சேலைகள் 
தினமணி கதிர்

உள்ளம் கொள்ளை போகும் உறையூர் காட்டன் சேலைகள்!

பெண்களுக்குச் சேலையும், நகையும் மிகவும் பிடிக்கும். அதிலும் இளம்பெண்களுக்கு கைத்தறி நெசவில் செய்யப்பட்ட காட்டன் சேலைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.

ஆர். வேல்முருகன்

பெண்களுக்குச் சேலையும், நகையும் மிகவும் பிடிக்கும். அதிலும் இளம்பெண்களுக்கு கைத்தறி நெசவில் செய்யப்பட்ட காட்டன் சேலைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அந்த வகையில், திருச்சி அருகே 'உறையூர் காட்டன் சேலைகள்' மிகவும் பிரசித்தம்.

இவற்றைத் தயாரித்து விற்பனை செய்யும் வி.கே.டி. சில்க்ஸ் அன்ட் சேரீஸ் உரிமையாளர் ஆர்.சுப்பிரமணியத்திடம் பேசியபோது:

'உறையூரில் ஜவுளிக் கடை வைத்திருந்த ஒருவரிடம் வேலை செய்து வந்தேன். அவர் கடையைவிட்டு விட்டு வேறு தொழிலை நடத்தியதால் நான் கடையை வாங்கினேன். இங்கு பெண்களுக்கான சேலைகளை மட்டும் விற்பனை செய்கிறோம்.

திருச்சியைச் சுற்றியுள்ள தோகைமலை, பைத்தம்பாறை, முசிறி, மணமேடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான தறிகளில் உறையூர் காட்டன் சேலைகள் தயாரிக்கப்பட்டன. முழுக்க, முழுக்க கைத்தறிகளால் மட்டும் தயாரிக்கப்பட்ட இந்தச் சேலைகள் இளம்பெண்களைக் கவர்ந்ததால், நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்டன.

மாதமொன்றுக்கு சுமார் பத்தாயிரம் சேலைகளுக்கு மேல் பல்வேறு இடங்களுக்கும் உறையூர் காட்டன் சேலைகள் அனுப்பப்பட்டன. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது. உறையூர் காட்டன் சேலைகள் தயாரிக்கும் தரமான நூல், தரமான சாயம், காவிரி நீர் ஆகியவையும் சேலை பிரபலமடைவதற்குக் காரணம்.

கூறைப்புடவைக்கு உறையூர் காட்டன் சேலைகள் மிகவும் பிரபலம். கைத்தறி என்பதால் சேலைகள் சுருங்குவதில்லை என்பதால் இப்போதைய இளம்பெண்களின் விருப்பமாக இது திகழ்கிறது.

பிராமணப் பெண்களின் காட்டன் சேலைகளில் முதல் தேர்வாக உறையூர் காட்டன் சேலை விளங்குகிறது. சேலைகளில் மிகவும் எளிதான டிசைன்களாக இருப்பதால் துவைப்பதற்கும் எளிதாக உள்ளது.

ஒருகாலத்தில் பல ஆயிரம் தறிகள் இருந்த இடத்தில் இப்போது சில நூறு தறிகளே உள்ளன. ஊதியம் மிகவும் குறைவாகக் கிடைப்பதால் இளைஞர்கள் பலர் தறி நெசவை விட்டு வெளியேறிவிட்டனர். உறையூர் காட்டன் சேலைகள் விலை சுமார் ரூ.800 முதல் ரூ.1200 வரை விற்கப்படுகிறது.

ஒரு குடும்பமாக அமர்ந்து சேலை நெய்கின்றனர். பெண்களும் நெசவு செய்து வருமானமீட்டுவது பாராட்டுக்குரியது.

ஆனாலும் எங்களுக்கு சொந்தத் தறிகள் உள்ளதாலும் கடை உள்ளதாலும் தொடர்ந்து இந்தச் சேலைகளைத் தயாரித்து வருகிறோம்.

அரசு உரிய பயிற்சியை அளித்து மானியம் தந்தால் புகழ் பெற்ற உறையூர் காட்டன் சேலைகள் உற்பத்திக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும்.

திருச்சி பகுதியில் உள்ள பல்வேறு சமூகத்தினர் தங்கள் விசேஷங்களுக்குத் தகுந்தாற்போல உறையூர் காட்டன் சேலைகளை நெய்யச் சொல்லியும் ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்' என்கிறார் சுப்பிரமணியம்.

' உறையூர் காட்டன் சேலைகள் கட்டங்கள், மற்றும் பிளெய்னாகவும் கிடைக்கின்றன. இதனால்தான் இளம் பெண்களின் விருப்பத் தேர்வாகவும் இது திகழ்கிறது. கைத்தறி நெசவுக் கலையின் மீதான ஈடுபாட்டை இளைஞர்களிடம் ஊட்டி அவர்களுக்குக் கற்றுத் தந்தால் சேலைகள் உற்பத்தியில் மேலும் பல புதுமைகளைப் புகுந்த முடியும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர் நெசவாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT