ரா. சங்கரன் 
தினமணி கதிர்

ரா. சங்கரன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 36

ரா. சங்கரன் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

காரைக்குடி நாராயணன்

இராமரத்தினம் என்ற ரா. சங்கரன் 1931-ஆம் ஆண்டு ஜூன் 12-இல் ராமமூர்த்தி ஐயருக்கும் முத்துலட்சுமி அம்மாவுக்கும் மகனாக லால்குடியில் பிறந்தார். பிரபல இயக்குநரும் எம்.ஜி.ஆர். அண்ணன் சக்கரபாணியின் சம்பந்தியுமான கே. சங்கரிடம் துணை இயக்குநராகப் பல படங்களில் பணிபுரிந்தார். ஒரே நாளில் ஒரு பக்கம் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றபோது, சிவாஜி படத்தை இவரும், எம்.ஜி.ஆர். படத்தை கே. சங்கரும் சில நேரங்களில் நடத்த வேண்டிய நிலைமை வரும்.

இவர் நாடகக் காவலர் ஆர். எஸ். மனோகரின் நாடகக் குழுவில் நகைச்சுவை நடிகராக இருந்ததால், சிவாஜி நடிக்க வேண்டிய காட்சியை எனது எழுத்தின் குரு ஜாவர் சீதாராமன் இவருக்கு ஒரு பக்கம் உறவாக இருந்ததால், ஜாவர் மாதிரியே படித்தும் நடித்தும் காட்டுவார். சிவாஜி அதை ரசித்து, 'சங்கரய்யர் உங்களை மாதிரி நடிக்கவா? என்னை மாதிரி நடிக்கவா?' என்று கேலி செய்வார்.

இதேபோல் எம்.ஜி.ஆர். நடித்தபோது, 'டேக் 4' என்று கூறியபோது அவர் சங்கரய்யரைக் கூப்பிட்டு, 'இதெல்லாம் தம்பி சிவாஜிக்கு சரி, எனக்கு ஒன், டூவோட போதும்' என்று கூறினார். தயாரிப்பாளர்களுக்குச் சிறிதும் வீண் செலவு வைக்காதவர்.

இவர் உதவி இயக்குநராக இருந்து திருமணம் செய்தபோது, இவரது மாப்பிள்ளை அழைப்பு கார் பனகல் பார்க் வந்த போது சிவாஜியும் எம்.ஜி.ஆரும் ஒருவரை ஒருவர் கைப் பிடித்து நடந்து வரும் புகைப்படத்தைப் பார்த்து வியந்து போனேன். கல்யாண வரவேற்பில் டி.ஆர். மகாலிங்கம் கச்சேரியை ஏவி. எம். உட்கார்ந்து ரசித்திருக்கிறார்.

இத்தனை பெருமைக்கும் திறமைக்கும் பேர் சொல்லக் கூடிய ரா. சங்கரன் இயக்குநரானதும் 1973 முதல் 1976 வரை இவர் இயக்கிய படங்களுக்கெல்லாம் என்னை வசனகர்த்தாவாக்கினார். வெற்றிலை பாக்கு இருந்தால் போதும், ஜிப்பா வேட்டி எளிமையின் அடையாளம். 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' என் நெருங்கிய நண்பர் சிவகுமார் நடித்தார். 'குமரிப் பெண்ணின் உள்ளத்திலே' படத்தில் இன்றைய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் நடித்தார்.

சிறு வயதில் ஒரு நாள் இவரின் ஒரே மகன் ஆனந்த் என்னிடம் வந்து, 'அப்பா பட்டாசு வாங்கித் தர மறுக்கிறார் அங்கிள்' என்றதும், நான் 5 ரூபாய்க்கு பட்டாசு வாங்கிக் கொடுத்தபோது, 'காரைக்குடி தயாரிப்பாளர்களைக் கஷ்டப்படுத்தி பணம் வாங்க முடியல. பால் கார்டு வாங்குற காசுல பட்டாசு வாங்க முடியுமா?' என்றார்.

ஒரு காலத்தில் திறமையான இயக்குநர்களின் நிலை பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது. இதே சங்கரய்யர் மகன் ஆனந்த் அப்பாவுக்கு என தி. நகரில் வீடு வாங்கிக் கொடுத்த போது, என் மகள் திருமணத்தில் நான் பொருளாதார நெருக்கடியில் இருப்பது தெரிந்து, எனக்குச் சொல்லாமல் ரா. சங்கரன் மூலமாக எனக்குப் பணம் அனுப்பி வைத்தார். சங்கரன் தனது பிறந்த நாளில் திடீரென என் வீட்டுக்கு வந்து என்னையும் எனது மனைவியையும் காஞ்சிபுரம் கூட்டிச்சென்று ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளிடம் ஆசிர்வாதம் செய்யச் சொன்னார்.

இதே போல் என் மனைவியின் கடவுள் பக்தியைத் தெரிந்தவர் சென்னை முதல் மைசூர் வரை இருந்த கோயில்கள் அனைத்துக்கும் எங்களை அழைத்துச் சென்றார்.

அவர் மனைவி கமலாம்மா என் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தார். அவர் இறந்ததை ரா. சங்கரன் எனக்கு மட்டும்தான் சொல்வதாகச் சொல்லி, 'அவசரப்பட்டு வராதே, ஆனந்த் விமானத்தில் நாளை காலைதான் வருவான்' என்றார்.

அடுத்த நாள் அதிகாலை நான் போன பிறகு அவர் மகன் வந்தபோது, வாசலில் நின்ற என்னைப் பார்த்து நின்று, 'எப்படியிருக்கா அழகு?' என்று என் மகளைப் பற்றி விசாரித்து விட்டு உள்ளே போனபோது, என் நெஞ்சம் கனத்தது.

16 படங்கள் இயக்கி, பிறகு படங்களில் நடித்து மணிரத்னம் இயக்கிய 'மௌனராகம்' மூலம் சந்திரமௌலியாக ரேவதியின் அப்பாவாகப் பிரபலமானார். கடைசி வரை ஒரு சராசரி மனிதனாக 60 ஆண்டுக்காலத் திரையுலகில் வாழ்ந்த இயக்குநருக்கு, ஒரு நடிகருக்கு அவர் மரணத்தில் யாருமே அஞ்சலி செலுத்தவில்லை என்பது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இது திரையுலகின் சாபக்கேடு. 2023, டிசம்பர் 14-இல் காலமானார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT