முகப்பு
தினமணி கதிர்

பிரபஞ்சனின் நாடக உலகம்

புதுவையைச் சேர்ந்த ராஜ்ஜா ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலம் -தமிழ் இருமொழிகளிலும் மொழிபெயர்ப்பாளர்.

Updated On : 3 மே, 2026 at 4:00 AM
பகிர்:

புதுவையைச் சேர்ந்த ராஜ்ஜா ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலம் -தமிழ் இருமொழிகளிலும் மொழிபெயர்ப்பாளர். சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுத்தாளர் பிரபஞ்சனின் நண்பர்களில் ஒருவரான இவர், அவரது 'நாடக உலகம்' குறித்து எழுதுகிறார்.

பிரபஞ்சன் சென்னைவாசி ஆவதற்கு முன் அவரை அவரது புதுச்சேரி இல்லத்தில் மாலைவேளைகளில் அடிக்கடி சந்தித்து உரையாடி இருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் அவர் கவிதை என்ற பிரமையில் இருந்து வெளிவந்து 'பிரும்மம்' என்ற சிறுகதை மூலம் தமிழுலகம் அறிந்த எழுத்தாளராகப் புகழடைந்து இருந்தார்.

'ஏன் உங்களுள் உதித்த கவிஞனுக்கு விடை கொடுத்து விட்டீர்கள்?'' என்று ஒருநாள் கேட்டேன்.

Advertisement

'அவனை எப்போதோ கொன்று விட்டேன். கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மரித்து விட்டதே காரணம். கவிதைக்கு யார் சார் சன்மானம் கொடுக்கிறார்கள்? எழுத்தை மட்டும் நம்பி வாழ்பவன் கவிதை எழுதிக் கொண்டிருந்தால் எப்படி?'' என்று பதில் சொன்னார்.

திடீரென்று ஒரு நாள் 1983 -ஆம் ஆண்டு சிவகங்கை பேராசிரியர் கவிஞர் மீராவின் புத்தக வெளியீட்டு நிறுவனமான அகரம், 'முட்டை' என்ற தலைப்பில் பிரபஞ்சனின் ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டது. அதில் பிரபஞ்சனின் இரு நாடகங்கள் இருந்தன. ஒன்று 'முட்டை', மற்றொன்று 'அகல்யா'.

பிரபஞ்சன் எழுதிய அடுத்த நாடகத்தைப் படிப்பதற்கு அவரது வாசகர்கள் மேலும் ஒரு பதினான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

1996-ஆம் ஆண்டு புதுச்சேரி வானொலி நிலையம் 'மண்ணில் தெரியும் வானம்' என்ற நாடகத்தை ஒளிபரப்பியதோடு மட்டுமல்லாமல் அதை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். ஆங்கில மொழிபெயர்ப்புக்கான பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்ட போதுதான் எனக்கு அந்த நாடகத்தைப் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பின்னர் என் மொழிபெயர்ப்பு சாகித்ய அகாதெமியின் 'இந்தியன் லிட்ரேச்சர்' (ஜனவரி- பிப்ரவரி 1997) இலக்கிய இரு மாத இதழில் வெளிவந்தது.

இந்த மூன்று நாடகங்களுக்குப் பிறகு, கவிதை உலகுக்கு விடை கொடுத்ததைப் போலவே நாடகம் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்காக நாடக ஆசிரியர் பிரபஞ்சன் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டி இருந்தது. அச்சமயம் அவரோடு நான் உரையாடினேன். 'சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் புகழ்பெற்ற நீங்கள் நாடகத் துறையில் பிரவேசித்தது பற்றிச் சொல்லுங்களேன்...'' என்று கேட்டேன்.

'பரிக்ஷா நாடகக் குழுவினர் சென்னையில் அரங்கேற்றிய நாடகங்களை நான் பார்க்க வேண்டியிருந்தது. நா. முத்துசாமி 'நடை' என்ற சிறு பத்திரிகையில் நாடகவியல் பற்றி தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார். அவற்றை ஒன்றுவிடாமல் நான் படித்தேன். முத்துசாமியின் கூத்துப்பட்டறை பல நாடகங்களை அரங்கேற்றியது. அவை எல்லாவற்றையுமே நான் பார்த்து ரசித்திருக்கிறேன். இதைப் பார்த்ததும் படித்ததும் ரசித்ததும்தான் என்னை நாடகத் துறைக்கு ஈர்த்தது.

வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் 1980-இல் இருந்து 1982 வரை நாடகம் சமைப்பதற்கான பயிற்சிப் பட்டறை ஒன்றினை நடத்தினார். இதில் நான் முழு ஆர்வத்தோடு கலந்து கொண்டேன். இவையே என்னை நாடகம் எழுதத் தூண்டியவை.'' என்றார்.

பிரபஞ்சன் எழுதிய முதல் நாடகம் 'முட்டை'. ஹேரல்ட் பின்ட்டர் எழுதிய நாடகங்கள், சாம்வெல்பெக்கெட் எழுதிய 'வெய்ட்டிங் ஃபார் கோதோ' என்ற நாடகம் பிரசித்தி பெற்ற அப்ஸர்ட் நாடக வகையைச் சேர்ந்தவை. இந்த நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கங்களினால் பிறந்ததுதான் பிரபஞ்சனின் 'முட்டை'.

'முட்டை' பலமுறை நடிக்கப்பட்டு மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றாலும், இவரது நாடகத்தை இயக்கியவர்கள் அவர்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப வசனங்களையும் காட்சி அமைப்புகளையும் மாற்றி அமைத்தது பிரபஞ்சனுக்குச் சற்று நெருடலாகவே இருந்திருக்கிறது.

எழுத்தாளனின் பேனாவிலிருந்து வந்துவிழும் ஒவ்வொரு சொல்லும் அவனது ரத்தம், அவனது சதை. இயக்குநரின் கத்தரிக்கோலுக்கும் பத்திரிகை ஆசிரியரின் சிவப்பு பென்சிலுக்கும் தன் எழுத்தின் மீது எந்தவித அதிகாரமும் இல்லை என்று நினைப்பவனே தன்மானம் உள்ள எழுத்தாளன். இந்த நெருடல் சங்கதியே பிரபஞ்சனை அடுத்த நாடகம் எழுத விடாமல் செய்திருக்கிறது.

'முட்டை' என்னால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நான் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த 'டிரான்ஸ்பையர்' ஆங்கில காலாண்டு இதழில் வெளிவந்தது.

சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி. கண்டதையும் கற்று இன்புற்ற பிரபஞ்சன் ஜெர்மன் இலக்கிய கர்த்தாக்களான ஹெர்மன் ஹெஸ், தாமஸ் மன் போன்றோரின் படைப்பிலக்கியங்களைக் கற்றதின் விளைவே இவரது அடுத்த படைப்பான 'அகல்யா'.

ஹெர்மன் ஹெஸ் 'சித்தார்த்தா' என்ற தலைப்பில் எழுதிய நாவலும் தாமஸ் மன் எழுதிய 'ட்ரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ்' என்ற நாவலும் உலகப் பிரசித்தி பெற்றவை. இரண்டு எழுத்தாளர்களுமே நமது நாட்டில் வழங்கப்படும் கதைகளை சற்று வித்தியாசமான கோணத்தில் பார்த்திருக்கின்றனர். அவ்வளவுதான். ஓ! இப்படி எல்லாம் கூட கதை பண்ணலாம் என்று அறிந்து கொண்ட பிரபஞ்சன், ராமாயண காவியத்தில் ஒரு கிளைக் கதையான அகலிகையின் கதையை அவரது கோணத்திலே பெண்ணியப் பார்வை பார்த்து நாடகமாகப் படைத்துள்ளார்.

இது ஒன்றும் தமிழுக்கு புதியதல்ல. ஏற்கெனவே புதுமைப்பித்தன், கு.பா.ரா. போன்ற தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் செய்த வேலைதான். இருந்தும் பிரபஞ்சன் தன் 'அகல்யா'வை வினோதமான பாணியிலே அதி புதுமைப் பெண்ணாகப் படைத்திருப்பது அவரது கற்பனை வளத்துக்கும் எழுத்து திறமைக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. புதிய மந்தையில் பழைய கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. பிரபஞ்சனின் 'அகல்யா' என்னால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு திருவேணி ஆங்கில காலாண்டு இதழில் வெளிவந்தது.

'அகல்யா'வுக்குப் பிறகு பிரபஞ்சன் மீண்டும் தடம் பதித்த நாடகம்தான் 'மண்ணில் தெரியும் வானம்'. விக்ரமாதித்த மகாராஜாவும் வேதாளமும் கதையில் வரும் ஒரு உப கதையை தாமஸ் மன் 'டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ்' என்ற பெயரில் ஒரு நாவலாக உருவாக்கினார்.

அதே கதையைத் தழுவித்தான் பிரபஞ்சனின் நாடகமும் இருந்தது. ஆனால், இரண்டும் ஒன்றல்ல. இதில் ஜொலிக்கும் வசனம் உலகத்தரமான நாடகங்களின் பட்டியலில் சேர்க்க தகுதியானதாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.