்னாளில் இயக்குநராகிப் பிரபலமான கே. விஜயன் கதாநாயகனாக நடிக்க, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுத, படம் வெளியாகி ரஷியப் பட விழாவுக்குச் சென்று தமிழ்த் திரை உலகத்தை எதார்த்த சினிமாவுக்கு இழுத்துச் சென்றது. 'அரசு தந்த முதல் நிதி உதவிப் படம்' என்ற பெயர் பெற்றது. இவர் தமிழ்த் திரையுலகின் தந்தை கே. சுப்ரமணியம் தலைமையில், எதிர்காலச் சினிமாவைப் பற்றிப் பேசிய போது கடற்கரையில் எம்.ஜி. ஆர். மணலில் அமர்ந்து கேட்பார்.
1965-இல் ஏ. கே. வேலன் தயாரித்த 'நீர்க்குமிழி' என்ற படத்தை முதன் முதலில் கே. பாலசந்தர் இயக்கியபோது, இவர்தான் அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பிறகு 1967-இல் கே. பாலசந்தரின் 'அனுபவி ராஜா அனுபவி' என்ற படத்துக்கும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார்.
நான் பாட்டு எழுத வாய்ப்புத் தேடி அலைந்தபோது, இவரை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் பூங்காக்கள் இல்லாத காலத்தில், அரை டவுசர், ஒயிட் ஷூவுடன் அதிகாலையில் பிளாட்பாரத்தில் நடந்து செல்வதைப் பார்ப்பேன். அவர்தான் நிமாய் கோஷ் என்று தெரியாது. எப்போதும் என் கையில் இலங்கையில் இருந்து வெளிவந்த 'கதம்பம்' என்ற மாத இதழை வைத்திருப்பேன். காரணம், முதன் முதலாக என் கவிதை 1960-இல் அதில்தான் வெளியானது. அதன் தலைப்பு 'காதலி தூது'. அதைப் பலரிடம் தூதனுப்பிக் காத்திருப்பேன். பலன் இருக்காது.
சில நாள்களில் அவர்தான் நிமாய் கோஷ் என்று தெரிந்து கொண்ட நான், பாடல் எழுத வந்து பாடாதபாடுபட்டுக் கொண்டிருப்பதைச் சொன்னேன். என்னை ஏ.கே. வேலனிடம் அறிமுகம் செய்து வைத்து, சிபாரிசு செய்தார். அப்போது சுரதாவின் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' பாடல் பதிவாகிக் கொண்டிருந்தது. ஏ.கே. வேலன் 'அடுத்த படத்தில் பார்க்கலாம்' என்றார். ஏமாற்றமே மிஞ்சியது.
1972-இல் நான் கதை, வசனகர்த்தாவானதும் ஒருநாள் அவரைச் சந்தித்தேன். எனக்கு டைரக்டர்ஸ் காலனியில் 27,000 ரூபாயில் ஒரு வீடு வாங்கவும் மாதம் 200 ரூபாய்க்குள் கட்டுமாறும் செய்தார். அந்த 200 ரூபாய்கூட கட்ட வழியில்லாமல் அந்த வீட்டை வாங்க முடியாமல் போனேன். இன்று அதன் விலை 70 லட்சம்.
இன்று 'பெப்சி' திரைப்பட சம்மேளனம் உருவாகியிருக்கிறது என்றால், இவரும் எம்.பி. சீனுவாசனும்தான் காரணகர்த்தாக்கள். இவர் பெயரில் 'பெப்சி' எனக்கு நிமாய் கோஷ் விருது வழங்கியது. நான் 100 வீடுகள் வாங்கியதற்குச் சமம். இவர் தனது 74-ஆவது வயதில் 1988-இல் காலமானார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.