'ஆசிரியை வேலையை கடமை என்று எண்ணாமல், மாணவர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்தான்' என்கிறார் திருச்சி புத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் ப.அம்சவள்ளி.
பள்ளியின் தரத்தை உயர்த்தி, மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ள அவரிடம் பேசியபோது:'பள்ளியில் 2020-இல் தலைமையாசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை 18 மாணவர்களே படித்து வந்தனர். ஒரே அறையில் மட்டுமே பள்ளி இயங்கி வந்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று எண்ணினேன்.
எனது செயல்கள் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பணியாற்றினேன். பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்யவைத்து, வகுப்பறைகளை அதிகப்படுத்தினேன். மாணவர்களுக்கு விருப்பத்தோடு பள்ளிக்கு வருவதற்கும், கல்வி கற்பதற்குமான சூழலை ஏற்படுத்தினேன். உள்கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படை வசதிகள், கனிவான ஆசிரியர்கள் என பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் உதவியோடு மேற்கொண்டேன்.
மாணவர்கள் நேரத்துக்குப் பள்ளிக்கு வருதல், விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரவைத்தல், எந்த செயலிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் என மாணவர்களுக்கு ஒழுங்கத்தைக் கற்றுகொடுத்தோம். இதன்மூலம் எங்கள் பள்ளியின் குழந்தைகள் தனியாகத் தெரியத் தொடங்கினர்.
ஆசிரியர்களுடம் மாணவர்களை கனிவோடு நடத்துதல், விளையாட்டோடு கல்வியைப் புகட்டுதல், அவர்களின் தயக்கம், அச்சத்தைப் போக்கி ஆசிரியர்களிடம் இயல்பாக உரையாட வைத்து மாணவர்களிடமும், பெற்றோரிடமும் எங்கள் பள்ளி குறித்த நம்பகத்தன்மையை ஏற்படுத்தினோம். இதனால், மாணவர்களும் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர். இதுவே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் காரணமாக இருந்து வருகிறது.
பல்வேறு நடவடிக்கைகள் மூலம் முதல் ஆண்டிலேயே 18 -ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 65 -ஆக உயர்ந்தது. பல்வேறு தனியார் நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு நிதி, அரசு நிதி ஆகியவற்றைப் பெற்று பள்ளிக் கட்டடங்களை விரிவுபடுத்தினோம்.
நூலகம், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை சிந்தனைகளை விரிவுபடுத்தினோம். ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 18 -இல் இருந்து 350 ஆக உயர்ந்துள்ளது. எங்கள்பள்ளியில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்களை சேர்க்கின்றனர்.
மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தினமும் ஆங்கிலப் பயிற்சி, வாரத்துக்கு ஒருமுறையாக அபாக்கஸ், யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் தனியாக பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளியில் அரசு சார்பில் 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வகுப்பில் சராசரியாக 60 மாணவர்கள் உள்ளனர். ஆங்கிலம், தமிழ் இரண்டு பிரிவுகளும் உள்ளன. மாணவர்களைக் கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு வகுப்புக்கும் 3 பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களின் கல்வி, பன்முகத்திறன் வெளிப்பாட்டில் அக்கறை செலுத்தி, அவர்களை மிளிரவைக்கின்றனர்.
மேற்கண்ட நடவடிக்கைகளே அரசு சார்பில் வழங்கப்பட்ட 100 நாள்கள் சவாலில் மாணவர்கள் வெற்றிபெற்றதற்கான பாராட்டு, அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது ஆகியன கிடைக்க சாத்தியமானது. இதற்கு எனது ஆசிரியர் குழுவும், மாணவர்களின் ஒத்துழைப்பும் முக்கியக் காரணமாக உள்ளது. இந்த விருதுகள் மாணவர்களுக்கு மேலும் சேவையாற்றுவதற்கான உத்வேகத்தை அளித்துள்ளது' என்கிறார் அம்சவள்ளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.