தொழிற்சாலை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காலை பத்து மணிக்கு பொதுமேலாளர் ஜனார்த்தனம் தன் வழக்கமான ரவுண்ட்ஸை தொடங்கினார். ஒவ்வொரு இயந்திரத்தின் முன்பாக சிறிது நேரம் நின்று தொழிலாளர்களின் வணக்கங்களை ஏற்றுகொண்டு, அவர்களின் உடல் நலம், இயந்திரத்தில் கோளாறு ஏதும் உள்ளதா? என்பன போன்ற விஷயங்களை அக்கறையுடன் விசாரிப்பது அவர் வழக்கம்.
லேத் மெஷின் ஒன்று கடந்த இரண்டு தினங்களாக ரிப்பேர் நின்றுவிட்டது. மெய்ன்டெனன்ஸ் ஆட்கள் தொடர்ந்து அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்னுமா இது சரியாகவில்லை? என்று கேட்டார் ஜனார்த்தனம்.
முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கோம் சார். கூடிய சீக்கிரத்தில் சரி பண்ணிடுவோம் என்றார் மெய்ன்டெனன்ஸ் எஞ்ஜீனியர்.
ஒரு மெஷின் நின்னா எவ்வளவு நஷ்டமாகுது தெரியுமா? சீக்கிரமா முடிக்கப் பாருங்க? என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
மேலாளர் பரமசிவத்தின் அறைக்குள் நுழைந்தார் மேற்பார்வையாளர் சிவச்சந்திரன்.
சார்.. கூப்பிட்டீங்களாமே?
வாங்க சிவச்சந்திரன்... உட்காருங்க?
எதிர் சேரில் அமர்ந்தான்.
ரெண்டு நாளா லேத் மெஷின் ரிப்பேராகி நிக்குது. மெய்ன்டெனன்ஸ் ஆளுங்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க. நோ ரிசல்ட். என்ன காரணம்னு அவங்களால கண்டுபிடிக்க முடியலை. நீங்க கொஞ்சம் பாருங்களேன்.
ஓ.கே. சார். நான் பார்த்துட்டு சொல்றேன் என்றவாறு எழுந்துகொண்டான் சிவச்சந்திரன்.
அரைமணி நேரம் கழித்து மீண்டும் மேலாளர் அறைக்குள் நுழைந்தார் சிவச்சந்திரன்.
பார்த்தீங்களா சிவச்சந்திரன்?
சார்... முழுசா செக் பண்ணிட்டேன். கியர்பாக்ஸில் கோளாறு இருப்பதா எனக்குத் தோணுது. கியரை மாத்திப் பார்க்கலாம் சார்.
நல்லது அதையும் செஞ்சுப் பார்த்திடுவோம். நீங்கப் போகலாம்.
மெல்ல எழுந்தார் பரமசிவம். நேரே பொதுமேலாளரின் அறைக்குப் போனார்.
பொதுமேலாளர் ஜனார்த்தனம் ஸீட்டில் இருப்பதை கண்ணாடி வழியாக உறுதிப்படுத்திக் கொண்டு லேசாக கதவை டொக்கினார் மேலாளர் பரமசிவம். உள்ளே வரச்சொல்லி சைகை செய்தார் பொதுமேலாளர்.
ப்ளீஸ்... டேக் யுவர் ஸீட்..
அமர்ந்தார்.
சொல்லுங்க மிஸ்டர் பரமசிவம்.
சார்... எனக்கு என்ன தோணுதுன்னா, கியர் பாக்ஸ்ல ஏதோ கோளாறு இருக்கும்போல. கியரை மாத்திப் பார்க்கலாம். ஒரு வேளை லேத் மெஷின் சரியாக வாய்ப்பு இருக்கு.
மேற்பார்வையாளர் சிவச்சந்திரன் சொன்ன யோசனையை அப்படியே ஒப்புவித்தார் பரமசிவம்.
உடனே செய்யுங்கள் என்று அனுமதியளித்தார் ஜனார்த்தனம்.
என்ன ஆச்சரியம்?
புதிய கியரை பொருத்தியவுடன் கோளாறு சரியாகிவிட்டது. பொதுமேலாளர்அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலாளர் பரமசிவத்தை அழைத்து வெகுவாகப் பாராட்டினார். இந்த விஷயம் என்றில்லை, இதற்கு முன்பு கூட பலவிதமான பிரச்னைகளுக்குத் தீர்வை சிவச்சந்திரனிடமிருந்து பெற்று தன்னுடைய சொந்த யோசனையைப் போல் பொதுமேலாளர் ஜனார்த்தனம் சொல்லி நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்தார் பரமசிவம். விளைவு? உதவி மேலாளராக இருந்தவர், துணை மேலாளராகி, இதோ மேலாளராகவும் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். பாவம், சிவச்சந்திரன். அவன் இன்னமும் மேற்பார்வையாளராகவே இருந்து வருகிறார்.
அன்றும் வழக்கம் போல் ரவுண்ட்ஸ் வந்த பொதுமேலாளரிடம் சிவச்சந்திரன் கொடுத்த யோசனையை தன்னுடைய சொந்த யோசனையைப் போல் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார் பரமசிவம். எதேச்சையாக தண்ணீர் குடிக்க கூலர் பக்கம் வந்த சிவச்சந்திரன் காதில்
பரமசிவம் பேசியது நன்றாகக் கேட்டது. அவன் கூலர் பக்கம் ஒதுங்கி நின்றது பரமசிவத்துக்கு தெரியாது. கேட்டமாத்திரத்தில் அதிர்ந்து நின்றார் சிவச்சந்திரன்.
அடப்பாவி... இத்தனை நாளும் இந்த ஆள் இப்படித்தான் என் யோசனையை தன்னுடையது போல் எடுத்துக் கூறி பொதுமேலாளரிடம் நல்ல பேரு வாங்கிக்கிட்டு இருக்கானா?
உடல் முழுக்க சுரு,சுரு'வென எரிச்சல் பரவினாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து நழுவினான் சிவச்சந்திரன்.
என்ன இது? என திடுக்கிட்டார் மேலாளர் பரமசிவம். எதிரே மேற்பார்வையாளர் சிவச்சந்திரன்.
என்னோட ராஜிநாமா கடிதம் சார்.
அது தெரியுது. திடீர்ன்னு ஏன் இந்த முடிவுன்னுதான் கேக்கறேன்?
திடீர்னு எல்லாம் ஒண்ணுமில்லை சார். ரொம்ப நாளாவே சொந்தமா ஒரு ஒர்க்ஸ்ஷாப் ஆரம்பிக்கணும்னு முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். இப்பத்தான் பேங்க் லோன் சாங்ஷனாகி இருக்கு. மேற்கொண்டு நிறைய வேலை இருக்கு சார்..
சரி. உங்க விருப்பம். இதில் நான் என்ன சொல்ல? உங்க ராஜிநாமா கடிதத்தை மேலிடத்துக்கு ஃபார்வேர்டு பண்றேன் என்றவாறு அதில் கையெழுத்திட்டு, பொதுமேலாளர் ஜனார்த்தனனின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார் பரமசிவம்.
சொல்லிவைத்தாற் போல், பொதுமேலாளர் ஜனார்த்தனனிடமிருந்துஅழைப்பு வந்தது.
உட்காருங்க மிஸ்டர் சிவச்சந்திரன். என்று ஜனார்த்தனன் சொன்னதும் எதிரில் அமர்ந்தார்.
உங்க ராஜிநாமாவுக்கு வேறு ஒன்றும் காரணமில்லையே?
இல்லை சார்..
யாரேனும் உங்களைத் துன்புறுத்தினார்களா?
அதெல்லாம் ஒன்றுமில்லை சார்...
சரி.. உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும் என கை குலுக்கி வாழ்த்தினார்.
ஒரு மாதத்துக்குப் பிறகு ஒருநாள் கிரைண்டிங் மெஷினில் சிறு கோளாறு. பரமசிவத்தை அழைத்து காரணம் கேட்டார் பொதுமேலாளர் ஜனார்த்தனன். பார்த்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவினார் மேலாளர் பரமசிவம். அவரால் ஒன்றும் சொல்ல இயலவில்லை. ஓரிரு முறை பொதுமேலாளர் கேட்டும், பரமசிவத்திடம் மழுப்பலான பதில்தான் கிடைத்தது. அதன்பிறகு பலமுறை தொழிற்சாலையில் ஏற்பட்ட பல பிரச்னைகளில் ஒன்றை கூட பரமசிவத்தால் தீர்க்கமுடியவில்லை. அதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார் ஜனார்த்தனன்.
அன்று காலை பதினொரு மணிவாக்கில் பொதுமேலாளரிடம் அழைப்பு வந்தது பரமசிவத்துக்கு. பதறியடித்துப் பறந்து போனார்.
உட்காருங்க மிஸ்டர் பரமசிவம்.
அமர்ந்தார்.
முன்பெல்லாம் தொழிற்சாலையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிதாக யோசனை கொடுத்து பிரச்னைக்குத் தீர்வு பண்ணிக்கிட்டிருந்தீங்க. இப்ப என்ன ஆச்சு? ஒரு சின்ன பிரச்னையைக்கூட உங்களால் தீர்க்க முடியாம தடுமாறி நிக்கறீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு...
அது வந்து சார்... அது வந்து... என்று அவரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை.
ஏதாவது தனிப்பட்ட பிரச்னை...
இல்லை சார்...
அப்புறம் என்ன?
ம்... ம்...
இதோ பாருங்க மிஸ்டர் பரமசிவம்... உங்களை பணிநீக்கம் பண்ண மேலிடத்து உத்தரவு வந்திருக்கு...
குப்'பென வியர்த்தார். காலடியில் பூமி சரிவது போல் உணர்ந்தார்.
சார்.... சார்... கொஞ்சம் தயவு காட்டுங்க. நான் குழந்தை குட்டிக்காரன். திடீர்னு வேலை பறிபோனா நான் எங்கே போவேன்? என கெஞ்சினார் பரமசிவம்.
இதோ பாருங்க, மிஸ்டர் பரமசிவம்.. இது மேலிடத்து உத்தரவு. நேரிடையாக உங்களுக்கு இஷ்யூ பண்ணியிருக்கணும். இருந்தாலும் நான் ஏன் உங்களை அழைத்துப் பேசினேன்னா, ஒரு வேளை கம்பெனியில் வேறு ஏதும் பிரச்னை இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான். அப்படி ஒண்ணுமில்லைன்னு நீங்க தெளிவா சொல்லிட்டீங்க. அதனால இதுல கையெழுத்து போட்டுட்டு டெர்மினேஷன் லெட்டரை வாங்கிக்குங்க. இப்ப நீங்க நேரா வீட்டுக்குப் போகலாம். நாளை காலை வந்து அக்கவுண்ட் செட்டில்மெண்ட்டை வாங்கிக்குங்க?' என்று ஆர்டர் பாரத்தை நீட்டினார்.
நடுங்கும் கரங்களால் அதை வாங்கியவர், சார்... உங்களால் எதுவும் செய்ய முடியாதா சார்? என்று கேட்டார்.
என்னால் முடியும் என்றால் நான் எப்பவோ சப்போர்ட் பண்ணியிருப்பேன். இது மேலிடத்து விவகாரம். ஒவ்வொரு எம்ப்ளாயியாய் அவர்கள் கவனிச்சுக்கிட்டே இருப்பாங்க. உதாரணத்துக்கு உங்க வீட்டு சீலிங் ஃபேன் சரியா ஓடலைன்னு வைங்க, நீங்க என்ன பண்ணுவீங்க? ஒண்ணு ரிப்பேர் பண்ணுவீங்க. அப்படியும் ஓடலைன்னா தூக்கிப் போட்டு புது ஃபேன் வாங்குவீங்க. அதைத்தான் இந்த கம்பெனியும் செய்யுது.
தான் ஒரு செல்லா காசு ஆகிவிட்டதை உணர்ந்தார் பரமசிவம். வேறு வழியின்றி பாரத்தில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு வெளியேறினார். வேலை பறிபோனதிலிருந்து பரமசிவம் இடிந்துபோனார். வேறு வேலைக்கு முயற்சிக்கலாம் என்றால் அவருடைய வயது ஒரு தடையாக இருந்தது. இளைஞர்களுக்குத்தானே முன்னுரிமை?
வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தலானார் பரமசிவம். அன்று அவர் வீட்டுக்குப் பின்புறமிருந்த மைதானத்தில் சிறுவர்கள் வழக்கமாய் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தார் பரமசிவம். பாதி விளையாட்டில் திடீரென மழை பிடித்துக்கொள்ள, ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஓடி வந்த சிறுவர்கள் பூட்டிக்கிடந்த டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் ஒதுங்கினர். பரமசிவமும் அவர்களுடன் கலந்து நின்றார். சிறுவர்கள் வச,வச' வென பேசிக்கொண்டனர்.
பரமசிவம் அவர்களின் பேச்சில் சுவாரசியமானார்.
டேய், ராஜு... உனக்கு எத்தனை தடவை சொல்றது? கிரிக்கெட் உனக்கு சுத்தமா வரலை. பேட்டிங்கும் தெரில, பௌலிங்கும் தெரியலை என எகிறினான் டீம் கேப்டனா இருக்கும் சிறுவன்.
நான் சரியாத்தானேடா விளையாடறேன்? என்றான் ராஜு.
நீ அப்படி நினைச்சுக்கிட்டிருந்தா அது உன்னோட தப்பு. மோசமா ஆடிட்டு நம்ம டீம் ஜெயிச்சுட்டா மட்டும் உன்னாலதான் டீம் ஜெயிச்சுதுன்னு பீத்திக்க வேண்டியது. நான் ஒண்ணு சொல்றேன். நல்லா கேட்டுக்க. உனக்கு ஒரு விஷயம் தெரியலைன்னு வை, அதில தலையிடாதே. ஒண்ணு நல்லா கத்துக்கிட்டு வா. இல்லேன்னா ஒதுங்கிக்க. உனக்குத் தெரிஞ்ச விளையாட்டுல மட்டும் கவனம் செலுத்து. நீ பாஸ்கெட் பால்ல சாம்பியனா இருக்கே. தொடர்ந்து அதுல மட்டும் கவனம் செலுத்தினா மாவட்டம் என்ன? மாநில அளவுக்கு முன்னேறலாம் என்றான் கேப்டன்.
கேப்டன் சொன்னது ராஜுவுக்குப் புரிந்ததோ இல்லையோ, ஆனால், அவன் பேச்சை உன்னிப்பாகக் கேட்டு கொண்டிருந்த பரமசிவத்துக்கு சுரீ'ரென்று.
சூப்பர்வைசர் சிவச்சந்திரனின் ஆலோசனைகளை தன்னுடைய ஆலோசனைகளாக ஜீ.யெம்.மிடம் பீற்றிக் கொண்டது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம்? தனக்குத் தெரியாது என்றால், தெரியாது என்று வெளிப்படையாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது சிவச்சந்திரன் கொடுத்த யோசனை என பொதுமேலாளரிடம் சொல்லியிருக்கலாம். எவ்வளவுப் பெரிய தவறு செய்திருக்கிறேன்? அதற்கான தண்டனையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்' என்று பரமசிவத்தின் நெஞ்சு அவரைச் சுட்டது.
அன்றிரவு உறக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்தார் பரமசிவம். தான் எதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டார் என்ற உண்மையை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. கம்பெனி ஆட்குறைப்பு செய்ததால் வேலை போய்விட்டது' என எல்லோரிடமும் பொய் சொல்லியிருந்தார்.
என்னங்க, தூங்காம படுத்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா? எனக் கேட்ட மனைவியிடம் துணிந்து உண்மையை விளக்கிச் சொன்னார் பரமசிவம்.
இதோ பாருங்க... அந்த சூப்பர்வைசர் தம்பியோட வயசு உங்களைவிட கம்மியா இருக்கலாம். இருந்தாலென்ன? நாளைக்கு முதல் வேலையா அவன்கிட்ட உண்மையைச் சொல்லி, மன்னிப்புக் கேளுங்க. அப்பத்தான் உங்க மனசு ஆறும். இல்லேன்னா வாழ்நாள் முழுக்க அது உங்களை உறுத்திக்கிட்டே இருக்கும். இப்ப நிம்மதியா படுத்து தூங்குங்க? என்றார் அவர் மனைவி.
நாள்கள் வேகமாய் ஓடின. சிவச்சந்திரன் ஆரம்பித்த தொழிற்சாலை ஓஹோ'வென ஓடியது. எம்.டி. இருக்கையில் மிடுக்காக அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவச்சந்திரன்.
மே ஐ கம் இன் சார்..? என்றவாறே லேசாய் கதவைத் திறந்து ஆள்காட்டி விரலை மடக்கி டொக்கினார் பரமசிவம். அவரைப் பார்த்த மாத்திரத்தில் குபீ'ரென எழுந்து நின்று, வாங்க சார்.. என்று அவரை வரவேற்று அமரச் செய்தார் சிவச்சந்திரன்.
என்ன சார், வேலை எல்லாம் எப்படி போகுது? என்று கேட்ட சிவச்சந்திரன், இன்டர்காமில் இரண்டு கூல் டிரிங்க்ஸ் வரவழைத்தார்.
நடந்த எல்லா விஷயத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார் பரமசிவம். சிவச்சந்திரன் கொடுத்த யோசனைகளைத் தன்னுடைய யோசனைகளாக பொதுமேலாளரிடம் சொல்லி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்ததையும் ஒப்புக்கொண்டார்.
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சிவச்சந்திரன், ஒரு பெருமூச்சை வெளியிட்டுவிட்டு, எப்போது உங்கள் தவறை நீங்கள் உணர்ந்துகொண்டீரோ அப்பவே நீங்கள் திருந்திவிட்டதாக அர்த்தம். சொல்லுங்க? நான் என்ன செய்யணும்? என்று கேட்டார்.
உங்க கம்பெனியில் எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தீங்கன்னா? என்று இழுத்தார்.
ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க என் பாஸாக இருந்தவர். இப்போதைக்கு என் ஒர்க்ஸ்ஷாப்புக்கு ஒரு சூப்பர்வைசர் தேவை.
சூப்பர்வைசராக என்ன, மெஷினில் வேலை செய்யவும் நான் தயார்.
அந்த அளவுக்கு உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க சார். நாளைக்கே நீங்க வேலையில் ஜாய்ன் பண்ணலாம்..
சந்தோஷமாய் எழுந்து, ரொம்ப தேங்க்ஸ்... என்று கைகுலுக்கினார் பரமசிவம்.
விடை பெற்று புறப்படுகையில் சிவச்சந்திரன் இருக்கைக்குப் பின்னால் சுவரில் மாட்டப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தைப் பார்த்தார் பரமசிவம். அதில் எழுதி இருந்த திருக்குறள் மீது அவர் பார்வை நிலைத்தது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அவர் தலை அவரையும் அறியாமல் தரை நோக்கித் தாழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.