FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...

சென்னையை அடுத்துள்ள பிரம்பூரில் (இன்றைய பெரம்பூர்) 1709-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி பிறந்தவர் ஆனந்தரங்கப்பிள்ளை.

Updated On : 5 ஏப்ரல் 2026, 5:26 pm IST
பகிர்:

சென்னையை அடுத்துள்ள பிரம்பூரில் (இன்றைய பெரம்பூர்) 1709-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி பிறந்தவர் ஆனந்தரங்கப்பிள்ளை. அவர் தந்தையார் திருவேங்கடம் பிள்ளை. ஆனந்தரங்கப்பிள்ளையின், 'தினப்படி சேதிக்குறிப்பு' என்னும் நாட்குறிப்பு - பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியது ஆகும்.

அதில் தாம் பார்த்ததையும் கேட்டதையும் குறைக்காமலும் மிகைப்படுத்தாமலும் உள்ளதை உள்ளபடி குறிப்பிட்டிருக்கிறார்.

தம்முடைய குடும்பத்தின் சுகதுக்கங்கள் முதற்கொண்டு ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் நடைபெற்ற சம்பவங்களையும் சண்டைகளையும் வியாபார விஷயங்களையும் கப்பல் போக்குவரத்துகளையும் நம்முன்னோர் பழக்கவழக்கங்களையும் நடவடிக்கைகளையும் ஜாதி, மத பூசல்களையும் அரசியல் விஷயமாய் தாம் டூப்ளேக்கு (அந்நாளில் புதுச்சேரியில் இருந்த பிரான்ஸ் ஆளுநர்) கொடுத்த ஆலோசனைகளையும் புதுச்சேரி உத்தியோகஸ்தர்களுடைய குணாதிசயங்களையும் ஒன்றையும்விடாமல் கலப்பாக யாவற்றையும் சித்திரித்திருக்கிறார்.

Advertisement

Advertisement

1948-இல் வெளியான 'ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் சொஸ்த லிகித (அவர் தம் கைப்பட எழுதிய)' தினப்படி சேதி குறிப்பு (சந்தானம் பிரிண்டிங் ஒர்க்ஸ், புதுவை) என்ற நூலின் 'நூன்முகம்' (பக்.14) இவ்வாறு விவரிக்கிறது.

இக்காலத்திய ஆய்வாளர்களும் 'ஆனந்த ரங்கரின் நாட்குறிப்பு ஒரு பல்கலைக் கொள்கலம்' என்றே கொண்டாடுகின்றனர். 'தினப்படி சேதிக் குறிப்பு' என்னும் பெயருக்கேற்ப அவரால் அது நாள்தோறும் எழுதப்படவில்லை. நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதிச் சிலவற்றை விரிவாகவும் சிலவற்றைப் போகிற

போக்கிலும் அவர் பதிவு செய்திருக்கிறார். எனினும், அவை வரலாற்றுப் பதிவுகளாக அமைந்திருப்பதே இங்கு மனங்கொள்ளத்தக்க கருத்தாகும்.

'இந்நூல் மிகவும் அபூர்வமானது. நம் தேச சரித்திரத்தில் மிகவும் இருளடைந்திருக்கிற ஒரு பாகத்தை இது நன்கு துலக்கித் தருகிறது.... பிரெஞ்சு ராஜ தந்திரிகளோடு நெருங்கிப் பழகிய ஆனந்தரங்கப்பிள்ளை என்பார் நேரில் கண்டும் கேட்டும் உள்ள விஷயங்களைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்துவைத்த புத்தகமே இப்பிரஸ்தாப தினசரியாகும்' என்று வ.வே.சு. அய்யரும் இந்நூலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'அவர் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைப் படிக்கும்போது அக்காலத்துத் தமிழ்நாட்டை நாம் சலனப்படக் காட்சியில் (ஸினிமாவில்) பார்ப்பது போன்ற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது' என்கிறார் வ.வே.சு. அய்யர். அத்

தினசரியாகிய புகைப்படச்சுருள் அவிழஅவிழ எத்தனை விதமான உருவங்கள் தோன்றிமறைகின்றன. ஒவ்வொரு உருவமும் உயிரோடிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஊசியால் குத்தினால் அவ்வுருவங்களில் இருந்து ரத்தம் வருமென்று நமக்குத் தோன்றும். கிசுகிசு மூட்டினால் சிரித்து

விடுவார்கள் என்று நினைப்போம். அவ்வளவுக்கு அது உயிருள்ள மனிதன் என்ற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது என்கிறார். மேலும், செந்தமிழ் நடையில் இல்லாமல் எழுத்துப்பிழைகளுடன் கருந்தமிழில் எழுதப்பட்டுள்ளபோதிலும் அதன் நடையில் ஒரு வன்மையும் ஓட்டமும் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இனி இத்தினசரியில் உள்ள சில பதிவுகள் இலக்கியவாணர்க்குக் 'கருக்'களை வழங்கிக்கொண்டிருப்பதாக, 'ஆனந்த ரங்கம்' என்னும் கருத்தரங்கக் கட்டுரைகளின் பதிப்பாசிரியரான அறிவுநம்பி கூறுகிறார். அதற்குத் தக ஒரு பதிவு, பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைக்குக் 'கரு'வானதையும் அதன் பயனாய் ஓர் அங்கதக் கவிதை உருவானதையும் இனிக் காணலாம்.

ஆசாரப்ப முதலியார் என்பவருடைய பெண்சாதி தம் செல்வமுடைமையின் அடையாளமாகச் சல்லாப் புடவையைக் கட்டிக்கொண்டும் நகைகளை தரித்துக்கொண்டும் பரிமளகெந்த சுகந்தத்துடனே கோயிலுக்குச் சென்று பாதிரியாரண்டையில் முட்டிக்காலிட்டுக்கொண்டு பூசை கேட்கிறபோது, அவர் பூசை சொல்லுகிறதைவிட்டு மூச்சைப் பிடித்துக்கொண்டு கையிலேயிருக்கிற பிரம்பினாலே கொண்டையிலே குத்தி, 'நீ கலியாணக்காரி அல்லவா, உன்னுடைய புருஷனுக்கு வெட்கமில்லையா? சரீரமெல்லாம் தெரியத்தக்கதாகச் சல்லாப் புடவையைக் கட்டிக்கொண்டு கோயிலுக்கு வருவார்களா?

புண்ணியவதீ நீ பூசைசெய்தது போதும்.

எழுந்திருந்து வீட்டுக்குப் போ' என்றாராம்.

இதைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணின் கணவரும் மற்ற கிறிஸ்துவர்களும் பாதிரியாரோடு முரண்பட்டு, 'இனிமேல் நாங்கள் உங்கள்

கோயிலுக்கு வரப்போவதில்லை' என்று சொல்லிவிட்டார்களாம்.

ஆனந்தரங்கரின் இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் பாவேந்தரின் கவிதை ஒன்று பின்வருமாறு அமைகிறது. எந்தவிதமான அருஞ்சொற்களுமின்றிப் படித்த அளவில் புரியும்படியான பாவேந்தரின் அந்தப் பாடல் இதோ:

தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல்

தாள் என்ற எட்டுறுப்பும்

தங்கநகை வெள்ளிநகை

ரத்தினமிழைத்த நகை

தையலர்கள் அணியாமலும்,

விலைகுறையும் ஆடைகள்

அணிந்துமே கோயில்வர

வேண்டுமென்றே பாதிரி

விடுத்தஒரு சேதியால்

விஷமென்று கோயிலை

வெறுத்தார்கள் பெண்கள், புருஷர்!

நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி

நீள்இமைகள், உதடு, நாக்கு

நிறையநகை போடலாம், கோயிலில்

முகம்பார்க்க

நிலைக் கண்ணாடியும் உண்டென

இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட

பக்தர்கள்

எல்லாரும் வந்துசேர்ந்தார்;

ஏசுநாதர் மட்டும் அங்குவர வில்லையே

இனிய பாரததேசமே!

ஆனந்தரங்கரின் தினப்படி சேதிக்குறிப்பில் காணப்படும் சிறு 'பதிவு' பாவேந்தரிடம் உண்டாக்கிய பாதிப்பு இது. அதன்பயனாக அறிவு கொளுத்தும் கருத்துச் செறிவான அங்கதக் கவிதை நமக்குக் கிடைத்திருக்கிறது. பின்னாளில் புதுச்சேரியின் புகழ்மிகு எழுத்தாளர் பிரபஞ்சன், 'வானம் வசப்படும்' என்னும் நாவலை எழுதுவதற்கும் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு கருவாய் அமைந்தது இங்குக் கருத்திற்கொள்ளத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments