அருள்செல்வன்
பல்வேறு நட்சத்திரங்களை வைத்து வணிக ரீதியிலான பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் என்.லிங்குசாமி. அவர் எழுதிய 'லிங்கூ கவிதைத் தொகுப்புகள்' பரவலாக அறியப்பட்டன.
ஹைகூ கவிதைகள் மீது அவர் கொண்டுள்ள காதல் அலாதியானது. அவ்வப்போது கவிதைகளை எழுதுகிறார்.அவரது முன்னெடுப்பில் ஆண்டுதோறும் ஹைக்கூ கவிதை போட்டி நடத்தப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
அவரிடம் 'ஹைகூ' குறித்துப் பேசினோம்:
உங்களுக்குள் கவிதை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
நான் கவிஞன் இல்லை. ஆனால், கவி மனம் கொண்டவன் என்பதில் நம்பிக்கை உண்டு. கவி மனம் என்பது தனியான இயல்பு கொண்டது. உலகியல் வாழ்க்கையிலிருந்து விலகி நின்று இந்த உலகத்தைப் பார்ப்பது .
எல்லோருக்கும் பிடித்தது அவனுக்குப் பிடிக்காது. எல்லோருக்கும் பிடிக்காதது அவனுக்குப் பிடிக்கலாம். எல்லோரும் ஒரே வழியில் செல்லும்போது அவன் திரும்பிச் செல்கிற வர்க்கம். அதனால்தான் அவன் அனைவரிடமிருந்தும் முரண்படுகிறான்.
அன்றாட உலகியல் தேவைகளில் இருந்து விடுபட்ட அவன் உலகம் கனவு உலகமாக இருக்கும். எனக்குள் கவிதைஆர்வம் இந்தக் கணத்தில் வந்ததென்று சொல்ல முடியாது. நான் கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும்போது விகடனுக்கு 'இஸ்திரி போடும் தொழிலாளியின் வயிற்றில் சுருக்கம்' என்று ஒரு கவிதை எழுதி அனுப்பி பிரசுரமானது.அப்போது எனது கவி மனத்துக்குச் சிறகு விரிந்தது. அது இன்று வரை என்னைச் சுமந்து பறந்து கொண்டிருக்கிறது.
எதைப் பாடு பொருளாக வைத்து கவிதை எழுதுகிறீர்கள்?
கவி மனம் கொண்டவன் கவிதைக்கான கருப்பொருளைத் தேடி அலைந்து திரிய வேண்டியதில்லை. நான் கல்லூரி செல்லும் வழியில் ஒரு இஸ்திரிக்காரரை பார்த்தபோது, எனக்குத் தோன்றியது தான் மேலே சொன்ன கவிதை. இப்படிக் கண் முன் தெரியும் காட்சிகளையே கவிதை படிமமாக்கிக் கொள்பவன்தான் கவிஞன்.
இப்படி நான் தோன்றுவதை எழுத ஆரம்பித்தேன். தோன்றுவதை, தென்பட்டதை எதிர்பட்டதை பளிச்சென மனதில் வெளிச்சம் அடிக்கும் ஒரு காட்சியைக் கவிதையாக எழுத ஆரம்பித்தேன்.அப்போது இதெல்லாம் கவிதையா என்றெல்லாம் எனக்கு சந்தேகம் வந்தது. அப்போது நண்பர்கள் ஊக்கப்படுத்தினார்கள். ஆனாலும் அனைத்தையும் சந்தேகக்கண் கொண்டுதான் பார்த்தேன். ஆனாலும் சிலர் கூறியது எனக்கு நம்பிக்கை அளித்தது. அப்படித்தான் ஹைகூ கவிதை எழுத ஆரம்பித்தேன்.
அதற்கான எதிர்வினைகள் எப்படி இருந்தன?
நூல் பற்றிய பாராட்டுகள், வரவேற்புகள் பற்றி நான் கவலைப்படாது இருந்தேன். ஏனென்றால் எனது மன திருப்திக்காகவே நான் கவிதை எழுதி வந்தேன். அப்படியே இரண்டாவது தொகுப்பும் வந்தது .இப்போது மூன்றாவது தொகுப்பு 'லிங்கூ 3' என்பது 'பெயரிடப்படாத ஆறுகள்' என்ற பெயரில் வரவுள்ளது.
நீங்கள் இதில் யாரை ஆதர்சமாகக் கருதுகிறீர்கள்?
கவிக்கோ அப்துல் ரகுமான் பலருக்கு முன்னோடி மட்டுமல்ல; எனக்கும் அப்படித்தான் வழிகாட்டியும் கூட. அவரிடம் நான் கவிதை எழுதுவது பற்றி எனது சந்தேகத்தைக் கேட்டபோது 'நீ கவிதை எழுதிவிட்டால் அத்தோடு விட்டுவிடு. கவிதையை நீ எழுதுவதில்லை. உன் வழியாக அது வெளிப்படுகிறது 'என்று கூறியதுடன், 'அதுபற்றி எந்த விமர்சனங்களுக்கும் பதில் கூறாதே ; விளக்கம் கூறாதே; தர்க்கம் செய்யாதே ஏனென்றால் தர்க்க மனம் கவிஞனுக்குரியதல்ல' என்றார். அப்படியே எழுதிக் கொண்டிருக்கிறேன் .
உங்களைப் பாதித்த ஹைகூ கவிஞர்கள் ?
ஹைகூ கவிதைகளில் என்னைக் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் ஜப்பானின் பாஷோ, பூஸான், இஸ்ஸா, ஷிக்கி தொடங்கி ஈரோடு தமிழன்பன் ,வண்ணதாசன், கலாப்ரியா, குகை மா. புகழேந்தி, மு.முருகேஷ்,பிருந்தா சாரதி வரை எத்தனையே பேர் இருக்கிறார்கள்.
திட்டமிட்டு பரபரப்பாக இயங்கும் திரைத் துறையில் உங்களுக்குள் உள்ள கவிஞரை எப்படிக் காப்பாற்றிக் கொள்கிறீர்கள்?
கவி மனம் விட்டேத்தியானது. பித்து நிலையில் உள்ளது. உலகியல் சிக்கலில் இருந்து விலகி நிற்பது. அதை எப்படிச் சமன் செய்து கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் நான் சொல்வேன் எனது நெருக்கடிகளில் இருந்தும் உளச்சிக்கல்களில் இருந்தும் என்னை விடுவிப்பதும் கரை சேர்ப்பதும் அந்தக் கவிதை மனம்தான்.
நான் தோல்வி அடைந்தபோதும் கடன்களில் மூழ்கிய போதும் என்னை உயிர்ப்போடு வைத்திருப்பதே அந்த மனம் தான். ஏதாவது கவிதைகளைக் கேட்டுவிட்டால் எனக்கு எல்லாமே மறந்துவிடும்.படப்பிடிப்பு தொடங்கும் முன் காலையில் ஒரு கவிதை தோன்றிவிட்டால் அன்று மிகவும் மகிழ்ச்சிகரமானதாக முடியும்.நானே எதிர்பார்க்காதபடி காட்சிகள் நன்றாக அமையும் ஒரு மாயாஜாலம் நிகழும்.
பிடித்த கவிதைகள் ?
ஹைகூ என்பது மூன்று வரிகளுக்குள் அடங்குவதுதானா? அதற்கான முறையான இலக்கணம் கூட எனக்குத் தெரியாது. ஆனால் அந்த வடிவத்தின் மீது அவ்வளவு காதல். அப்படி உலகில் எத்தனை கவிதைகள் ஒரு கணம் மின்னல் போல் அடித்து என்னைச் சிலிர்க்க வைத்து இருக்கின்றன.
வண்ணதாசனின் 'பென்சிலை சீவும்போது எங்கோ சடசடவென காடுகள் முறியும் சத்தம் கேட்கிறது' கவிதை பார்த்து எனக்குப் பைத்தியம் பிடித்தது.
ஈரோடு தமிழன்பனின் 'பாம்பு போன பாதையில் பயம் ஊர்கிறது' இப்படி என்னைத் தூக்கம் தொலைத்து தொந்தரவு செய்தவை பல.
கவிதை ஒரு சொல் விளையாட்டா?
மொழியின் உச்சம் கவிதை. உலகில் வலிமையானது சொற்கள்தான். சொற்கள் வைத்திருப்பவன்தான் உலகை வெல்கிறான். உலகில் எவ்வளவு பிரம்மாண்ட ஆயுதங்கள் புழங்கும் யுத்தங்களும் முடிவுக்கு வருவது சமரசப் பேச்சில் வெளிப்படும் சில சொற்களால் தான். ஆயுதங்களை விட வலிமையானவை சொற்கள்.
ஒரு கவிஞர் திரைப்பட இயக்குநருக்குள் எப்படி உதவுகிறார்?
கவிஞராக இருக்கும் இயக்குநர்கள் இயக்கும் திரைப்படங்களில் வசனம் கூர்மையாக,அதுவே ஒரு கவிதை போல் இருக்கும். இதற்கு ஷோலே வசனம் எழுதிய சலீம் ஜாவித் முதல் நம்மூர் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், மணிரத்னம் வரை சொல்லிக் கொண்டே போகலாம்.அவர்கள் நறுக் சுருக் வசனங்கள் மூலம் எழுதுவது கவிதையைத்தான். அவர்கள் காட்சிகளையும் கவிதைகளாக மாற்றுகிறார்கள்.
கவிதை தோன்றும் கணம் என்று ஒன்று உள்ளதா?
நான் கவிதை எழுதுவதற்காக யோசித்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அந்த மனம் எனக்கு இணையாக இயங்கிக் கொண்டுதான் இருக்கும். தற்செயல் தருணங்கள் தான் கவிதையாக மாறுகின்றன.
இதுவரை நான் எழுதிய 120 கவிதைகளும் அப்படி தற்செயலாக வந்தவைதான் நான் எழுதிய 'மான் அருந்தும் நீரில் புலியின் பிம்பம்' அப்படி தற்செயலாக வந்ததுதான். திட்டமிட்டுக் கொண்டு வார்த்தை ஜாலம் செய்து கொண்டு வருவதல்ல கவிதை. அப்படி முயன்றாலும் அது தோல்யில்தான் முடியும். அப்படி நானும் முயன்று தோற்று இருக்கிறேன்.
ஹைக்கூ கவிதைப் போட்டி யோசனை எப்படி தோன்றியது?
நான் கவிக்கோவிடம் ஒரு முறை கேட்டேன். 'உங்கள் பெயரில் நான் ஒரு ஹைகூ போட்டி வைத்துப் பரிசு கொடுக்க விரும்புகிறேன்' என்றேன். அவர் அதற்குச் சம்மதித்தார். அப்படி 2021 முதல் ஐந்தாண்டுகளாக ஹைகூ கவிதைப் போட்டி நடத்தி பரிசுகள் கொடுத்து வருகிறோம். இதில் எனது பங்கு முன்னெடுத்துச் செல்வது மட்டும்தான். ஆனால் கவி ரசனை கொண்ட நண்பர் சிவகுமார் என்பவர் என்னுடன் இணைந்து, அவருடைய ஆதரவால்தான் இது இவ்வளவு பெரிய விழாவாக மாறி இருக்கிறது.
முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.10 ஆயிரம் , தேர்வு செய்யப்பட்ட மற்ற கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ரூபாய் என்று ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படுகிறது. அவரது கொடையால்தான் அந்த விழா பிரம்மாண்டமானது. முதலாண்டு விழாவுக்கு கவிஞர் கனிமொழி சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். பிறகு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஐயா,பர்வீன் சுல்தானா, இயக்குநர் மிஷ்கின் ,இந்த ஆண்டு இறையன்பு என்று அந்த வரிசை தொடர்கிறது.
இந்தக் கவிதைப் போட்டிக்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் பேராவது கவிதை எழுதுகிறார்கள். அவர்களிடம் இருந்து சிறந்த 50 கவிதைகளையும் அதிலிருந்து முதல் மூன்று கவிதைகளையும் தேர்ந்தெடுப்பது சாதாரண காரியம் அல்ல .நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் கவிதைகளில் இருந்து முதல் மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மட்டும் என்னிடம் வரும். யாருடைய பெயரும் இல்லாமல் கவிதையாக வருவதை தேர்ந்தெடுப்பது தான் இதன் சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.