தினமணி கதிர்

புதிய கிருஷ்ணா

விசாகபட்டணத்தின் புறநகர் பகுதி. ஒரு காலத்தில் 'ஆட்டோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்' என்று அழைக்கப்பட்டு இன்று ஒரு சில தொழிற்சாலைகளும், பல வீடுகளுமாக 'ஆட்டோநகராக' மாறியிருக்கும் காலனி.

ரமணன்

விசாகபட்டணத்தின் புறநகர் பகுதி. ஒரு காலத்தில் 'ஆட்டோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்' என்று அழைக்கப்பட்டு இன்று ஒரு சில தொழிற்சாலைகளும், பல வீடுகளுமாக 'ஆட்டோநகராக' மாறியிருக்கும் காலனி.

'நீங்கள் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாதா?''

'நிச்சயமாக முடியாது சர்மா சார். உங்களுக்குக் கொடுத்த மூன்று வாய்ப்புகளையும் நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள். இது எங்கள் தலைமை அலுவலகம் எடுத்த முடிவு. நான் எதுவும் செய்வதற்கில்லை.''

தேசிய வங்கிக் கிளையின் அந்த இளம் வயது மேலாளரின் குரலும் உடல்மொழியும், 'நீங்கள் போகலாம்' என்ற சொல்லாத வார்த்தையைச் சர்மாவுக்கு சொல்லியது.

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் அந்தக் கிளை தொடங்கப்பட்டபோது, அவர்கள் அழைப்பின்பேரில் தன்னுடைய சர்மா இன்டஸ்ட்ரீஸின் கணக்கைத் தொடங்கிய முதல் வாடிக்கையாளர் அவர். அந்த எஸ்டேட்டில் முதலில் தொடங்கப்பட்ட சிறு தொழிற்சாலைகளில் ஒன்று அவருடையது. பஞ்சாப் மாநில கிராமம் ஒன்றிலிருந்து இடம்பெயர்ந்து விசாகப்பட்டணத்துக்கு வந்து அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்பிங் யார்ட்டில் மெக்கானிக்காக சேர்ந்து ஃபோர்மேனாக உயர்ந்தவர்.

பஞ்சாபிகளின் இயற்கை குணமான சொந்தத் தொழிற்சாலையைத் தொடங்க ஆர்வம் கொண்டு 'சர்மா இன்டஸ்டிரிஸை' தொடங்கியவர். அவரது தொழில்திறன்,நேர்மை, நேரம் தவறாமை, எல்லாம் அவரது வெற்றிக்கு வழிவகுத்தது. அரசு நிறுவனமான ஷிப்பிங் யார்டும் அவருக்கு சீரமைப்புக்கும்,சர்வீஸூக்கும் வரும் கடற்படை கப்பல்களின் சில பணிகளை அவருக்குக் கொடுத்து ஆதரித்துவந்தன.

வங்கியிலிருந்து மிக மன அழுத்தத்துடன் மெல்ல அதே காலனியிலுள்ள வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் பூட்டப்பட்டிருக்கும் தன் ஒர்க்ஸ் ஷாப்பையும் கேட்டில் ஓட்டப்பட்டிருக்கும் நோட்டீஸையும் பார்த்தபோது, கண்களில் நீர் கட்டியது. பணமாற்ற அறிவிப்பால் வியாபாரிகளிடம் பணப் புழக்கம் குறைந்ததால், அவருக்கு வர வேண்டிய பணம் நிலுவையாகி வராமலே போனது. தொடர்ந்து சுனாமி சூறாவளியாக வந்த கரோனாவால் விளைந்த விபத்தாக அழிந்த சிறு தொழில்களில் இவருடையதும் ஒன்று. அரசின் சிக்கன நடவடிக்கையாக ஷிப்பிங் யார்டின் பட்ஜெட் குறைக்கப்பட்டதால் அவர்களிடமிருந்தும் ஆர்டர்கள் இல்லை.

வங்கிக் கடனின் வட்டிக்கும் தொழிலாளிகளுக்கும் தன் சேமிப்பிலிருந்து ஓராண்டு கொடுத்து வந்தார். பின் அது இயலாது போனது. மாதாந்திரத் தவணையைச் தவறாமல் கட்டி வந்த வங்கிக் கடனுக்கு இப்போது வட்டி கூடக் கட்ட முடியாது போன நிலையில், வங்கி இவரது தொழிற்சாலையையும் இயந்திரங்களையும் ஏலமிட அறிவித்திருக்கிறது. முன்போல் கடன் நிலுவைகளுக்காக வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு பெற்று, நீதிமன்றம் மூலமாகவே அடமானமாகப் பெறப்பட்ட சொத்துகளை விற்க வேண்டியதில்லை. அவர்களே நேரடியாக விற்றுக் கடன் நிலுவைக்கு எடுத்துகொள்ள சட்டங்கள் வந்துவிட்டன.

வீடு திரும்பிய சர்மா 'ஒன்றுமில்லாமல் வெறுங்கையுடன் இந்த நகருக்கு வந்து உழைத்து உருவாக்கிய சொந்தத் தொழிலையும், வீட்டையும் இழந்து வெறுங்கையுடன் திரும்ப பஞ்சாப்பில் தன் கிராமத்துக்குப் போக வேண்டிய நிலையை' எண்ணினார். மனைவி இறந்தபோதும், மகன் சண்டையிட்டுப் பிரிந்தபோதும் உணர்ந்த இழப்பின் வலியைவிட இப்போது அதிகம் உணர்ந்தார். 'கிராமத்துக்குப் போனாலும் இத்தனையாண்டுகளுக்குப்பின் அங்கு எனக்கு யார் இருக்கிறார்கள்? இந்த வயதில் என்ன செய்ய முடியும்?' என்ற சிந்தனை அவரை அழுத்திக் கொண்டிருந்தது.

வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை. இறங்கியது கம்பீரமாக நல்ல உயரத்தில் பளிச் முகத்துடன் ஓர் இளைஞன். வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் அதிகாரியாக இருக்கும் என்று நினைத்தார். 'நமஸ்காரம் சார்'' என்று குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான் அந்த இளைஞன்.

'என்னைத் தெரியவில்லையா சார். நான் வம்சி கிருஷ்ணா. 10ஆண்டுகளுக்கு முன்னால் உங்கள் உதவியால் பாலிடெக்னிக்கில் படித்தவன். மும்பையில் ஒரு என்ஜினீயரிங் கம்பெனியில் வேலை செய்தவுடன் நேவியில் சேர்ந்

திருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதத்தால் நன்றாயிருக்கிறேன் சார்'' என்றான். சர்மாவுக்குச் சுத்தமாக நினைவில்லை. ஆனால் அவனைப் பார்த்தபோது தன் மகன் கிருஷ்ணாவும் இன்று இப்படித்தானே இருப்பான் என்று அவர் மனம் எண்ணியது நிஜம்.

தொழில் நன்றாயிருந்தபோது ஆண்டுக்கு இரண்டு ஏழை மாணவர்களை பாலிடெக்னிக்கில் சேர்த்துப் படிக்க வைத்தார். பலர் சில ஆண்டுகளுக்குக் கடிதம் எழுதுவார்கள், பின்னர் புத்தாண்டுக்கு வாழ்த்து அனுப்புவார்கள். பின்னர் அதையும் மறந்து விடுவார்கள்.

சர்மாவுக்கு மெல்ல நினைவுக்கு வந்தது. வெடவெடவென்று ஒல்லியான ஒரு பையன். இவரிடம் வேலை கேட்டு வந்தபோது, அவனுடைய பிளஸ் 2 மதிப்பெண்களைப் பார்த்து மெக்கானிக் வேலை கொடுக்காமல் பாலிடெக்னிக்கில் சேரச் சொல்லிப் பணஉதவி செய்ததும், மும்பை நிறுவனத்தில் வேலைகிடைத்தபோது, இது போல வந்து தன்னிடமும் மனைவியிடமும் ஆசி பெற்றதும் நினைவில் வந்து போயிற்று.

'ஒ.. நினைவுக்கு வருகிறது வம்சி. இங்கே எப்படி லீவில் வந்திருக்கியா?''

'இல்லை சார் நான் இப்போது ஷிப்பிங் யார்ட்க்கு வந்திருக்கும் ஐ.என்.எஸ். ராணாவில் என்ஜினீயரிங் ஆபிஸராகயிருக்கிறேன். இன்று உங்களைப் பார்க்க அனுமதி பெற்று வந்தேன். நேராக ஒர்க்ஸ் ஷாப்புக்குப் போனேன். நோட்டீஸை பார்த்து ஷாக்காகி விட்டேன். அதனால் வீட்டுக்கு வந்தேன். என்ன ஆயிற்று சார்?''

சற்று நேரம் எதுவும் பேசாமலிருந்தார். சர்மா. அந்த அமைதி சூழலைக் கனமாக்கியது.

பின்னர் சுருக்கமாக நிலைமையைச் சொல்லுகிறார். தன்னுடைய சேமிப்பிலிருந்து உதவமுன் வரும் வம்சி கிருஷ்ணாவிடம், 'வேண்டாம் கடன் மிக அதிகம் உன் சேமிப்பை வீணாக்காதே. கடவுள் சித்தம் போல நடக்கட்டும். உன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லு'' என்கிறார்.

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த வம்சி, ' நான் சாரை இன்று டின்னருக்கு அழைத்துப் போக விரும்புகிறேன்'' என்கிறான். சிரித்துகொண்டே மறுத்துவிட்டு, 'மனைவியின் இறப்புக்குப் பின் நானே சமைத்ததை மட்டும் தான் சாப்பிடுகிறேன். வெளியில் சாப்பிடுவதில்லை. மேலும் நான் அக்னி ஹோமம் வளர்த்துப் பிரார்த்தனை செய்தவுடன் தான் சாப்பிடுவேன்'' என்கிறார்.

'நல்லது சார். நாளை மறுநாள் எனக்கு விடுமுறை. நான் காலையில் வருகிறேன்'' என்று சொல்லிக் கிளம்புகிறான்.

சர்மா அக்னி ஹோத்திரம் செய்யும் பிரிவைச் சேர்ந்தவர். வீட்டில் ஒரு சிறிய அக்னி குண்டத்தில் எப்போதும் நெருப்புத் தணலாகக் கனிந்து கொண்டிருக்கும். காலை சூரிய உதயத்தின்போதும் மாலை சூரிய அஸ்தமனம் போதும் அதிலிருந்து எடுத்து ஹோம குண்டத்தில் அக்னி வளர்த்துப் பிரார்த்தனை செய்பவர். இன்றைய மாலையில் அதற்கான நேரம் வந்துவிட்டதால் அதைத் தயார் செய்கிறார்.

மறுநாள் காலையில் அவருக்கு ஒரு பதிவு தபால். இந்துஸ்தான் யார்ட்டிலிருந்து டெண்டரில் பங்குகொள்ள ஓர் அழைப்பு. கடற்படையின் மிகப் பெரிய கப்பல் ஒன்றின் என்ஜினைப் பழுது பார்க்கும் பணி. அதைக் கையாண்ட முன் அனுபவமும், திறனும் இருப்பதால் யார்டின் ஜெனரல் மானேஜர் சர்மாவுக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார். சர்மாவை நன்கு அறிந்த அவருக்குச் சர்மாவின் இப்போதைய நிலை தெரியாது. கடிதத்தைப் பார்த்து சர்மா சிரித்துகொள்கிறார்.

மறுநாள் காலையிலேயே வந்த வம்சியோ, சர்மாவின் ஹோமம், பிரார்த்தனை எல்லாம் முடியக் காத்திருக்கிறான்.

'சார் நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்'' என்று 15 நிமிடம் பேசுகிறான். இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டிருந்த சர்மா, 'வேண்டாம் வம்சி இது சரியான முடிவில்லை. உன் வயதுக்கும் திறமைக்கும் நேவியில் நீ கமாண்டராகவும் உயரக் கூடிய வாய்ப்பிருக்கிறது. அதைக் கெடுத்துக் கொள்ளாதே'' என்கிறார்.

'இல்லை சார் நீங்கள் இந்தத் திட்டத்தை ஏற்காவிட்டாலும் கூட நான் தனியாகத் தொழில் ஆரம்பிக்கத்தான் போகிறேன்'' என்கிறான். குரலில் தெரிந்த உறுதி அவன் கண்களில் மின்னியது.

'சரி யோசித்துச் சொல்லுகிறேன். நாளை மாலை வா பேசுவோம்'' என்கிறார் சர்மா.

வம்சி கிருஷ்ணா சொன்ன பிளான் இதுதான். சில ஆண்டுகளுக்குப் பின்னர் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, தனியாக என்ஜினீயரிங் தொழில் என்ற கனவுகளுடன் இருக்கும் அவன் அதை இப்போதே சர்மா இண்டஸ்ட்ரியில் பார்ட்னராக இணைந்து செய்ய விரும்புவதாகவும் முதலில் தன் ஆறு ஆண்டு சேமிப்பையும் சில மாதங்களில் வரும் கிராஜ்விட்டி, பி.எஃப். பணத்தையும் தன் முதலீடாக வங்கியில் வட்டி நிலுவைக்காகச் செலுத்திக் கடன் வசதியைத் திரும்பப் பெற்றுத் தொழிலை நடத்தலாம் என்பதுதான்.

அன்று இரவு முழுவதும் அவரைத் தூங்கவிடாமல் செய்தது இந்த பிளான். 'தொழில் சரியாகப் போகவிட்டால் இந்தச் சின்ன பையன் வாழ்க்கையை இழந்துவிடுவான்' என்றும், 'எப்படியும் தனித்தொழில் தொடங்கப்போகிறேன் என்று சொல்லுகிறான். இன்றைய நிலையில் புதிதாகத் தொழில் தொடங்குவதில் இருக்கும் சவால்களை அறிந்த அவர் வம்சிக்கு உதவி செய்யலாமோ?' என்று மாறி மாறி எண்ணங்கள் சுழன்றடித்தன.

மறுநாள் காலை வந்த மற்றொரு கடிதம் அவரை முடிவெடுக்கச் செய்தது. அது டெண்டர்கள் எதுவுமில்லாமல் ஷிப்பிங்யார்ட் நேரடியாக ஜாப் ஒர்க்குகளுக்கு கொடுக்கும் இரண்டு பெரிய ஆர்டர்கள். பட்ஜெட் பிரச்னைகள் தீர்ந்து ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று புரிந்துகொண்டார். அவர் அறியாமல் இந்த வம்சி பையனின் ராசி என்று அவர் மனம் எண்ணத் தொடங்கியது.

திட்டமிட்டபடி, வம்சி கிருஷ்ணா பார்ட்னராக இணைகிறான். சர்மாவின் கம்பெனிக்குக் கடற்படை கப்பலின் எஞ்சின் சீரமைப்பு ஆர்டர் கிடைக்கிறது. கப்பலின் 3 ராட்சத என்ஜின்களில் ஒன்று அது 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன் அட்வான்ஸ் தொகையுடன் ஆர்டர் கிடைக்கிறது. ஆதித்யாவின் சேமிப்பையும் இந்த அட்வான்ஸ் பணத்தையும் செலுத்தி ஏலத்தை நிறுத்த வங்கிக்குக் கோரிக்கை வைக்கிறார் சர்மா. முன்னாள் கடற்

படைவீரரான இளைஞன் பார்ட்னராக இணைந்தது, கிடைத்திருக்கும் பெரிய ஆர்டர் போன்றவற்றால் வங்கி ஏலத்தை ஒத்தி வைத்துப் பணி செய்ய அனுமதி வழங்குகிறது.

வம்சியுடன் சர்மா கம்பெனியின் பழைய தொழிலாளிகளும் இணைந்து இரவு பகலாக எல்லா ஷிப்ட்டுகளிலும் உழைக்கிறார்கள். இந்தியக் கடற்படையின் காண்டிராக்ட் பணிகளை ஷிப்யார்டின் ஷெட்டில்தான் செய்ய வேண்டும். அந்த ராட்சத எஞ்சினின் முழு ஜாதகத்தையும் நன்கு அறிந்த சர்மாவின் அனுபவம் கைகொடுக்க, வம்சியின் திறமையான மேற்பார்வையில் நான்கு மாதத்தில் முடிக்க வேண்டிய பணி, இரண்டே மாதத்தில் முடிகிறது. ஷிப்யார்ட் நிர்வாகம், கடற்படை அதிகாரிகள், ஆச்சரியமடைகிறார்கள். சர்மாவைப் பாராட்டுகிறார்கள். என்ஜினைச் சோதனை செய்ய மும்பையிலிருந்து வந்த கடற்படையின் டெஸ்டிங் டீம் மிகத் திருப்தியடைந்ததோடு மற்ற இரண்டு என்ஜின்களின் பணிகளையும் அவர்களுக்கே கொடுக்கிறார்கள். இது சர்மா எதிர்பாராதது அந்தச் சவாலையும் வெற்றிக்கரமாக முடிக்கிறது சர்மாவின் குழு.

அது இந்தியக் கடற்படையின் முக்கியமான கப்பல். வயதாகி 'டி கமிஷன்' என்ற ஓய்வைப் பெற வேண்டிய நிலையில் இருக்கும் கப்பல், புதிதாக வாங்கும் செலவைவிட இதைச் சீராக்கினால் இன்னும் 10 ஆண்டுகள் உழைக்கும் என்ற கடற்படை தலைமையகத்தின் யோசனையை ஏற்று ராணுவ அமைச்சகம் அனுமதித்திருக்கிறது. அந்தக் கப்பலின் பணிகள் விறுவிறுப்பாகத் திட்டமிட்டதைவிடக் குறைந்த நாட்களில் நிறைவேறிக் கொண்டிருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. தயாரான கப்பலை மீண்டும் கடற்படையில் பிரதமர் முன்னிலையில் இணைக்கும் நாள் குறிக்கப்படுகிறது. நாள்கள் நெருங்க, நெருங்க, இந்தக்கப்பல் மட்டுமில்லை, கப்பல் கட்டும் அந்தத் தளமே புதுப்பொலிவில் மின்னுகிறது.

எல்லாப் பணிகளும் முடிந்து விழா நாளுக்குத் தயாராகயிருக்கிறது அந்த ராட்சதக் கப்பல். ஷிப்யார்டின் தலைமை நிர்வாகி சந்திரசேகரைச் சந்தித்துச் சர்மா விழா நாளின் அதிகாலையில் கப்பலுக்குதான் ஒரு பூஜை செய்ய அனுமதி கோருகிறார். சந்திரசேகர் பூஜைகளின் பலத்தை அறிந்தவர் அனுமதிக்கிறார். அலுவலகத்தினரைத் தேவையான உதவிகளைச் செய்யச்சொல்லுகிறார்.

விழா நாளின் அதிகாலையில் சர்மா அந்தப் பிரம்மாண்டமாக நிற்கும் கப்பலின் முன்னால் அக்னி வளர்த்து 108 முறை மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபிக்கிறார். அது மிகச் சக்தி வாய்ந்த மந்திரம். யாருக்காக வேண்டுகிறார்களோ, அவருக்கு நீண்ட ஆயுளையும், பாதுகாப்பையும் கொடுக்கும் வலிமை பெற்றது. சர்மா அந்தக் கப்பலையும் ஒரு உயிராகக் கருதி, அதற்கு நீண்ட ஆயுளையும் பாதுகாப்பையும் வேண்டிச்செய்கிறார். அதில் கலந்துகொண்ட சந்திரசேகர், சர்மாவை அழைத்து ஏதோ சொல்லுகிறார். அப்படியா என்று ஆச்சரியப்பட்ட சர்மாவின் முகம் மலர்கிறது. நன்றி என்கிறார். நா தழுதழுக்கிறது.

பிரதமர் வருகைக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள், அவர் நுழைந்தவுடன் கடற்படையின் பிகிள் ஊதப்படுகிறது. கப்பலில் தேசியக் கொடியும், இந்தியக் கடற்படை கொடியும் ஏற்றப்படுகிறது. குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் பிரதமர் பூஜிக்கப்பட்ட தேங்காயை 'ஹல்' என்றழைக்கப்படும் கப்பலின் அடிப்பகுதியின் கூரான முனையில் தட்டி உடைக்கிறார். முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியில் ஷாம்பெயின் பாட்டில் தட்டி உடைக்கப்படும். கப்பல் பயணங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நூறாண்டுகளாக கடைப்பிடிக்கும் சம்பிராதயம். இந்தப் பிரதமர் வந்த பிறகு தேங்காய்தான் உடைக்கப்படுகிறது. அவர் பட்டனை அழுத்திய விநாடியில் தண்டவாளங்களில் நிற்கும் கப்பல் மெல்ல வழுக்கிக் கடலுக்குள் பாய்கிறது.

