பத்மினி 
தினமணி கதிர்

பத்மினி! - நான் சந்தித்த பிரபலங்கள் -7

நடிகை பத்மினி பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

காரைக்குடி நாராயணன்

பத்மினி

நான் ஒரு அசட்டுத் தைரியத்தில் எழுதிய நாடகம் 'வீட்டுக்கொரு விவேகானந்தர்'. இதற்கு ஆதரவு தந்து என்னை எழுத வைத்தவர்கள் ஜாவர் சீதாராமனும், கொத்தமங்கலம் சுப்புவும். அப்போது நியூடோன் ஸ்டூடியோ மேனேஜராக இருந்தவர் சதீஷ். இவர் பார்க்கக் கிட்டத்தட்ட ஜெமினி கணேசன் போலவே இருப்பார்.

இவர்தான் அந்த நாடகத்தின் ஹீரோவும், தயாரிப்பாளரும். இசை ஐயப்பசாமி வீரமணி. இதில் நான் ஒரு பாட்டெழுதி என் நீண்ட நாள் ஆசையை தீர்த்துக் கொண்டேன். இதை டைரக்ட் செய்தவர் கே.பாலசந்தரின் நாடகக் குழுவில் முக்கியமாக இருந்த ஹரிகிருஷ்ணன். 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் இவர்தான் நடிக்க வேண்டியவர். சில காரணங்களால் மேஜர் சுந்தர்ராஜன் நடித்துப் பேரும் புகழும் பெற்றார்.

அதை எல்லோரிடமும் மேஜர் பெருமையுடன் கூறுவார். இவர் ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் வேலை பார்த்ததால் தினமும் மாலை வேளையில் அந்தக் காலத்து மவுண்ட் ரோட் போஸ்ட் ஆபீசின் மாடியிலிருந்த அவர் ஆபீசுக்குச் சென்று நான் எழுதிய காட்சிகளைப் படிப்பேன். அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்வேன்.

திருமண ஏற்பாடாக வேண்டிய நிலையில் இடி, மழை, இருள் சூழ்ந்த வீட்டில் கல்யாணம். பெண் கழுத்தில் யார் தாலி கட்டியது என்பதுதான் கதை. இதில் திரையுலகில் ஹீரோயினாக நடித்த தாம்பரம் லலிதா சதீஷின் மனைவியாக நடித்தார். ஏப்ரல் 1968-இல் மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் அரங்கேற்றம் செய்யப்பட்டு, திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் நாடகம் நடத்தப்பட்ட போது திமுக அரசு பதவியேற்றது. என் நாடகத்திற்குத் தலைமை வகித்தவர் உணவு அமைச்சர் கே.ஏ.மதியழகன்.

கௌரவ விருந்தினரும் பாராட்டிப் பேசுபவரும் நாட்டியப் பேரோளி பத்மினி என்று விளம்பரப்படுத்தப்பட்டு கூட்டம் நிறைந்திருந்தது. நாடகம் ஆரம்பிக்கும் முன்னே பத்மினியும் ராகினியும் வந்து விட்டார்கள். மதியழகன் நாடகம் தொடங்கிச் சிறிது நேரத்தில் வந்தார்.

அவர் வந்து அமர்ந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு காட்சியில் குளித்து வந்த ஹீரோயின் வைர மோதிரத்தைக் கழற்றிப் பாத்ரூமில் வைத்து விட்டு வந்து விட அதை எடுத்து வந்த அப்பாவி ஹீரோ, 'அம்மா இது ரேஷன் கடையில் போடுற அரிசியில் கிடக்குற கல்லு இல்லை. வைரக்கல்லு' என்று வசனம் பேசியதைக் கேட்ட அமைச்சர் மதியழகன் உணவு அமைச்சராக இருந்ததால் கோபப்பட்டு நாடகம் பார்க்காமல் வந்ததுமே போய் விட்டார்.

இந்த நாடகத்தில் 'எதுக்குய்யா இந்த டயலாக்கெல்லாம்' என்று சபா செகரட்ரி என்னை கூப்பிட்டு கோபப்பட்டார். நாடகம் நல்ல வரவேற்புடன் முடிந்தது. பத்மினி நாடகத்தைப் பாராட்டிப் பேசிய போது இந்த நாடகத்தின் விமர்சனங்கள் வந்த தினமணி, நவசக்தி இதழ்களையும் படித்துக் காட்டினார்.

'இனக்கவர்ச்சியற்ற ஜனக் கவர்ச்சி நாடகம்' - நவசக்தி.

'அடாப்டட் டு தி ஸ்டேஜ் பை காரைக்குடி நாராயணன், தி ப்ளே ஹாடு ஆல் தி இங்க்ரீடியன்ட்ஸ் ஆஃப் ஏ குட் டிராமா' - மூவி லேண்ட்.

காரைக்குடி நாராயணன் உரையாடல்கள் உயர்ந்தவையாயிருந்தன. ஹரியின் டைரக்ஷனில் உருவான இந்நாடகம் தரமானது என்று சொல்லத் தகுந்த அடையாளங்களை இதில் காண கேட்க முடிகிறது - தினமணி.

நாடகம் முடிந்ததும் நாடகக் கலைஞர்கள் அனைவரும் பத்மினி, ராகினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அமைச்சர் மதியழகன் கோபப்பட்டுப் போனதால் நான் மனம் வருந்தி நின்று விட்டேன்.

அதன் பின் நீண்ட நாள்களுக்குப் பிறகு பி.எஸ். வீரப்பா தயாரித்து சிவாஜி, பத்மினி நடித்த 'இரு துருவம்' படத்துக்கு அதன் வசனகர்த்தா ராமு இல்லாததால் டைரக்டர் எஸ். ராமநாதன் என்னை அழைத்து ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒரு காட்சியை அவசரமாக எழுத சொன்ன போது பத்மினி என்னை அடையாளம் கண்டு 'உங்கள் நாடகக் குழுவினருடன் புகைப்படம் எடுத்த போது, உங்களை காணோமே' என்று கேட்டது இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

நான் கதாசிரியனாக வருவதற்கு முன் பீம்சிங் டைரக்ஷனில் நீங்கள் நடித்த 'பாலாடை' படத்தில் கிளாப் அடித்திருக்கிறேன் என்று சொன்னேன். கடைசியாக எனக்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. 'தில்லானா மோகனாம்பாள்' பார்ட்- 2-வை எழுதச் சொன்னார்கள். ஜெயா டி.வி.க்காக முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பம் என்றார்கள். அமெரிக்காவிலிருந்து பத்மினி வந்து சிவாஜியுடன் நடிக்கத் தயாரான போது அது நடக்காமல் போனது என் வாழ்வின் பெரிய ஏமாற்றம்.

பத்மினியின் அஞ்சல் தலையை சோவியத் யூனியன் வெளியிட்டது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT