திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட ஆன்மிகப் பாடல்களைப் பாடி அசத்தி வருகின்றனர் சகோதரிகள் லித்திகாஸ்ரீ, தேவிஸ்ரீ. அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள்கள்.
பத்து வயதான லித்திகாஸ்ரீ தேவலாபுரம் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பும், எட்டு வயதான தேவிஸ்ரீ அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இதுகுறித்து மீனாட்சி சுந்தரம் கூறியது:
'இருவரும் சிறுவயதிலேயே திருக்குறள், திருப்பாவை, திருவெம்பாவை, விநாயகர் அகவல், பகவத் கீதை, கோளறு திருப்பதிகம், சிவபுராணம் உள்ளிட்ட பாடல்களை எனது மனைவி தமிழ்ச்செல்வியிடம் கற்கத் தொடங்கினர். பின்னர், ஆன்மிகம் தொடர்பான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற பாவை விழாவில், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான முதல் பரிசை இருவரும் பெற்றனர். சின்மயா மிஷன் சார்பில் நடைபெற்ற பகவத் கீதை பாராயண போட்டியிலும் பரிசு பெற்றனர்.
இதுதவிர, பள்ளியில் நடைபெறும் பேச்சு போட்டியிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றுவருகின்றனர்' என்கிறார் மீனாட்சிசுந்தரம்.
மோ. தமிழ்ச்செல்வி கூறியது:
'இருவரும் சிறு வயது ஆன்மிகப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வமும், ஈடுபாடும் காட்டியதால் அவர்களுக்கு திருக்குறள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் குறித்து வரலாற்று கதைகளையும், ஆன்மிகக் கதைகளையும் கூறி வந்தேன்.
தொடர்ந்து அவர்களுக்கு திருக்குறள், திருப்பாவை திருவெம்பாவை, விநாயகர் அகவல், பகவத் கீதை, கோளறு திருப்பதிகம், சிவபுராணம் உள்ளிட்ட பாடல்களை கற்றுத் தந்தேன்.
இருவரும் நல்ல ஞாபகத்துடன் அவற்றை பயின்று அச்சு பிசகாமல் பாடி வருகின்றனர். சிறு வயதிலேயே தமிழ் ஆண்டுகள் அறுபதின் பெயர்களையும், பன்னிரு ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் பெயர்களையும் ஞாபகத்தில் வைத்து கூறி வருக்கின்றனர்.
தற்போது மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாடி அதுகுறித்து காணொலிகளை சமூக ஊடகங்களில் தினமும் பதிவிட்டு வருகின்றனர்' என்றார் தமிழ்ச்செல்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.