ஞாயிறு கொண்டாட்டம்

இசைப்பயணம்...

முன்பெல்லாம் இசையை முழு நேரத் தொழிலாக எடுத்துக் கொண்டால், நிரந்தர வருவாய் கிடைக்காது.

எஸ். சந்திரமெளலி

'முன்பெல்லாம் இசையை முழு நேரத் தொழிலாக எடுத்துக் கொண்டால், நிரந்தர வருவாய் கிடைக்காது. ஆனாலும் திறமை இருந்தால், கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தால் வாழ்க்கையில் உயர முடியும். வெற்றியும் பெற முடியும்.

இந்த அழுத்தமான நம்பிக்கையில்தான் கடுமையாக உழைத்தேன். நிறைய கச்சேரிகளுக்குச் சென்று கேட்டேன். நிறைய கற்றேன். பலனும் கிடைத்தது'' என்கிறார் இசைப் பயணத்தில் 60 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள மூத்த மிருதங்கக் கலைஞர் திருவாரூர் பக்தவச்சலம்.

இவரது 'மதுரா இசைப் பள்ளி' கால் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. 'என் வாழ்க்கை; என் பயணம்' என்ற தலைப்பில் இவரது வாழ்க்கை வரலாறு நூலாக அண்மையில் வெளிவந்துள்ளது. இவருக்கு 'பத்மஸ்ரீ' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

திருவாரூர் பக்தவச்சலத்திடம் பேசியபோது:

'திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்பார்கள். அத்தகைய புண்ணியத் தலத்தில் நான் பிறந்தது என் முன்னோர் செய்த புண்ணியம். திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணமங்கை என்ற ஊரில் பிறந்த எனக்கு பக்தவச்சலம் என்று தெய்வத்தின் பெயரையே சூட்டினர். பின்னர், எனது பெற்றோர் திருவாரூருக்கு இடம் பெயர்ந்தனர்.

எனது மாமா புதுச்சேரி வானொலி நிலையத்தில் இசைக் கலைஞராக 40 ஆண்டுகள் பணியாற்றியவர். இன்னொரு மாமா தில்லி பல்கலைக்கழக இசைத் துறையில் வயலின் ஆசிரியராக இருந்தவர். என் அம்மா ஆனந்தவல்லி, குரலிசைக் கலைஞர். இறைபக்தி மிகுந்த, இசைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் நான் பிறந்தேன்.

என் அம்மா கருவுற்றிருந்தபோது, ஒன்பதாவது மாதம் வரை அவர் கச்சேரிகள் செய்துகொண்டிருந்தார். நான் பிறந்ததும் தாய்ப்பாலுடன், இசைப்பாலும், இறைப்பாலும் ஊட்டி வளர்த்தார். ஏழு வயதில் மிருதங்கத்தின் லயத்தால் ஈர்க்கப்பட்டு, என் மாமா திருவாரூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் மிருதங்கம் கற்கத் தொடங்கினேன்.

திருவையாறு தியாகராஜ உற்சவத்தில்தான் எனது அரங்கேற்றம் நிகழ்ந்தது. எனது ஒன்பது வயதில் அம்மாவுடைய கச்சேரிகளுக்கு வாசிக்கத் தொடங்கினேன்.

பி.காம். படிப்பை முடிக்காமல், 1973-இல் சென்னைக்கு வந்துவிட்டேன்.

அடிப்படையில் நான் தஞ்சாவூர் இசைப் பாணியில் வந்தவன் என்றாலும், எனக்கென்று ஒரு தனிப் பாதையை அமைத்ததால், படிப்படியாக எனது முன்னேற்றம் நிகழ்ந்தது.

அகில இந்திய வானொலியில் 'டபுள் பிரமோஷன்' கொடுத்து எனக்கு 'ஏ'கிரேடு அந்தஸ்தை அளித்தனர்.

செம்மங்குடி, டி.கே.பட்டம்மாள், டி.கே.ஜெயராமன், கே.வி.நாராயணசாமி, கே.ஜே.யேசுதாஸ், டி.வி. கோபாலகிருஷ்ணன், புல்லாங்குழல் ரமணி, பாலமுரளி கிருஷ்ணா, லால்குடி ஜெயராமன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த இசைக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

மூத்த கலைஞர்களுக்கு வாசிக்க ஆரம்பித்து, அவர்களின் அடுத்தடுத்து நான்கு தலைமுறை சிஷ்யர்களுக்கு பக்க வாத்தியம் வாசித்ததும், வாசித்துக் கொண்டிருப்பதும் எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமா? எல்லாம் எனக்குக் கிடைத்த பேறு.

'லய முத்ரா' என்ற பெயரில் தொடங்கிய இசைப் பள்ளியில் இதுவரை நூறு பேருக்கு மேல் சிஷ்யர்களை உருவாக்கி இருக்கிறேன். அவர்கள் இன்று பல மூத்த இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது திறமையை அங்கீகரிக்கும் வகையில் அரசும், சபாக்களும் ஏராளமான விருதுகளை அளித்துள்ளன. மியூசிக் அகாதெமியின் 'சங்கீத கலாநிதி', தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகள் வாழ்க்கையில் மறக்க முடியாதவையாகும்.

நான் அரங்கத்தில் ரசிகர்கள் முன்பு மிருதங்கத்துடன் அமர்ந்தால், ஒரு பரீட்சை போலத்தான் நினைக்கிறேன். காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் பங்கேற்க, டி.கே.மூர்த்தி, டி.வி.கோபாலகிருஷ்ணன், உமையாள்புரம் சிவராமன், ஏ.வி.ஆனந்த் (கர்நாடகம்), திருச்சி சங்கரன் ஆகிய ஐந்து மிக மூத்த கலைஞர்களுக்கு 'மதுராலய சாம்ராட்' விருது வழங்கப்பட்டபோது ஆத்ம திருப்தியும் கிடைத்தது'' என்கிறார் திருவாரூர் பக்தவச்சலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ. யூ.சி. ஆறுமுகம்

ஆஷா பணியாளா்கள் போராட்டம்: திமுக ஆதரவு

திமுக இளைரணி அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

24 மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

மாா்ச் 2-இல் மாசி மகம் திருவிழா ஏற்பாடுகள்: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

SCROLL FOR NEXT