குழந்தைகளுக்கு உறவுகள் பற்றி தெரிய வேண்டும் - தேவயானி!
தேவயானி நடிப்பில் உருவாகியிருக்கிற 'நிழற்குடை' படம் திரையரங்குகளில் வெளியாகி பரவலான பாராட்டுதல்களை பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின் தேவயானி நடித்த தமிழ் திரைப்படம் இது. இப்படத்தில் தேவயாணி இலங்கைத் தமிழராக நடித்திருக்கிறார். படம் தொடர்பாகவும் தன்னுடைய பர்சனல் பக்கங்கள் தொடர்பாகவும் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் தேவயானி.
ரொம்ப வருடங்கள் கழித்து ஒரு படம் நடித்திருக்கிறேன். சரியான கதாபாத்திரங்கள் அமையாததுதான் படம் கொடுக்காததற்கு காரணம்.சரியான படம் வர வேண்டும் என காத்துக் கொண்டு இருந்தேன். அப்படியான ஒரு திரைப்படம்தான் இந்த நிழற்குடை. இந்தக் கால கட்டத்தில் முதியோர் இல்லங்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. குழந்தைகள் இப்போது அதிகமாக ஃபோன், லாப்டாப், விடியோ கேம் என அடிமையாகி இருக்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். நம்ம குழந்தைகளுக்கு உறவுகள் பற்றி அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். எங்களுடைய குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.
நானும் ராஜகுமாரன் சாரும் இப்போது வரைக்கும் குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய நேரத்தை 100 சதவீதம் எங்களுடைய குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். வேலை செய்கிற ஆள்களை நாங்கள் நம்பி இருந்தது கிடையாது. டிரைவர் இருந்தாலும் நான் காரோட்டி என்னுடைய குழந்தைகளை பள்ளிகளில் விடுவேன். இப்போது எங்கள் வீட்டில் டிரைவரும் கிடையாது. சமையலுக்கும் ஆள்கள் கிடையாது. சமையலுக்கு ஆட்கள் இருந்த போதும் நான் சமைப்பேன். இப்போது முழுவதுமாக நாங்கள்தான் சமைக்கிறோம். கரோனாவுக்குப் பிறகு நிலைமை மாறி விட்டது. எங்கள் வேலைகளை நாங்கள்தான் செய்கிறோம். குழந்தைகளுக்கு அதுதான் பிடிக்கும். நாங்கள்தானே குழந்தைகளை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தோம்.
அவர்களை நாங்கள்தான் பார்த்து கொள்ள வேண்டும். அவர்கள்தான் எங்களுடைய பெரிய சொத்து.
இந்த வருடத்தில் அடுத்தடுத்து படங்கள் வரும். சரியான கதாபாத்திரங்கள் அமைந்தால் நிச்சயமாக சேர்ந்து நடிப்பேன். சின்ன பட்ஜெட் படங்களும் இங்கே அதிகமாக ஓட வேண்டும். இப்போது நிலைமை அப்படி இல்லை. இப்போது வன்முறை அதிகமாக இருக்கிற படங்கள் வருகின்றன. அதற்கு மத்தியில் நல்ல மெசேஜ் இருக்கிற படங்களும் வர வேண்டும். நான் மற்ற மொழி படங்களை விட தமிழ் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க இருக்கிறேன்'' என்றார் தேவயானி.
எல்லாவற்றுக்கும் அம்மாவே காரணம் மீனா!
நடிகை மீனா கடந்த அன்னையர் தினத்தையொட்டி தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ''மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், வெளிச்சத்தையும் மட்டுமே அறிவார்கள். ஆனால், என்னுடைய இந்த சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் என்னுடைய அம்மா இருந்தார்.அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். இப்போது குட்டி சக நடிகையான என்னுடைய மகள் அந்த இடத்தில் இருக்கிறார். ஒரு மகளாக இருந்ததன் மூலம் நான் நிறைய வலுவடைந்திருக்கிறேன். ஒரு தாயாக இருப்பதன் மூலம் எதுவுமே என்னை தடுக்க முடியாத நிலையை எட்டியிருக்கிறேன். இந்த அன்னையர் தினத்தில் ஒரு மகளாக நான் வளர்ந்த நாள்களையும் ஒரு தாயாக என் மகளை வளர்க்கும் நாள்களையும் மனம் மகிழ கொண்டாடுகிறேன்'' என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார் மீனா.
பத்மபூஷண் விருது, அரசியல்... சிம்ரன் பதில்!
சிம்ரன் சமீபத்தில் வெளியான அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சசிகுமாருக்கு ஜோடியாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் நடித்திருந்தார். கடந்த மே 1 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்... சிம்ரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இந்தப் படம் வெற்றி அடைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஃபேமிலி திரைப்படம் வெற்றி அடைந்திருக்கிறது. குட் பேக் அக்லி படம் கூட திரும்ப பிரியாவை உருவாக்கி இருக்கிறது. அதனால் எனது ரசிகர்களுக்கு நன்றி. என்னுடைய முப்பது வருட பயணத்தில் இதுதான் சிறந்த தருணம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து பெண்களை மையப்படுத்தும் கதைகளில் நடிப்பீர்களா? என்று கேட்டபோது, 100 சதவிகிதம் பெண்களை மையப்படுத்தும் படங்களில் நடிப்பேன். இப்போது ரசிகர்களுக்கு நல்ல படங்கள் பிடிக்கின்றன.
பெண்கள் தொடர்பான பெண்களை மையப்படுத்தும் படங்களை செய்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். எந்த படமாக இருந்தாலும் அதில் கதைதான் எல்லாம் என்று கூறியிருக்கிறார். உங்களுடன் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள், அதில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 'நான் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன். குட் லக்' என்று கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து அஜித் பத்மபூஷண் விருது வாங்கி இருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்று கேட்கப்பட்டபோது, 'அஜித் பத்ம பூஷண் விருது பெற்றதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அஜித் அதற்கு தகுதியானவர்' என்று சிம்ரன் கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.