இயற்கை ஆர்வலர் டி. திலக் 
தினமணி கதிர்

மருத அயினி...

மறக்கப்பட்ட இயற்கை உணவுகளுக்காக, ஆம்பூர் சேர்மன் ராஜகோபால் தெருவில், 'மருத அயினி' என்ற பெயரில் ஓர் உணவகம் இயங்கி வருகிறது.

எம். அருண்குமார்

மறக்கப்பட்ட இயற்கை உணவுகளுக்காக, ஆம்பூர் சேர்மன் ராஜகோபால் தெருவில், 'மருத அயினி' என்ற பெயரில் ஓர் உணவகம் இயங்கி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த, பிரியாணிக்குப் பெயர் பெற்ற ஆம்பூரில் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார் இயற்கை ஆர்வலர் டி. திலக்.

அவரிடம் பேசியபோது:

'அதிக எண்ணெய், மசாலாக்கள் கொண்ட துரித உணவு வகைகளை உட்கொண்டு வருவதால் பெரும்பாலானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் கெட்டுள்ளதால், அவர்கள் இயற்கை உணவுகளை நாடுகின்றனர்.

இந்தச் சூழலில் மறக்கப்பட்ட உணவுகளுக்காக ஆம்பூரில் பிரத்யேக உணவகத்தைத் தொடங்க முடிவு செய்தபோது, தார்வழி ஜனார்த்தனன், பனங்காட்டேரி குமரவேல் உள்ளிட்ட விவசாயிகளும், 'மெட்ராஸ் ஸ்ட்ரீட் புட்' பிரபுவும் எனக்கு உரிய ஆலோசனைகளை அளித்தனர்.

பின்னர், 'மருத அயினி' என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்ட உணவகத்தை என்னுடைய மனைவி தி. சுபாஷினியுடன் இணைந்து தொடங்கினேன்.

'மருதம்' என்றால் வயல், வயல் சார்ந்த இடமாகும். 'அயினி' என்றால் உணவு. வயலில் விளையும் பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அதனை மதிப்புக் கூட்டி உணவாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பெயரைச் சூட்டினேன். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகம் செயல்படுகிறது.

காலையில் 6 மணிக்கு அருகம்புல், நெல்லிக்காய், வெண்பூசணி, வாழைத் தண்டு, முடவாட்டுகால் கிழங்கு சூப்புகளையும், ஆவாரம்பூ, செம்பருத்தி, சங்குபூ, நெல்லிக்காய் ஆகியற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீரையும் வழங்குகிறோம்.

காலை 8 மணி முதல் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஞ்சி, இட்லி, தோசைகள், சிறு தானிய பொங்கல், நவ தானியங்கள் சுண்டல், வாழைப்பூ, கருப்பு உளுந்து உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட வடை, மூலிகை வடைகள், தேங்காய் பால், கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் ஆகியன கிடைக்கும்.

பகல் 1மணி முதல், 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாரம்பரிய அரிசி' என்ற முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, குடவாழை, துளசிவாச சீரகச்சம்பா, கண்டசாலி, கைவரச்சம்பா, வாடன் சம்பா, தேங்காய் பூச் சம்பா, வாலான், சிங்கினிகார், பூங்கார், ராஜமன்னார், பவானி, சம்பா மோசனம், செம்பாளை, கொட்டாரச் சம்பா, ராஜயோகம் உள்ளிட்ட அரிசி வகைகளில் கிடைப்பதற்கேற்ப, அவற்றை கொண்டு களி, அதற்கு வல்லாரை, பொன்னாங்கன்னி, கரிசிலாங்கன்னி கீரை வகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட குழம்பைத் தருகிறோம்.

மாலை 5 மணி முதல் சுண்டல், ஒவ்வொரு நாளும் முடவாட்டுக்கால் கிழங்கு, முடக்கத்தான், வல்லாரை, பிரண்டை ஆகிய ஏதேனும் ஒரு சூப்பும், பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட குழிபணியாரம், ஆப்பம், கொழுக்கட்டை, புட்டு, ராகி, கம்பு அடை, வெஜ் கட்லெட், கோதுமை போளி, சேலம் தட்டுவடை செட் ஆகியவற்றையும் தருகிறோம்.

முறுக்கு, தட்டை, அதிரசம், லட்டு வகைகள், கமர்க்கட்டு, சிமிலிகளையும் தயார் செய்கிறோம்.

செக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆர்கானிக் பெருங்காயம், சத்து மாவு, புட்டு மாவு, கஞ்சி மிக்ஸ், 50 வகையான பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களையும் மொத்தவிலைக்கு தருகிறோம்.

ஐந்து கி.மீ. முதல் பத்து கி.மீ. தொலைவு வரையில் நாங்கள் உணவு வகைகளையும், விளைபொருள்களையும் 'டோர் டெலிவரி' செய்கிறோம். தேவையானவர்களுக்கு கூரியரில் அனுப்புகிறோம்.

மக்கள் நலச்சந்தை: இயற்கை விவசாயத்தால் பயிரிடப்பட்ட விளைபொருள்களை மக்கள் அறியும் வகையில், ஆம்பூர் வள்ளலார் சத்திய சன்மார்கச் சங்க வளாகத்தில் மாதம்தோறும் முதல் சனிக்கிழமைகளில் நடைபெறும் 'மக்கள் நலச் சந்தை' ஜனவரி 4 முதல் தொடங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.

பாரம்பரிய உணவை உட்கொண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை மீட்டெடுக்கவும், உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கவும், வாழ்நாள்களை நோயில்லாமல் இல்லாமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும்'' என்கிறார் டி.திலக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT