உலை வாங்கு மிதி தோல் - கூடடைய விரையும் தனித்த குரல்!
'உலை வாங்கு மிதி தோல்' என்ற கவிதை நூலின் விமர்சனம்...
ஏழு பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் - கொண்ட பெண்கள் இந்தக் கவிதைத் தொகுப்பின் சொற்களைச் சுமந்து வருபவர்களாக, கதைமாந்தர்களாக, கவிதைகளுக்குள் பங்குபெறுபவர்களாக, பெண்களின் துயரம், அன்பு, வலி, அவமானம், அறம் சார்ந்த கோபம் என பெண் சார்ந்த உணர்வுகளை நோக்கி குவிமையப்படுத்தப்பட்ட கவிதைகள் இவை. கவிஞர் சுமித்ராவின் பல கவிதைகள் பெண் சார்ந்த கரிசனம் கொண்டவை. அவரது இயங்குமொழி தன்னியல்பில் பெண்ணிய கருத்தியல் நோக்கி செயலாற்றுவது. அவர் பறவை பற்றிப் பேசினால் அதை நேர்ப்பொருளில் ‘பறவை’ என்று எடுத்துக் கொள்ளலாகாது. அவர் குறிப்பிடும் ‘பறவை’ என்னும் சொல்லுக்குள் இருப்பது குடும்பச் சுமையின் கனத்தால் அழுத்தப்பட்ட ஒரு பெண்ணின் ஆன்மா.
கிராமங்களில் அன்றாடம் வயல்வெளிக்கு வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பும் கூலிக்காரப் பெண்கள் கூடு திரும்பும் பறவைகளாகும் இவரது கவிதைக்குள் பறத்தலை இயக்குவது சிறகுகளல்ல; கூட்டில் காத்திருக்கும் குஞ்சுகளை நினைத்து மனதிற்குள் தவித்துப் புலம்பும் குரல்.
தாமதமாய் கூடு திரும்பும்
நீர்ப்பறவை ஒன்றின்
தனித்த குரல்
தவித்துப் பறக்கிறது
மாநகரப் பேருந்துகளிலும் மின்சார ரயில்களிலும் அன்றாடம் அல்லல்படும் பரிதாபமான பெண் முகங்களும் இதே பறவைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். அலுவலக வேலைப் பளுவிலிருந்து விடுபட்ட ஆண்கள் அவர்களின் பதற்றங்களைத் தளர்த்தி ஓய்வுகொள்ள அவர்கள் மதுக்கூடங்கள், தேநீரருந்தகங்கள், சிற்றுண்டி விடுதிகள் நோக்கிச் செல்பவர்களாக அல்லது நண்பர்களை நோக்கிப் போய் குழுமி உரையாடுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பெண் மனம் விரைவில் கூடு திரும்புதல் நோக்கி ஏக்கமடைகிறது.
கூட்டில் காத்திருக்கும் குஞ்சுகளுக்கான
இரை குறைந்திருக்கலாம்
எதுவுமே கிட்டாமல் போயிருக்கலாம்
ஏன் இணையேகூட
இல்லாமல் போயிருக்கலாம்
’பறவை’ யைக் குறியீடாக்கிச் சொல்லப்பட்ட இன்னொரு கவிதை ஆண் - பெண் இயல்பின் மற்றொரு பரிமாணத்தைப் பேசுகிறது. ஆண் பெண் காதலியல்புகள் குறித்து சுமித்ரா போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போவது போலமைந்த இந்தச் சிறு கவிதை தனக்குள் விரிவான நுண் உளவியல் கொண்டமைந்தது.
