இன்று புதுக்கவிதை அடைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு புதுக்கவிதைப் புரவலர் செல்லப்பா விதை தூவினார். பல இளம் கவிஞர்களை அவர் எழுத்து' இதழில் எழுத வைத்து வளர்த்துவிட்டார். மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் செல்லப்பா வெளியிட்டு தமிழுக்கு வளம் சேர்த்தார்.
தமிழ் வளர்த்தச் சான்றோர்கள்' எனும் சொற்பொழிவுத் தொடரின் 78-ஆவது கூட்டம் சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர். சபாவில் அண்மையில் நடைபெற்றது. இதில், பேராசிரியர் வ.வே.சு., சி.சு.செல்லப்பாவின் மகன் சி.செ.சுப்ரமண்யன் உள்ளிட்டோர் பேசினர்.
நான் புதுக் கல்லூரியில் பி.எஸ்ஸி. பௌதிகம் படித்துகொண்டிருந்தபோது, சி.சு.செல்லப்பாவையும், பி.எஸ்.ராமையாவையும் தமிழ் மன்றக் கூட்டத்தில் பேச அழைத்து வந்தேன்.
சி.சு.செ. எனக்கு நெருக்கமானார். எனது ஒரே ஒரு கவிதை எழுத்து' இதழில் வந்தது. அப்போது மிகவும் சின்னவராக நான் பார்த்த சி.செ.சுப்ரமணியனைப் பெரியவராகப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இருவரும் பேசியதில் பல நல்ல செய்திகள் பரிமாறப்பட்டன. அரங்கம் ஓரளவு நிறைந்திருந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. ஆனால், இன்னும் நிறைய கூட்டம் வர வேண்டும் என்றார் பேராசிரியர் வ.வே.சு.
எண்பத்தாறு வயது வரை பெருவாழ்வு வாழ்ந்து அரும்பெரும் சாதனைகள் செய்த பெருமகன் சி.சு.செல்லப்பா குறித்து அரங்கில் பேசிய செய்திகளை காண்போம்:
அலசல் பார்வை' விமர்சனங்களை சி.சு.செல்லப்பா முன் வைத்தார். என் ரசனைக்கு ஏற்றது என்பதால், இந்தப் படைப்பை சிலாசிக்கிறேன் என்று சொல்லாமல் விளக்கமாக ஒரு நூலின் நிறைகுறைகளைச் சொன்னார் செல்லப்பா.
அவர் புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்தபோது, பல பிரபல எழுத்தாளர்கள் கோவேறு கழுதை' - விஜிடபிள் பிரியாணி' என்று பரிகாசம் செய்தார்கள். யாப்புக்குப் புறம்பான வசனத்தை எழுதுவது என்று இகழ்ந்தார்கள்.
1959 ஜனவரியில் எழுத்து' இதழை ஆரம்பித்தார். ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் பிரசுரம் செய்தார். பெட்டிக்கடை நாராணன் போன்ற கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. க.நா.சு.வின் சோதனைக் கவிதைகளும் எழுத்து' இதழில் வெளிவந்தன.
தருமசிவராமு. தி.சோ.வேணுகோபாலன், டி.கே.துரைஸ்வாமி, சி.மணி, சி.சு.செல்லப்பா, எஸ்.வைத்தீஸ்வரன், வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி போன்றோரின் கவிதைகள் புதுக்கவிதை முயற்சிகளுக்கு வளம் சேர்த்தன.
1962-இல் எழுத்து பிரசுரமாகி புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 1973-இல் இரண்டாம் பதிப்பும் கொண்டு வந்தார் செல்லப்பா.
மதுரைப் பல்கலைக்கழகம் எம்.ஏ. வகுப்புக்கு புதுக்குரல்கள்' தொகுப்பை பாடப் புத்தகமாகத் தேர்வு செய்தது. இது சி.சு.செல்லப்பாவின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி. கேலி கிண்டல்களை மீறி புதுக்கவிதை' அபாரமான வளர்ச்சி அடைந்தது.
1970 ஜனவரி- மார்ச் இதழாகப் பிரசுரமான 119-ஆவது இதழ்தான் எழுத்து'வின் கடைசி இதழ். இந்தப் பதினோரு ஆண்டுகளில் எழுத்து 460-க்கும் மேற்பட்ட கவிதைகளைப் பிரசுரித்தது. புதுக்கவிதை வளர்ச்சிக்கு விசேஷமான சேவை புரிந்த செல்லப்பா, எழுத்து பிரசுரங்களைப் பல கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டார்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையை நீ இன்று இருந்தால்' என்ற காவியமாகத் தனி நூலாக வெளியிட்டார். அவரது புதுக்கவிதைகள் மாற்று இதயம்' என்ற தனி நூலாகவும் வந்தது.
நடை', கசடதபற', ழ' போன்ற இலக்கிய ஏடுகள் தோன்ற சி.சு.செல்லப்பாவின் எழுத்து' உந்துசக்தியாக இருந்தது.
வாடிவாசல்', ஜீவனாம்சம்' போன்ற நாவல்கள் சிறப்பானவை என்றாலும், சுதந்திர தாகம்' அவரது மாஸ்டர் பீஸ். அவர் எப்போதும் கதர்தான் அணிவார். சுதந்திரப் போராட்ட வீரர். எழுத்து பிரசுரம் மூலமாக வெளியிடும் புத்தகங்களை ஒரு காக்கி பையில் போட்டு கொண்டு தெரிந்தவர்கள்- நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் சென்று விற்பார், எழுத்து' அதிகமான பிரதிகள் விற்கவில்லை என்று மனக்குறை அவருக்கு இருந்தது. தேங்கிப் போன எழுத்து இதழ்களை, பழைய பேப்பர் கடையில் போடாமல் கிழித்துக் கிழித்துப் போட்டார் சோகத்துடன்.
மதுரையை நிலக் களனாகக் கொண்டு பல அற்புதமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
1974-இன் பிற்பகுதியில் சி.சு.செல்லப்பாவும் எழுத்து யோகி வல்லிக்கண்ணனும் எழுத்து' பிரசுரங்களை விற்பனை செய்ய திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகள் அனைத்தும் சென்று வந்தனர். தமிழ்த் துறைப் பேராசிரியர்களும், எம்.ஏ. தமிழ் மாணவர்களும் புதுக்கவிதையில் அக்கறையும் விருப்பமும் கொண்டுள்ளதை அறிந்து இந்த மூத்த எழுத்தாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கவிதைக்கு எதிர்காலம் உண்டா? என்று ஒரு பேராசிரியர் கேட்டதும், அதன் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. புதுக்கவிதை வேக வளர்ச்சி பெறும் வகையில் திறமை மிகுந்த கவிஞர்கள் பல அருமையான படைப்புகளை அளித்துள்ளனர் என்று செல்லப்பாவும் வல்லிக்கண்ணனும் மகிழ்வுடன் பதில் சொன்னார்கள்.
முறைப் பெண்' என்று செல்லப்பா எழுதிய நாடகமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சி.சு.செல்லப்பா தமிழ் இலக்கிய உலகில் சகாப்தம். அவர் தனது இறுதிமூச்சு வரை இலக்கியவாதியாக ஒளிர்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.