தினமணி கதிர்

லோக்கல் அனஸ்தீசியா

அரசு மருத்துவமனைகள் எவ்வளவுதான் அசுத்தமாக இருந்தாலும், எவ்வளவு மோசமான அலட்சியங்களை நோயாளிகள் சந்திக்க நேர்ந்தாலும் கூட்டம் குறைவதில்லை.

தினமணி செய்திச் சேவை

அரசு மருத்துவமனைகள் எவ்வளவுதான் அசுத்தமாக இருந்தாலும், எவ்வளவு மோசமான அலட்சியங்களை நோயாளிகள் சந்திக்க நேர்ந்தாலும் கூட்டம் குறைவதில்லை. ஏழைகளின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் ஒரே இடம் இதுதான்.

லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது எந்த அளவுக்கு வெளிப்படையான உண்மையோ, அதே அளவுக்கு லஞ்சம் இல்லாமல், மருத்துவம் பார்க்க முடியும் என்பதும் உண்மை. ஆனால், அதற்கு பல மணி நேரம், பல நாட்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். இந்தக் கால இடைவெளிதான் தனியார் மருத்துவமனையின் பணவாயில்.

சதாசிவம் பொறுமைசாலி. வாழ்க்கையை எளிமையாக, சட்டத்துக்கு உட்பட்டு கடந்து செல்கிறவர். சட்டத்தால் முடியாது என்கிறபோது, அந்த முட்டுச்சுவர் முன்பாக காத்திருப்பார். அவரது கனத்த மவுனம் சக்தி வாய்ந்தது. சுவர் இடிந்துவிழும்.

அப்படியாகத்தான் இந்த அரசு மருத்துவமனைக்கு வந்து போகிறார். மருத்துவ ஆலோசனை முடிந்தது. மருந்து வாங்கத்தான் நீண்ட வரிசை. முதியோருக்கென தனி வரிசை உள்ளது. அவரால் நிற்க முடிவதில்லை. ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே , அவரது மனைவி மருந்து வாங்கி வரச் சென்றார். மனைவி திரும்பி வரும் வரை, ஒதுக்குப்புறமாக நிற்கும் வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்திருப்பது அவரது வழக்கம்.

வேப்ப மரத்தின் நிழல் கசப்பதில்லை. இனிப்பதும் இல்லை. ஆனால், இனிமை குறைவதில்லை. இந்த நிழலின் தன்மை ஆஸ்பெஸ்டாஸ் கூரையிலான பஸ் நிறுத்தத்தில் கிடைப்பதில்லை. ஆனால் மரங்களை வெட்டி நிழற்கூடம் அமைப்பதுதான் நடக்கிறது. அதில்தான் அரசியல்வாதி, அதிகாரி பணம் பார்க்க முடிகிறது.

தொடக்கத்தில் இங்கே நான்கு இருக்கைப் பலகைகள் போட்டிருந்தார்கள். நோயாளிகள் சற்று சாய்ந்து, ஓய்வு கொள்ள முடிந்தது. இப்போது ஒரே பலகைதான் உள்ளது. மற்ற இடங்களில் ஊழியர்களின் வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. கிடைத்த நிழலிடங்களில் வாகனங்களை செருகி நிறுத்தியிருந்தார்கள். எத்தனை வகையான வாகனங்கள். அவரிடம் ஒரு ஸ்கூட்டர் மட்டுமே இருந்தது. அதையும் வங்கிக்கடனில் வாங்கினார். கடனை அடைப்பதற்குள் நண்பர்கள் கார் வாங்கிவிட்டார்கள்.

கார் பற்றி நினைப்பு வந்த நேரத்தில் ஒரு கார் சடேரென அவர் அருகே நிற்கும் ஓசையால் தலையை உயர்த்தினார்.

அந்த கார் ஒரு சிறிய வீடு போல இருந்தது. அதன் விலை பல லட்சம் என்பது உறுதி. கருப்பு மென்நெகிழி ஒட்டப்பட்டிருந்த பின் கதவுக் கண்ணாடி கீழே இறங்கியது. அங்கு தோன்றிய முகம் அவருக்குத் தெரிந்ததுதான். ஜீவா கிருபாகரன் .

முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த முகத்தை நேரில் காண்கிறார். மற்றபடி அவரையும் அவரது வளர்ச்சியையும் நாளிதழ்களில்தான் பார்த்து வருகிறார்.

அரசியலில் ஜீவா வளர்ச்சி அபாரமானது. சாதாரண வார்டு உறுப்பினராகி, நகர்மன்றத் தலைவராக உயர்ந்து, பிறகு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என மளமளவென உச்சம் தொட்டவர். அவரது கனவு அமைச்சராக வேண்டும் என்பதுதான். ஆனால், அது முடியவில்லை. இருப்பினும், அதற்கான அத்தனை அதிகாரங்களையும் அனுபவித்தார். அதிகாரத்தை தன் தொழில்வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார்.

காரைவிட்டு அவர் இறங்கும்முன்பாக, ஓட்டுநர் வந்து கதவைத் திறந்தான். அவர் முதலில் காலை வெளியே நீட்டினார். காருக்குள் தெரிந்த முகத்தின் ஒளி, கணுக்காலில் இல்லை. பாதம் தொடங்கி, கெண்டைக்கால் வரை கருத்திருந்தது. சிறுநீரகக் கோளாறாக இருக்கும். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை அவருக்கு உள்ளது. ஏவலுக்கு ஓடிவர ஆயிரம் பேர். ஆனாலும் அவரது சிறுநீரகம் செயல்பட மறுக்கிறது.

ஜீவா இறங்கி நின்று, சதாசிவத்தை ஆழமாகப் பார்த்தார்.

சதாசிவமும் இருக்கையில் இருந்து எழுந்து, அவரை நோக்கி மெல்ல நடந்தார். அதற்குள் ஜீவா, சதாசிவத்தின் இடத்துக்கே வந்துவிட்டார்.

'டாக்டர பாத்தாச்சா, இனிமேதானா?'' ஜீவா கேட்டார்.

'பார்த்துட்டேன். மருத்து வாங்கணும். மனைவி போயிருக்காங்க. அதுவரைக்கும்...''

'லஞ்சம் வாங்க மாட்டீரே, இங்க லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காதே.'

'கொஞ்சம் லேட் ஆவுது. அவ்வளவுதான்.'

'காறித்துப்பினாலும் துடைச்சிட்டு நிக்குறான், போய்த்தொலையாறான்னு மனசிரங்கி செய்தாத்தான் உண்டு.''

'அப்படியும் வைத்துக்கொள்ளலாம்''

சதாசிவம் மெல்ல சிரித்தார்.

'என்ன உடம்புக்கு?''

'இந்திய நோய் எனக்கு அண்டிவிட்டது''

இதைச் சொல்லிவிட்டு சதாசிவம் பெரிதாக சிரித்தார். ஜீவாவுடன் ஒரு முற்றிய மோதலின்போது, அவர் நீட்டிய லஞ்சம் பணத்தை வாங்க மறுத்து, 'இந்திய நோய் எனக்கில்லை' என்று சொன்னவர்தான் சதாசிவம்.

'சர்க்கரை வியாதியா?'' என்றார் ஜீவா

'ஆம். ஆனால் அது நோய் அல்ல. அது ஒரு நிலை. கண்டிஷன்.''

'இன்னும் விளங்காத நியாயம் பேசறது நிக்கல. எவ்வளவு இருக்கு?''

'பொதுவாக 225 இருக்கு. 200க்குக் கீழே கொண்டு வரப் பாக்கிறேன், முடியல.'

'எனக்கு 350 இருக்கு. இன்சுலின் போட்டுத்தான் கண்ட்ரோல் பண்றேன்.'

'நான் உணவுமுறையில் குறைக்கிறேன். மருந்து கொஞ்சமாக எடுத்துக்கொள்கிறேன். இன்சுலின் நல்லதல்ல.''

'திருந்தவே மாட்டீங்களா? உலகத்துல எல்லாரும் செய்யறத செய்யமாட்டேன்னு எதுக்கய்யா பிடிவாதம் பிடிக்கிறீங்க?' சதாசிவம் மறுபடியும் சிரித்தார்.

'உன்னைப் பார்த்ததும் இறங்கி வந்து பேசற அளவுக்கு நீ வொர்த்தான ஆளு இல்லைன்னு மனசு சொல்லிச்சு. ஆனாலும் ஒரேயொரு கேள்விய கேட்டுப்புடணும்னுதான் இறங்கி வந்தேன். என்னத்துக்காக நேர்மையாக இருந்தீங்க? என்னத்த கண்டீங்க? என்ன மயி....'' ஏதோ ஒரு கெட்ட வார்த்தை ஜீவாவின் தொண்டை வரை எழுந்து உள்ளே அடங்கியது.

சதாசிவம் மெல்ல சிரித்துக்கொண்டே அவரது கோபத்தை ரசித்தார்.

'பணமா வாங்கிக்க கூச்சமா இருந்தா, சோழிங்கநல்லுôர்ல ஒரு மனை கொடுக்கிறேன்னு சொன்னேன். அன்னிக்கு ஒரு லட்சம் ரூபாய்தான். ஆனா நீ புடுங்கி மாதிரி பேசின... இன்னிக்கு அந்த இடத்தோட மார்க்கெட் ரேட் தெரியுமா? (முகத்துக்கு நேராக முகம் வைத்து சொன்னார்.) மூணு கோடி ரூபா!''

ஜீவா , முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நல்வாய்ப்பைக் கொடுத்தார். ஆனால், சதாசிவம் இன்று எவ்வாறு புன்முறுவலுடன் அவரைப் பார்க்கிறாரோ அதே புன்முறுவலுடன் மறுத்துவிட்டார்.

அந்த ஒரு லட்சம் ரூபாய் என்பது, ஜீவா திரு----- நகராட்சியில் நகர் மன்றத் தலைவராக பதவி வகித்தபோது ஒரு கோடி ரூபாய் முறைகேடு செய்ததை கண்டுகொள்ளாமல் இருக்க நீட்டிய கையூட்டு.

நகராட்சியில் உள்ளாட்சி கணக்குத் தணிக்கை செய்வதற்காக சதாசிவம் சென்றிருந்தார். நகராட்சிக்குச் சொந்தமான கிணற்றில் இருந்து மாதம் 25 ஆயிரம் மின்சார கட்டணமாக செலுத்தப்பட்டு வருவதைக் கண்டார். அந்த நாளில் அது மிகப் பெரிய தொகை. இதுபற்றி நகராட்சி ஆணையரைக் கேட்டபோது, ' பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக கிணற்றில் இருந்து தண்ணீர் பம்ப் செய்தாக வேண்டும் சார்!'' என்றார்.

மாநகராட்சிக்குச் சொந்தமான தண்ணீர் லாரிகள் இரண்டு இருந்தன. ஒரு லாரி நாலு ஆயிரம் லிட்டர் கொள்ளவு என்று கணக்கிட்டால் இரண்டு லாரிக்கு 8 ஆயிரம் லிட்டர். ஒருநாளைக்கு நான்கு முறை தண்ணீர் நிரப்பிச் சென்றாலும் 64 ஆயிரம் லிட்டர் தண்ணீர். இதை பம்பிங் செய்ய மின்சார கட்டணம் இவ்வளவு ஆகாது.

அந்த நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக இருந்தார் ஜீவா கிருபாகரன். தணிக்கை செய்ய வந்த அதிகாரி கண்டுபிடித்துவிட்டான் என்ற தகவல் நகர்மன்றத் தலைவருக்கு போனது. அவரது அள்ளும்கை மனோஜ் வந்து, 'ஐயா பேசுணும்கிறார்'' என்றான்.

'யார் உங்க ஐயா?'' என்றார் சதாசிவம், வெள்ளந்தியாக.

அவன் முறைப்புடன் நகராட்சி ஆணையர் அறைக்குச் சென்றான். ஆணையர் அலறிக்கொண்டு வந்தார்.

'சார், சேர்மன் பேசணும்கிறார்.'

'நான் எதுக்காக அவரோட பேசணும்?'

'சார் பிளீஸ்...'

மரியாதை நிமித்தம் சந்திப்பதில் தவறில்லை. ஒரு இடத்தில் தணிக்கை செய்யும்போது அங்குள்ள பெரிய அதிகாரி அல்லது அது தொடர்புடைய அரசியல் நபர்களை சந்திப்பதில் தவறில்லை. ஆனால், அது விருந்தோம்பலாக தொடங்கி, தவறுகளை அட்ஜெஸ்ட் செய்வதாக மாறுவதே வழக்கம். அரசியல் சார்ந்த பதவியில் இருப்பவரை பணிக்காலத்தில் சந்திக்க விரும்பியதில்லை .

கதவைத் திறந்து உள்ளே போனதும், 'வாங்க...'' என்று ஒரு பெருஞ்சிரிப்புடன் அழைத்தார் ஜீவா.

'ஈபி பில்லு தோண்டி எடுக்கிறீங்கனு கமிஷனர் சொன்னார். அதுல என்ன சார் இருக்கு? தண்ணீ வரலேன்னா ஜனங்க ரோட்டை மறிக்கிறாங்க. பிரச்சினையாவுது. அதான் எந்த ஏரியாவிலேயும் தண்ணீ இல்லன்னு பேச்சே வரக்கூடாதுன்னு சொல்லிட்டேன். ராத்திரி பகலா குடிநீர் விநியோகம் செய்யறாங்க. மக்களுக்கு சேவை செய்றோம். அவ்வளவுதான்'' என்று மீண்டும் வெடிச்சிரிப்பு போட்டார். ஆணையரும் புன்னகையுடன் நின்றார்.

'கமிஷனரு சாரை கவனிக்கல போல...' ஜீவா, பொய்க்கோபத்துடன் கமிஷனரை பார்த்தார்.

சதாசிவம் எந்த பதிலும் சொல்லாமல், வணக்கம் சொல்லிவிட்டு வெளியே வந்தார். நிழலாக வந்த நகராட்சி ஆணையர், 'இதெல்லாம் ஒரு விஷயமே இல்லிங்க. இதுல என்ன முறைகேடு நடந்துடும்?'' என்று பேசிக்கொண்டே அவரது அறைக்குச் சென்றார்.

ஆனால் சதாசிவம் விடுவதாக இல்லை.

இவரது நேர்மையும் ஜீவாவின் பதற்றமும் நகராட்சி அலுவலகம் முழுதும் மெல்ல பரவியது. நகராட்சி அலுவலர்கள் சிலரது கனிந்த பார்வை, சிலரது முறைப்பு, சிலரது மரியாதை கலந்த எளிய புன்னகை தெரிந்தன.

இரண்டாவது நாள், வழக்கம்போல ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கைகழுவிக்கொண்டிருந்தபோது பக்கத்தில் கை கழுவியவர், 'கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்க. ஒரு நாளைக்கு முப்பது லாரி தனியா ஓட்டறார்'' முகம் காட்டாமல் அந்த மனிதர் கைகளை கர்சிப்பில் துடைப்படி நடந்து சென்றார்.

அந்த நபரை நிறுத்தி பேச வேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டாலும், இவ்வளவு ரகசியமாகச் சொன்னவரை ஏன் அம்பலப்படுத்த வேண்டும் என நிதானித்து, கைகளைக் கழுவினார்.

அவர் போட்டிருந்த கணக்கும் இந்த மின்ஓட்டமும் அடையாளம் காட்டாத நபர் சொன்ன 30 லாரியும் ஏறக்குறைய பொருந்தியது. நகராட்சி லாரியுடன் தனது சொந்த லாரிகளையும் பயன்படுத்தி, ஓட்டல்களுக்கு விநியோகித்து, அந்த மொத்த பணமும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. சாலை போடாமலேயே போட்டதாக இணைக்கப்பட்ட டென்டர், ஒப்பந்தப்புள்ளி ரசீதுகள் எல்லாமும் போலி என்பதையும் கண்டுபிடித்தார்.

இந்த கணக்கை அவர் அறிக்கையில் எழுதியபோதுதான் தகராறு தொடங்கியது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாரியைப் பார்த்து அரசியல்வாதிகள் கொஞ்சம் பயந்தார்கள். இப்போதுபோல, சாலை விபத்தில் கதையை முடிக்கும் துணிச்சல் அன்று கிடையாது.

எதுவும் முடியாத நிலையில், நீ என்னத்த வேணும்னாலும் எழுதிட்டு போய்யா எனக்குத் தெரியும் என்று சொன்ன மேல்அதிகாரிக்கு சொல்லி, வேறு ஆள் வந்து, வேறு தணிக்கை அறிக்கையை சொருகினார். சதாசிவம் எழுதியது குப்பையில் போனது.

முப்பது வருடத்துக்கு முன்பு எதிர்கொண்ட அதே நிலை. அதே கேள்விகள். அன்று அலுவலகம் இன்று வேப்பமரம்.

'உன் நேர்மை உங்கள வேப்ப மரத்து அடியில உக்கார வச்சிட்டது பாத்தியா?'

ஜீவா ஏளனமாக சிரித்தார். ஜீவா இந்த மருத்துவமனைக்கு வரத்தேவையில்லை. அவரது பேரம், அல்லது ஊழல் வேறு என்பது சதாசிவம் அறிவார். அரசு செலவில் வந்து இறங்கும் பல லட்சம் ரூபாய் மருத்துவக் கருவிகளை, இவரது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும், அங்குள்ள பழைய கருவிகளை இங்கே மாற்றி வைக்கவும் வல்லமை கொண்டவர் .

சதாசிவம் மெல்ல தனது இடது காலை வலது தொடையில் போட்டுக்கொண்டு சொன்னார்.

'நேர்மை என்பது தவம். அது வசதிகள் , பதவிகள், பொருள்களுடன் சம்பந்தப்பட்டது அல்ல.'

'என்ன ஆன்ம தவம்? உனக்கு கடவுள் வந்து காட்சி கொடுத்தாரா?'

ஜீவாவின் எள்ளல் சிரிப்பு அவருக்கு இருமலைத் தந்தது.

'இல்லை.'

'அப்ப எந்த மயி.... நேர்மையா இருந்தே. உனக்கு ஒரு மனை கொடுக்கிறேன்னு சொன்னேன். முடியாதுன்னு சொன்னே. உன் ரிப்போட்ட கிழிச்சு குப்பையில போடறதுக்கு உன் ஆபிஸருக்கு 2 மனை கொடுத்தேன். பொண்டாட்டி பேர்ல, மச்சினி பேர்ல வாங்கினாரு. போன வருஷம் என் ஹாஸ்பிடலுக்குத்தான் வந்தாரு. பிப்டி பர்சன்ட் டிஸ்கவுன்ட்ல பைபாஸ் பண்ணி அனுப்பினேன். ஆனா நீ கவுர்மென்ட் ஹாஸ்பிடல வேப்ப மரத்தடியில உக்கார்ந்திருக்க. உன் நேர்மையால என்ன லாபம்?'

'நான் இதற்கான பதிலை சொல்லிவிட்டேன். உலக அளவில் பொருத்திப் பார்க்கக்கூடாது'

'யோவ் நீ படிச்சவன்தானே, என் கேள்வி புரியலையா, இல்ல நடிக்கிறியா?''

மரியாதை குறைவதைக் கண்டதும் சதாசிவத்துக்கு சிரிப்புதான் வந்தது.

'உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்துக்கு உரு-ன்னு சொல்றார் வள்ளுவர். வந்த கஷ்டத்த பொறுத்துக்க, அடுத்தவனுக்கு கஷ்டம் கொடுக்காதே. அதுதான் தவ வாழ்க்கை-ன்னு குறள் சொல்லுது. அதை என் வாழ்க்கையா அமைச்சுக்கிட்டேன். ஊழல் அடுத்தவனுக்கு கஷ்டம் கொடுக்குது அதால...'

'நிறுத்துய்யா ... பொட்ட நியாயம் பேசற. நேர்மையால என்ன பலன் கெடைச்சுது?'

சதாசிவம் சிரித்தார்.

ஜீவாவின் கடைவாய் பல் வரிசையில் வேறுபாடு தெரிந்தது.

'வேர்ச்சிகிச்சை செய்து கேப் போட்டீங்களோ!'

'பேச்சை மாத்தாதீங்க'

'பேச்சை மாத்தல. உங்க கேள்விக்கு பதில் சொல்லத்தான் கேக்கறேன்.'

'ஆமாம். ரூட்கெனால் செய்து கேப் போட்டிருக்கேன். அதுக்கு என்ன இப்ப?'

'அப்ப வலிச்சதா?'

'நீங்க அப்பாவியா! மரத்து போறதுக்கு ஊசிப்போட்டுதானே பண்ணுவான். அது எப்படி வலிக்கும்?'

'அதேதான். நேர்மையும் ஒரு லோக்கல் அனஸ்தீசியா மாதிரிதான். வேர்ச் சிகிச்சையில் ஈறு ரத்தம் கசியும். பல் அரைபடும். வேர் வரை சுழல்ஊசி விட்டு கிளறுவார்கள். ஆனால் வலிக்காது. நீங்க மூன்றாவது நபராக விலகி நின்று பார்க்க முடியும். அதேபோலத்தான் உலகத்தின் லாபம் நஷ்டம், மகிழ்ச்சி வலி எல்லாமும் நேர்மையான மனிதருக்கும் உண்டு. எனக்கும் கஷ்ட நஷ்டங்கள் உண்டு. ஆனால், அவற்றை வேறுதளத்தில் இருந்து, அதன் பாதிப்பு எதுவும் இல்லாமல் என்னால் விலகி நின்று பார்க்க முடியும்.'

'பதிலை சொல்லுன்னா, தத்துவம் பேசற?'

ஜீவா கோபமாக எழுந்தார்.

'யோவ் , அதிகாரி. அன்னிக்கு நான் சொன்ன மனையை வாங்கியிருந்தா இன்னிக்கு நீ மூணு கோடி சொத்துக்கு சொந்தக்காரன். தொலைச்சுப்புட்டு நிக்கற. உனக்கு அது புரியல. புரிஞ்சா நீ சாவற மட்டும் நினைச்சு அழுவ. வாய்ப்ப தவற விட்டோமேன்னு மனசுக்குள்ள வெந்து சாவ.... டாக்டர் என் பல்லுக்கு அனஸ்தீசியா போட்டாரு. ஆனா . நீ உன் மனசு மரத்துப்போக உனக்கு நீயே அனஸ்தீயா போட்டுக்கிற, நியாயம் பேசுற... எங்க ஊர்ல இந்த நியாயத்துக்கு....(குரலை தாழ்த்தி) '----நியாயம்' னு பேரு'

ஜீவா சிரித்தார்.

'முட்டாள்'' என்று உரக்கச் சொல்லிக்கொண்டு எழுந்து நடந்த ஜீவாவுக்காக கார் கதவை திறந்தார் டிரைவர். ஜீவா ஏறிக்கொண்டார். சதாசிவத்தின் முகம் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ஓட்டுநர் காரை வேகமாகக் கிளப்பினார்.

கார் நகர்ந்தபோது மருந்துகளுடன் மனைவி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

- திங்கள்செல்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்

குமர குருபர அடிகளார் 400

தில்லையில் ஆடு புலி ஆட்டம்!

நெஞ்சொடு கிளத்தல்

நாலடியார்: நாள்தோறும் கழியும் ஆயுள்!

SCROLL FOR NEXT