பறவையொன்று
கடலிலிருந்து கவ்விச்செல்லும்
ஒற்றை மீன் போலத்தான்
ஒரு பெண் ஒரு ஆணை …
மடிவலையோடு
கடலின் அடிமடியில்
இறங்குவது போலத்தான்
ஓர் ஆண் பல பெண்களை …
’தெவிட்டல் அடையாமல் செரிக்கத் செரிக்கத் திண்றுகொண்டேயிருக்கும் பெருந்தீனி நெருப்பு இந்தக் காமம்’ எனப் பகவத் கீதை குறிப்பிடுவது ஆணின் இயல்பு குறித்துதான் இருக்க வேண்டும். ஆணுக்கு பெண்ணின் அழகும் உடலும் முதன்மையானது. உடலின்பத்திற்கான வாய்ப்பாகத்தான் காதலை அணுகுகிறான் ஆண். பெண்ணைப் பொருத்தமட்டில் இது முற்றிலும் வேறு பரிமாணம் கொண்டது. அவளின் உயிர்த்தன்மையை தொட்டுவிடத்தக்க பேரன்பு கொண்டிருப்பதாக ஒருவனை அவள் உணர்ந்துகொள்ளும் தருணத்தில் அவள் தன்னை ஒப்படைக்கிறாள். அத்தகைய பேரன்பு நிகழ வாய்ப்புள்ள அரிதான தருணம் மிக அபூர்வம். பேரன்பின் நுழைவாயில் வழியாகவே மட்டும் அவளின் காதல் சாத்தியம் என்பதால் ஒரு ஆணை மட்டுமே அவளால் கண்டுகொள்ள இயலும். பெண்மை என்பது கொடுக்கும் தன்மையுடையது எனில் அபகரிக்கும் தன்மை கொண்டது ஆண்மை. தெவிட்டத் தெவிட்ட பெருந்தீனி விழைதல் அவனது ஆசை. ஆலயங்களில் தேவதாசிகளையும் அரண்மனைகளில் அந்தப்புரங்களையும் புறநகர்களில் வேசியர் இல்லங்களையும் ஆண் சமூகம் ஏற்படுத்தி வைத்தது அவர்களுக்குள் தீராமல் கனன்றுகொண்டிருக்கும் இந்தப் பெருந்தீனி தீயால்தான். அதிகாரம், பணம், காமம் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு இயங்குபவையாகையால் அதிகாரத்தையும் பணத்தையும் அடைவதன் வழியாக ஆண் காமத்தை எளிதாகப் பெற்றுக்கொள்ள விழைகிறான்.
எந்தவொரு சிறந்த கவிதையும் அது தன்னளவில் ஒரு தத்துவத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அது வெளிப்படையாகத் தத்துவம் என தோன்றவும் கூடாது. கவிதையின் அழகியல் சிதைவுறாமல் மறைந்திருக்கும் ஓர் அணிகலன்போல இருக்க வேண்டும் அது.
எத்தனை முட்டாளாக
இருந்திருக்கிறோம் என்று
கடந்த காலங்களை
நினைத்துதான் கவலையுறுகிறோம்
நிகழ்காலத்திலும் இருப்பது குறித்து
நினைத்துப் பார்ப்பதேயில்லை
மனதின் இயல்பு நிகழ்காலத்திலிருந்து தப்பித்து வெளியேறுதல். அது எப்பொழுதும் கடந்த கால துயரங்களையும் பிழைகளையும் நினைத்துக் கவலைப்படும். அல்லது எதிர்காலப் பேராசைகளில் திளைத்திருக்கும். நமது மனம் தொடர்ந்து நிகழ்காலத்தில் இருந்தால் நாம் புத்தராகி விடுவோம். சித்தார்த்தன் ஞானம் அடைந்து புத்தரானதும் அவர் மனம், அவரது இறப்பு வரையில் தொடர்ந்து நிகழ்காலத்திலேயே இருந்துகொண்டிருந்தது. புத்தர் கடந்த காலத்தின் துயரங்களோ எதிர்காலம் குறித்த அச்சமோ அற்றவராகத் திகழும் விதத்தில், மாபெரும் அறிவுச் சுடராக நிகழ்காலத்திலேயே அவரின் மனம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அதனால் அவர் ஆசையற்றவராகவும் இருந்தார். நமது எல்லா முட்டாள்தனங்களிலிருந்தும் விலகியிருக்க ஒரே வழி மனதை நிகழ்காலத்தில் வைத்திருத்தல்.
ஔவையார் பாடலொன்றில் அவர் வயிறு குறித்து அதனிடம் குறைப்பட்டுக்கொள்வதாக அமைந்த பாடலின் பொருள்: “ஏ வயிறே! ஏதோ ஒரு தடவை மொத்தமாக உணவு கிடைத்தால் அவ்வளவையும் உண்டுகொள் என்று சொன்னால் நீ கேட்க மாட்டேன் என்கிறாய். ஒரு வேளை உணவு கிடைக்கவில்லை எனில் பொறுக்க மாட்டேன் என்கிறாய். பசியால் துடித்துத் துன்புறுத்துகிறாய். வயிறே! உன்னோடு எனக்குப் பெரும்பாடு!” ஆனால் இங்கு சுமித்ராவின் பிராது உடலோடு அல்ல: மனதோடு.
வேண்டியதை எடுத்துக்கொண்டு
வேண்டாததை வெளித்தள்ளுவதில்
உடல் எப்போதும்
சரியாகத்தான் இயங்குகிறது
மனதிற்கு மட்டும்
ஏன் இந்த முரண்
உடலின் இன்றியமையாத இயக்கங்களை பிரபஞ்சப் பேரியக்கம் அனிச்சையாக நடத்துகிறது. ஆகையால் சுவாசம், பார்த்தல், கேட்டல், வலி உணர்தல், பசி, உறக்கம், தாகம், வியர்வை உள்ளிட்ட கழிவுகள் வெளியேற்றம் யாவும் துல்லியமாக நடைபெறுகிறது. மனதைப் பொருத்தமட்டில் பல்வேறு காரணிகளுடன் தொடர்புகளுடையது. புலன்கள், புத்தி, அறிவு, புலன் நுகர்வுப் பொருள்கள் இவை யாவற்றோடும் மனம் நுட்பமான தொடர்பு கொண்டிருப்பதோடு அது கடந்த கால அனுபவங்கள், எதிர்கால இன்பங்கள் இவற்றோடும் சுய வசியக் கட்டுக்குள் அமிழ்ந்திருக்கிறது. இன்னும் நுட்பமாகச் சொல்வோமானால் மனதை இயக்குவதில் பெரும்பங்கு வகிப்பது அகங்காரம். அதனாலேயே இந்த முரண். உடல் மற்றும் மனதின் சிறு சலனங்களையும் துல்லியமாக அவதானிக்கும் ‘விபாசனா’ என்னும் தியான முறை மட்டுமே மனித சமூகத்தின் விடுதலைக்கான ஒரே ஆன்மிகச் செயல்முறையாக புத்தர் உபதேசித்தார். வேள்விகள், மந்திரங்கள், சடங்குகள், வழிபாடுகள் அத்தனையும் வீண் என்றார்.
அடுத்து இன்னொரு கவிதையிலும் மனம் குறித்த வியப்புதான்.
மனம் எனும் மேடையில் காட்சிகள் நகர்ந்தவண்ணமிருக்கின்றன. சில காட்சிகள் இன்னெதென உணர்ந்துகொள்ளவியலாத விதத்தில் கலங்கலாக மிக விரைந்து நகர்கின்றன. சில காட்சிகள் மெதுவாக, இன்னும் சில மிக மெதுவாகவும் சலனிக்கின்றன. அரிதான ஓரிரு காட்சி மனத்திரையில் உறைந்து நின்றுவிடுகிறது.
வேகமாய்
திரைதள்ளிக்கொண்டிருந்த விரல்
திடுமென
நிறுத்தி நிதானித்து
நகராமல் பிடித்து வைக்கிறது
அந்த நாழியை
அரசுப் பள்ளியில் கணினி ஆசிரியையாகப் பணிபுரிந்துகொண்டிருக்கும் சுமித்ரா, ’இது மூளையின் பணி’ என்று அறிந்தவர்தான். அல்லது ஆன்மிகப் போக்கில் பார்த்தாலும் ’இது புத்தியின் வேலை’ என்பதை அவர் உணராதவர் அல்ல. ஆனால் ஒரு சிறந்த கவிதை, ஒருவரை ஊடகமாகக் கொண்டு தன்னை வெளிப்படுத்துகையில் அது அந்த கவிஞரின் சுய அடையாளத்தை அழித்து, சில கணங்கள் அவரைக் குழந்தையாக்கிவிடுகிறது. அதனாலேயே அவர் அதில் திகைப்படைகிறார்.
எப்படிப் புரிந்தது
விரல் நுனிக்கு?
இந்த திகைப்பு இதை அழகான கவிதையாக்குகிறது. படிப்பு, பதவி, செல்வநிலை, சமூகப் பின்புலம், பால் தன்மை, மதம், புகழ் இத்தகைய சுய அடையாளங்களின் நினைவுகள் அழிவதன் தருணத்தில் நிகழும் திகைப்புதான் கவிதை!
நாயை உருவமாகக் கொண்டு பல கவிஞர்கள் கவிதை புனைந்திருக்கிறார்கள். மனிதர்களை நேரடியாக குறிப்பிட்டுச் சொல்ல முடியாத இடங்களில் நாயைக் கவிதைக்குள் அழைத்து வந்தார்கள். சுந்தர ராமசாமி நாயைப் படிமமாக்கி உருவாக்கிய கவிதை, அது எழுதப்பட்ட காலத்தில் மிகப் பெரிய விவாதங்களை உருவாக்கியது. சுமித்ரா எழுதிய இந்தக் கவிதை, அன்பு முலாம் பூசப்பட்ட அதிகாரத்தை நாய் என்ற படிமம் வழியாகச் சொல்கிறார்:
இங்கு எல்லோருக்குமே
ஒரு நாய் தேவைப்படுகிறது
காட்டுகிற இடத்தில் குரைக்க
நீட்டுகிற இடத்தில் குழைய
கணவன் – மனைவி, மனைவி – கணவன், காதலன் – காதலி, காதலி – காதலன், எஜமான் – வேலையாள், தலைவன் – தொண்டன், குரு – சீடன் இதுபோல இன்னும் பல உறவு இணைவுகளின் உள்ளார்ந்த அரசியலை இக்கவிதை உணர்த்துகிறது. இந்த உறவு இணைவுகளில் ‘நாய்’ என்னும் தன்மை வகித்துக் குரைக்கவும் குழையவும் முனைவது யார் என்பது சூழ்நிலை, இடம் ஆகியவற்றைப் பொருத்தது.
இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா பிரமாண்டங்களும் அற்பமான முதல் தொடக்கம் கொண்டவையே. எள் முனையிலும் மிகச் சிறிய விதையிலிருந்துதான் மாபெரும் ஆலமரம் தோன்றுகிறது. திருவள்ளுவர் ‘’உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்’’ என்கிறார். கலீல் கிப்ரான் அவரது ’ஞானியின் தோட்டம்’ (GARDEN OF PROPHET) என்னும் நூலின் தொடக்கத்தில் சொல்கிறார்: ‘’ ஒரு கைப் பிடியளவு மண்ணில் ஒரு மிகப் பெரிய வனம் மறைந்துள்ளது.’’ விகசித்துப் பேருருவம் கொள்ள விழையும் இயற்கையின் பிரமாண்டத்தைச் சொல்வதன் வழியாக சுமித்ராவின் கவிதை மற்றொரு படிமத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
அற்பப் புழுவென
பார்ப்பவர்களுக்குத் தெரியாது
அதனுள் காத்திருக்கும்
இரு சிறகுகளும்
அலைந்து திரிய ஒரு
யுகாந்திர வனத் தேடலும்!
ஒரு சமன்பாட்டில் எண்களை மாற்றியமைத்து பதிலீடு செய்து ஒரே தன்மையான விடைகளை அடைதல்போல , ’அற்பப் புழு’வின் இடத்தில் மனிதர்களைப் பொருத்தியமைத்துப் பார்க்க முடியும். காட்சிக்கு எளியவனாகத் தோற்றமளிக்கும் ஒரு மனிதனை அற்பப் புழுவாகவும் அவனது மேன்மையான இலட்சியத்தை நோக்கிப் பறத்தலை அதன் சிறகுகளாகவும் இறுதியில் அவன் அடையும் பெருவெற்றியை யுகாந்திர வனத் தேடலாகவும் ஒரு வாசகர் புரிந்துகொள்ளவியலும்.
ஒரு படைப்பாளியின் மேன்மையான கவித்திறன் அவர் எழுதும் நீள்கவிதை வழியாக வெளிப்படுவதோடு, பிற மனிதர்களுக்காக பரிந்து வாதாடும் அவரது காருண்யம் அவர் கலைஞராக இருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஒரு சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த சிறு பெண்ணின் மனப்புலம்பலாக வெளிப்படும் இக்கவிதையை வாசிக்கையில் நம் இதயத்தைச் சூழ்ந்த சில பாறைகள் நெகிழ்த்தப்பட்டு ஒரு துளி ஈரமாவது விழிகளை நனைக்கும்.
சிலேட்டில் எழுதிப் பழகும் காலத்தில்
ஏன் அழுக்குத் துணிகளில்
குறியும் கோடும்
இட்டுக்கொண்டிருந்தேன்
தெரியவில்லை அப்பொழுது
குலக் கல்வி எதிர்ப்பு நோக்கி நகரும் இறுதி வரிகளைக் கொண்டிருக்கும் இக்கவிதை சலவைத் தொழிலாளி குடும்பத்தின் அவலத்தை விரிவாகப் பேசுவதோடு, இது ஒரு நீள்கதையாகவோ புதினமாகவோ விரித்தெடுக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கவிதையும் தன்னியல்பில் ஓர் உயர் தத்துவம் நோக்கி இயங்குபவை. அத்தகைய தத்துவங்கள் அந்தக் கவிதைகளால் சுயமாக உருவாக்கப்படுபவை. மற்ற மனிதர்களின் பிரியங்களை, பிரிவுகளை, கவலைகளை, அல்லல்களை, அழுகைகளைக் கேட்டுக் கேட்டு அங்கலாய்ப்பு அடைவதாக அமைந்த ஒரு கவிதை உடலில் காதுகள் பெருகிக்கொண்டே போவதாக சலிப்பு கொள்கிறது. பிற மனிதர்களின் வாழ்க்கைப் போக்குகளை கேட்பதற்கு ஒருவர் சற்றுக் கருணைகொண்டுவிட்டால் அவர் காதுகளைக் குப்பைத் தொட்டிகளாக்கி அவற்றில் கலவையான பிரச்னைகளைக் கொண்டுவந்து கொட்டத் தொடங்குகிறார்கள் சொல்பவர்கள். சேகரமாகிக்கொண்டே போகும் சொற்குப்பைகள் கேட்பவரை மூழ்கடித்து திணறச் செய்கின்றன.
செதில் செதிலாய்ப் படர்ந்த
காதுகளுக்கு இடையில்
ஒரு இதயமும் இருந்ததை
நீங்கள் எப்போதும்
அறிந்திருக்கவேயில்லை!
கிராமப்புற வாழ்க்கையின் வேளாண்மைப் பண்பாட்டில் தோய்ந்து வளர்ந்தவர் கவிஞர் சுமித்ரா. அவரது படைப்பிற்குள் வயல்வெளிகளும் செடிகொடிகளும் நீர்நிலைகளும் வேளாண்மை வாழ்க்கையும் ஓர் உருவகமாகவோ படிமமாகவோ அங்கங்கே வெளிப்படுகிறது.
நடுவதற்கு அரித்துவைத்த
நாற்றுகள் நாமென்றே
களைகளும்
எண்ணிக்கொள்கின்றன
போர்க் கால அகதி முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் மக்கள்போல, நடுவதற்கென காத்திருக்கும் நாற்றுகள் நாமென நம்பிக் காத்திருக்கும் களைச்செடிகள்போல மனிதர்கள் குழுவாகவோ, தனியாகவோ காத்திருக்கிறார்கள். ஏதேனும் ஒரு நல்வாய்ப்பு நிகழ்ந்துவிடாதா என்னும் எதிர்பார்ப்புடன் - சருகாகும் வரையில். மணவறைக்கு காத்திருக்கும் மணமகன் போலவோ மணமகள் போலவோ - நிகழக் காத்திருக்கும் ஒரு பேரன்பிற்கான ஏக்கத்துடன். இந்தக் காத்திருப்பில் காலம் வெகுதொலைவு நழுவிச்சென்றிருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை.
உலை வாங்கு மிதி தோல் (கவிதைத் தொகுப்பு), சுமித்ரா சத்தியமூர்த்தி, வாசகசாலை பதிப்பகம், சென்னை - 600092, தொடர்பு எண்: 9942633833