ஐ,என்.எஸ். காவேரி இந்த விநாடி முதல் இந்தியக் கடற்படையில் இணைகிறாள் (கடற்படைக் கப்பல்கள் பெண் பால் என்பது மரபு) என்ற அறிவிப்பு ஒலிக்கிறது. கூடியிருக்கும் கடற்படையினரின், தொழிலாளர்களின் முகங்களில் சந்தோஷமும், பெருமிதமும்.

பிரதமர் தனது உரையில், 'கடந்த 10ஆண்டுகளில் இந்தியக் கடற்படையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களின் உச்சகட்டம், இந்தக் கப்பலை இன்று கமிஷன் செய்திருப்பது, அந்நியச் செலவாணி மிச்சம் மட்டுமில்லை. இந்தியர்களின் கப்பல்களைச் சிறப்பாகச் சீரமைக்கும் பணிகளை உலகுக்குச்சொல்லும் அடையாளம்'' என்று பேசுகிறார். தளத்தின் தலைவரையும் அதிகாரிகளையும் பாராட்டுகிறார். பதக்கங்களும் கேடயங்களும் வழங்கப்படுகின்றன. சிறப்பாக ஒத்துழைத்த தனியார் நிறுவனங்களும் கௌரவிக்கப்படுகிறன்றன. 'வம்சி கிருஷ்ணா, டைரக்டர் சர்மா இன்ட்ஸ்டிரிஸ்'' என்று நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் பெண்ணின் குரல் அழைக்கிறது.

காலையில் சந்திரசேகர் செய்தியைச் சொன்னவுடன் சர்மா, தனக்குப் பதில் மகன் வம்சி கிருஷ்ணாவை அழையுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். வம்சி மேடைக்கு வரும் முன் பிரதமரிடம் சந்திரசேகர் ஏதோ சொல்லுகிறார். 'அவரையும் அழையுங்கள்'' என்கிறார் பிரதமர். உடனே கட்டித்தூக்காத குறையாகக் கடற்படை அதிகாரிகள் சர்மாவைக் கொண்டு வந்து பிரதமர் அருகில் நிறுத்துகிறார்கள்.

'பெருமைப்பட வேண்டிய தந்தை நீங்கள், மகனை ஊக்குவித்துச் சவாலான பணியைச் செய்ய உதவிசெய்து மகனைப் பெருமையடையச் செய்திருக்கிறீர்கள்'' என்று ஒரு சால்வையை அணிவித்து அவரை ஒருபுறமும், வம்சிகிருஷ்ணாவை மறுபுறம் அணைத்துக்கொண்டு நிற்கிறார். மறுநாள் செய்தித்தாள்களின் முன்பக்கச் செய்திக்கான போட்டோக்கள் கிளிக் ஆகின்றன.

பிரதமர் சென்றபின் சந்தடிகள் குறைந்தபின் சந்திரசேகர் சர்மாவிடம் வம்சி, 'நான் உங்கள் காணாமல் போன மகன் என்று சொல்லவே இல்லையே'' என்று கேட்கிறார். சில விநாடி மௌனத்துக்குப் பின்னர், 'பணமாற்றத்தில் அரசு நம் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக வேறு கொடுத்தார்கள் இல்லையா? அதுபோலக் கடவுள் என் பழைய மகன் கிருஷ்ணாவுக்குப் பதிலாக புதிய கிருஷ்ணாவை கொடுத்திருக்கிறார்'' என்றார். குழம்பிப் போய்ப் பார்க்கும் சந்திரசேகருக்குத் தன் தற்போதைய நிலையும் வம்சியின் கதையையும் சொல்லுகிறார். நெகிழ்ந்துபோன சந்திரசேகர், ' சர்மா.. நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர்'' என்கிறார்.

அருகிலிருந்து கேட்டுகொண்டிருந்த வம்சி எப்போதும் சர்மாவை, 'சார்' என்று அழைப்பவன், 'அப்பா வீட்டிற்குப் போகலாம்'' என்று அவர் கையைப் பிடிக்கிறான். சர்மாவின் உடல் சிலிர்க்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT