மே 9-இல் நடைபெற்ற ஐசரி கணேஷின் இல்லத் திருமண விழாவில் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் ரவி மோகனுடன் (ஜெயம் ரவி) வந்தபோது, வதந்திகள் உண்மையானது. திடீரென்று கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் கெனிஷா ஃபிரான்சிஸ்.
நடிகை, மேலைநாட்டு நடனக் கலைஞர், மனக் குறைகளைக் குணப்படுத்துபவர் என்று பல முகங்கள் கெனிஷா ஃபிரான்சிஸ்ஸுக்கு உண்டு. கெனிஷா எட்டு வகையான லத்தீன் நடனங்களைக் கற்றுள்ளார். கோவாவின் பார்ட்டி கிளப்புகளில் அவர் பிரபலம். பெற்றோர் காலமாகிவிட்டதால், தனிக்காட்டு ராணி.
கென்யாவில் பிறந்து வளர்ந்தவர். அப்பா தமிழ் வம்சாவளி. அம்மா கென்யாவைச் சேர்ந்தவர். தாயார், மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறாராம். அப்பாவும் பாடகர். கென்யாவில் கெனிஷா ஃபிரான்சிஸ் வளர்ந்தாலும், பல நாடுகளில் வசித்திருக்கிறார். மயக்கும் குரல், அற்புதமான பாடல் நிகழ்ச்சிகளில் கோவாவின் 'பப்'களை உற்சாகத்தால் நிரப்பியவர். பெங்களூரில் பல ஆண்டுகள் வசித்த இவர், தற்போது கோவாவில் வசிக்கிறார்.
கெனிஷா 'தி ஸ்டேஜ்' என்ற ரியாலிட்டி ஷோவில் இறுதிப் போட்டியாளர் என்ற கட்டம்வரை சென்றவர். பிறகு பாடகியானார். நேரடி நிகழ்ச்சிகள், தனி நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களை கவர்ந்த அவரது திறமை புகழை உச்சிக்குக் கொண்டு சென்றது.
கெனிஷா தனது இசை எல்லைகளை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மொழிகளில் விரிவுபடுத்தினார். திறமையான நடனக் கலைஞராகவும், உரிமம் பெற்ற உளவியலாளராகவும் பரிணமித்தது கெனிஷாவை தனியாக எடுத்துகாட்டியது. இசையின் மீதான ஆர்வம், மனவள சிகிச்சையாளராக மாறியது, கெனிஷாவின் தாயிடமிருந்து தொத்திக் கொண்ட விஷயங்கள். கெனிஷா, 'ஸீ' மியூசிக் தயாரித்த 'ப்ளூ நைனா' என்ற வீடியோ பாடல் மூலம் ஹிந்தி இசையில் புயலாக அறிமுகமானார்.
கெனிஷா தென்னிந்திய பிரபலங்கள், பாடகர்களுடன் தொழில் ரீதியான தொடர்பில் இருப்பவர். கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் ஒரு லட்சம் பேர்கள் பின்தொடர்கின்றனர். தற்போது அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இத்தனை திறமையிருந்தாலும் ரவி மோகனுடன் தொடர்பில் கெனிஷா வந்ததும்தான் பேசு பொருள் ஆனார்.
ரவியும் கெனிஷாவும் முதன்முதலில் சந்தித்துப் பழகியது 'இதயம் சொல்வதோ' பாடலின் வெளியீட்டு நிகழ்வில்தான். ரவி கெனிஷாவிடம் மனவள சிகிச்சை பெறத் தொடங்கியதும், அவர்கள் தொடர்பு வேறு நிலைக்குச் சென்றுள்ளது. ரவியை கெனிஷாவின் மயக்கும் குரல் ஈர்த்துள்ளது. ஒரு உளவியலாளராக கெனிஷா ரவிக்கு உளவியல் ரீதியாக நெருக்கமாகியுள்ளார்.
கோவாவில் கெனிஷாவும் ரவியும் வேகமாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செய்தி ஆர்த்திக்கு தெரியவந்தபோதுதான் இருவரின் நெருக்கமும் அவருக்கு தெரிந்தது.
ரவி கோவாவில் சொந்தமாக பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கு பிறகு ஆர்த்தியுடனான தனது 14 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக ரவி மோகன் சமூக ஊடகங்களில் அறிவித்தார், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்பைக் குறிப்பிட்டு ஆர்த்தி எழுதிய பதிவு, ரவிக்கும் பாடகருக்கும் உள்ள உறவுதான் திருமண முறிவுக்குக் காரணம் என்று அர்த்தப்படுத்தியது.
திருமணப் பிரச்னைகள் காரணமாக, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த பிறகு ரவி உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் அனுபவிக்கும் உளைச்சலில் இருந்து மீள ரவி கவுன்சிலிங்குக்காக கெனிஷாவை அணுகியுள்ளார். சென்னையில் இதுபோன்ற கவுன்சிலிங் வசதிகள் இருந்தாலும், செய்தி எப்படியாவது வெளிவந்துவிடும் என்பதால் அவரை அணுகினார்.
கோவாவில் இதுபோன்ற கவுன்சிலிங் சென்டர்களை ஏற்படுத்த கெனிஷா திட்டமிட்டு வருகிறார். இதற்காக, கேனிஷாவுடன் ரவியும் இணைவார் என்று சொல்லப்படுகிறது.
-சுதந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.