முகப்பு
தினமணி கதிர்

தமிழிசை மூவருக்கு மறு உருவம்

இசைத் தமிழ் முடங்கிக் கிடந்தபோது பாடல்களை எழுதி அதைப் பாடி மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் மூவர்.

Updated On : 19 ஜூலை, 2025 at 6:31 PM
பகிர்:

தமிழானவன்

இசைத் தமிழ் முடங்கிக் கிடந்தபோது பாடல்களை எழுதி அதைப் பாடி மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் மூவர். கீர்த்தனைகள் வடிவில் தமிழிசையை வளர்த்ததால் முத்துத்தாண்டவர், சீர்காழி அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை ஆகிய மூவரும் "தமிழிசை மூவர்' என்று அழைக்கப்படுகின்றனர்.

மூவரும் தங்களின் படைப்புகளின் வாயிலாக அறியப்படும் அளவுக்கு, தங்களின் உருவங்களை அடையாளப்படுத்தவில்லை. மூவருக்கும் ஒரு சில உருவங்கள் இருந்தாலும் அவர்களின் முழுமையான ஆளுமையைப் பிரதிபலிப்பதாக அவை இல்லை என்பதை உணர்ந்து மறுஉருவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் ஆர். ராஜராஜன்.

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் மேனாள் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ராஜேந்திர சோழனின் வீரம் மிகுந்த உருவத்தை மீட்டு உருவாக்கம் செய்தவர். தேடல்கள், வரலாற்று உண்மைகளுடன் தனது கற்பனையைக் கலந்து ஓவியம் தீட்டி ஆத்மத் திருப்தி காண்கிறார்.

அவரிடம் பேசியபோது:

""ஒருவர் படுத்து தூங்கினால் உயிரோடு இருக்கிறாரா?, இல்லையா என்பதை ஓவியம் உணர்த்த வேண்டும் என்று சொல்கிறது இந்திய ஓவிய சாஸ்திரம். அதாவது, ஓவியம் உயிர்ப்போடு இருக்க வேண்டும். அதைப் பார்ப்போர் ரசிக்க வேண்டும். இதை உள்மனதில் வைத்துதான் எப்போதும் ஓவியம் தீட்டுவேன்.

தமிழிசை மூவருக்கு இப்போதுள்ள ஓவியங்களைக் குறை சொல்ல விரும்பவில்லை. சீர்காழியில் தமிழிசை மூவருக்கு மணிமண்டபத்தை தமிழ்நாடு அரசும் கட்டி, பெருமை சேர்த்துள்ளது. இவையெல்லாம் பாராட்டும் முயற்சிகள்தான்.

இருப்பினும் அந்த மூவரின் உருவங்களும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது நமக்கு கிடைக்கும் ஓவியங்களும், சிலைகளும் அந்த மூவரின் ஆளுமையை முழுமையாக வெளிக்கொணரவில்லை என்பதை தேடலில் உணர்ந்துதான் மறு உருவம் கொடுத்திருக்கிறேன். குறிப்பாக, என்னுடைய ஓவியத்தில் தமிழிசை மூவரின் காலம், உருவ வேறுபாடு, அவர்களின் புலமை சார்ந்த ஆற்றல் அடையாளம், சமூக, பொருளாதார நிலை போன்றவற்றை என் ஓவியம் வெளிப்படுத்தும்.

அந்தக் காலத்தில் மக்கள் முக்கால் வேட்டிக் கட்டும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர். முத்துத்தாண்டவர் தொழுநோய் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளார். ஆனாலும் அவர் சேமித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளைத் தன்னுடன் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

சீர்காழி அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை இருவரும் ஓரளவுக்குப் பொருளாதார வசதி கொண்ட குடும்பச் சூழலைப் பின்புலமாகக் கொண்டவர்கள்.

அதனால் முத்துத்தாண்டவர் தோளில் ஓலைச் சுவடியைச் சுமந்து இருப்பது போன்றும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதற்கு மூக்கில் ஒரு சிறிய அடையாளக் குறியீடு மட்டும் என் ஓவியத்தில் இருக்கும். மற்ற இருவரும் கம்பீரமாகக் கையில் ஓலைச்சுவடியைக் கொண்டிருப்பதாகவும் ஓவியம் தீட்டினேன்.

மேலும் மாரிமுத்தா பிள்ளை சிலேடை செய்யுள்கள் இயற்றுவதில் வல்லவர். மற்றவர்களின் உளவியலை அறிந்தவர். அதையும் வெளிப்படுத்தும் நோக்கில் அவரது முக வடிவமைப்பில் கூர்மையான உளவியல் நோக்கம் கொண்டதாகத் தீட்டியுள்ளேன்.

தமிழிசை மூவருக்கு 35க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்டி பல்வேறு வரலாற்று பின்புலம், தமிழ்ப்புலமை, கோயில்கள் வரலாறுகளைத் தெரிந்த நிபுணர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்கள் சொல்லும் கருத்துகளை உள்வாங்கி அந்த ஓவியத்தை மீண்டும் திருத்தியுள்ளேன். தற்போது இறுதி வடிவம் கொடுத்திருக்கிறேன்.

சிதம்பரம், சீர்காழி கோயில்களின் பின்னணியில் தமிழிசை மூவர்களின் மறு உருவத்தை ஓவியமாகத் தீட்டிருந்தேன். சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜ்கண்ணன், சீர்காழி கோயிலை மட்டும் காட்சிப்படுத்துமாறு கூறினார். "அந்த மூவரும் இசைக் கருவிகளுடன் இருக்க வேண்டாம். இந்த மூவரும் இசைக் கலைஞர்களாக மட்டும் இருக்கவில்லை. தமிழிசையைப் பரப்பியவர்கள். தமிழ்ச் செருக்கு உடையவர்களாக, தமிழிசை படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அதை மனதில் வைத்து உருவம் கொடுக்க வேண்டும்' என்றும் ராஜ்கண்ணன் கூறினார். அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு தமிழிசை மூவருக்கும் ஓலைச் சுவடியுடன் மறு உருவத்தை இறுதி செய்தேன்.

கோயில்களின் வரலாறு, சிற்பங்களின் நுட்பம், கட்டடக் கலையில் புரிதல் கொண்ட கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் கோமகன் சொன்ன சில திருத்தங்களும் மூவரின் மறு உருவாக்கத்துக்குத் துணையாக இருந்தன. என்னை வழிப்படுத்திய மேலும் சிலரும் இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் தமிழ் வரலாற்று மரபுடைக் கழகம், தமிழிசை கல்வி ஆராய்ச்சிக் கழகம் என்ற இரண்டு அமைப்புகள் செயல்படுகின்றன.

சிங்கப்பூரில் வசிக்கும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட பி. புருஷோத்தமன், வரலாற்று தடயங்களை வெளிக் கொணர்வதில் ஆர்வம் மிக்கவர், அவரின் பெரும் முயற்சியால் இப்போது தமிழிசை மூவருக்கு மறு

உருவம் கொடுத்தேன். சிங்கப்பூரில் தமிழிசை மூவரின் மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஓவியம் ஜூன் முதல் தேதி வெளியிடப்பட்டது'' என்கிறார் ராஜராஜன்.

படங்கள் கி.ரமேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.