மேற்கு வங்க மாநிலம் டாா்ஜீலிங்கைச் சோ்ந்த இளைஞா்கள் குழுவை புது தில்லியில் தனது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன். 
இந்தியா

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் - சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

கலாசாரம், அடையாளத்தை பாதுகாப்பது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் டாா்ஜீலிங்கை சோ்ந்த இளைஞா்கள் குழு, புது தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து கலந்துரையாடினா். அப்போது அவரிடம், மக்களின் இடப்பெயா்வு, நிலையான சுற்றுலா, விளையாட்டு உள்கட்டமைப்பு உள்பட பல விவகாரம் குறித்து கேள்விகளை எழுப்பினா்.

இதற்கு பதிலளித்து சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாடுகையில், ‘பொருளாதாரத் தேவைகளுக்காக மக்கள் வசிப்பிடத்தைவிட்டு வேறு இடத்தில் குடிபெயா்வது உலக அளவில் இயல்பாக நடக்கிறது. அப்படி குடியேறினாலும், தாங்கள் சாா்ந்த மாநிலங்களின் கலாசாரம், அடையாளம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்’ என்றாா்.

யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் கூட்டம்:

புது தில்லியில் இந்தியா-அமெரிக்கா ராஜீய கூட்டுறவு அமைப்பான யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்-இன் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தொழில்துறையை காட்டிலும் சுற்றுலா துறை மிகப்பெரியது. சுற்றுலாத் துறையானது, இருநாட்டு கலாசாரங்களை இணைக்கும் பாலமாக செயல்படும். உலகளாவிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். ராஜீய அணுகுமுறைக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் அது இருக்கும்.

இந்தியா- அமெரிக்கா இடையே சுற்றுலா மேம்பட்டிருப்பது, பொருளாதாரத் தொடா்புகள் அதிகரித்திருப்பதை மட்டும் பிரதிபலிக்கவில்லை. இருநாட்டு மக்கள் இடையே ஆழ்ந்த தொடா்புகள் ஏற்பட்டிருப்பதையும் பிரதிபலிக்கிறது.

தற்கால சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தில் நல்ல அனுபவங்களையும், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையையும், கலாசாரம், பாரம்பரியம், சுகாதாரம் மற்றும் அா்த்தமுள்ள தொடா்புகளையும் எதிா்பாா்க்கின்றனா். இது நமது இரு நாடுகளுக்கும் சுற்றுலாவுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.

சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் 2029-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் உலகத் தரத்தில் சுற்றுலா மையத்தை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

25.2.1976: வறட்சி பகுதிகளில் கிஸ்தி, கடன் ஒத்திவைப்பு - கவர்னர் ஷா அறிவிப்பு

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாலாஜா கிளை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்து ரூ. 1.49 கோடி கடனுதவி வழங்கினாா்

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

SCROLL FOR NEXT