சந்தத்தைக் கேட்டு கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்:
'வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா' என்று தொடங்கி, முழுப் பாடலையும் எழுத அதில் மொத்தம் 36 'லா'க்கள் இருந்தன. இயக்குநர் பாலசந்தர் மகிழ்ச்சி அடைந்து, 'இனி லா போட்டு யாராலும் இப்படி எழுத முடியாது' என்று பாராட்டினார்.
ஆனால், எம்.எஸ்.விசுவநாதன் குறும்பாக, 'என்ன கவிஞரே.. இன்னும் நாலு, ஐந்து லா போடலாமே' என்று சொல்ல, மீண்டும் பாடலை வாங்கிப் படித்துவிட்டு 'சரியாகவே உள்ளது' என்றார் கண்ணதாசன்.
அதற்கு விசுவநாதன், 'பிரதர் இன்லா, சிஸ்டர் இன்லா, மதர்இன்லா, ஃபாதர் இன்லா... இந்த லாக்களை எல்லாம் மறந்துவிட்டீங்க?' என்றார்.
இதற்கு கண்ணதாசன் தன்னை மறந்து சிரித்தார்.
டி.ராஜேந்தர் பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'டி.ராஜேந்தர் இசை கற்கவில்லை என்றாலும், அவரது இசைக்கு பெரிய சக்தி இருக்கிறது' என்றார்.
தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் ரஹ்மான் கூறுகையில், 'இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதனிடம் பணியாற்றி இருக்கிறேன். அதேபோல், டி.ராஜேந்திரனின் இசை நேராக இதயத்தில் இருந்துவருவது. அவர் இசை கற்கவில்லை என்றாலும், அவரது இசைக்கு பெரிய சக்தி உண்டு.
இளையராஜாவிடம் நான் கற்ற முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. அப்போதெல்லாம் கம்போசிங் முடிந்தவுடன் பலரும் மது அருந்தத் தொடங்கிவிடுவார்கள். அந்தச் சூழலை மாற்றி மரியாதையை ஏற்படுத்தியவர் இளையராஜா. அவரது குழுவில் வாசிக்கிறோம் என்றால், எல்லோரும் மரியாதையாக நடத்துவார்கள். அவரிடம் நிறைய கற்றேன்' என்றார்.
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
சுதந்திரப் போராட்ட வீரரும் ஓவியருமான பாஷ்யம் தனது நெருங்கிய நண்பரும், மறைந்த முன்னாள் முதல்வருமான காமராஜர் குறித்து கூறியதான தகவல்:
'மகாத்மா காந்தி இறந்தவுடன் அவர் உட்கார்ந்த நிலையில், ஓர் ஓவியம் வரைந்தேன். அதை காங்கிரஸ் கமிட்டி அங்கீகாரம் செய்தது. அதை அச்சடித்து விற்பனைக்கு வந்தபோது, சரியாக விற்பனையாகவில்லை.
இதை நான் காமராஜரிடம் கூறினேன். 'என்னுடைய ஆர்வமும், உழைப்பும், பணமும் வீணாகிவிட்டது' என்று நினைத்து காமராஜர் உடனடியாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளிலும் வாங்க உத்தரவிட்டார்.
இந்த ஓவியத்தைப் போன்றே, மகாத்மா காந்தியின் சிலை ஒன்றையும் செய்தேன். முதல்வராக இருந்த காமராஜர் பல்வேறு அலுவல்களுக்கு இடையே வந்து பார்த்து, மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாயிலாக வாங்கி, மதுரையில் அமைத்தார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், தீரர் சத்தியமூர்த்தியின் சிலை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டபோது காமராஜர் என்னை அந்தச் சிலையை வடிக்கக் கூறினார். சிலையை நான் செய்து முடித்தவுடன் காமராஜர் எனது இல்லத்துக்கு வருகை தந்து, சிலையை பல நிமிடங்கள் உற்று நோக்கினார். சிலையில் ஏதோ குறை என்று அச்சமுற்றேன். ஆனால், காமராஜரின் கண்களில் நீர் ததும்பியது. பழைய நினைவுகள் மலர்ந்துவிட்டதாக, தன்னுடன் வந்தவர்களிடம் காமராஜர் கூறி நெகிழ்ந்தார்.
சத்தியமூர்த்தி சிலையின் திறப்பு விழாவுக்கு வருகை தந்த, அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் காமராஜர்' என்று பாஷ்யம் கூறியிருந்தார்.
தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.