மோனிகா பாடல் குறித்து பூஜா ஹெக்டே!
நடிகர் ரஜினிகாந்த், அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, செளபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா எனப் பெரும் திரைப்பட்டாளமே நடித்த 'கூலி' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள 'மோனிகா' என்ற பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பூஜா ஹெக்டே மற்றும் செளவின் ஷாஹிரின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, 'மோனிகா மீதான உங்கள் அன்புக்கு நன்றி.
மோனிகா என் கேரியரில் மிகவும் கஷ்டமான பாடல்களில் ஒன்று. காரணம், கடுமையான வெயில், தூசி, கொப்புளங்கள் இவை எல்லாவற்றையும்விட அதிக எனர்ஜி தேவைப்படும் நடன அசைவுகள் கொண்டது (எனது தசைநார் கிழிந்த பிறகும் நடந்த எனது முதல் நடனப் படப்பிடிப்பு). இவை அனைத்திற்கு பிறகும், அந்த நடனம் கவர்ச்சியாகவும் எளிதாகவும் இருப்பதை உறுதி
செய்வது முக்கியம். எனவே மோனிகாவுக்கு என் அனைத்தையும் கொடுத்தேன். அதைத் திரையரங்குகளில் பார்க்க ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மகாசிவராத்திரி நாளில், குறிப்பாக நான் உண்ணாவிரதம் இருந்தபோதுகூட இந்தப் பணியில் என்னுடன் நின்று எனக்கு ஆற்றலை அளித்த நடனக் கலைஞர்களுக்குச் சிறப்புப் பாராட்டுகள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹான்ஸ் ஸிம்மருடன் இணைவது குறித்து நெகிழும் ஏ.ஆர். ரஹ்மான்!
உலக அளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே இந்திய திரைப்படமான 'தங்கல்' திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், இதுவரை எந்த இந்திய படமும் காணாத அதிக செலவில் 'ராமாயணா' திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், சீதை கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கான கிராபிக்ஸ் பணிகளை, 8 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் 'டிங்' என்ற கிராபிக்ஸ் நிறுவனம் செய்கிறது.
மேலும், இப்படத்துக்கு இந்திய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் ஆஸ்கர் நாயகன் ஹான்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்த நிலையில், ஹான்ஸ் ஸிம்மருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றும் அனுபவம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் மனம் திறந்திருக்கிறார் ஆங்கில இதழ் ஒன்றின் நேர்காணலில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், 'ராமாயணா' போன்ற மிகப்பெரிய படத்தில் ஹான்ஸ் ஸிம்மருடன் நான் பணியாற்றுவேன் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா... இருவருக்குமான முதல் சில அமர்வுகள் சிறப்பாக இருந்தன.
முதல் அமர்வு லண்டனிலும், இரண்டாவது அமர்வு லாஸ் ஏஞ்சல்ஸிலும், மூன்றாவது அமர்வு துபாயிலும் நடந்தது. இந்திய கலாசாரத்தைப் பற்றி ஆர்வமாகவும், விமர்சனத்துக்கு திறந்த மனதுடனும் அவர் இருக்கிறார். கதை உரையாடலின்போது, 'இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் ஒரு மேற்கத்திய கண்ணோட்டத்தைக் கொண்டு வர முடியுமா?' என்று வெளிப்படையாகப் பேசினார்.
இப்படத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது நம் இந்திய கலாசாரம். எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.
தமிழ் பாடல்கள் - அனுராக் வருத்தம்!
பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப். இந்தியா முழுமைக்கும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா' படத்திலும் கவனம் ஈர்த்திருந்தார். அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருபவர். தற்போது தமிழ்ப் பாடல்கள் யாவும் ஆங்கிலத்தில் மாறிவிட்டதாகவும், அர்த்தமற்றதாக மாறிவிட்டதாகவும் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
இது குறித்துப் பேசியிருக்கும் அனுராக், 'தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் பாலிவுட் திரைப்படங்களுடன் போட்டியிட ஆரம்பித்து விட்டன.இப்போதெல்லாம் தமிழ் சினிமா பாடல்களில் அதிகம் ஆங்கிலமே இருக்கின்றன. தமிழ் குறைவாகத்தான் இருக்கிறது. ஒரு வெளிநாட்டு ராக் இசைக்குழு போல, தமிழ் சினிமா பாடல்கள் யாவும் ஆங்கிலத்தில் மாறிவருகின்றன. இவை தமிழ்ப் பாடல்களே இல்லை.
தமிழ்ப் பாட்டில் தமிழையே கேட்க முடிவதில்லை. முன்பெல்லாம் இளையராஜா மற்றும் பலரின் பாடல்களைத் தமிழிலிருந்து ஹிந்திக்குக் கேட்டு வாங்கும் ஒரு காலம் இருந்தது. இப்போது தமிழ்ப் பாடல்கள் எனக்கு அர்த்தமற்றதாக மாறி வருகின்றன' என்று விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.