தினமணி கதிர்

தமிழர்கள் போற்றும் பட்டிமன்றம்

'அந்நிய மண்ணில் அங்குள்ள கலாசாரம், உணவு, மாற்றுமொழி பேசும் மக்களிடம் தங்களை நாள்தோறும் பழக்கப்படுத்திக் கொண்ட தமிழர்களை திடீரென்று நாம் சந்திக்கும்போது, அவர்களுக்குள் தனிப்பட்ட பாசமும், நேசமும் உண்டாகிறது.

DIN

பொ.ஜெயச்சந்திரன்

'அந்நிய மண்ணில் அங்குள்ள கலாசாரம், உணவு, மாற்றுமொழி பேசும் மக்களிடம் தங்களை நாள்தோறும் பழக்கப்படுத்திக் கொண்ட தமிழர்களை திடீரென்று நாம் சந்திக்கும்போது, அவர்களுக்குள் தனிப்பட்ட பாசமும், நேசமும் உண்டாகிறது. பணிக்காக, கல்விக்காக அவர்கள் எந்த நாடுகளுக்குச் சென்றாலும் அங்கு பாரதியார், கம்பன் போன்ற தமிழ்ச் சங்கங்களைத் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வெற்றியும் பெறுகின்றனர்'' என்கிறார் பட்டிமன்றப் பேச்சாளர் கி.சிவக்குமார்.

தொலைக்காட்சிகளில் ஆன்மிகம், சுய முன்னேற்றப் பேச்சுகளில் தனக்கென ஒரு முத்திரைப் பதித்துவருபவர் 'செந்தமிழ்ச்சுடர்' கி.சிவக்குமார். இவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து மேடைப் பேச்சுகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், ஆன்மிக உரைகள் என ஐநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பேசியவர். பல விருதுகளைப் பெற்றவர்.

சென்னை குரோம்பேட்டையில் அண்மையில் இவரைச் சந்தித்துப் பேசியபோது:

'எனது பள்ளிப் படிப்பை நெய்வேலி தூய வளனார் பள்ளியில் படித்தேன். திருச்சி செயின்ட்ஸ் ஜோசப் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் முதுகலை சமூக, பணியியல் பாடத்தையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாகவியலும் படித்தேன்.

நெய்வேலிக்கு வருகை தந்த புலவர் கீரன், திருமுருக கிருபானந்த வாரியார், திருச்சி ராதாகிருஷ்னன், பேராசிரியர் சத்தியசீலன் உள்ளிட்ட ஆளுமைகளின் பேச்சுகளை கேட்கிற வாய்ப்பு அமைந்தது. சிறுவயதிலேயே கம்பன் விழாக்களைத் தொகுத்து, வானொலியில் ஒலிபரப்பு செய்வதையும் கேட்பேன்.

ஒருமுறை பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்த பாரதி விழா பட்டிமன்றத்தில் பேசியபோது, அவரது அறிமுகம் கிடைத்தது. அடுத்த சில நாள்களில் திடீரென்று பாரதி பாஸ்கரை சந்தித்தபோது, 'சாலமன் ஐயா பேச சொன்னார்' என்ற தகவலைப் பகிர்ந்தார். உடனே சாலமன் பாப்பையாவிடம் பேசியபோது, தொலைக்காட்சியில் பேசுவதற்கான வாய்ப்பை அளித்தார். பின்னர், ஆன்மிகம் குறித்து தினமும் காலையில் 10நிமிடங்கள் பேசும் வாய்ப்பும் கிடைத்து, அதில் 8 ஆண்டுகள் தொடர்ந்து பேசினேன்.'சிந்தனை செய் மனமே' எனும் தலைப்பில் இப்போதும் பேசி வருகிறேன்.

திருவாசகம் பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூலையும், . 'நோக்க நோக்கக் களியாட்டம்' எனும் இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூலையும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறித்து நான் பல மேடைகளில் பேசிய பேச்சுகளின் பதிவாக, தொகுப்பாக 'ஒரு மானுடன்' எனும் நூலையும் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஆன்மிக இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது.

இந்தியாவில் பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் பேசுகின்ற பல மாநிலங்கள் இருந்தாலும் மேடைப் பேச்சு பட்டிமன்றமாக பரிணமித்தது தமிழ்நாட்டில் மட்டும்தான். இன்று நேற்றல்ல. 'பன்னரும் கலைதெரி பட்டிமன்றமும்..' என்று கம்பரும், 'பட்டிமன்றம் ஏற்றுவித்தனை அப்படி..' என்று மணிவாசகரும் கூறுகின்றனர். அன்று அறிஞர்கள், தமிழறிஞர்கள் கூடி விவாதிக்கிற களமாகத்தான் இருந்தது. இன்றைக்கு, அது மாறுபட்டு பட்டிமன்றம் என்பது ஒரு சுவாரசியமான பேச்சு வடிவமாக மாறியிருக்கிறது. மற்றபடி தனிப்பேச்சு, வழக்காடு மன்றம் என்று நிறைய இருந்தால் கூட, பட்டிமன்றத்தில் இருக்கிற சுவாரசியம் எதிலும் கிடையாது.

ஒரு காலத்தில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் விடிய, விடிய பட்டிமன்றங்கள் நடந்துள்ளன. இப்போதெல்லாம் 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் பட்டிமன்ற நிகழ்வை முடித்தாக வேண்டும். இதற்குள் 6 பேச்சாளர்கள் பேசி, நடுவருடைய முன்னுரை, தீர்ப்பு, ஒவ்வொரு பேச்சாளர்களுக்குத்; தனிப்பட்ட அறிமுகம். இதெல்லாம் உள்ளது.

பேச்சாளர்கள் பார்வையாளர்களை வசீகரம் செய்ய வேண்டும் என்கிற பெரிய சவால். ஒரு சிறந்த பட்டிமன்றப் பேச்சாளரின் பேச்சில் சிறந்த கருத்து இருக்கும். நல்ல நகைச்சுவை இருக்கும், ரசனைக்கு ஏற்றமாதிரி தீனி அதில் இருக்க வேண்டும்.

இப்படியான எல்லா விஷயங்களை சேர்த்து, பல்வேறு திறமைகள் படைத்த, நல்ல வாசிப்பு மிகுந்த 7 பேச்சாளர்கள் பேசுவதை நீங்கள் பட்டிமன்றத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால், பட்டிமன்றம் தரமானதாக இருக்க வேண்டும் என்பது அமைப்பாளர், பேச்சாளர், நடுவர் ஆகிய அனைவருக்கும் அந்த எண்ணம் மனதில் ஆழமாக பதிந்திருக்க வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் 'செந்தமிழ்ச் சுடர்', சென்னை கம்பன் கழகம் சார்பில் 'வாசீக கலாநதி', 'கி.வா.ஜ. நினைவு விருது', கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் 'தமிழ் விருது', காசி தமிழ் சங்கமம் 2025-இல் 'சிறந்த பேச்சாளர் விருது' போன்ற 50-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்'' என்கிறார் சிவக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு

கொலை வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

திருமருகல் அருகே விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT