ஐஸ் கிரீம் 
தினமணி கதிர்

'ஜில்'லுன்னு ஒரு கதை...

மிரள வைக்கும் கோடை வெயிலில் ஐஸ் மோர், லஸ்ஸி, குளிர்பானங்கள், ஜூஸ் வகையறாக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

எஸ். சந்திரமெளலி

மிரள வைக்கும் கோடை வெயிலில் ஐஸ் மோர், லஸ்ஸி, குளிர்பானங்கள், ஜூஸ் வகையறாக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றைவிட மக்களால் அதிகம் விரும்பப்படுவது 'ஐஸ் கிரீம்'.

கி. மு. 200-ஆம் ஆண்டிலேயே ஐஸ் கிரீம் தயாரிக்கும் இயந்திரத்தை சீனர்கள் உருவாக்கினர். ஏழாம் நூற்றாண்டில் சீனாவின் ஷாங் பிராந்தியத்தின் மன்னரான டாங், தனது அரண்மனையில் சுமார் 100 பேரை ஐஸ் கிரீம்களை செய்து கொடுப்பதற்காகவே வேலைக்கு வைத்திருந்தார். குறிப்பாக, அவருக்கு எருமைப் பாலில் கற்பூர வாசனையில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்தான் மிகவும் பிடிக்கும்.

கி.பி. முதல் நூற்றாண்டில் ரோமானிய மன்னனான நீரோ, ஆல்ப்ஸ் மலையின் சிகரங்களில் இருந்து அடிமைகள் மூலமாக பனிக் கட்டியைக் கொண்டு வந்து, பழத் துண்டுகளோடு சேர்த்து 'புரூட் சாலட்' சாப்பிட்டுள்ளார். 16-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களோ, ஹிந்து குஷ் மலைப் பகுதியிலிருந்து குதிரை வீரர்கள் மூலமாக ஐஸ் கட்டிகளைக் கொண்டுவந்து பழ ரசங்களுக்கு குளிர்ச்சியூட்டி அருந்தியுள்ளனர். இருப்பினும், ஐஸ் கிரீம் என்பது சாமானிய மக்கள் சாப்பிடும் அளவுக்குப் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது 18-ஆம் நூற்றாண்டில்தான்.

இங்கிலாந்தை ஆண்ட முதலாம் சார்லஸ் மன்னர் தனது அரண்மனையின் தலைமை சமையல் காரருக்கு ஆண்டுக்கு 500 பவுண்டு கூடுதலாக சம்பளம் கொடுத்து, விரும்பும்போதெல்லாம் ஐஸ்கிரீம் தயாரித்துக் கொடுக்கக் கூறியிருக்கிறார். ஐஸ் கிரீம் தயாரிப்பு முறையில் ரகசியம் காக்க வேண்டும் என்பது மன்னர் போட்ட கட்டளை. ஆனாலும், விருந்துகளின்போது, அரச குடும்பத்தினர் அமர்ந்து சாப்பிடும் மேஜையில் மட்டுமே ஐஸ் கிரீம் பரிமாறப்படும்.

மாவீரன் அலெக்சாண்டருக்கு 'தேன் ஊற்றிய ஐஸ்கிரீம்' என்றால் ரொம்பப் பிடிக்கும்.

உலக யாத்திரிகர் மார்க்கோ போலோ, சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, ஐஸ்கிரீம் குறித்து அறிந்து அதை இத்தாலியில் அறிமுகப்படுத்தினார். இத்தாலியைச் சேர்ந்த கேதரீன் டி மெடிசி, 1553-இல் பிரான்ஸ் நாட்டின் இரண்டாம் ஹென்றியை மணந்தபோது, அவர் பிரான்ஸ் நாட்டில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தினார்.

பாரிஸ் நகரத்தில் இருந்த கஃபே புரோகோப் என்ற உணவகத்தின் உரிமையாளரான சிசிலியன் புரோகோப்பியோ பால், வெண்ணெய், கிரீம், முட்டைகளைக் கொண்டு ஐஸ் கிரீம் தயாரித்து, பொதுமக்களுக்கான விற்பனையைத் துவக்கினார். 1665-இல் வெளியான ஒரு சமையல் குறிப்பு புத்தகத்தில் ஐஸ்கிரீம் செய்யும் முறை விளக்கப்பட்டுள்ளது.

1843-இல் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஐஸ் கிரீம் தயாரிக்கும் இயந்திரங்கள் அறிமுகமாயின. மர இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், ஆரம்பம் முதலே பனி (ஸ்னோ), பனிக்கட்டிகளை (ஐஸ்) கொண்டு தயாரித்த ஐஸ் கிரீம் ரகங்கள் எளிதில் உருகிவிடும் என்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்து வந்தது.

1926-இல் 'ஃப்ரீசர்' எனப்படும் உறைகலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே ஐஸ் கிரீம் தயாரிப்பு சூடு பிடித்தது. அமெரிக்காவில் ஐஸ் கிரீம் தயாரிப்பு அபரிமிதமாக வளர்ச்சி கண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் ஐஸ் கிரீம் பிரபலமானது. இன்று உலகில் அதிக அளவில் ஐஸ் கிரீம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்தான்! அடுத்த இடம் ஆஸ்திரேலியாவுக்கு. மூன்றாவது இடம் நார்வே.

1907-இல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் தொடங்கப்பட்ட பிரெனாம் கிரீமெரி நிறுவனம் முதல் முதலாக வர்த்தக ரீதியாக ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது. குதிரைகள் மூலமாக தாங்கள் தயாரித்த ஐஸ்கிரீமை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இவர்களின் தயாரிப்புக்கு 'புளுபெல் ஐஸ்கிரீம்' என்று பெயர்.

1978-இல் பென், ஜெர்ரி என்ற இருவர் ஐஸ் கிரீமை தயாரித்து, அமெரிக்காவின் பெட்ரோல் நிலையங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் என்று பல்வேறு இடங்களிலும் விற்பனையை விரிவுபடுத்தினர். 'ஐஸ் கிரீம் பார்லர்' என்ற தனித்தொரு விற்பனை நிலையங்கள் தொடக்கப்பட்டன. வெண்ணிலா, சாக்லெட், மேங்கோ, ஸ்டிராபெர்ரி, உள்ளிட்ட பல ரக சுவை கொண்ட ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டன.

ஐஸ் கிரீம் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஐஸ் கிரீமை கப்புகளில் போட்டு சாப்பிடுவதே வழக்கத்தில் இருந்தது. ஐஸ் கிரீம் கப்பையே சாப்பிடக் கூடியதாக உருவானதுதான் கோன் ஐஸ் கிரீம். பிஸ்கட் போன்ற ருசியுடைய, மூலப் பொருள்களைக் கொண்டு கூம்பு வடிவில் தயாரித்து, அவற்றில் ஐஸ் கிரீமை நிரப்பி விற்பனை செய்யத் துவங்கினர். 1904-இல் செயின்ட் லூயிஸ் உலகக் கண்காட்சியில்தான் 'கோன் ஐஸ் கிரீம்' அறிமுகமானது.

மிகப் பிரபலமான ஃப்ளேவர் வெண்ணிலா, அடுத்தது சாக்லேட். மொத்த ஐஸ் கிரீம் விற்பனையில் இந்த இரு ரகங்கள் மட்டும் 52% என்று புள்ளி விவரம் கூறுகிறது.

மேற்கத்திய நாடுகளில் அவகாடோ பழம், பூண்டு, மிளகாய், பன்றி இறைச்சி போன்ற ஃப்ளேவர்களில் கூட ஐஸ் கிரீம் தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் 90% வீடுகளின் குளிர்சாதனப் பெட்டிகளில் எப்போதும் ஐஸ்கிரீம் வைத்திருக்கின்றனர்.

ஐஸ் கிரீம் பார்லர்களிலும், பார்ட்டிகளிலும் ஐஸ் கிரீமை குழிவான ஒரு கரண்டியில் எடுத்துக் கொடுப்பார்கள். இதற்கு 'ஸ்கூப்' என்று பெயர். ஒரு ஸ்கூப் ஐஸ் கிரீமை ஐம்பது முறை சுவைத்து சாப்பிடலாம் என்று ஒரு கணக்கு உண்டு.

டிரெயர்ஸ் என்ற ஐஸ் கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்த ஹாரிஸன் என்பவர் ,தனது நாக்கை இன்சூரன்ஸ் செய்திருந்தார்.

சிலருக்கு, மிகவும் குளிர்ச்சியான ஐஸ் கிரீமை வாயில் போட்டதும் வாயின் உள்ளே மேல் பகுதியில் அதீத சில்லிடும் உணர்வு ஏற்படும். அப்போது மூளையில் அந்தக் குளிர்ச்சி உணரப்பட்டு, வெப்ப நிலை சீரடையச் செய்வதற்காக மூளையில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக ரத்தத்தை வாய்ப் பகுதிக்கு அனுப்பி வைக்கும். அப்போது அவர்களுக்கு தலைவலி ஏற்படக் கூடும். இதனை 'மூளை உறைதல்' (பிரெயின் ஃப்ரீஸ்) என்கின்றனர்.

 2014-இல் அமெரிக்காவில் விஸ்கான்சினில் உள்ள செடர்பர்க் என்ற இடத்தில் நடைபெற்ற ஸ்டிராபெரி திருவிழாவின்போது 3,010 பவுண்டு எடையும், ஐந்தரை அடி விட்டமுள்ள கோள வடிவ ஐஸ் கிரீம் ஸ்கூப் தயாரிக்கப்பட்டது. இரண்டாவது : உலகின் மிகப்பெரிய கோன் ஐஸ் 2015-இல் நார்வேயில் தயாரிக்கப்பட்டது. கோனின் உயரம் 10 அடி.

அமெரிக்கர்கள் ஜூலை மாதத்தை 'ஐஸ் கிரீம்' மாதமாகக் கொண்டாடுவதற்கான உத்தரவை ஐஸ் கிரீம் காதலரான அதிபர் ரொனால்டு ரீகன் 1984 இல் பிறப்பித்தார். ஜூலை மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் தேசிய ஐஸ் கிரீம் தினம்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், ஐஸ் கிரீம் பிரியர். இவர் 1790-ஆம் ஆண்டின் கோடையில் இன்றைய மதிப்பில் சுமார் 4.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரீம் சாப்பிட்டிருக்கிறார்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததை பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டாடினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT