தினமணி கதிர்

உதவும் கைகள்

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்றார் மகாகவி பாரதியார்.

சி.வ.சு.ஜெகஜோதி

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்றார் மகாகவி பாரதியார். 'முதலில் சோறு போடுங்கள்; பிறகு தெய்வத்தைக் காட்டுங்கள்' என்றார் சுவாமி விவேகானந்தர். இவர்களது வைர வார்த்தைகளை மனதில் பதித்து கொண்டு தன்னால் முடிந்த அளவேனும் ஏழைகளுக்கு உணவை வழங்கி, அவர்களது பசிப்பிணியை போக்கி வருகின்றனர் இளைஞர்களான விக்னேஷ், பால்ராஜ்.

விழுப்புரத்தில் ரங்கசாமி தெருவில் வசிக்கும் 21 வயதான இருவரும் 'உதவும் கைகள்' என்ற அமைப்பை உருவாக்கி, வறியவர்களைத் தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து விக்னேஷிடம் பேசியபோது:

'நான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சமூகப் பணிப் பிரிவில் இளங்கலைப் பட்டப் படிப்பை படித்து வந்தேன். மாணவர்கள் பிறருக்கு உதவ வேண்டும் என்பது ஒரு பாடமாக இருந்தது. பட்டப் படிப்பை படித்த மூன்று ஆண்டுகளும் 'துறையியல் வேலை' எனப்படும் 'பீல்டு ஒர்க்' செய்து வந்தேன்.அப்போதுதான் எனக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாதவர்களுக்கு உதவுவது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே ஓர் அமைப்பை உருவாக்குவது என முடிவு செய்தேன்.

கல்லூரியில் படித்துகொண்டிருந்ததால் வருமானமும் எதுவும் இல்லை. எந்த வருமானமும் இல்லாமல் எப்படி பிறருக்கு உதவி செய்வது என நினைத்தபோது, எனது பெற்றோர் வீட்டு வாடகைக்கும், மாதச் செலவுக்கும் சிறு தொகையை பணமாக அனுப்பிக் கொண்டிருந்தனர். அதிலிருந்து எனது செலவுகளை சுருக்கி கொஞ்சம், கொஞ்சமாக பணம் சேமிக்கத் தொடங்கினேன். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்ததும் என் சொந்த ஊருக்கு திரும்பி வந்து 'உதவும் கைகள்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இந்த நேரத்தில்தான் எனது நெருங்கிய நண்பரான பால்ராஜும் என்னுடன் இணைந்து, ஊக்கமும், உற்சாகமும் அளித்தார். உண்மையான நண்பர்களே நம்மை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். அவரும் நானும் கரம் கோர்த்துகொண்டு பசியால் வாடும் ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மதிய உணவு வழங்கும் சேவையில் இறங்கினோம்.

விழுப்புரத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம்,கோயில்கள்,தேவாலயங்கள்,மசூதிகள் போன்ற இடங்களில் உள்ள வறியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மதியம் மட்டும் உணவுப் பொட்டலங்களை விலைக்கு வாங்கி கொடுத்து வருகிறோம். தினசரி 30 முதல் 40 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறோம். ஒரு நாளைக்கு ரூ.1,100 முதல் ரூ.2,000 வரை செலவாகிறது.

இதுவரை சேமித்த பணத்தில் மட்டுமே செலவு செய்து வந்தோம். ஒருநாள் எதிர்பாராதவிதமாக எனது சேவையைப் பார்த்து வியந்துபோன என் தந்தையும் இப்போது பணஉதவி செய்து வருகிறார். அவர் காவல்துறையில் ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார்.

நான் ஏன் உணவின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றால், கல்லூரியில் படிக்கும்போது ஒரு உணவகத்துக்குச் சாப்பிட சென்றேன்.அங்கே ஓரிடத்தில், 'பசியோடு இருப்பவர்களுக்கு உணவளித்துப் பார். நீ இறந்த பின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப்பொழுதில் காண முடியும்' என்ற எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகம் என் உள்ளே இறங்கி என் இதயத்தை சுரண்டுவது போல இருந்தது. அதனால் தான் பசித்தவர்களுக்கு உணவு வழங்கும் பணியை தொடர்ந்து செய்கிறோம்' என்கிறார்.

பால்ராஜ் கூறியது:

'உதவும் கைகள் என்ற அமைப்பு ஒரு சிறு முயற்சி மட்டுமே. அதன்பின்னால் ஒரு பெரிய கனவு உள்ளது. எங்கள் நோக்கம் என்பது எல்லோருக்கும் உணவு, யாரும் பசியோடு உறங்காத உலகை உருவாக்குவதே ஆகும். சந்தோஷமும்,நிம்மதியும் பணத்தால் வருவதில்லை. மனித நேயத்தால் மட்டுமே மலர்கிறது. சந்தோஷத்தை பிறருக்கு தருகிறபோது கிடைக்கிற ஆனந்தமே பேரானந்தம்' என்கிறார் பால்ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT